Tuesday, February 23, 2010

ஆ!..தங்கம்? - 3
சிங்கப்பூரில் உள்ள 33 நகைக்கடைகளில் அண்மையில்(ஜனவரி 10) சோதனை நடத்தியது சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம். எதேச்சை முறையில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதாவது சங்க உறுப்பினர்களே வாடிக்கையாளராகப் போய் நகைகளை வாங்கி வந்து ஆய்வுக்கு உட்படுத்தினர். சில கடைகளில் 916 என்று விற்கப்பட்ட நகைகளில் சரியான விகிதத்தில் தங்கம் கலக்கப்படவில்லை என்பது தெளிவாயிற்று. இனி தரம் குறைந்த நகைகளை விற்ற கடைகளை சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் வர்த்தக, தொழில் துறை அமைச்சுக் அடையாளம் காட்டும். முதல் தடவை அந்தத் தவறு நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டம் விதிக்கப்படலாம். அதுவே வாடிக்கையாகி இருந்தால் அவர்களுடைய விற்பனை உரிமம் ரத்துச் செய்யப்படலாம்.

பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வை சிங்கப்பூர் நகைக்கடைக்காரர்கள் சங்கம் கடுமையாகச் சாடியது. தற்போது விற்பனைக்கு வரும் பெரும்பாலான நகைகள் இயந்திரங்களால் வடிவமைக்கப்படுபவை. அவற்றில் சிற்சில இடங்களில் கூடுதல், குறைவு இருப்பது இயற்கை தான். அதற்காக ஒட்டுமொத்த நகைகளும் கலப்படம் என்று சொல்வது சரியல்ல என்பது அவர்களின் வாதம்.

முழுமையாக இயந்திரங்களால் வடிவமைக்கப்படும் நகைகளில் வள்ளிபுள்ளி மாறாமல் 91.6 தரம் இருக்கும். மற்றபடி ஒவ்வொரு பகுதி பகுதியாக இணைத்துச் செய்ய வேண்டிய நகைகளில் அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் சற்று கூடுதல் குறைவு இருக்கலாம். காரணம் அந்த இணைப்புக்காக கேடியம் பயன்படுத்தப்படும். அந்த இடங்களில் 91.6 அப்படின்றது 91.5 இருக்கலாம் அல்லது 91.4 இருக்கலாம். அதே நேரத்துல அடுத்த பகுதியில் 91.8 இருக்கவும் வாய்ப்புண்டு. ஆனாலும் ஒட்டுமொத்த அளவில் அது 91.6 நகையாகவே மதிப்பிடப்படும் என்பது நகைக்கடைக்காரர்கள் சொல்லும் விளக்கம்.

சிங்கப்பூரில் விற்கப்படும் நகைகளுக்குத் தரக்கட்டுப்பாடு முக்கியம். சில கடைக்காரர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. எனவே தான் இது போன்ற சோதனைகளில் அவர்களுக்கு வேதனை வருகிறது. முறையான தரக்கட்டுப்பாடு இருந்தால் தேவையற்ற மன சஞ்சலங்களைக் குறைக்கலாம்.

ஒரு கடை நடத்தும் போது யாரிடம் வேண்டுமானாலும் தங்கத்தைக் கொள்முதல் செய்யலாம். ஆனால் அவற்றை முறையாகச் சிங்கப்பூர் தரக்கட்டுப்பாடு வாரியத்துக்கு அனுப்பி சோதனையிட்டால் அவர்கள் ஒரு முத்திரையிட்டு அனுப்புவார்கள். அதை நிறைய நகைக்கடைக்காரர்கள் செய்யத் தவறுகின்றனர் என்பது வேதனைக்குரிய உண்மை.

சாமானிய மக்கள் கூட இன்று தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களில் அதிகமானோர் ஆபரணத் தங்கத்தையே பெரிய முதலீடாகக் கருதுகின்றனர். அவர்களின் அந்த அணுகுமுறை சரியா?

