Friday, April 30, 2010

தொழுகை நேரங்காட்டி.

நாம் எந்த நாட்டில் வசித்தாலும் அந்த நாட்டின் காலத்துக்கு ஏற்ப தொழுகை நேரங்களைக் காட்டும் கணினி மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இறைநினைவை விட்டு அகலாமல் நம்முடைய கடமைகளை ஆற்ற இந்த மென்பொருள் உதவுகிறது. தொழுகைக்கான அழைப்பொலி, அதனைத் தொடர்ந்து ஓதப்படும் பிரார்த்தனை, குர்ஆனின் முக்கியமான வசனங்கள் இப்படி இதன் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம். இறை நேசத்தை அடர்த்தியாக்கும் இந்த மென்பொருளை வடிவமைத்த நல்ல இதயங்களுக்கும், அதை என்னைப் போன்றவர்களுக்கு அறிமுகம் செய்த நண்பர்களுக்கும் இறைவன் ஈருலகிலும் நன்மையளிக்கப் பிரார்த்தனை.

மென்பொருளை இங்கிருந்து தரவிக்கலாம்....

http://www.4shared.com/file/247192594/7df7c06/SalaatTimeSetup.html

Thursday, April 29, 2010

மழலைச் சாரல் :)கொதிக்கும்
தார்ச் சாலை.

வியர்வையின்
புழுக்கத்தில்
தொப்பலாய் நனைந்து
விசனத்தோடு
போக்குவரத்துச்
சமிக்ஞைக்காகக்
காத்து நின்ற
கணம்.

கடந்து சென்ற
பேருந்தில்
கை நீட்டியவாறே
சிரித்துச் செல்கிறது
குழந்தை.

மனதில் பட்டுத்
தெளி(றி)த்தது
மழலைச் சாரல்.

Saturday, April 24, 2010

"தேனீ" உமருக்கு அங்கீகாரம் கிடைக்குமா?உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. உலகம் முழுக்கவிருந்து தமிழ் அறிஞர்களும், தமிழை நேசிப்பவர்களும் அணி திரண்டு வரப் போகிறார்கள் அந்த மாநாட்டுக்கு. சில நல்ல விஷயங்களை முன்னரே அரசின் கவனத்துக்குக் கொண்டு வருவது நன்மையளிக்கும் என்பதால் இந்தப் பதிவு.

ஓலைச் சுவடிகளில் உறைறந்து கிடந்த தமிழ், பின் படிப்படியாக உருமாறி புத்தகமாகி, இன்று விரல் நுனியில் வித்தை காட்டும் கணினியில் கண் சிமிட்டிச் சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கட்டுரையைத் தமிழில் தட்டச்சியது நானாக இருக்கலாம். அதற்கு வழியமைத்தவர்கள் எத்தனை பேரோ?


இணையத்திலும், இதயத்திலும் தமிழுக்கென்று தனி ஆசனம் தந்து காத்து வருபவர்கள் நம் போற்றுதலுக்குரியவர்கள். கணினி உலகில் விரிந்து, பரந்து விருட்சமாய் வியாபித்து நிற்கும் அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்த தகைமையுடையோர்களில் ஒருவர் “யுனிகோட் உமர் தம்பி”.

தாம் மறைந்தாலும் தம் தாய் மொழி இவ்வுலகில் ஜீவிக்க வேண்டும் என்ற உமர் தம்பியின் தீரா வேட்கை இன்று நம் கண் முன் கணினித் தமிழாய் காட்சி தருகிறது. அதுவே அவருடைய வெற்றிக்கு சாட்சி.

யார் இந்த உமர்? அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? அவருக்கும், எனக்கும் முன், பின் அறிமுகம் உண்டா? இப்படியான கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். உண்மையைச் சொன்னால் உமர் தம்பி உயிர் நீத்த அந்தக் கணம் (2006 ஜுலை 12) வரை அவருடைய முகவரியின் முதல் வரி கூட எனக்குத் தெரியாது.

2003 ன் இறுதியில் அலுவல் நிமித்தம் ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்தேன். அங்கே சில நண்பர்கள் தமிழில் தட்டச்சி இணையக் கடலில் நீந்திக் களிப்பதைக் கண்ட போது சிலிர்த்துப் போனேன். ஆகா! இப்படி ஒரு தருணத்துக்காகத் தானே இத்தனை நாள் ஏங்கிக் கிடந்தேன். நண்பர்களிடம் கேட்டுத் தமிழில் தட்டச்சுவது எப்படி? என்று மட்டும் தெரிந்து கொண்டேன். 2004 ன் தொடக்கத்தில் இந்தியா வந்து அடுத்த ஈராண்டுகள் அங்கு தங்கியிருந்து பணியாற்றிய சில வேளைகளில் அது எனக்குக் கை கொடுத்தது. இருந்த போதிலும் அப்போது இணையத்தில் அதிகமாகத் தமிழில் தட்டச்சும் வாய்ப்புகளை அடிக்கடி ஏற்படுத்திக் கொள்ள முடியாத சூழல்.

காலம் 2006 ஆகக் கனிந்தது. பணி நிமித்தம் நான் இடம் பெயர்ந்தது சிங்கப்பூருக்கு. அலுவல் முடிந்த பிறகு எனக்குப் பேராதரவாய் நின்றது இணையப் பெருங்கடல். என்னதான் ஆங்கிலத்தில் உரையாடினாலும், அதையே அன்னைத் தமிழில் தொடரும் போது அலாதி ஆனந்தம். எதிர் கொள்பவர்களை எளிதில் இறுக அணைத்து வாஞ்சையோடு வாரிக் கொள்ளும் சுகானுபவம் தமிழ் வழிப் பரிமாறலில் கிட்டும். அப்படித் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் ஒருநாள், உமர் தம்பியின் மரணச் செய்தி காதுகளில் முட்டியது. யார் இவர்? ஏன் இணையத்தில் அவரைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள்? என்ற கேள்விகள் மனதில் உருக் கொண்டு, கருக்கொள்ள விரல்கள் தானாகவே தேடத் தொடங்கின உமர் தம்பியின் நதி மூலத்தை.

இணையத்தில் இன்று நான் தமிழில் தட்டச்சுவதற்கு அவரும் ஒரு விதையாகத் தன்னைத் தந்திருக்கிறார் என்று அறிய வந்த போது மனம் முழுக்க மகிழ்ச்சிப் பந்தல். அதே சமயம் அத்தனை எளிய, பெரிய, ஞானம் நிறைந்த நல்ல மனிதரோடு பரிச்சயமில்லாமல் போய் விட்டோமே என்ற விம்மல் இதயத்தில் எழுந்து எழுந்து அடங்கியது.

நான் இளங்கலை, முதுகலை பயின்ற தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் உமர் தம்பி. பிறந்தது 1953 ஜுன் 15. இப்பூவுலகை விட்டு நீங்கியது 2006 ஜுலை 12 ஆம் நாள். நான் பயின்ற அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் கல்லூரியில் அவரும் இளங்கலை விலங்கியல் துறையில் பட்டம் பெற்றவர். எனவே கல்லூரி அவர் என் முன்னோடி. நானறியாமலேயே எங்களுக்குள் இருக்கும் ஒரே தொடர்பு இது மட்டும் தான்.

இளங்கலை மட்டுமல்ல, இலக்ட்ரானிக்ஸ் (Electronics) என்னும் மின்னணுவியலில் பட்டயப் (Diploma) டிப்ளோமா படிப்பையும் முடித்தவர். 1983 ஆம் ஆண்டில் தமது சொந்த ஊரிலேயே வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்தார் உமர்.

