Monday, December 28, 2009

உலகம் 2009 - பகுதி 3

இந்த ஆண்டு ஜப்பானில் ஒரு வரலாற்றுத் திருப்பம். அது நடந்தது ஆகஸ்ட் மாதம். அப்போது அங்கு நாடாளுமன்றத் தேர்தல். சுமார் ஐம்பது ஆண்டு காலச் சரித்திரம் அந்தத் தேர்தலில் மாற்றம் கண்டது. இதுநாள் வரை எதிர்த் தரப்பாக இருந்த ஜனநாயகக் கட்சிக்கு மகத்தான வெற்றி.

ஜப்பான் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 480. ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது 308 இடங்கள். அக்கட்சியின் வரலாற்றில் இது ஒரு மாபெரும் திருப்பு முனை. ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஜனநாயகக் கட்சி.

முன்னைய பிரதமர் தாரோ அஸோவின் மிதவாத ஜனநாயகக் கட்சிக்கு இம்முறை பேரிழப்பு. இந்த ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி 119 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. சென்ற தேர்தலில் அக்கட்சி 300 க்கும் அதிகமான இடங்களை வெற்றி கொண்டது.மிதவாத ஜனநாயகக் கட்சியின் வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத பேரிடி. தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று முன்னையப் பிரதமர் தாரோ அஸோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஜப்பானின் புதிய பிரதமராக யூகியோ ஹட்டோயாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 327 உறுப்பினர்கள் ஹட்டோயாமாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பிலிப்பீன்சில் இந்த ஆண்டு கடுமையான சோதனை. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீசியது "கெட்சானா" சூறாவளி. விளைவு. கடுமையான மழை. அதைத் தொடர்ந்து வெள்ளம்.

தலைநகர் மணிலாவின் எண்பது விழுக்காட்டு இடங்களில் வெள்ளக்காடு. ஒரு மாத காலத்தில் பெய்ய வேண்டிய மழை, ஆறே மணி நேரத்தில் பெய்து கெடுத்தது.

பிலிப்பீன்ஸ் தண்ணீரில் மிதந்தது. அங்குள்ள மக்கள் கண்ணீரில் மிதந்தனர்.முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். கால் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். தலைநகர் மணிலா உள்ளிட்ட 24 மாநிலங்களில் பேரிடர் நிலையை அறிவித்தது பிலிப்பீன்ஸ் அரசாங்கம்.

பிலிப்பீன்சைத் தொடர்ந்து இந்தோனேசியாவிலும் இந்த ஆண்டு சோதனைக் காலம். அவ்வப்போது அதிர்ந்தது பூமி. ரிக்டர் அளவில் 5 புள்ளிகளைத் தாண்டின அதிர்வுகள். சிலமுறை சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. பின்னர் பேரழிவு எதுவும் இல்லாமல் அது மீட்டுக் கொள்ளப்பட்டது.
அவ்வப்போது ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். இந்தோனேசிய நில நடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூரிலும் உணரப்பட்டது.

2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை எங்கே நடத்த வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில்.

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தச் சாதகமான அம்சங்கள் கொண்ட நகரங்களாக அமெரிக்காவின் சிக்காக்கோ, ஸ்பெயினின் மாட்ரிட், ஜப்பானின் டோக்கியோ, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ஆகிய நான்கு நகரங்கள் பட்டியலில் முன் நின்றன. ஆனால், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவுக்குக் கிடைத்தது அந்த அரிய வாய்ப்பு.தென்அமெரிக்க நாடு ஒன்றில் ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பது இதுவே முதல் முறை. ஒலிம்பிக் வாய்ப்பு பெற்றதையடுத்து பிரேசில் முழுவதும் ரசிகர்கள் ஆடிப்பாடி உற்சாகமாகக் கொண்டாடினர்.

2007 ஆம் ஆண்டின் இறுதியில் உலகப் பொருளியலை ஆட்டங்காணச் செய்தது நிதிச் சுனாமி. அதுபோன்ற ஒரு நிகழ்வு இந்த ஆண்டு நவம்பரில். ஆனால் இம்முறை பாதிப்பட்டது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் ஒன்றான துபை.நவம்பர் இறுதி வாரத்தில் Dubai World நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அது உலகச் சந்தைகளை ஆட்டங்காண வைத்தது. Dubai World முதலீட்டு நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட 60 பில்லியன் டாலர் கடன் உள்ளது. அதனைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத கால அவகாசம் கேட்டது. அதன் எதிராலியாக உலகப் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்.

சில நாட்களுக்குப் பிறகு 26 பில்லியன் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டங்களை அறிவித்தது Dubai World. அதைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் ஒரு மீட்சி.

Dubai World ன் கடனுக்குத் தான் பொறுப்பேற்க முடியாது என்று அறிவித்தது துபை அரசாங்கம். அதைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் மீண்டும் ஒரு சறுக்கல். இறுதியில் அருகிலுள்ள அபூதாபி கைகொடுத்தது. துபை வேர்ல்டின் கடனைத் திருப்பிச் செலுத்த பத்து பில்லியன் டாலர் தருவதாக அறிவித்தது அபூதாபி.

இந்த ஆண்டின் அமைதிக்கான நொபேல் பரிசைப் பெற்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதும் பல்வேறு விமர்சனங்கள்.
ஒபாமா உலக மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்த முயன்று வருகிறார். அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க பாடுபடுகிறார். எனவே, அவருக்கு நொபேல் பரிசு என்று அறிவித்தது விருதுக் குழு.