தங்க பார்களாக வாங்கினால் அது புத்திசாலித்தனமான நடவடிக்கை என்று சொல்ல முடியும். ஆபரண நகையாக வாங்கி வைத்துக் கொண்டு மீண்டும் விற்கும் போது பல விதமான கழிவுகள் இருக்கு. ஒரு வங்கியில் கணக்கைத் தொடங்கித் தங்க பார்களாகக் கொள்முதல் செய்வதில் அதிக இலாபத்தை எதிர்பார்க்கலாம் என்பது விபரம் அறிந்தவர்கள் சொல்லும் ஆலோசனை.ஒரு வங்கிக்குச் சென்று நகை வாங்கி, விற்பது எல்லோருக்கும் எளிதான காரியமல்ல. எனவே ஆபரணத் தங்கத்திலேயே முதலீடு செய்வது நம்மில் பலருக்கும் வசதி. இருப்பினும் நகைகளை வாங்குவதற்கு முன் கூடுதல் கவனம் அவசியம்.

ஒரு கடைக்குச் சென்று நகைகளைப் பார்த்து அவை நமக்குப் பிடித்த பிறகு எடை போட வேண்டும். அப்போது அந்த நகையில் இருக்கும் எடை அட்டையை நீக்கி விட்டுத் தான் அந்த எடை போடப்பட வேண்டும். அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள எடையும், நிறுவையில் இருப்பதும் சரியான அளவுடையவையா? என்பதைச் சோதித்துக் கொள்ள வேண்டும். அடுத்து, ஒரு நகையைத் திருப்பிப் பார்த்தால் அந்தக் கொக்கி அல்லது மோதிரத்துக்குப் பின்னேயோ பார்த்தீங்கன்னா ஒரு முத்திரை இருக்கும். அந்த முத்திரை தான் சிங்கப்பூர் தரக்கட்டுப்பாடு வாரியத்தின் (எஸ்ஸே) முத்திரை. அது இருந்தால் நீங்கள் தாராளமாக வாங்கலாம். எந்தப் பிரச்சினையும் கிடையாது. அதாவது நிச்சயமாக என்ன சொல்றாங்களோ அந்த மதிப்பு மாறாமல் அப்படியே இருக்கும்.

தங்க நகை வாங்கிய பிறகு கொடுக்கப்படும் விலைப்பட்டியலில் முறையான தகவல்கள் இருக்கின்றனவா என்பதையும் சோதித்துக் கொள்ள வேண்டும். கணிணி மயமாக்கப்படாத சில கடைகளின் விலைப்பட்டியலில் போதுமான விளக்கங்கள் இருக்காது. எனவே கவனமாக நடந்து கொண்டால் முதலுக்கு மோசமில்லை.

இப்படிப் பார்த்துப் பார்த்து வாங்கிய நகைகளில் கூட சில நேரங்களில் குறை வர வாய்ப்புண்டு. அது போன்ற தருணங்களில் நம் சந்தேகத்தைப் போக்கிக் கொள்வதற்காகச் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தையும் நாடலாம். www.case.org.sg என்ற இணையப் பக்கத்தில் அது பற்றிய தகவல்களைக் காணலாம்.

சிங்கப்பூரில் விற்கப்படும் நகைகளுக்குச் சந்தையில் நல்ல மதிப்பு உண்டு. அதைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு வர்த்தகர்களுக்கு இருக்கிறது. அதை அவர்கள் புரிந்து கொண்டால் வாடிக்கையாளர்களுக்கும் தரமான நகைகள் கிடைக்கும். வர்த்தகர்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும்.

தங்க நகைகளில் கலப்படம் என்பதை வாடிக்கையாளர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களின் நம்பிக்கை தான் வர்த்தகத்துக்கு ஆதாரம். அதற்கு எந்தச் சேதாரமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது வர்த்தகர்களின் கடமை. அதைப் புரிந்து கொள்ளும் போது வாங்கும் நகைகளில் கூடுதல் பொலிவு இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

(நிறைவு)

ஆ!..தங்கம்? - 2ஆபரணங்களின் அழகு பெண்கள் அவற்றை அணிவதில் தான். ஆண்கள் அவர்களோடு எதிலும் போட்டி போடலாம். ஆனால் நகை அணிவதில் பெண்களுக்குத் தான் முதலிடம். ஆங்காங்கே சில ஆண்கள் நகைகள் அணிந்து கொள்ள ஆசைப்படலாம். சிங்கப்பூர் மாதிரியான வாழ்க்கைச் சூழலில் பெரும்பாலான ஆண்கள் தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை வெளிக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை என்பது தான் உண்மை. இருப்பினும் சிலரின் பார்வை பிளாட்டினத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது.