கல்வி பயிலும் காலத்திலேயே 1977 ஏப்ரல் மாதம் அவருக்குத் திருமணம் நடந்தது. மனைவி பெயர் பெளஸியா (Fouzia). இத்தம்பதியருக்கு மூன்று மகன்கள்.

மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தவர் உமர். அந்தத் தேடலின் நீட்சியாக, ஒருமுறை தாம் பயின்ற அதிராமபட்டினம் காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி ஊரிலிருப்போர் கேட்கும் விதத்தில் உரையாடல்களை ஒலிபரப்பினார்.

1984 ல் துபாயில் உள்ள Alfuttaim Group of Companies ல் மின்னணு சாதனனங்களை பழுது நீக்கும் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார்.

உமர், முறையாக எந்தக் கல்லூரியிலும் கணினித் தொழில் நுட்பத்தை பயிலவில்லை. துபையில் பணிசெய்த போது தமது ஓய்வுக் காலத்தைக் கணினி குறித்த தாகத்தையும், தேடலையும் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டார். படிப்படியாக கணினித் தொழில்நுட்பத்தில் தேர்ந்தார். Network administrator, SAP implementation team Head, Kiosk programmer என்று பல்வேறு துறைகளில் தடம் பதிக்க அவருக்கு அந்த ஞானம் போதுமானதாக இருந்தது. பதினேழு ஆண்டுகள் துபையில் பணி செய்த உமர், 2001 செப்டம்பரில் விருப்ப ஓய்வு பெற்றுத் தாயகம் திரும்பினார்.

அத்துடன் நின்று விடவில்லை அவருடைய அறிவுத் தேடல். ஊரிலிருந்து கொண்டே தமது மூத்த மகன் மொய்னுதீனுடன் இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்) நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்து கொடுத்துப் பராமரித்து வந்தார்.

இப்படிப் பல்வேறு வேலைகளைத் திறம்படச் செய்து கொண்டிருந்த வேளையில் கணினியில் கன்னித் தமிழுக்கு அணி செய்யும் பணியையும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உமருக்குள் எழுந்தது. அந்தப் பணியில் தாம் ஈடுபட்டது மட்டுமல்ல. நாளைய தலைமுறையும் பயனுற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் தம் போன்று ஒரே கருத்துடையவர்களையும் திரட்டி அவர்களுக்குரிய ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.

எடுத்துக்காட்டுக்குச் சில...

தேனீ இயங்கு எழுத்துரு

உமர் தம்பி ஒருங்குறித் தமிழில் முதன் முறையாக எல்லா தளங்களிலும் இயங்கும் WEFT நுட்பத்தின் அடிப்படையிலான தேனி இயங்கு எழுத்துருவை அறிமுகம் செய்தார்.

ஒருங்குறியல்லாத WEFT அடிப்படையிலான இயங்கு எழுத்துருக்களை சில தமிழ் வலைத்தளங்கள் முன்பே பயன்படுத்தி வந்தன.WEFT அடிப்படையிலான இயங்கு எழுத்துருக்கள் அந்த எழுத்துரு எந்த தளத்துக்கு உருவாக்கப்பட்டதோ அந்த ஒரு தளத்துக்கு மட்டுமே இயங்குமாறு இருந்தது.மேற்கண்ட இரண்டையும் முதன் முதலில் மாற்றிய பெருமை உமரையே சாரும்.

தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றி பல்வேறு இணையத் தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். இன்று தமிழிணைய உலகில் அனேகம் பேர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைப்பதிவு செய்து வருகிறார்கள்.

தமிழ் இணைய அகராதி

கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து வழங்க முடிவெடுத்தார். அதன்பொருட்டு தமிழ் இணைய அகராதியைக் கொண்டு வந்தார். அதன் உருவாக்கத்தில் உமருக்குத் தமிழ் உலக உறுப்பினரும், talktamil.4t.com இணையத் தள நிர்வாகியான மஞ்சுவும் தோள் கொடுத்தார்.

தமிழ் மணம், தமிழ் உலகம் குழுமம், ஈ உதவிக் குழுமம், ஒருங்குறி குழுமம், அறிவியல் தமிழ்க் குழுமம் என இணையத்தின் பெரும்பாலான தமிழ்க் குழுமங்களில் பங்கெடுத்துத் தம்மால் ஆன அத்தனை உதவிகளையும் நல்கி இருக்கிறார். உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும், கருவிகளும் இன்றளவும் இணையத்தில் அவரின் பங்களிப்புக்குச் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன.

உதாரணத்துக்குச் சில...
• AWC Phonetic Unicode Writer
• தமிழுக்காக Online RSS creator - can be used in offline as well
• எண்களாகத் தெரியும் ஒருங்குறி எழுத்துக்களை படிப்பதற்கான செயலி
• தமிழை ASCII வடிவில் டேட்டாபேஸில் சேமிக்கும் கருவி
• எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி
• ஒருங்குறி மாற்றி
• க்னூ பொதுமக்கள் உரிம அடிப்படையில் வெளியிடப்பட்ட எழுத்துருக்கள்
• தேனீ ஒருங்குறி எழுத்துரு
• வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு
• வைகை இயங்கு எழுத்துரு
• தமிழ் மின்னஞ்சல்
• தமிழ் ஒருங்குறி Toolbar for உலாவி
• Uniwriter (உலாவியில் Tools மெனுவில் சேர்க்கப்படும்)
• தமிழா-எ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார்.

இணையத்தில் தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று உமர் எடுத்த முதல் முயற்சி தான் இன்று பலவகையான தமிழ்நுட்பத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை இணையப் பயனாளர்கள் அறிவர்.

உமர் தம்பி, அவருடைய செயல்பாடுகள் பற்றி இணையத்தில் ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சில...

www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி

http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17

http://www.pudhucherry.com/pages/umar.html

http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131

www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html

http://www.islamkalvi.com/portal/?p=77

http://ezilnila.com/archives/803

http://ezilnila.com/2009/07/umarthambi/

http://tamilnirubar.org/?p=9958

http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm

http://www.pudhucherry.com/

http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm

http://www.tmpolitics.net/reader/

http://www.desikan.com/blogcms/?item=theene-eot

குழுமங்கள்

http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005

http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0

http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633

http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579

http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one

http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e

வலைப்பூக்கள்:

http://valai.blogspirit.com/archive/2006/07/14/கணித்தமிழர்-உமர்தம்பி.html

http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html

http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html

http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html

நிரலிகள்/மென்பொருள் தரவிறக்கம்

http://www.geocities.com/csd_one/UniConMagz.zip

http://www.geocities.com/csd_one/UWriterSetup.zip

http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip

இணையத் தமிழுக்கு உமர் தம்பி ஆற்றிய பங்களிப்புப் பட்டியல் இன்னும் நீளமானது. எல்லாவற்றையும் இங்கே தொகுத்துக் கொடுப்பது சாத்தியமல்ல. காலம் உமர் தம்பிக்கு வழங்கிய தவணை 2006 ஜுலை 12 ல் முடிந்திருக்கலாம். அறிவியாலால், தாம் கொண்ட அறிவால் அவர் வளர்த்து விட்ட நல்ல மனிதர்கள் இன்றளவும் இணையத்திலும், இதயத்திலும் தமிழைக் கொண்டு வந்து சேர்க்க அயராது பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

செம்மொழி மாநாட்டில் கணினித் தமிழுக்கு அணி சேர்க்கும் விதத்தில் சில நிகழ்வுகளும் நடக்கவுள்ளன. அதில் உமர் தம்பியின் இணையத் தமிழ்ப் பங்களிப்புக்குரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இணைய மாநாட்ட ஒருங்கிணைத்து நடத்தும் “உத்தமம்” அமைப்பு உமர் தம்பியின் பங்களிப்புகளைப் பற்றி அரசாங்கத்துக்கு எடுத்துரைக்க வேண்டும். அவருடய கணினித் தமிழ்ப் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அதைச் செய்வதன் மூலம் பெருமையடைப் போவது உமர் தம்பியல்ல. அன்னைத் தமிழ் தான்.