இந்தப் பரிசைப் பெறத் தன்னை விட அதிகம் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று ஒபாமா குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தான், ஈராக் போர் பற்றியும் அவர் பேசினார். ஆயுத மோதல்களுக்கு எப்படிப்பட்ட விலை கொடுக்க வேண்டி வரும் என்பதை தாம் அதிகம் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் போருக்குக் கூடுதலாக முப்பதாயிரம் அமெரிக்கப் படையினரை அனுப்பப் போவதாக ஒபாமா அறிவித்தார். அமைதிக்கான நொபேல் விருது பெற்றவர் ஏன் போரை ஆதரிக்கிறார் என்ற கேள்வியை எழுப்பியது விமர்சன வட்டாரம்.

அதற்கு விருது மேடையிலேயே பதிலளித்தார் ஒபாமா. பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றச் சில நேரங்களில் போரிட வேண்டியது அவசியம் என்றார் அவர். அணு ஆயுதங்களை ஒழிப்பதிலும், பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்துக்களிலும் தமது லட்சியங்கள் நிறைவேறும்போது, இந்த விமர்சனம் முற்றிலுமாக மறைந்து விடும்' என்றார் ஒபாமா.வேதியலுக்கான நொபேல் பரிசைப் பெற்றவர் விஞ்ஞானி வெங்கட் ராமகிருஷ்ணன். அவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர். அமெரிக்காவின் தாமஸ் ஸ்டீட்ஸ், இஸ்ரேலின் யெடா யோனத் ஆகியோரும் ராமகிருஷ்ணனோடு அந்த விருதைப் பகிர்ந்து கொண்டனர். புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்குவதில் அவர்களுடைய ஆய்வு முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த ஆண்டின் இறுதியில் உலகின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தது பருவநிலை மாநாடு. டென்மார்க்கின் கோபன் ஹேகன் நகரில் அது நடந்தது. உலக நிறுவனத்தில் அங்கம் பற்றுள்ள அத்தனை நாடுகளும் அந்த மாநாட்டில் சங்கமம். உயர்ந்து வரும் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்துவது, காற்றுத் தூய்மையைக் குறைப்பது, இயற்கையைக் காப்பாற்றத் திட்டங்கள் வகுப்பது ஆகியன மாநாட்டின் முக்கிய நோக்கம். ஆனால் அது நிறைவேறியதா?

கேள்விக்குறி தான்.வளர்ச்சியடைந்த நாடுகள் தாங்கள் வெளியேற்றும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்துவது குறித்து சட்டப்படி எந்த முடிவும் தீர்மானத்தில் இல்லை என்று குற்றம் சாட்டின வளரும் நாடுகள்.

கரியமில வாயு வெளியேற்றத்தை சட்ட ரீதியாக கட்டுப்படுத்த வேண்டும் என்கிறது 1997-ம் ஆண்டின் "கியோட்டோ" ஒப்பந்தம். அது 2012-ம் ஆண்டு நிறைவடைகிறது. ஆனால் அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து எந்தப் பதிலும் புதிய தீர்மானத்தில் இல்லை என்பது ஏழை நாடுகளின் குமுறல்.

பருவ நிலை மாநாட்டின் இறுதி அறிக்கை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தைக் கட்டுப்படுத்த அனைத்துலக, தேசிய அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கியது. அத்துடன் வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும் அதை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தது.

இருப்பினும் மாநாட்டில் சட்ட ரீதியில் அனைத்து நாடுகளையும் ஒப்புக் கொள்ள வைக்கும் தீர்மானம் எட்டப்படவில்லை. அதற்கு மாறாக சட்ட நிர்பந்தம் இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு ஏழை நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால் கோபன்ஹேகன் மாநாட்டின் மூலம் எந்த முழுமையான செய்தியும் உலகுக்குக் கிடைக்கவில்லை.

அதிர்ச்சி! ஆனந்தம்! ஏக்கம்! ஏமாற்றம்! இப்படிக் கலவையான உணர்வுகளைத் தந்து விட்டு விடைபெறுகிறது 2009. பிறக்கவிருக்கும் புத்தாயிரத்தின் பத்தாவது ஆண்டு மகிழ்ச்சியை நிறைவாகக் கொண்டு வந்து சேர்க்கும் என்பது நம்பிக்கை. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

Sunday, December 27, 2009

உலகம் 2009 - பகுதி 2

இவ்வாண்டு(2009) மே மாதம் நடந்த முக்கியச் சம்பவங்கள் இரண்டு. அவை நடந்தது வெவ்வேறு திசைகளில். ஆனால் உலகின் எல்லாத் திக்குகளிலும் கலவையான எதிரொலிகள்.

இலங்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த உள் நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது இவ்வாண்டின் மே மாதம் மூன்றாம் வாரத்தில். அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக ஒடுக்கப்பட்டனர். அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போரில் கொல்லப்பட்டதாக அறிவித்தது இலங்கை ராணுவம். போர் உக்கிரமான வேளையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களும் கொல்லப்பட்டனர். இறுதிக் கட்டத் தாக்குதலில் பலியான உயிர்களின் எண்ணிக்கை முப்பதாயிரம் என்பது புள்ளி விவரம். அந்தப் பட்டியலில் அடங்காதது எத்தனை ஆயிரமோ? என்று வினா எழுப்புகிறது விமர்சன வட்டாரம்.முந்நூறாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாயினர். இலங்கையின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த அவர்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். காரணம் போர். ஆபத்துக்குப் பாவமில்லை என்று அவர்கள் தஞ்சமடைந்தது இடைக்கால நிவாரண முகாம்களில். இப்போது படிப்படியாக அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள் என்று சொல்கிறது இலங்கை அரசாங்கம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஏராளம். அவை பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எழுந்தன அவ்வப்போது சில குரல்கள். இதுவரை எந்தப் பதிலும் கிட்டவில்லை. விடிவு காலம் எப்போது? என்று காத்துக்கிடக்கிறது இலங்கையின் சிறுபான்மைச் சமூகம்.

