Saturday, September 5, 2009

திரு.ராஜ சேகர ரெட்டி நினைவாஞ்சலி.




முதலில் நம்புவதற்குச் சந்தேகமாகத் தான் இருந்தது. ஆந்திர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் காணவில்லை. நக்சல்கள் கடத்தியிருக்கலாம் என்று ஊகங்களை வெளியிட்டன ஊடகங்கள். அப்போதிருந்தே என் மனம் பின்னோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. ஓர் ஆளுமை மிகுந்த தோற்றம். எவரையும் எளிதில் வசீகரித்து விடும் இயல்பான தன்மை. எப்போதும் சிரிக்கும் அதரங்கள். அவற்றுக்குப் பொட்டிட்டாற் போன்று கருணையுள்ள கண்கள். எடுத்த கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பது பற்றிய விசாலமான தொலைநோக்குப் பார்வை. இப்படித் தான் அவர் அறிமுகமானார் எனக்கு.

2006 ஆம் ஆண்டின் இறுதியில் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகர் சபை ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்து கொள்ள வந்திருந்தார் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அவருடன் சில அமைச்சர்களும். ஒரு கலந்துரையாடலுக்குப் பிறகு அவருடனான நேர்காணல். சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நீண்டது அந்தப் பேட்டி. ஆனால் அந்த இனிமையான பொழுதை நினைக்க நினைக்க இன்றும், என்றும் நெஞ்சினிக்கும்.

வழக்கமாக இந்திய அரசியல் தலைவர்கள் காட்டும் மனோபாவம் திரு.ஒய் எஸ் ஆரிடத்தில் இல்லை. கருத்தரங்கு மண்டபத்திலேயே நேர்காணல். அதற்கென பிரத்யேக அறை எதுவும் இல்லை. எங்களைச் சுற்றிலும் நின்ற தொழில் முனைவர்கள் தங்களுக்குள் ஏதோதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் நேர்காணல் மிகச் சரியாகக், கச்சிதமாக அமைந்தது. வந்த பதில்களும் பிசிறில்லாத அக்மார்க் சுருக்.

வினாக்களை வசீகரமான புன்னகையோடு உள் வாங்கிக் கொண்டு, ஆந்திராவில் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை அவர் பட்டியலிட்டார். கையில் எந்தப் புள்ளி விவரமும் இல்லை. சிங்கப்பூரில் இருந்து தொழில் செய்ய நாடுபவர்கள் எந்நேரமும் என் அலுவலகத்தின் கதவுகளைத் தட்டலாம். அவர்களுக்காக வந்து வாசல் திறப்பது நானாகக் கூட இருக்கலாம் என்றார்.

அது நிதர்சனமான சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட நித்திய வார்த்தைகள். பிறகு, ஆந்திராவில் முதலீடு செய்த சில சிங்கப்பூர்த் தொழில் முனைவர்களிடம் பேசிக் கொண்ட போது அவர்கள் ஒய் எஸ் ஆரின் கருத்தை மெய்ப்பித்தார்கள்.

இன்று அந்தத் திருவாளரின் அகால மரணம் ஆந்திர மாநில அரசியலில் மிகப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது மெய்யான உண்மை. மருத்துவம் படித்த திரு.ஒய் எஸ் ஆரின் வாழ்க்கைப் பாதை மலர் விரிப்பில் வளர்ந்த நந்தவனம் அல்ல. முட்களும், புயல்களும் நிறைந்த போர்ககளமாகவே இருந்தது. 1978 ல் தமது 29 ஆம் வயதில் ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் துணையமைச்சர். இது வெறும் தொடக்கம் தான். இவர் தான் ஒய் எஸ் ஆர் என்று அண்ணாந்து பார்க்க வைத்த அவருடைய சாதனைகள் சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தான் தளிர்விடத் தொடங்கின.