தாய்மொழிக்கு ஒரு பெருமை வரும் என்றால் அதைத் தயங்காமல் செய்யும் தமிழக அரசு. இணையத் தமிழ்ப் பயனாளர்களின் இந்தக் கோரிக்கைக்கும் செவி சாய்க்குமா?.....

நிச்சயம் சாய்க்கும் என்பது நம்பிக்கை.

Thursday, April 22, 2010

சிறகு முளைத்த சொற்கள்.உன்னை விட
அழகில்லை
உன் கையெழுத்து.

பின்னே எப்படியாம்?

கோழி கிறுக்கியதைப் போல.


"அவை
சிறகு முளைத்த
சொற்கள்" என்றாள்
சினந்த முகத்தோடு
சிணுங்கியவாறே.

அட ஆமா!

என் ஆச்சர்ய
விழிகளுக்குள்
ஆயிரம் பட்டாம்பூச்சிகள்.


Wednesday, April 21, 2010

வலி காலம்.
காலம்
காயம் ஆற்றுமாம்.

யார்
வந்து ஆற்றுவது?

அது தந்த
வலியையும்
தழும்பையும்.

Tuesday, April 20, 2010

தூக்கம் விற்ற காசுகள்.

ஒரு கவிதையால் என்ன செய்ய முடியும்?
நண்பன் என்னிடம் கேட்டான்.

ஒரு கவிதை என்ன செய்ய முடியாது?
திருப்பிக் கேட்டேன் நண்பனிடம்.

சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கவிதை மின்னஞ்சலில் வந்தது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தயக்கமின்றி வாசிக்கத் தொடங்கினேன். முதல் இரண்டு வரிகளே, இனிவரும் வார்த்தைகள் அடர்த்தியான அர்த்தம் பொதிந்தவை என்று உணர்த்தின. முழுக்க வாசித்து முடித்ததும் ஒரு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது என்னால். காரணம், அப்போது எனக்கு வெளிநாட்டு வாழ்க்கையனுபவம் இல்லை. ஆனால் நண்பர்கள் பலருக்கு அந்த அனுபவம் உண்டு. அவர்களின் கோணத்தில் என்னைப் பொருத்திப் பார்த்த போது கவிதையின் பொருள் புதிதாய் விளங்கியது.

அதன் பிறகு 2006 ல் சிங்கப்பூர் வந்தாயிற்று. அப்போது மீண்டும் மின்னஞ்சலில் வந்தது அந்தக் கவிதை. தலைப்பு “தூக்கம் விற்ற காசுகள்”. எழுதியவர் நண்பர் ரசிகவ் கே. ஞானியர். அந்தச் சூழலில் சுவிசில் உள்ள நண்பரொருவர் தம்முடைய வானொலிக்காகக் கவிதை வாசித்துக் கேட்டார். அப்போது சட்டென நினைவுக்கு வந்தது “தூக்கம் விற்ற காசுகள்” தான். காரணம், யார், எப்போது வாசித்தாலும் அந்தக் கவிதையின் பொருள் விரிவடைந்து கொண்டே போகும். வாசிப்பவர்களை ஒரு கணம் யோசிக்க வைக்கும் தன்மை கொண்ட காத்திரமான எழுத்துக்கள் அவை. மெல்லிசையோடு அந்தக் கவிதையை ஒலிப்பதிவு செய்து அது சுவிஸ் வானொலியிலும் ஒலிபரப்பானது. அதன் பிறகு யாரோ ஒரு நல்ல நண்பர் வழியே அது இணையத்தில் வலம் வரத் தொடங்கியது. துபாய் மட்டுமல்ல, சவூதி அரேபியா, தமிழகம் என்று தமிழர்கள் வசிக்கும் அத்தனை பகுதிகளிலும் அந்தக் கவிதைக்கும் பெரும் வரவேற்பு. நண்பர்கள் மூலமாக அந்தச் செய்தியைக் கேட்கும் கணந்தோறும் கவிதையை யாத்த நண்பர் ரசிகவ். கே. ஞானியாருக்குத் தான் மானசீகமாக நன்றி சொல்வேன்.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் நானும், நண்பர் ஞானியாரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததில்லை. தொலைபேசியில் கூடப் பேசியதில்லை. ஓரிருமுறை கூகிளில் வார்த்தையாடியதோடு சரி. இப்போது சொல்லுங்கள். ஒரு கவிதையால் என்ன செய்ய முடியும்?

இதோ அந்தக் கவிதை...

தூக்கம் விற்ற காசுகள் - ரசிகவ். கே. ஞானியார்.

இருப்பவனுக்கோ வந்து விட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ
அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ் !

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற ...
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகிறது !

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால்
வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலேயே...
இளமை கழிக்கின்றோம்!


எங்களின்
நிலாக்கால நினைவுகளையெல்லாம்...
ஒரு
விமானப்பயணத்தினூடே விற்றுவிட்டு

கனவுகள் புதைந்து விடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!
மர உச்சியில் நின்று
ஒரு
தேன் கூட்டை கலைப்பவன் போல!

வார விடுமுறையில்தான்..
பார்க்க முடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன!

இங்கே
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள்
பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள்
தினமும்
ஒரு இரவு நேர
கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!
நண்பர்களோடு
ஆற்றில் விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி
தெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள் !

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...
விளையாடி மகிழ்ந்த
உள்ளூர் உலகக் கோப்பை கிரிக்கெட் !

இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்...
விசாவும் பாஸ்போட்டும் வந்து...
விழிகளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த
நண்பர்களின் திருமணத்தில் !
மாப்பிள்ளை அலங்காரம் !

கூடிநின்று கிண்டலடித்தல் !
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள் மறுத்து போராட்டம் !
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனக் கூறி
வறட்டுப் பிடிவாதங்கள் !

சாப்பாடு பரிமாறும் நேரம்...
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!

மறுவீட்டுச் சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!

இவையெதுவுமே கிடைக்காமல்
"கண்டிப்பாய் வரவேண்டும் " என்ற
சம்பிரதாய அழைப்பிதழுக்காக...
சங்கடத்தோடு
ஒரு
தொலைபேசி வாழ்த்தினூடே...
தொலைந்துவிடுகிறது
எங்களின் நீ..ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள்
அயல்தேசத்து ஏழைகள்தான்!

காற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற
சொந்தங்களின்...
நண்பர்களின் ...
மரணச்செய்திக்கெல்லாம்
அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்...
ஒரு
கடலைத்தாண்டிய கண்ணீரிலேயே...
கரைந்துவிடுகிறார்கள்;!

"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!

இருப்பையும் - இழப்பையும்
கணக்கிட்டுப் பார்த்தால்
எஞ்சி நிற்பது
இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் ...
முதல் பேச்சு...
முதல் பார்வை...
முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
தினாரும் - திர்ஹமும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்
யாருக்குக் கேட்குமோ ?

ஒவ்வொருமுறை
ஊருக்கு வரும்பொழுதும்...
பெற்ற குழந்தையின்
வித்தியாச பார்வை...
நெருங்கியவர்களின்
திடீர்மறைவு ...

இப்படி புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்
அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...

தங்கையின் திருமணமும்...
தந்தையின் கடனும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி
அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!

கவிதையின் ஒலி(ளி)வடிவம் இங்கே...