தங்க நகை வாங்கினால் பயன்படுத்தலாம். அவசரம் வந்தால் விற்றுக் காசாக்கலாம். தங்கம் இருக்கும் வரை கையிருப்புக்குக் காவலுண்டு என்பது மூத்த தலைமுறையின் மனக் கணக்கு. ஆனால் இளைய தலைமுறையினர் தங்கம் வாங்குவதிலும், அணிவதிலும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பது மூத்த தலைமுறையின் அங்கலாய்ப்பு.

எளிமையான வடிவங்கள், அணியும் உடைகளுக்கேற்ற வண்ணங்கள், குறைந்த செலவில் பளிச்சென்று அடையாளம் காட்டும் தன்மை. தங்கம் விற்கும் விலையில் மாற்று ஆபரங்ணகளைத் தேடியாக வேண்டிய கட்டாயம். இப்படிப் பல காரணங்களால் இளம் பெண்களை ஈர்த்திருக்கின்றன கவரிங் நகைகள். அது மட்டுமல்ல குறைந்த விலை. மின்னும் தன்மை மங்கும் பட்சத்தில் மீண்டும் முலாம் பூசும் வசதி. இரவு, பகல் எங்கு சென்றாலும் கழுத்தில் கிடப்பதைப் பற்றிக் கவலையில்லை. வழியில் யாரும் மிரட்டினால் கூடக் கழட்டிக் கையில் கொடுத்து விடலாம் என்பது இளையர்கள் சொல்லும் சங்கதி.தங்க நகைகளில் பல வகையுண்டு. 18,21,22 மற்றும் 24 கேரட் என்று பல அளவுகளில் தங்கம் கிடைக்கிறது. அவற்றுக்கேற்றவாறு விலையிலும் வித்தியாசம் உண்டு. ஆனால் இந்தியச் சமூகம் பெரும்பாலும் விரும்புவது 22 கேரட். அண்மைய காலங்களில் 916 தங்கத்துக்குக் கூடுதல் வரவேற்பு.

சொக்கத் தங்கம் என்பது 24 கேரட். அதில் எந்தக் கலப்படமும் இருக்காது. 916 என்பது 91.6 விழுக்காடு தங்கம். 8.4 விழுக்காடு மற்ற உலோகங்கள். உதாரணமாக செம்பு, வெள்ளி ஆகியன கலக்கப்பட்டிருக்கலாம். 21, 18 கேரட் இப்படின்னு குறையக் குறைய அந்த தங்க நகையோட மதிப்புக் குறையுது மற்ற உலோகங்கள் கூடுது.

பத்தர்களிடம் சென்று பிடித்தமான வடிவமைப்பைச் செய்து வாங்கியது ஒரு காலம். இன்று இயந்திரங்களில் வார்க்கப்பட்ட நகைகள் சந்தையில் கிடைக்கின்றன. குறிப்பிட்ட நேரத்துக்குள் பார்க்க வேண்டியதைப் பார்த்துச் சலித்து, எடுக்க வேண்டியதை எடுத்துக் கட்டிக் கொண்டு வருமளவுக்குத் தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. இருப்பினும் கைவேலைப்பாட்டின் அருமை தெரிந்தவர்கள் இன்னும் பத்தர்களை மறக்கவில்லை.ஒரு சிற்பி சிலையை வடித்தெடுப்பது போல பத்தர்கள் நகைகளை வடிவமைத்துக் கொடுப்பர். அதன் மகிமையை உணர்ந்தவர்கள் கைவேலைப்பாடுள்ள நகைகளை விட்டுத் தூரப் போவதில்லை. செய்கூலி அதிகம் கொடுத்தாலும் அவர்கள் என்றென்றும் விரும்புவது கைவேலைப்பாடுள்ள நகைகளைத் தான்.