இதற்கிடையே இலங்கை அரசியலில் ஓர் எதிர்பாராத திருப்பம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தலைமையேற்று நடத்தியவர் இராணுவத் தலைவர் ஜெனரல் சரத் ஃபொன்சோகா. அவர் இப்போது அதிபர் ராஜபக்ஷவுக்கு எதிராக அரசியல் களத்தில். போரின் வெற்றிக்குப் பிறகு அரசாங்கம் தம்மை அலட்சியம் செய்கிறது என்று கூறி பதவியைத் துறந்தார் திரு.ஃபொன்சேகா. அடுத்து அவர் பார்வை அரசியலின் பக்கம் திரும்பியது.

அடுத்த மாதம் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார் திரு.ஃபொன்சேகா. நேற்று வரை ஓரணியில் இருந்தவர்கள். இப்போது நேரெதிராக அரசியல் களத்தில். என்ன முடிவு என்பதைக் காணக் காத்திருக்கிறது உலகம்.

மே மாதம் இந்தியாவில் பலமாக வீசியது அரசியல் அனல். அப்போது தான் அங்கு நடந்தது நாடாளுமன்றத் தேர்தல். அதன் முடிவில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்கள் ஒரு சாரார். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. மீண்டும் ஒரு நிலையற்ற ஆட்சி வரப்போகிறது. இப்படிப் பலப்பல யூகங்கள். ஆனால் நடந்தது வேறு? மக்கள் வழங்கியது தெளிவான தீர்ப்பு.இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வாகை சூடியது ஆளும் காங்கிரஸ். இந்தியா முழுமைக்கும் ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. சுமார் 71 மில்லியன் பேர் அதில் வாக்களித்தனர். 1991-க்குப் பிறகு மக்களவையில் மீண்டும் 200க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியது காங்கிரஸ். அக்கட்சி தலைமையிலான கூட்டணி வென்ற இடங்கள் 243. முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கூட்டணி 160 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இந்தியாவின் அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கப் போவது நாங்கள் என்று முழக்கமிட்ட மூன்றாவது அணி காற்றில் கரைந்த கற்பூரம் ஆனது. அது வெற்றி கொண்ட தொகுதிகள் 79.

இலங்கைப் பிரச்சினை உச்சத்தில் இருந்த வேளையில் இடம் பெற்றது இந்திய நாடாளுமன்றத் தேர்தல். அதன் தாக்கம் தமிழகத்தில் கடுமையாக எதிரொலிக்கும் என்ற அனுமானம் கொடி கட்டிப் பறந்தது. ஆனால் அங்கும் தலை கீழ் மாற்றம். தமிழகத்தை ஆளும் தி.மு.க கூட்டணி 28 இடங்களை வன்றது. எதிர்த்தரப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 12 தொகுதிகளைக் கைப்பற்றியது.

இந்திய அளவில் அதிக இடங்களைக் கைப்பற்றிய காங்கிரசின் திரு.மன்மோகன் சிங் மீண்டும் இந்தியாவின் பிரதமரானார்.

ஜுன் மாதம் நடந்த ஏர் ஃபிரான்ஸ் விமான விபத்து உலக மக்களை கதி கலங்க வைத்தது. பிரேசில் தலைநகர் ரி யோடி ஜெனிரோவில் இருந்து பாரிசுக்குப் புறப்பட்டது அந்த விமானம். அட்லாண்டிக் கடலின் மீது பறந்த வேளையில் மின்னல் தாக்கத்துக்கு இலக்கானதால் கட்டுப்பாட்டை இழந்தது. அதில் இருந்த ஊழியர்கள், பயணிகள் மொத்தம் 228 பேருடன் கடலில் விழுந்தது ஏர் ஃபிரான்ஸ் விமானம்.
தகவல் அறிந்ததும் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆனால் எவரையும் காப்பாற்ற முடியவில்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு சிலருடைய சடலங்களை மட்டுமே மீட்க முடிந்தது. அவர்களையும் அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல். காரணம் அவை அழுகிப் போயிருந்தன. தேடும் பணியில் கிடைக்கப் பெற்ற சடலங்கள் சொற்பம். கிடைக்காமலேயே போய் விட்ட உடல்கள் அதிகம். 75 ஆண்டுகளாக பயண சேவையாற்றி வரும் ஏர் ஃபிரான்ஸ் வரலாற்றில் அது மிகப் பெரும் விபத்து.

ஜுன் மாதம் ஈரானில் தேர்தல் காலம். மீண்டும் அதிபராகத் தேர்வு பெற்றார் மஹ்மூத் அஹ்மத் நிஜாதி. ஆனால் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
ஈரான் தேர்தல் விதிப்படி பதிவான வாக்குகளில் பாதிக்கும் மேல் பெற்றவர்கள் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவர். அந்த அடிப்படையில் திரு. அஹ்மத் நிஜாதி 64.8 விழுக்காடு வாக்குகள் பெற்றதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். அதை எதிர்த்தரப்புப் போட்டியாளர் திரு. மீர் ஹுஸைன் மூஸவி மறுத்தார். வாக்களிப்பிலும், வாக்கு எண்ணிக்கையிலும் மோசடிகள் நடந்தன என்பது அவருடைய குற்றச்சாட்டு.