Saturday, April 17, 2010

பங்கு வாங்கலியோ பங்கு - 4

சென்ற மூன்று இடுகைகளில் பங்குச் சந்தையின் நடைமுறைகள் பற்றிப் பார்த்தோம். அந்த வரிசையில், Stock Option அதாவது குறிப்பிட்ட விலையில் வாங்கி, விற்கும் உரிமையுள்ள பங்குகள் பற்றிய சில தகவல்களை இப்போது பார்க்கலாம்.
நல்ல நிலையில் நிர்வகிக்கப்படும் பல நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கே பங்குகளைக் கொடுக்கும் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. அந்த நடைமுறைக்கு Stock Option என்று பெயர். அதாவது ஒரு நபரைப் பணிக்கு அமர்த்தும் போது சம்பளத்துடன், நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளும் அவருக்குக் கிடைக்குமாறு ஒப்பந்தங்கள் வரையப்படும்.

இப்ப தொழிலாளர்களை உற்சாகமூட்ட, அவங்க நல்லாச் செஞ்சாங்கன்னா லாபம் அதிகம் வந்துச்சுன்னா பங்குச் சந்தையில் விலையும் கூடும். அதனால அவங்களை ஊக்குவிக்க என்ன பண்ணுவாங்கன்னா இப்ப விலை பத்து டாலராக இருக்குது பங்குச் சந்தையில். அவங்களுக்கு நான் கொடுக்கிறேன். அடுத்த ஆறு மாதத்துக்குள்ள, இல்லை அடுத்த ரெண்டு வருஷத்துக்குள்ள இந்த “Option” ஐ வைச்சுக்கிட்டு எங்க பங்கை வாங்கலாம். பன்னிரண்டு டாலர் கொடுத்தாப் போதும். என்ன விலை மார்க்கெட்ல இருந்தாலும். இப்ப பத்து டாலருக்கு விற்பனையாகுது, அது பன்னிரண்டு டாலருக்கு மேலே போனால் தான் அந்த “Option”க்குக் கொஞ்சம் மதிப்பு இருக்கு. அப்ப தொழிலாளர்கள் என்ன பண்ணுவாங்க? நாம லாபத்தை ஜாஸ்தி பண்ணணும். அப்ப தான் விலை மேலே போகும். அப்படின்னுட்டு அவங்க இன்னும் நல்லா வேலை செய்து லாபத்தை அதிகமாக்குவாங்க. விலை பதினைந்து டாலராக இருக்கும் போது அவங்க பன்னிரண்டு டாலருக்கு வாங்கி உடனே வித்தாங்கன்னா அவங்களுக்கு மூணு டாலர் கைக்கு வந்துடும்.

2000 ன் தொடக்கத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கோலோச்சிக் கொண்டிருந்தன. அப்போது, அந்நிறுவனங்களின் பங்குகளின் விலை உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. ஆகவே, நிறைய ஊழியர்கள் இந்த Stock Option வரப்பிரசாதமாகப் பார்த்தார்கள். நாள் செல்லச் செல்ல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தேக்கம் ஏற்பட்ட போது ஊழியர்களிடம் அந்த நடைமுறைக்கு அதிக வரவேற்பு இல்லை. இது தவிரப் பங்குச் சந்தையிலும் Stock Option நடைமுறை உண்டு.

இப்ப நாம பங்குச் சந்தையில் போய் வாங்கணும்னா இன்னைக்கு என்ன விலை இருக்கிறதோ அதைக் கொடுத்து வாங்குறோம். இப்ப பத்து டாலர்னு வைச்சுக்குங்க. நாம பத்து டாலர் கொடுத்துத் தான் வாங்கலாம். இப்ப Stock Option என்னன்னா அடுத்த 3 மாசத்துக்குள்ள நீங்க பத்து டாலருக்கு வாங்கலாம் முன்னுரிமை எடுத்துக்கலாம். சந்தையில் என்ன விலை இருந்தாலும் நீங்க கொடுக்க வேண்டியது பத்து டாலர் மட்டும் தான். அதாவது உங்களுக்கு Option கொடுத்திருக்கிறாங்க. உங்களுக்கு வேணும்னா நீங்க பத்து டாலர் கொடுத்து வாங்கலாம். இல்லாட்டி வேண்டாம். இப்பப் பங்குச் சந்தையில் பன்னிரண்டு டாலர்னு இருக்குது. நாம கிட்ட Option இருக்கு. அப்ப என்ன பண்ணுவோம். போய் வாங்குவோம். ஏன்னா நமக்கு பத்து டாலர் தான். நாம பத்து டாலர் கொடுத்து வாங்கிட்டு உடனே வித்தாலும் நமக்கு ரெண்டு டாலர் இலாபம் இருக்கும். அது தான் Stock Optionகிறது.

சந்தையில் இரண்டு விதமான பங்குகள் விற்கப்படுகின்றன. அவை பொதுப்பங்குகள், முன்னுரிமைப் பங்குகள். பொதுப்பங்குளை வாங்கும் போது நாமும் அந்த நிறுவனத்தின் பங்குதாரரைப் போல் ஆகி விடுகிறோம். அதாவது சந்தையில் பங்குகளின் விலை உயரும் போது அந்த லாபமும், மொத்த வருவாயின் லாப ஈவுத் தொகையும் கிடைக்கும். ஆனால், Preferential Shares எனும் முன்னுரிமைப் பங்குகள் அவற்றிலிருந்து சற்று மாறுபட்டவை.

Preferential Shares எப்படின்னா அவங்க சொல்லும் போதே 8 விழுக்காடு Preferential Shares அப்படிம்பாங்க. அதாவது Preferential Shares கொடுக்கும் போது என்ன மதிப்போ அதுல எட்டு விழுக்காடு வருஷா வருஷம் உங்களுக்கு Dividend கொடுப்பாங்க. அதுக்கு மேலே கொடுக்க மாட்டாங்க. நிறுவனம் நல்லா செஞ்சாலும் அதுக்கு மேலே கொடுக்க மாட்டாங்க.ஒருவருக்குப் பங்குகளை வாங்கி விற்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அவர், முகவர்களின் துணையோடு பங்குகளை வாங்கி விற்பது விவேகமான முடிவாக இருக்கும். ஆனால், நம்பகமான நல்ல முகவரைத் தேர்வு செய்வதும் முக்கியம். அவர்களைத் தர்வு செய்வதற்கு முன் சில அம்சங்களைக் கவனத்தில் கொள்வது நல்லது. பங்குப் பரிவர்த்தனையில் அவர்களுக்குரிய சேவைத் தொகை எவ்வளவு என்பதைத் தெரிந்து கொண்டு செயலாற்றுவதன் மூலம் அதிக லாபம் பெற முடியும்.

சில முகவர்கள் நிறைய சேவைத் தொகை (commission) கேட்பாங்க. இன்னும் சிலர் கொஞ்சமாக் கேட்பாங்க. அதனால கவனமாகத் தேர்ந்தெடுக்கணும். சிலர் “Discount Brokers” ன்னு இருக்கிறாங்க. அதாவது சேவைத் தொகை ரொம்பக் குறைவு. அவங்க வாங்குறது, விக்கிறது தவிர வேற ஒண்ணும் செய்ய மாட்டாங்க. ஆனா “Full time Brokers” முழு நேர முகவர்கள்ன்னு இருக்கிறாங்க. அவங்க நமக்கு ஆலோசனையும் சொல்வாங்க. நீங்க இதை வாங்கலாம். அப்படிச் செய்தால் குறுகிய காலத்தில் அல்லது நீண்ட கால முதலீட்டில் இவ்வளவு இலாபம் எதிர்பார்க்கலாம். அதில் இன்னின்ன அபாயங்கள் இருக்கின்றன என்பது பற்றியெல்லாம் அவர்கள் தெளிவாக விளக்கமளிப்பார்கள். எனவே முகவர்களைத் தேர்ந்தெடுப்பது பங்கு வர்த்தகத்தில் முக்கியமான அம்சம்.