பொதுமக்கள் தங்கம் வாங்குவது ஒரு புறமிருக்க மிகப் பெரிய நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை இல்லாத வகையில் புதிதாகப் பல நாடுகளிலும் தங்கம் மின்னத் தொடங்கியுள்ளது. அமெரிக்கப் பொருளியலில் ஏற்பட்ட ஆட்டம் அதற்கு முக்கியக் காரணம். பல நாடுகள் - குறிப்பாக சீனா, ஜப்பான் போன்றவை இன்னும் எத்தனை நாளைக்கு அமெரிக்காவை நம்ப முடியும் என்று யோசிக்கத் தொடங்கிவிட்டன.
பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைச் சீனா ஊக்குவித்து வருகிறது. அங்குள்ள மக்கள் கடந்த ஆண்டில் மட்டும் 70 டன்னுக்கும் அதிகமாகத் தங்க நகை அணியத் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு. அனைத்துலக பண நிதியம் தன்னிடமுள்ள 400 டன் தங்கத்தை விற்கப் போவதாக சென்ற ஆண்டு இறுதியில் அறிவித்தது. உடனே அதில் 200 டன் தங்கத்தை வாங்கிக் கொண்டது இந்தியா.

இந்தியா தன் வசமுள்ள தங்கத்தை ஏலத்தில் விற்ற காலம் ஒன்று இருந்தது. இப்போது அதன் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. எனவே தங்கத்தைக் கொள்முதல் செயவதில் இந்தியா ஆர்வம் காட்டுகிறது. அப்படி இந்தியா வாங்கும் தங்கத்தைப் பின்னாளில் வேறெங்கோ சென்று விற்க வேண்டிய அவசியமில்லை. அங்கிருக்கும் மக்களிடம் விற்றாலே கணிசமான இலாபத்தைச் சம்பாதிக்க முடியும் என்பது இந்திய அரசுக்குத் தெரிந்த சூட்சுமம். எனவே இனியும் தங்கம் விற்பனைக்கு வந்தாலும் அதை வாங்கிக் கொள்ள இந்தியா தயக்கம் காட்டாது.

ரஷ்யாவும் தனது அணுகுமுறையை மாற்றி கொண்டு வருகிறது. தன் கையிருப்புச் சொத்துகளில் 2 சதவீதத்தை மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்திருந்த ரஷ்யா அதை 10 சதவீதமாக மாற்றும் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. 55 விழுக்காட்டுச் சொத்துக்களை ஏற்கெனவே தங்கமாக மாற்றிக் கொண்டுள்ள ஐரோப்பிய வங்கிகளும் இன்றைய தங்கச் சந்தையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். எனவே தங்கத்தின் விலை இன்னும் அதிகமாகலாம் என்பது இப்போதைய கணிப்பு. இதற்கெதிரான கருத்துச் சொல்பவர்களும் உண்டு.

1980களில் அனைத்துலகச் சந்தையில் ஓர் அவுன்ஸ் தங்கம் 800 டாலர் வரை விற்கப்பட்டது. அப்போது சந்தையில் மற்ற பொருட்கள் விற்ற விலை போல இன்று 3 மடங்கு விற்கிறது. ஆனால் தங்கத்தின் விலை 25 முதல் 30 விழுக்காடு வரையே உயர்ந்திருக்கிறது. எனவே விரைவில் தங்கத்தின் விலை குறையும் என்று நம்பிக்கையூட்டுபவர்களும் உண்டு.
ஓர் அவுன்ஸ் தங்கம் 500 டாலர் முதல் 600 இருந்த காலகட்டத்தில் நிறையப் பேர் அதை வாங்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்து தங்களிடமுள்ள தங்கத்தை விற்க ஆரம்பித்தால் 40 முதல் 50 விழுக்காடு வரை விலை குறையும் வாய்ப்பு உண்டு என்று சிலர் கணக்குப் போடுகின்றனர். வேறு பல முதலீடுகளில் பெரிய மாற்றம் வந்து தங்கத்தை விற்று அவற்றில் முதலீடு செய்தால் அதிக இலாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் தோன்றாத வரை தங்கத்தின் விலை இப்படியே தான் தொடரும்.

(இன்னும் மின்னும்)

ஆ!..தங்கம்? - 1தங்கம் என்ற சொல்லைக் கேட்டாலே தலை கிறுகிறுக்கிறது சில பேருக்கு. காரணம் - அதன் விலையேற்றம். சென்ற இருபத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது தங்கத்தின் விலை மளமளவென்று ஏறி விட்டது. ஒரு கிராம் தங்கம் முதல் நாள் ஒரு வெள்ளி குறையும். அதுவே மறுநாள் இரண்டு அல்லது மூன்று வெள்ளி கூடும். இப்படி நிலையில்லாத விலை ஏற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