பாப் இசை உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்ஸன் மரணமடைந்தது இந்த ஆண்டின் ஜுன் மாதத்தில். அவருடைய மரணத்தில் சந்தேகங்கள் நிறைந்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. ஜாக்ஸனின் குடும்ப மருத்துவரே தவறான ஊசி மூலம் அவருடைய உயிரைப் பறித்து விட்டார் என்பது குற்றச்சாட்டுகளில் முக்கியமானது.


ஜாக்சன் வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரைகள் ஏற்படுத்திய பக்க விளைவு தான் மரணத்துக்குக் காரணம் என்றும் சொல்லப்பட்டது. எது எப்படி ஆயினும், வறுமையின் வெறுமையான பக்கக்களில் இருந்து தன் திறமையால் உலகின் உச்சத்துக்குச் சென்ற பெருமை மைக்கேல் ஜாக்ஸனுக்கு உண்டு. அவருடைய மரணம் இசை ரசிகர்களுக்குப் பேரிழப்பு. மரணம் நடந்த இரு வாரங்களுக்குப் பிறகு நடந்த ஜாக்ஸனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு கண்ணீர் சிந்தியவர்கள் அதற்குச் சாட்சி.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சூரிய கிரகணம் வந்தது இந்த ஆண்டின் ஜுலை மாதத்தில்.சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைக்கப்படும். இவ்வாறு பூமியின் சில பாகங்களைச் சந்திரன் மறைப்பதால் நிழல் தோன்றும். அதன் காரணமாக பகலிலேயே இருள் ஏற்படும். அதற்குப் பெயர் சூரிய கிரகணம். இந்த ஆண்டின் சூரிய கிரகணம் சுமார் 6 நிமிடங்கள் வரை நீடித்தது.

உலகம் 2009 - பகுதி 1

2009 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் உலகம். பரபரப்பும், பரிதவிப்பும் நிறைந்த மற்றோர் ஆண்டாக விடை பெற்றுச் செல்கிறது 2009. நினைவுப் பெட்டகத்தில் உறைந்து கிடக்கும் தகவல்களை மீண்டும் ஒருமுறை மீட்டிப் பார்ப்போமா?


உலக அரசியல் சரித்திரத்தில் புதிய அத்தியாயம் இந்த ஆண்டில் ஆரம்பம். ஆம். சுமார் ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்கக் கருவறையில் இருந்த கனவு, வடிவம் பெற்றது இந்த ஆண்டில் தான்.

அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றார் ஒடுக்கப்பட்ட கறுப்பின மக்களின் பிரதிநிதியாகப் பார்க்கப்படும் பராக் ஒபாமா. அவர் அமெரிக்காவின் 44 ஆவது அதிபர். வெள்ளை மாளிகக்குள் அடியெடுத்து வைத்த முதல் கறுப்பினத்தவர் என்ற பெருமை அவரைச் சேர்ந்தது.
அதேவேளை, ஆப்கானிஸ்தான், ஈராக் போர் காரணமாக உலக அளவில் சரிந்து கிடந்தது அமெரிக்காவின் கௌரவம். அதைக் காப்பாற்றும் பொறுப்பு அதிபர் ஒபாமாவின் கைகளில். பொருளியல் நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருந்த அமெரிக்காவை அவர் தூக்கி நிறுத்துவார் என்பது வாக்களித்த மக்களின் நம்பிக்கை. அதற்கு வலுச் சேர்த்தார் அதிபர் ஒபாமா.

பதவியேற்ற சிறிது நாட்களில் 789 பில்லியன் டாலர் பொருளியல் ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகம் செய்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையான விவாதத்துக்குப் பிறகு நிறைவேறியது அந்த மசோதா. அதன் மீதான வாக்கெடுப்பில் 61 க்கு 37 என்ற விகிதத்தில் உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைப் பதிவு செய்தனர். முக்கிய எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் 3 உறுப்பினர்களும் ஊக்குவிப்புத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தனர். அது, அமெரிக்க மக்களுக்கு நம்பிக்கை தந்த திருப்பம்.

கலைத் துறையைப் பொறுத்த அளவில் ஆசியாவுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பான அங்கீகாரம். பெப்ரவரியில் "Slumdog Millionaire" திரைப்படம் எட்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். இந்திய இசைக்கலைஞர் ஒருவர் அந்த விருதைப் பெற்றது அதுவே முதல் முறை. Slumdog படத்தில் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றிய ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது பெற்ற மற்றோர் இந்தியர்.Slumdog Millionaire தவிர்த்து, ஆசியாவில் தயாரிக்கப்பட்ட வேறு சில படைப்புகளும் இவ்வாண்டில் ஆஸ்கர் கௌரவம் பெற்றன. ஆகச் சிறந்த பிறமொழி படத்துக்கான விருதைப் பெற்றது Departures என்னும் ஜப்பானியத் திரைப்படம். La Maison En Petits Cubes என்ற இன்னொரு ஜப்பானியப் படைப்பு ஆகச் சிறந்த வரைகலை குறும்படத்துக்கான விருதை வென்றது. இந்தியாவில் படமாக்கப்பட்ட Smile Pinky என்னும் விளக்கப்படமும் ஆஸ்கர் விருதுப் பட்டியலில் இணைந்து கொண்டது.