பங்குச் சந்தை என்பது பணம் கொழிக்கும் வர்த்தகம். கவனமுடன் அதில் செயல்படும் போது அதிக லாபம் ஈட்ட முடியும். எடுத்த எடுப்பிலேயே நிறையச் சம்பாதித்து விட வேண்டும் என்று எண்ணாமல், அது பற்றிய முறையான விவரங்களைத் தெரிந்து கொண்டு செயலாற்றுவது நம்மிடமுள்ள பணத்துக்குப் பலம் சேர்க்கும்.

(நிறைவு)

Friday, April 16, 2010

பங்கு வாங்கலியோ பங்கு - 3

சென்ற இரண்டு இடுகைகளில் பங்கு வர்த்தகத்தின் தோற்றம், வளர்ச்சி, செயல்படும் விதம் பற்றித் தெரிந்து கொண்டோம். அத்துடன் பங்குச் சந்தைகளைக் கண்காணிப்பதில் அரசாங்கத்தின் பொறுப்பு என்ன? முகவர்களின் பணிகள் பற்றியும் விரிவாகப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, முதலீட்டுக்கு முன்பு கவனிக்க வேண்டிய அம்சங்கள் பற்றிய விவரங்களை இப்போது பார்க்கலாமா?
நம்மில் பலருக்கு முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் எதில்? எப்படி? முதலீடு செய்வது என்ற தெளிவு இருக்காது. நம் நண்பர்கள் சிலர் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டியிருக்கலாம். அவர்களின் அனுபவத்தைக் கொண்டு நாமும் அதில் முதலீடு செய்தால் என்ன? என்ற கேள்வி நம்முள் எழும். ஆனால், அது போன்ற முதலீடுகள் சில நேரங்களில் தான் பயன் தரும். எனவே, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் தீவிரமான கவனிப்பும், கணிப்பும் அவசியம்.

இன்னைக்கு நிறைய நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்க ஆரம்பிச்சிருக்கிறாங்க. மக்களும் அதை வாங்கி வித்துக்கிட்டு இருக்கிறாங்க. இதன் மூலமாகப் பெறக்கூடிய லாபங்களால் சிலர் மகிழ்ச்சியடைகிறாங்க. சிலர் வேதனைப்படுகிறார்கள் அல்லது கஷ்டப்படுகிறார்கள். ஆனால் இந்தப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முந்தி மக்களுக்கு இருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வுகள் எடுத்துக் கொள்ள வேண்டிய கவனங்கள் என்னன்ன?

சிங்கப்பூரின் SIM பல்கலைக் கழகத்தின் பொருளியல் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் ஜானகிரமணன் விளக்குகிறார்.

முதலில் எந்த மாதிரி நிறுவனம் அது. இது வெகு நாள் நீடிக்குமா?. அது ரொம்ப முக்கியமானது. அதனுடைய நிர்வாகம் எப்படி இருக்கிறது?. அப்புறம் நிறையப் பேரு என்ன செய்றாங்கன்னா பெரிய நிறுவனங்களாக இருந்துச்சுன்னா இணையத் தளத்துல போனா எல்லா Annual Reportsம் கிடைக்கும். ஒரு நாலஞ்சு வருஷத்து Annual Reportsல்லாம் பார்த்து எந்த மாதிரி அவங்க பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க. முன்னேற்றம் இருக்கிறதா, இல்லைக் கீழே போய்க்கிட்டு இருக்கிறதா அதெல்லாம் படிக்கணும். ரொம்ப நல்ல நிறுவனங்களை நாம தேர்வு செய்யலைன்னா ரொம்பக் கஷ்டம்.

ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் போது எவ்வளவு தெளிவாக இருக்கின்றோமோ, அதை விடக் கூடுதல் கவனத்துடன் நம்முடைய முதலீட்டுக் காலத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பங்குச் சந்தையில் இரண்டு விதமான முதலீடுகள் செய்யப்படுகின்றன. அவை நீண்ட கால முதலீடு, குறுகிய கால முதலீடு என்று வகைப்படுத்தப்படுகின்றன. நீண்ட கால முதலீட்டில் ஏற்ற, இறக்கங்கள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சந்தை நிலவரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாலே போதும். ஆனால் குறுகிய கால முதலீட்டில் அதை விட அதிக விழிப்பு நிலை அவசியம்.

இப்ப ஒரு சின்ன கணக்கு. 1900 ஜனவரி 1 ஆம் தேதி நீங்க ஒரு அமெரிக்கன் டாலர் அமெரிக்கப் பங்குச் சந்தையில் போட்டீங்கன்னா ஜனவரி 1 2000 ல அது எவ்வளவாக இருக்கும்னா கிட்டத்தட்ட 3 மில்லியன் டாலராக இருக்கும். அதாவது பங்குச் சந்தை ரொம்ப நாளைக்கு வைச்சிருந்தா மேலே தான் போகும். முக்கால்வாசி மக்கள் என்ன பண்றாங்கன்னா இன்னைக்குப் பத்து டாலர் கொடுத்து வாங்குறாங்க. ரெண்டு மாசம் கழிச்சு அது ஒன்பது வெள்ளி ஐம்பது பைசாவுக்கு வந்துடுது. உடனே அய்யய்யோ குறைஞ்சு போச்சே அப்படின்னு சொல்லிட்டு வித்துடுவாங்க. அவங்களுக்குப் பணத் தேவை இருக்காது. இருந்தாலும் அய்யய்யோ நமக்கு நஷ்டம் வேண்டாம்னு சொல்லி வித்துடுவாங்க. அப்புறம் பார்த்தீங்கன்னா இன்னொரு 3 மாசம் கழிச்சு அது 12 வெள்ளிக்கு இருக்கும். அப்ப அய்யய்யோ நாம வித்துட்டோமே அப்படின்னு சொல்வாங்க.

நாம் வாங்கி வைத்திருக்கும் பங்குகளின் விலை சரிவைச் சந்தித்தால் உடனே விற்று விட வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம். ஆனால், உண்மையான தேவை இல்லாமல் அவ்வாறு செய்வது பெரிய இழப்பைத் தரலாம். நம்மிடமுள்ள பங்குகள் வீழ்ச்சியடைய என்ன காரணம்? வர்த்தக ஏற்றத் தாழ்வா? அல்லது நிறுவனத்தின் குறைபாடா? என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.

கீழே இறங்குச்சுன்னா உடனே விக்கிறதுன்றது தேவையில்லை. பணம் தேவையில்லையா நீங்க வித்துடாதீங்க. அதுவும் இன்னொன்னும் பார்த்துக்கணும் அதே சமயத்துல எதனால பங்கு விலை கீழே இறங்குது. இது கம்பெனி ரொம்ப மோசமாகப் போனதுனால இப்ப சில வங்கிகள் மோசமாகப் போச்சு. லீமென் பிரதர்செல்லாம். அந்த மாதிரித் திவாலாப் போயி அவங்க மோசமாகப் போறாங்களா அப்ப வித்துட்டு நாம இழப்பை எடுத்துக்கொள்ள வேண்டியது தான். ஆனா சில சமயத்துல Market Sentimentனு ஒண்ணுமே செய்யாம காரணமேயில்லாம அது கீழே போகும்.