ஆந்திர அரசியலில் யாரும் அசைக்க முடியாத வல்லமை தமக்குண்டு என்ற திரு.சந்திரபாபு நாயுடுவின் ஆசைக்கு ஆப்படித்தது திரு.ஒய் எஸ் ஆரின் பாதயாத்திரை. 2003 ல் அவர் மேற்கொண்ட அந்தப் பயணம் தெலுங்கு தேச ஆட்சிக்கு வைத்தது மிகப் பெரிய வேட்டு. ஆந்திர மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அவர் சுற்றிச் சுழன்று கடந்த தூரம் 1400 கி.மீ.

அதைத் தொடர்ந்து 2004 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திரு.ஒய் எஸ் ஆர் ஆட்சிக்கு வருகிறார். அதிலிருந்து அவர் தன் ஆளுமையைக் கூட்டி எடுத்த விஸ்வரூபம் இந்திய அரசியலை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. காங்கிரஸ் தலைமையை அவரிடமே திடப்படுத்தி வைத்தது.

தொடர்ந்து எந்த காங்கிரஸ் முதல்வரும் ஐந்தாண்டு பதவியைப் பூர்த்தி செய்ய முடியாது என்ற ஆந்திர அரசியல் சரித்திரத்தை மாற்றிக் காட்டிய பெருமை திரு.ஒய் எஸ் ஆருக்கு உண்டு. காலஞ்சென்ற நீலம் சஞ்சீவ ரெட்டி, காசா பிரமானந்த ரெட்டி ஆகியோருக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியணை ஏறிய பெருமையும் ராஜசேகர ரெட்டிக்கு உண்டு.

இது வெறுமனே அரசியல் சாதுர்யத்தால் விளைந்த வெற்றியல்ல. மக்களின் ஆதரவும், அவர்களின் அன்பும் கட்டியெழுப்பிய வாக்கு வங்கி, வாங்கித் தந்த வெற்றி என்பதை ஒய் எஸ் ஆரின் எதிரிகள் கூட சந்தேகமின்றி ஒப்புக் கொள்வர்.

திரு. ராஜசேகர ரெட்டியின் ஆட்சிக் காலம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டால் இரண்டு விஷயங்களைத் தவிர்க்க இயலாது.

1.அவர் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது போல இலவசத் திட்டங்கள் இதுவரை ஆந்திர அரசியல் பாராத புதுக் கணக்கு. அவற்றால் அரசின் நிதி ஊதாரித்தனமாகச் செலவிடப்படவில்லை என்பது நிதர்சனம். இலவசம் பெற்ற ஏழைகள் தங்கள் வாழ்வில் எற்றம் தந்த நாயகராக அவரைப் போற்றுகிறார்கள் என்பதை இன்று கண்கூடாகப் பார்க்கலாம். ஏழை, எளியவர்ள், விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள், மருத்துவ வசதி, மின்சாரம் போன்றவற்றை வழங்கி அவர்களுடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முனைந்தார்.

2. ஆந்திராவில் பயன்பாடு இல்லாத தரிசு நிலங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. அதில் அரசுக்குக் கிடைத்த வருமானம் சுமார் 1500 கோடி ரூபாய். இதைவிட அதிகமான தொகையை முதல்வரும் அவர் சார்ந்த கட்சித் தலைவர்களும் அடித்துக் கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

திரு.ராஜசேகர ரெட்டியின் அகால மரணம் ஏற்படுத்தி இருக்கும் அதிர்வலை இந்திய அரசியலுக்குப் புதுசு. செய்தி கேட்ட சுமார் 80 பேர் அதிர்ச்சியில் தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தானாகவே மாய்த்திருக்கிறார்கள். வாழ்ந்த வரை நல்லவராக வாழ்ந்தார் என்பதற்கு உதாரணமாக இந்த இழப்புகள் சுட்டிக் காட்டப்படலாம்.

இவையெல்லாவற்றையும் தாண்டி திரு.ராஜசேகர ரெட்டியின் இழப்பை ஈடுசெய்யும் விதத்தில் அவர் போன்ற நல்ல தலைவர்கள் இன்னும் அதிகமானவர்களை உருவாக்குவதன் மூலமே ஆந்திர அரசியல் அல்ல, இந்திய அரசியல் சுபிட்சம் பெறும் என்ற உண்மையும் அதில் அடங்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.