அரசியல், கலை இவற்றை அடுத்து வருகிறது விளையாட்டு. ஆனால், இது வினையான விளையாட்டு. மார்ச் 3 ஆம் தேதி பாகிஸ்தானில் வெடித்த குண்டு அந்த வினையின் வேதனைக்குரிய எதிரொலி.

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடச் சென்ற இலங்கை அணியினரைக் குறிவைத்து நடத்தப்பட்டது தாக்குதல். வீரர்கள் யாருக்கும் இழப்பில்லை. ஆனால் சல்லடையாகிப் போனது அவர்கள் சென்ற பஸ். எனினும், தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பறிபோயின எட்டு உயிர்கள். அவர்கள் அத்தனை பேரும் பாகிஸ்தானியப் போலீசார்.தாலிபான்களை நோக்கி நீண்டன குற்றக் கரங்கள். அதன் தொடர்பில் கைது செய்யப்பட்டார் தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர். மேலும் அறுவரைத் தேடி வருவதாக அறிவித்தது பாகிஸ்தானியக் காவல்துறை. இந்தத் தாக்குதலின் பின்னணியில் இலங்கையில் செயல்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்திருப்பார்களோ? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

இவ்வளவுக்குப் பிறகும் களமிறங்கி விளையாடுமா இலங்கை?. மூட்டை முடிச்சுகளோடு பாகிஸ்தானை விட்டு வெளியேறியது. கிரிக்கெட் தொடரையும் புறக்கணித்தது. ஒட்டு மொத்த பேரிழப்பு விளையாட்டு ரசிகர்களுக்கு.

அன்று தொடங்கிய வேட்டுச் சத்தம் பாகிஸ்தானில் இன்று வரை ஓய்ந்தபாடில்லை. அவ்வப்போதும் விட்டுவிட்டும் வெடித்துக் கொண்டே தான் இருக்கின்றன குண்டுகள். பலியாவது என்னவோ அப்பாவி உயிர்கள் தான். அமெரிக்காவின் நெருக்கமான தோழராகத் திகழ்கிறது பாகிஸ்தான். அது தாலிபான்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் அவ்வப்போது வெடிக்கச் செய்கிறார்கள். எப்போது பூ மழையோ...? யார் அறிவார்?

அடுத்து நம் கவனத்துக்குரிய அம்சம் - மலேசியாவில் நடந்த தலைமை மாற்றம். அது நடந்தது ஏப்ரலில். மலேசியாவின் ஆறாவது பிரதமராகப் பொறுப்பேற்றார் திரு.நஜீப் அப்துல் ரசாக். அதற்கு ஏதுவாக மலேசியா ஆளுங்கட்சியான அம்னோவின் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். முன்னைய பிரதமர் திரு.அப்துல்லாஹ் அஹ்மத் படாவி பதவி விலகியதைத் தொடர்ந்து திரு.நஜீப் மலேசியாவின் பிரதமரானார்.
தமது 23 ஆம் வயதிலேயே மலேசிய அரசியலில் அடியெடுத்து வைத்தவர் திரு.நஜீப். சென்ற ஆறு ஆண்டுகளாக மலேசியாவின் துணைப் பிரதமராகவும் சேவையாற்றியவர். சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய அரசியலில் தனி முத்திரை பதித்து வருகிறார் திரு.நஜீப். இவர் மலேசியாவின் இரண்டாவது பிரதமரான திரு.அப்துல் ரசாக்கின் மகன். பொருளியல் நெருக்கடியும், உள்நாட்டு அரசியல் குழப்பங்களும் அதிகரித்திருந்த வேளையில் திரு.நஜீப் பிரதமராகப் பதவியேற்றார்.

மலேசியாவை அடுத்து மியன்மாரிலும் ஓர் அரசியல் புயல். அது வீசியது மே மாதத் தொடக்கத்தில். மியன்மாரில் நடப்பது இராணுவ ஆட்சி. மக்களாட்சியைக் கொண்டு வர வேண்டுமென்று போராடுகிறார் எதிர்கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி. அதற்கு இசைய மறுத்த இராணுவம் அவரை இல்லக் காவலில் வைத்தது. அந்தத் தண்டனை முடியும் தருவாயில் மீண்டும் ஒரு சோதனை.விதிகளை மீறி தமது வீட்டில் அமெரிக்கர் ஒருவரை இரகசியமாகத் தங்க வைத்தார் என்பது குற்றச்சாட்டு. ஏரியில் நீந்தியபடியே அந்த அமெரிக்கர் ஆங் சான் சூச்சி வீட்டுக்குள் நுழைந்தார் என்றது இராணுவம். விசாரணை முடிவில் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது ஆங் சான் சூச்சி. பின்னர் அது பாதியாகக் குறைக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு மியன்மாரில் நடக்கவுள்ள தேர்தலில் ஆங் சான் சூச்சியின் பங்களிப்பைத் தடுக்கும் நோக்கில் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். சூச்சியின் வீட்டில் நுழைந்த அமெரிக்கருக்கு ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எவ்வித நிபந்தனையுமின்றி சூச்சியை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

Tuesday, December 8, 2009

மீண்டும் பாயுமா துபாய்?