சில நிறுவனங்கள் தங்களின் ஆண்டு வருமானம் குறையக்கூடும் என்று முன்னுரைக்கும் வழக்கமும் உண்டு. பொருளியல் மந்த நிலை, உற்பத்திக் குறைவு ஆகியவற்றின் காரணமாக அது போன்ற அறிவிப்புகள் வருவது வாடிக்கை. ஆனால், பொருளியல் மீட்சியடையும் போது அந்தப் பங்குகளின் விலை உச்சத்தைத் தொடும் வாய்ப்பு இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
பொருளாதார முன்னேற்றமும் வீழ்ச்சியும் Economic Cycle அதாவது “பொருளாதாரச் சுழற்சி”ன்னு சொல்வாங்க. அந்தச் சுழற்சியில் பங்குகளின் விலை வீழ்ச்சி அடையும் மறுபடி மேலே போகும். அய்யய்யோ இப்ப விலை குறைஞ்சிடுச்சுன்னு நீங்க வித்தீங்கன்னா ஒரு ஆறு மாதம் கழிச்சு. பொருளாதார முன்னேற்றம் வரும் போது மறுபடியும் மேலே போகும் போது நீங்க உங்களுக்கு நிறைய வந்திருக்கும். நீங்க வித்தீங்கன்னா நீங்க நஷ்டத்தை உடனே எடுத்துக்கிறீங்க. விக்காம இருந்தீங்கன்னா நஷ்டம் இருக்குது. ஆனா நீங்க எடுக்கலை. அது மேலே போகும் போது உங்களுக்கு லாபத்தில் வரும். அதனால எதனால இந்த வீழ்ச்சியடைந்தது?. இது நீண்ட நாட்களுக்கு இந்த மாதிரி மோசமாக இருக்கப் போகுதா? இல்ல குறைந்த காலம் தான் இப்படி மோசமாக இருக்கப் போகுதா?ன்னு பார்க்கணும். குறுகிய காலம் மோசமாக இருந்துச்சுன்னா நாம பேசாம இருக்க வேண்டியது தான். ஏன்னா அது மறுபடியும் மேலே வந்துடும். நீண்ட காலமாக அது திவாலாகப் போகுது, நிறுவனத்தையே மூடப் போறாங்க. அப்படின்னு சொன்னா அப்ப நம்ம சீக்கிரமே வித்துட்டுக் கொஞ்ச நஷ்டத்தை எடுத்துக்கலாம்.

பொருளியல் நெருக்கடியில் சிக்கிப் பல நிறுவனங்கள் நொடித்துப் போயின. அவற்றின் பங்குகளை வாங்கி வைத்திருந்தவர்கள் கடுமையான இழப்புகளைச் சந்தித்தனர். இது பான்ற சூழலில் முதலீட்டாளர்களின் நிலை என்ன?

சில பேரு சொல்வாங்க நேத்து விலை பத்து டாலராக இருந்துச்சு. இன்னைக்கு விலை ஒன்பது டாலராயிடுச்சு. அதனால ஒரு டாலர் நஷ்டம்னு. அது தப்பு. நீங்க இருபது வருஷத்துக்கு முன்னாடி ரெண்டு டாலருக்கு வாங்கியிருப்பீங்க. நேத்து வித்திருந்தீங்கன்னா உங்களுக்கு எட்டு டாலர் இலாபம் கிடைச்சிருக்கும். இன்னைக்கு வித்தீங்கன்னா ஏழு டாலர் லாபம். எனவே நிச்சயம் லாபம் தான். அதனால இப்ப திவாலாச்சுன்னா அவங்க என்ன பண்ணுவாங்கன்னா அவங்க கிட்ட இருக்கிற எல்லாச் சொத்துக்களையும் விப்பாங்க. வித்துட்டு அவங்க கடனாளிகளுக்கெல்லாம் முதலில் கொடுப்பாங்க. அப்புறம் பாக்கி இருக்கிறதைப் பங்குதாரர்களுக்குக் கொடுப்பாங்க. அதனால உங்களுக்கு ஒண்ணுமே கிடைக்காதுன்னு சொல்ல முடியாது.சி ல சமயம் கிடைச்சாலும் கிடைக்கும். ஆனா நீங்க எப்ப வாங்கினீங்க அப்படிங்கிறதைப் பொறுத்தும் இருக்கு. திவாலாகப் போற நிறுவனங்களைப் பொறுத்த அளவில் அதுவொரு பெரிய Risk. ஆனா ஒரு நிறுவனம் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்து விடாது. நாளடைவில் தான் அது நடக்கும். ஒரு மூணு நாலு மாசம் ஆகும். அதுக்குள்ள சுதாரிச்சுக்கிட்டு வெளியே வந்துடணும்.

பங்கு வர்த்தகத்தில் அதிகம் பரிமாறப்படும் ஒரு வார்த்தை "ஸ்டாக் ஆப்ஷன்" (Stock Option) அதாவது குறிப்பிட்ட விலையில் வாங்கி, விற்கும் உரிமையுள்ள பங்குகள். அதன் வகைகள் யாவை? அவற்றின் செயல்பாடுகள் எப்படி? இவை பற்றியும் தெரிந்து கொள்வோம். அடுத்த வாரம்

(கூறு போடுவோம்)

Thursday, April 15, 2010

பங்கு வாங்கலியோ பங்கு - 2சென்ற இடுகையில் பங்குச் சந்தை என்றால் என்ன? அது எப்போது தொடங்கப்பட்டது? பங்குச் சந்தைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் யாவை? என்பது பற்றிய அறிமுகத்தைப் பார்த்தோம். சரி. அரசாங்க அமைப்புகள் பங்குப் பரிவர்த்தனையை ஏன் கண்காணிக்க வேண்டும்? அதனால் பொதுமக்களுக்கு என்ன நன்மை? இத்தகைய கேள்விகளுக்கான விடைகளை இப்போது பார்க்கலாம்.

பங்குச் சந்தை - அன்றாடம் மில்லியன் கணக்கில் பணம் புழங்கும் இடம். ஆரம்ப காலத்தில் அங்கு நிறையத் தவறுகள் நடந்தன. அதையடுத்து விழித்துக் கொண்ட உலக நாடுகள் பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளைத் தோற்றுவித்தன. பொதுமக்கள் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்காக முகவர்களின் உதவியை நாடினர். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வர்த்தகம் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டவை தான் இன்று உலகிலுள்ள பங்குச் சந்தைகள்.

சிட்னியில் இருக்கிறது ஆஸ்திரேலியன் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் (Australian Stock Exchange). அவங்க நாமளும் பொதுமக்களிடமே போயிடலாம்னு பங்குகளை விற்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் சிங்கப்பூர். முதல்ல சிங்கப்பூர் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்னு (Singapore Stock Exchange) இருந்துச்சு. இப்ப சிங்கப்பூர் எக்ஸ்சேன்ஜ்னு (Singapore Exchange) பண்ணி அதுவும் இப்ப பொதுமக்களிடம் பங்கு வித்துருக்கிறாங்க. மும்பை ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் (Mumbai Stock Exchange) அவங்களும் வித்துருக்கிறாங்க.

அதாவது “Conflict Of Interest” முரண்பாடுகளில் விளையும் பலன் ஏற்படக் கூடாது. பங்குச் சந்தைகள் முகவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடாது என்பதற்காகத் தான் முக்கியமாக எல்லாப் பங்குச் சந்தைகளும் பொதுமக்களிடம் போயிருக்கிறாங்க. பொதுமக்களிடம் போகும் போது நிறுவனத்தைப் பற்றிய எல்லா விபரங்களும் அவர்களுக்குச் சொல்லியாகணும். அவங்க எப்பவெல்லாம் ஆண்டறிக்கை கேட்கிறாங்களோ அப்பவெல்லாம் கொடுக்கணும் என்பது அவசியமாகியது.