முன்பு, இரான் - இராக் இடையே நடந்த போர் காரணமாக தங்கம் விலை வேகமாக உயர்ந்தது. பின்னர் அது ஓரளவு இறங்கியது. ஆனால் இப்போதுள்ள சூழலில் சொத்துச் சந்தை, பங்குச் சந்தை போன்ற வர்த்தகங்களில் நல்ல முன்னேற்றம். இதனால் தங்கம் விலை கூடிக்கொண்டே போகிறது. நான்காண்டுகளுக்கு முன்பு ஓர் அவுன்ஸ் தங்கம் 250 முதல் 300 அமெரிக்க டாலர் வரை விற்கப்பட்டது. அதுவே இன்றைக்கு சுமார் மூன்று மடங்கு உயர்ந்து 1100 முதல் 1150 அமெரிக்க டாலர் வரை ஏறியிருக்கிறது. அதனால் யாராலும் எந்த விதத்திலும் முன்னுரைப்புச் செய்ய முடியவில்லை.

இருப்பினும் மக்களிடம் தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்துக்குக் குறைவில்லை. அன்றாட அலுவலுக்கு மத்தியில் தங்கத்தின் விலையையும் கொஞ்சம் உற்றுக் கவனிக்கிறார்கள். தருணம் வாய்க்கும் போது தவறாமல் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். காரணம் தங்கத்தில் போடும் பணம் எப்போதும் வீண் போகாது என்ற நம்பிக்கை. எப்படியும் அது ஒரு சேமிப்பு. கையில் இருந்தால் காசு செலவாகி விடும் எனவே தங்கத்தில் முதலீடு செய்து கொள்வோம் என்பது அவர்களின் கணிப்பு. எல்லாவற்றையும் தாண்டி நம் இந்தியக் கலாசாரத்தோடு இசைந்து வரும் ஆபரணம். அதை அணிந்து கொள்வதன் மூலம் ஒருவரின் கௌரவமும், அந்ததும் மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்ற தணியாத வேட்கை தொடர்கிறது.

மக்களிடம் தங்கத்துக்கான தேவை அதிகரித்து வரும் அதே வேளை அதன் உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா என உலகம் முழுக்கச் சுமார் 25 தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றன. கடந்த காலங்களில் அவற்றில் இருந்து பெருமளவு தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு விட்டது. எனவே அவற்றில் இருப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இப்போதுள்ள நிலையில் சுமார் 15 சுரங்கங்களில் இருந்து ஆண்டொன்றுக்கு 2500 டன் தங்கம் கிடைக்கிறது. ஆனால் தேவையின் மதிப்பு ஆண்டொன்றுக்கு 2800 டன்.

அமெரிக்காவுக்கும் தங்க விலைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சிலர் கருதுகின்றனர். அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளியல் சுனாமி அந்நாட்டுப் பணத்தின் மீதான நம்பிக்கைக்கு பெரும் வேட்டு வைத்தது. அமெரிக்க டாலரின் மதிப்புப் படிப்படியாகக் குறைந்தது. எனவே உலக மக்கள் அந்தப் பணத்தைக் கையில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. தங்களிடம் உள்ள டாலைரை விற்று விட்டு அவற்றைத் தங்கமாக உருமாற்றத் தொடங்கினர். ஆனால், அமெரிக்க டாலருக்கும் தங்கத்தின் விலையேற்றத்துக்கும் ஒரு காலத்தில் தொடர்பு இருந்தது. அந்த நிலை இன்று மாறிவிட்டது. வளரும் நாடுகளின் பொருளியலை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் சந்தையின் போக்கு அமைகிறது என்று கூறுவோரும் உண்டு.

ஒரு காலத்தில் அமெரிக்க டாலருடன் பின்னிப் பிணைந்திருந்த தங்கம் இப்போது தனித்துப் போய் விட்டது. அது எந்த நாட்டின் நாணயத்தோடும் இணைந்து செல்லும் சூழல் இப்போதைய சந்தையில் இல்லை. தங்கத்தை அதிகம் கொள்முதல் செய்யும் நாடு இந்தியா. காரணம் அங்குள்ள மக்கள் தொகை. அப்படியானால் இந்திய ரூபாய்க்கு எதிராகத் தான் தங்கத்தை மதிப்பிட வேண்டும் என்பது அவர்களின் வாதம்.

(இன்னும் மின்னும்)