சென்ற ஆண்டின் இறுதியில் உலகைச் சுழற்றி அடித்த பொருளியல் சுனாமி தற்போது தான் ஓயத் தொடங்கியுள்ளது. இப்போது மீண்டும் ஓர் ஓலம். இம்முறை அந்தக் குரல் எழுந்திருப்பது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் ஒன்றான துபாயில் இருந்து. நவம்பர்’09 இறுதி வாரத்தில் துபாய் அரசாங்கத்திற்குச் சொந்தமான Dubai World ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அது உலகச் சந்தைகளை ஆட்டங்காண வைத்தது. Dubai World முதலீட்டு நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட 60 பில்லியன் டாலர் கடன் உள்ளது. அதனைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத கால அவகாசம் கேட்டது. இந்தத் திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்?

குறுகிய காலகட்டத்துக்குள் அதிக வளர்ச்சியைப் பெற்று விட வேண்டும் என்ற நோக்கில் தங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தினார்கள். ஆனால் உலகப் பொருளியல் நெருக்கடி அவர்கள் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டது. எதிர்பார்த்த வருமானம் வந்து சேரவில்லை. அதனால் வெளி நாட்டு வங்கிகளிடம் வாங்கிய கடனுக்குரிய வட்டியைச் செலுத்த முடியவில்லை. முதலைத் திருப்பித் தரவேண்டிய நிர்ப்பந்தம். வருமானத்துக்கும், இலாபத்துக்கும் இடையே விழுந்தது பெரிய பள்ளம். இதுவே துபாய் நிதி நெருக்கடிக்குரிய அடிப்படக் காரணம்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் துபாய் சற்று வித்தியாசமான நாடு. மேற்குலகின் சாயலை உள்வாங்கிக் கொண்டு செழித்து முன்னேறிய வளைகுடாப் பிரதேசம். விண்ணை முட்டும் கட்டடங்கள். நுகர்வோரை மயக்கும் வணிக வளாகங்கள். கேளிக்கைப் பூங்காங்கள் என்று அதன் சிறப்பை அடுக்கிக் கொண்டே போகலாம். மத்திய கிழக்கின் பிற நாடுகளோடு ஒப்பிடும் போது துபாயில் எண்ணெய் வளம் குறைவு. இருப்பினும் அந்த நாடு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்தது எப்படி?
ஐக்கிய அரபுச் சிற்றரசில் மொத்தம் 7 மாநிலங்கள். தலைநகரம் அபுதாபி. துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன்,ஃபுஜைரா, மற்றும் ராசல்கைமா என்பன மற்ற மாநிலங்கள். இவற்றில் துபாயில் எண்ணெய் வளம் மிகக் குறைவு. இன்னும் இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எண்ணய் என்பது வரலாற்றில் குறிப்பிடப்படும் ஒரு பொருளாகிப் போய்விடும்.

1998 ல் துபாயின் பொருளாதார வளர்ச்சி இரண்டு விழுக்காடு. அதை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் திட்டம். அதன் பொருட்டு மூன்று துறைகளில் கவனம் செலுத்தத் தீர்மானித்தது துபாய் அரசாங்கம். ஒன்று வர்த்தகம். இரண்டாவது கட்டுமானத்துறை. ஹோட்டல்ஸ், உல்லாசத் தலங்கள், வணிக வளாகங்கள், கேளிக்கைப் பூங்காக்கள் ஆகியவற்றைக் கட்டி வெளிநாட்டினரை ஈர்க்கலாம் என்று கணித்தது. மூன்றாவதாக மத்திய கிழக்கின் வணிகக் கேந்திரமாக துபாயை உருவாக்க வேண்டும் என்பதும் அவர்களுடைய தொலைநோக்கு.

பொருளியலைப் பெருக்கும் அத்தனை காரியங்களிலும் கவனம் செலுத்தினார்கள். அதற்குக் கிடைத்தது கை மேல் பலன். சென்ற ஆண்டு துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எண்ணெய் வருவாய் 6 விழுக்காடு மட்டுமே. மத்திய கிழக்கில் எண்ணெய் வளம் சாராத நாடு துபாய் மட்டுமே என்ற நிலையை படிப்படியாக எட்டிப் பிடித்து விட்டார்கள்.

கட்டடக் கட்டுமானம் மூலம் துபாய்க்குக் கிடைக்கும் வருமானம் 22 விழுக்காட்டுக்கும் அதிகம். வர்த்தகம் மூலம் வருவது கிட்டத்தட்ட 16 விழுக்காடு. பல்வேறு நிதிச்சேவைகளின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் 11 விழுக்காடு. உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் துபாயின் தலையில் விழுந்தது பேரிடி.


Dubai World என்ற அரசாங்க முதலீட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதி அல் நகீல். கட்டுமானத்துறையில் இந்நிறுவனம் தான் ஜாம்பவான். உலகின் மற்ற நாடுகளில் கிளை பரப்ப ஆசைப்பட்டது Dubai World. விளைவு, வெளிநாடுகளில் தங்கள் முதலீடுகளைப் பெருக்கினார்கள். லண்டனில் ஒரு துறைமுகம். நியூயார்க்கில் ஒரு வணிக வளாகம். இப்படிப் படிப்படியான விரிவாக்கம். கொட்டத் தொடங்கியது பணமழை.