பங்கு வர்த்தகத்தின் செயல்பாடுகளை அரசாங்கம் சார்ந்த அமைப்புகள் கண்காணிக்கும் போது அங்கு தவறுகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்ள முடியும். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிய அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற நடைமுறை இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் வந்த பிறகு தான் செயல்வடிவம் பெற்றது.

ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் அவங்க நிறுவனத்துக்குச் சொல்றது எல்லாம் எக்ஸ்சேன்ஜ்ல இருக்கும். அதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லைன்னா அவங்களோடு இணையப் பக்கத்துக்குப் போனீங்கன்னா அங்க ஆண்டறிக்கையை (Annual Report) அவங்க அதில் போட்டாகணும். அதை நாம இலவசமாகவே எடுத்துப் பார்க்க முடியும். அதனால பொதுமக்கள் கையிலும் ஒரு பிடி இருப்பது போலத் தான். விதிமீறல்கள் எழும் வாய்ப்புக் குறைவு.பங்கு வர்த்தகம் பற்றிய கண்காணிப்பு அமைப்புகள் தொடங்கப்பட்ட பிறகு அங்கு தவறுகள் நடக்கவே இல்லை என்று சொல்ல முடியாது. அவ்வபோது சிற்சில இடங்களில் நடக்கத்தான் செய்கின்றன. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டனைகளும் கடுமையாக இருக்கின்றன.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வழக்கம் நம்மில் இப்போது அதிகரித்து வருகிறது. எனவே, அதற்கு முன் அது பற்றிய சாதக, பாதகங்ளைப் பற்றிப் புரிந்து வைத்திருப்பது நன்மை பயக்கும்.

நாம முதலீடு செய்வதன் அர்த்தமென்ன? நிறைய இருக்கிறது. நாம முதலீடு செய்யுறதுக்கு, ஒண்ணுமே கஷ்டமே இல்லாம இருக்கணும்னா ஒரு நல்ல வங்கியில் பணத்தைப் போட்டால் போதும் நல்ல பாதுகாப்பு. இல்லை வங்கியும் திவாலாகும் அப்படின்னு தோணுச்சுன்னா இருக்கிற பணத்தையெல்லாம் ஒரு குடத்தில் போட்டு எங்காவது புதைச்சு வைச்சுட்டு வேணும்கிற போது எடுத்துக் கொள்ளலாம். மூன்றாம் பேருக்கு விஷயம் தெரியும் வரை அபாயம் இல்லை. அது யாருக்காவது தெரிஞ்சு தூக்கிட்டுப் போனாத் தான் சோதனையும், ரோதனையும். ஆனா இப்ப இருக்கிறதுலயே அதிக அபாயம் நிறைந்தது என்னன்னா இந்தப் பங்கு வாங்குறது தான்.

நாம் வங்கிகளில் முதலீடு செய்யும் பணத்துக்கு ஆண்டு தோறும் குறிப்பிட்ட தொகை வட்டியாக வழங்கப்படும். எனவே, முதலீடு செய்யும் தொகையையும், அதற்கான வட்டியையும் சேர்த்து நம்முடைய லாபம் எவ்வளவு என்பதை முன்கூட்டியே கணித்து விட முடியும். ஆனால், பங்கு வர்த்தகத்தில் எப்போதும் லாபத்தை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. சில வேளைகளில் நஷ்டத்தையும் சந்திக்க நேரலாம்.

ஏன்னா பங்கின் விலை. பங்கு வாங்கும் போது நமக்கு எந்த மாதிரியான பணம் திருப்பிக் கிடைக்கிறது. முதல்ல ஒவ்வொரு வருஷமும் நிறுவனங்கள் (Dividend) “இலாப ஈவுத் தொகை” அதாவது லாபத்தில் பங்கு கொடுப்பாங்க. அதைத் தவிர நாம இப்ப வாங்கிட்டுப் பின்னால விற்கும் போது விலை ஏறி இருந்துச்சுன்னா அந்த விலையேற்றத்தின் பலன் நமக்குக் கிடைக்கும்.

உதாரணமாக இப்ப நாம பத்து டாலருக்கு வாங்குறோம். ஒரு வருஷம் கழிச்சு நாம விக்குறோம். அப்ப 11 டாலர் விலையாக இருந்துச்சுன்னா நமக்கு அங்கே ஒரு டாலர் கிடைக்கிறது. Dividend ன்னு ஒரு வெள்ளிக் கொடுத்தான்னா. நமக்கு ரெண்டு வெள்ளி. நாம பத்து வெள்ளி போட்டு 12 வெள்ளி ஒரு வருஷம் கழிச்சுக் கிடைக்கிறது. அதாவது இருபது விழுக்காடு நமக்கு அதிகமாக கிடைக்கிறது. இது ரொம்ப நல்லது. இந்த Dividend எப்பவும் பாசிடிவ்வாக இருக்கும். அப்படி சில சமயங்களில் லாபம் இல்லைன்னா நிறுவனம் இந்தத் தடவை Dividend இல்லைன்னு சொல்லலாம். ஆனால் முக்காவாசி அது நடக்காது. ஆனால் கவனிக்க வேண்டியது என்னன்னா பங்கு விலை ஏறுமா? இறங்குமா? என்பதைத் தான். அது தான் உண்மையான சோதனை.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி மதிப்பைப் பொறுத்தே பங்குகளின் விலை உயர்வதும், வீழ்ச்சியடைவதும் அமையும். எனவே சரியான பங்குகளைக் கவனித்து வாங்குவது முக்கியம். அதுவும் பொருளியல் நெருக்கடி அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் பங்குப் பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் அவசியம்.

பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் போது எல்லாருக்கும் பயம். அய்யோ என்னாகுமோ என்னாகுமோன்னு. சில நிறுவனங்கள் நாங்க நல்லா செய்யப் போறதில்லைன்னு சொல்லிச்சுன்னா அய்யோ இது எல்லாத்தையும் பாதிக்குமன்னு சொல்லி நல்ல நிறுவனத்தோட விலையும் கூட குறையும். இதைத்தான் Market Sentimentனு சொல்வாங்க. அது சில சமயம் நல்லாருக்கும். அப்ப பங்கு விலை கூடிக்கொண்டே போகும். சில சமயம் Market Sentiment குறைவாக இருக்கும். அப்ப பங்கு விலை குறைந்து கொண்டே போகும். பொருளியல் மந்தத்தின் போது உலகத்துல எல்லாப் பங்குச் சந்தைகளும் கிட்டத்தட்ட ஐம்பது, அறுபது விழுக்காடு குறைந்தது. இந்த மாதிரி Market Sentiment மோசமாக இருக்குற சமயத்துல நாம கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன? எப்படிப்பட்ட முதலீடுகள் அதிக இலாபத்தைப் பெற்றுத் தரும்?

(கூறு போடுவோம்)

Wednesday, April 14, 2010

பங்கு வாங்கலியோ பங்கு....1ஒவ்வொரு நாளும் நம் செவிகளில் விழும் செய்திகள் ஏராளம். அவற்றைப் பற்றி நம் மனத்தில் எழும் சந்தேகங்களும் தாரளம். BSE. NSE, Nikei, Dow Jones இவ்வாறு பல குறியீட்டுச் சொற்களை நாம் செய்திகளில் கேட்டிருக்கலாம். அவை என்ன? எவற்றைக் குறிக்கிறது? என்பன போன்ற வினாக்கள் தொட்டுத் தொடரும் நம் மனத்துள்.