சுபயோக சுபதினத்தின் இராகு காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்டது நிதிச்சுனாமி. அதில் சிக்குண்டது துபாய். இந்த ஆண்டின் ஃபிப்ரவரியில் சுற்றுலா வருமானம் சுருங்கியது. பணப் புழக்கம் குறைந்தது. மக்கள் வாங்கும் திறனை இழந்தனர். முன் கை நீட்டியவர்கள் முட்டுக்கையை நீட்ட வேண்டிய கட்டாய நிலை. கட்டுமானத்துறையும் ஆட்டம் கண்டது. சொத்துச் சந்தை படுத்து விட்டது. கிட்டத்தட்ட 60, 70 விழுக்காடு அளவுக்கு பெரும் வீழ்ச்சி. இதனால் நிறையக் கட்டுமானத் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன. பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு. வேலையிழப்பு. இப்படி அடிக்கு மேல் அடி.
துபாயின் பொருளியல் வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்த Dubai World இப்போது கடன் சுமையால் தத்தளிக்கிறது. வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த அவகாசம் கேட்டிருக்கிறது. தனக்குள்ள 26 பில்லியன் டாலர் கடனை மாற்றியமைக்கும் யோசனைகளை வெளியிட்டது. அதன் மூலம் பங்குச் சந்தைகள் ஓரளவுக்கு நிமிர்ந்துள்ளன. Dubai World ன் கடனுக்குப் பொறுப்பேற்க முடியாது என்று துபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடியைப் போன்ற நிலையை மீண்டும் உருவாக்குமா?

அப்படி ஒப்பிட முடியாது. அமெரிக்க நிதிச் சுழலில் ஏற்பட்ட இழப்பு டிரில்லியன் டாலருக்கும் அதிகம். துபாயில் அப்படியல்ல. 60 பில்லியன் டாலர் தான். சரி. இனி என்னாகும்? அமெரிக்க அரசாங்கம் நிதியைக் கொடுத்து நிறுவனங்களைக் காப்பாற்றியது போல் துபாயில் நடக்குமா? அப்படிச் செய்ய முடியாது என்று துபை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்து விட்டது. காரணம் அவர்களிடம் இருக்கும் கையிருப்பும் குறைவு. ஆனால் அபுதாபி அரசாங்கம் நிச்சயம் ஏதாவது செய்யும் என்பது பொருளியல் நிபுணர்களின் நம்பிக்கை. காரணம், Dubai World கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் முதலில் பாதிக்கப்படுவது அபுதாபி வங்கிகள் தான். எனவே இக்கட்டான சூழலில் அவர்கள் கை கொடுப்பார்கள் என்பது நிபுணர்களின் கணிப்பு.

வர்த்தகம் என்பது இருவழிப் பாதை. அதில் லாபம் வரும் போது அதன் பலனை அனுபவிக்கும் நிறுவனங்கள், நஷ்டம் வரும் போது மட்டும் அரசாங்க உதவியைக் கோருவது பிரச்சினைக்குரிய தீர்வல்ல என்பது சில பொருளியல் நிபுணர்களின் கருத்து.

Dubai World ன் கடனுக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது என்று அறிவித்தது தீர்க்கமான முடிவு என்பது சில நிபுணர்களின் கூற்று. முதலீடு செய்யும் போதே, அதனால் வரக்கூடிய வருமானமோ, நஷ்டமோ இரண்டையும் தாங்கிக் கொள்ளும் மனப்போக்குடன் தான் முதலீடு செய்ய வேண்டும். அதில் லாபம் வந்தால் எங்களுக்கு. நஷ்டம் வந்தால் நாட்டில் உள்ள அரசாங்கம் ஈடுகட்டி விடும் என்று எதிர்பார்த்து முதலீடு செய்யும் மனப்போக்கை மாற்ற வேண்டும்.

துரதிருஷ்டவசமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட அந்த மனப்போக்கை அவங்க கண்டிக்கலை, தடுக்கவும் இல்லை. இதனால என்னாச்சு? லாபம் வந்தால் எனக்கு. நஷ்டம் வந்தால் வரி செலுத்தும் மக்களுக்கு என்ற மனப்பான்மை வளர்ந்துடுச்சு. துபாய் அரசாங்கம் அந்தப் போக்கை இப்போ துண்டித்தாங்கன்னா அது நல்ல முடிவு என்பது சில பொருளியல் நிபுணர்களின் வாதம்.

துபாயில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி உலகின் மற்ற நாடுகளைப் பாதிக்கும் வாய்ப்புகள் உண்டா?

பெரிய பாதிப்புகள் இருக்கும்ன்னு சொல்ல முடியாது. எந்த ஒரு முதலீடு செய்தாலும் அதில் நஷ்டம் வருவதற்குரிய வாய்ப்புகள் இருக்கத் தான் செய்யும். சகித்துக் கொள்ளக் கூடிய அளவு நஷ்டம் வரும் அபாயங்கள் இருக்கிறதே ஒழிய, 2008 நிதி நெருக்கடி மாதிரி வருவதற்கான சாத்தியங்கள் இல்லை.


ஐரோப்பா கண்டத்தின் சில வங்கிகள் துபையின் சில நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்திருக்கின்றன. Dubai World உள்ளிட்ட மேலும் சில நிறுவனங்களும் கடன் சுமையைச் சரிவரப் பூர்த்தி செய்ய முடியாத நிலை இப்போது. இதனால் ஐரோப்பிய நாட்டின் சில வங்கிகளுக்குப் பிரச்சினை ஏற்படும் அபாயம் உண்டு.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் இந்தியா, சைனா போன்ற வளரும் நாடுகளுக்குச் சில பாதிப்புகள் வரலாம். எப்படி? Dubai World அரசாங்கத்தின் ஓர் அங்கம். அதனால தாங்கள் கொடுத்த கடனுக்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்கும் என்று நம்பினார்கள். இப்போது அந்த நம்பிக்கை பொய்யாகிப் போயிற்று. இதனால் Dubai World நிலைகுத்திப் போகும் அபாயம் இருப்பதைப் புறக்கணிக்க முடியாது. அப்படி ஒரு நிலை வரும் போது அதை ‘சாவரின்ட் டிஃபால்ட்’ என்று வர்ணிப்பார்கள். அதாவது நாடே போன்டியாகிடுச்சு. நாங்க பணம் கொடுக்க முடியாதுன்னு சொல்ற மாதிரி. இதனால் வளரும் நாடுகள் அரசாங்க அங்கத்தின் மூலமாக கடன் பெற முயற்சித்தால், வெளிநாட்டு வங்கிகள் கடன் கொடுக்க ரொம்பப் பயப்படுவாங்க. துபாய்ல நடந்த மாதிரி இங்கேயும் ஆயிடுமோன்னு. இது வளரும் நாடுகளைப் பொறுத்தவரையில் முக்கியமான தாக்கமாக இருக்கக் கூடும்.

ஆசிய வட்டார நாடுகளுக்கு சிங்கப்பூர் ஒரு வர்த்தகக் கேந்திரமாகத் திகழ்கிறது. அதைப் போல மத்திய கிழக்கு வட்டாரத்தில் தான் முன்னிற்க வேண்டும் என்பது துபாயின் இலக்கு. அதை நோக்கிய பயணத்தில் இப்பாது பெரிய தடங்கல். இதிலிருந்து துபாய் மீளும் சாத்தியம் இருக்கிறதா?

சிங்கப்பூர் வந்த அளவுக்கு குறுகிய காலகட்டத்தில் துபை மத்திய கிழக்கு வட்டாரத்தில் வணிகக் கேந்திரமாக மாறி விட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் அந்தப் பாதையில் முன்னேறி வந்து வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதையும் புறந்தள்ளி விடமுடியாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் நெருக்கடி அந்த வளர்ச்சியைக் கொஞ்சம் பாதிக்கத் தான் செய்யும்.
ஓராண்டு, ஈராண்டு சொல்லப் போனால் ஐந்து ஆண்டுகள் இந்த வளர்ச்சி தேக்கமடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த நெருக்கடியை துபாய் அரசாங்கம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் நாட்டில் உள்ள சட்ட திட்டங்கள், முதலீடு செய்பவர்களுக்குரிய பாதுகாப்புகள் ஆகியவற்றைக் குறுகிய காலத்தில் அவர்கள் உருவாக்கினால் அந்தத் தேக்கத்தையே ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முடியும். அதற்குரிய அணுகுமுறையும் அரசாங்கத்தின் கொள்கைப் போக்கும் மாறுகிறதா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அப்படி மாறினால் இந்தத் தேக்கத்தையே அவர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்ல முடியும்.

நிலையற்ற பொருளியல் சந்தையில் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது. ஏற்றத் தாழ்வுகளைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை முதலீட்டாளர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் அனந்தநாகேஸ்வரன். சிங்கப்பூரில் செயல்படும் ஜுலியர் பேயர் வங்கியின் மத்திய கிழக்கு முதலீட்டு ஆலோசகராக இவர் பணியாற்றி வருகிறார்.

குறுகிய காலத்திற்குள் அதிக லாபம் எடுக்க வேண்டும் என்ற இருக்கும் வரைக்கும் எந்த முதலீட்டிலும் நஷ்டம் உண்டாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆதலால் இனிமேல் துபாய் மட்டுமல்ல எந்த ஒரு நாட்டிலும், உள்நாட்டிலும் சரி. வெளிநாட்டிலும் சரி. முதலீடு செய்யும் போது அந்த முதலீட்டில் நஷ்டம் அடையவதற்கான சாத்தியக் கூறுகள் எவ்வவளவு? அப்படி நஷ்டம் வந்தால் தாங்கிக் கொள்ள முடியுமா? எவ்வளவு காலத்துக்குள் நாம் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். என்பது பற்றி நிதானமாக திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும். அப்படிச் செய்வதால் நஷ்டம் வந்தாலும் அவங்களால ஏற்றுக் கொள்ள முடியும். தொடர்ந்து நல்ல முறையில் பல நாட்கள் லாபம் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கும். கடந்த பத்தாண்டுகளில் குறுகிய கால கட்டத்தில் அதிக லாபம் என்ற மனப்பான்மையை அதிகம் பார்க்கிறோம். அது தான் மிகப் பெரிய அபாயம். முதலீட்டுக்கான ஆபத்து துபாயிலோ, சிங்கப்பூரிலோ, சீனாவிலோ இல்லை. அது குடிகொண்டிருப்பது நம்முடைய மனதில் தான் என்பது டாக்டர். அனந்த நாகேஸ்வரன் சொல்லும் செய்தி.

சங்கடமான காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்வது தான் மனித வாழ்க்கக்கு ஆதாரம். இந்த நியதி உலக நாடுகளுக்கும் பொருந்தும். துபாயைச் சுற்றிலும் எண்ணெய் வளமிக்க நேசநாடுகள் இருக்கின்றன. அவர்கள் இந்த நெருக்கடியை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். எனவே சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போல துபாய் மீண்டும் எழுந்துவரும் என்பது இப்போதைய நம்பிக்கை. அது நனவாகுமா? என்பதைக் காலம் கணித்துச் சொல்லும்.