பொருளாதாரம் பற்றிப் பேசப் போனால் பங்கு வர்த்தகம் பற்றிப் பேசாமல் அது முழுமையடையாது. நம்மில் எத்தனை பேர் பங்கு வர்த்தகம் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருக்கிறோம்? எப்படியாவது இந்தப் பங்குகள் பற்றித் தெரிந்து கொகாள்ள வேண்டும் என்ற ஆர்வமும் பலருக்கு உண்டு. ஆனால் எங்கு? எப்படித் தெரிந்து கொள்வது என்பது அடுத்து எழும் வினா. இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் ஓரளவு விடையளிக்கிறது இந்தத் தொடர் கட்டுரை.

பங்கு வர்த்தகம் - ஒரு நாட்டின் பொருளியலுக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருக்கும் முக்கியக் கருவி. அதன் நுட்பங்களைத் தெரிந்து கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கின்றனர். அது பற்றி முறையாகத் தெரியாமல் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் கடுமையான பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர். அண்மைய காலத்தில் பங்குச் சந்தை பற்றிய ஆர்வம் பலரிடம் எழுந்திருக்கிறது. ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கோ அல்லது அந்த நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கோ அதிக முதலீடு தேவைப்படலாம். அதற்கான நிதியைத் திரட்டட பொதுமக்களுக்குப் பங்குகள் விற்கப்படுகின்றன. நிறுவனம் ஈட்டும் இலாபம் முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படும். பங்கு வர்த்தகத்தின் இந்த நடைமுறை பரவலான ஈர்ப்பைப் பெற்றிருக்கிறது.


ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அகலக்கால் விரிக்காமல் சிறிதாகத் தான் தொடங்குவோம். நம்முடைய தயாரிப்புகளுக்கு அல்லது பொருட்களுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு வரும் போது உற்பத்தையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும். நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கு மூலதனம் அவசியம். அதற்காக நாம் முதலில் நாடுவது வங்கிகளை. அவர்கள் நம்முடைய வரவு, செலவுகளைப் பார்த்து ஓரளவு கடன் தருவார்கள். அதைத் தாண்டியும் பணத்தேவை விரியும் போது நண்பர்கள், சுற்று வட்டம் இப்படிக் கடன் வட்டமும் விரியும்.

அப்ப நாம பணத்தை மத்தவங்க கிட்ட இருந்து வாங்கணும். அதைக் கடன்னு கொடுக்க மாட்டாங்க. அதனால நாங்க லாபத்தில் பங்கு கொடுக்கிறோம் என்ற உத்தரவாதம் தர வேண்டிய நிலை வரும். அதுதான் ஷேர் - அதாவது (Sharing In Profit).

நான் லாபத்தில் உங்களுக்குப் பங்கு கொடுக்கிறேன். நீங்களெல்லாம் பங்கு கொடுங்க அப்படின்னு பொதுமக்களிடம் நேராகப் போகிறது. பொது மக்களிடம் இருந்து பணத்தை வாங்கி அந்தப் பணத்தை வைச்சு நிறுவனத்தை அல்லது வர்த்தகத்தை விரிவு பண்ணி மொத்த லாபம் என்ன வருதோ அதை முதலீட்டாளர்களுக்குப் பிரிச்சுக் கொடுக்கிறது தான் பங்கு Share எனப்படும்.பங்கு வர்த்தகம் மிக நீண்ட நெடிய பாரம்பர்யம் உடையது. அண்மையத் தொழில் நுட்ப வளர்ச்சி பங்கு வர்த்தகத்தை இன்னும் வளப்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்தில் தனித்தனி நிறுவனங்களால் நடத்தப்பட்ட அந்த வர்த்தகம் தேவையின் பொருட்டு ஒரே இடத்தில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த வகையில் தொடங்கப்பட்டவை தான் பங்குச் சந்தைகள்.

முதன் முதலில் பங்கு கொடுத்தது ஹாலந்துல டச்சு ஈஸ்ட் இன்டியா கம்பெனி (Dutch East India Company). அது நடந்தது 1600 ல். அவங்க தான் முதன் முதலாக பங்கு வர்த்தகத்தை அறிமுகம் செய்தது.

இப்ப பங்கு வந்துடுச்சு. நான் அதைக் கொஞ்சம் வாங்கி வைச்சிருக்கிறேன். கொஞ்ச நாளைக்கு அப்புறம் எனக்குப் பணத் தேவை வருது. அப்ப நான் அதை விற்கணும். அதற்கு ஒரு நிறுவனம் இருக்கணும். இல்லாட்டி விற்பனை செய்வது கஷ்டம். அப்ப என்ன செய்யலாம்னு யோசிச்சாங்க. இந்தப் பங்குப் பரிவர்த்தனை செய்வதற்காகத் தான் பங்குச் சந்தையை ஆரம்பிச்சாங்க. முதல் பங்குச் சந்தை ஆரம்பிச்சதும் ஹாலந்துல தான்.

தொடக்க காலத்தில், ஒரு நிறுவனத்தின் பங்குகளை எங்கே வாங்குவது? எப்படி வாங்குவது? அதற்கென முகவர்கள் இருக்கிறார்களா? தங்கள் முதலீட்டுக்கு என்ன உத்தரவாதம்? இது போன்ற பல்வேறு கேள்விகள் மக்களிடம் எழுந்தன. அதனால் முகவர்களின் தேவை ஏற்பட்டது.

அதாவது வாங்குறவங்களுக்கும், விக்கிறவங்களுக்கும் இடையில் அவங்க தரகு வேலை பண்ணுவாங்க. அப்புறம் எல்லாத் தரகர்களும் சேர்ந்து நாம ஒரே ஒரு இடத்துல வைச்சு செய்வோம் அப்படின்னு ஒரு பொது இடத்துக்கு வந்தாங்க. அது தான் பங்குச் சந்தை. தற்போது உலகம் முழுக்க கிட்டத்தட்ட 70 பங்குச் சந்தைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

முகவர்களாலேயே பங்குச் சந்தை நடத்தப்ட்ட போது அதன் நம்பகத் தன்மை பற்றிய கேள்வி எழுந்தது. தவறுகள் நடப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. அதனடிப்படையில் ஒவ்வொரு நாடும் தனது பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளை உருவாக்கின.

பங்குச் சந்தைகளை எப்படி நடத்தலாம் என்ற விதிமுறைகளை வகுத்தது அரசாங்கம். அதுக்கப்புறம் பங்குச் சந்தைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு தனி நிறுவனமும் ஆரம்பிச்சாங்க. உதாரணமாக அமெரிக்காவில் (SEC – Securities & Exchange Commission) சிங்கப்பூரில் (Monitory Authority Of Singapore – MAS) இந்தியாவில் SEBI – Security and Exchange Board Of India.இப்படி ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்களும் தங்கள் வசதிக்கேற்ற அமைப்புகளைத் தோற்றுவித்துக் கொண்டன.

அரசாங்கம் சார்ந்த இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் எப்போது தொடங்கப்பட்டன. அவற்றால் பொதுமக்களுக்கு என்ன பயன்?

(கூறு போடுவோம்)

Monday, April 12, 2010

'கலை' வீடுவட்டமாய்க் கொஞ்சம்.

சதுரமாய் இன்னுஞ் சில.

நீள் வட்டத்திலும் கூட.

வடிவங்கள் எத்தனையோ
அத்தனையும் உண்டு
அவனிடம்.

விளையாட அழைத்தான்
வேகமாய் வந்து.

கட்டி முடித்தேன்
எனக்கே எனக்கான
வீட்டைப் போலக்
வெகு பிரயத்தனத்துடன்.

சிரித்துக் கொண்டே
எட்டி உதைத்தான்
திரும்பி வந்து பார்த்தவன்.

கட்டிய வீட்டை விட
அழகாய் இருந்தது
அவன்
கலை(ந்)த்த வீடு.