Thursday, June 16, 2011

அச்சுறுத்தும் (E Coli) ஈ கொலாய் நச்சுக் கிருமி



இப்போது ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிலும் கவலையின் ரேகை. ஈ கொலாய் (E Coli) நச்சுக் கிருமி ஒட்டுமொத்த உலகத்தையும் அச்ச ரேகையின் பிடிக்குள் அடக்கி இருக்கிறது. E Coli சாதாரணமாக வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவற்றைத்தான் ஏற்படுத்தும். ஆனால், ஐரோப்பாவில் இப்போது பரவியிருக்கும் E Coli கிருமி, உயிர்க்கொல்லியாக உருவெடுத்திருக்கிறது. விளைவு, முப்பதுக்கும் மேற்பட்ட உயிரிழப்பு; ஈராயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்பில்.

கொடிய நச்சுத்தன்மை கொண்டதாக நம்பப்படும் E Coli ஜெர்மனியில் தொடங்கி, ஐரோப்பாவைச் சுற்றியுள்ள சுமார் 12 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. வடக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு பண்ணையில் விளைந்த காய்கறிகளில் இருந்து அது பரவியிருக்கக் கூடும் என்று தொடக்கத்தில் யூகிக்கப்பட்டது. ஸ்பெயினில் இருந்து தருவிக்கப்பட்ட வெள்ளரிக்காயில் இருந்து கிருமித் தொற்று தொடங்கியிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. பின்னர் முளைப்பயிரில் இருந்து அது பரவியதாக உறுதிப்படுத்தியது ஜெர்மன் அரசு.



E Coli நச்சுக் கிருமியின் பல்கிப் பெருகும் நேரம் வெறும் இருபது நிமிடங்கள் தான். ஒன்றிலிருந்து இரண்டாக, இரண்டு நாலாக, நாலு எட்டாக.... இப்படிப் புலிப்பாய்ச்சலில் விரைந்து பெருகும் ஆற்றல் கொண்ட ஒட்டுண்ணி E Coli.

உலகில் இதற்கு முன்பும் இது போன்ற E Coli கிருமித் தொற்றுப் பரவல் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் பெரிய அளவில் மரணம் நிகழ்ந்ததில்லை. இப்போது கண்டறியப்பட்டுள்ள E Coli முன்னர் வந்த கிருமிகளை விட அதிக விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகிறது.



எண்பதுகளின் மத்தியில் E Coli கிருமிக் குடும்பத்தில் இருக்கும் இன்னொரு பாக்டீரியா பாரவியது. அதன் பெயர் ஷிகெல்லா. உணவுக் கூடங்களில் சாப்பாட்டின் மூலமாகப் பரவக் கூடிய அந்த நச்சுக் கிருமியின் மூலமாக வெளியாகும் மரபியல் பண்புகள் E Coli க்குள் போய் ஷிகாலைட் டாக்சின் கிருமியை உருவாக்கியது. அதை ஜப்பானின் ஷிகா என்பவர் கண்டு பிடித்தார். ஷிகெல்லா E Coli க்குள் போகும் போது இன்னும் வீரியம் கூடி நச்சுத்தன்மை அதிகமாகி நிறையப் பேரைப் பாதித்த நிகழ்வு நடந்ததுண்டு.

E Coli தொற்றுக்கு ஆளானவர்களின் சிறுநீரகம் வேகமாகச் செயலிழந்து விடும். இரத்த ஓட்டமும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இவற்றின் விளைவாகவே மரணம் நிகழ்ந்திருக்கும் என்று கணித்திருக்கிறது மருத்துவ உலகம்.

E Coli என்பது ஒரேயொரு நச்சுக் கிருமி. இன்றைய சூழலில் அதற்கு 200 வடிவங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று தான் O 157 H 7. அது இரண்டு வகையான தொல்லைகளைச் சேர்த்து ஒன்றாகக் கொடுக்கும். அதை (Haemolytic uraemic syndrome) ஹீமோலைட்டிக் யுரேமிக் சின்ட்ரோம் என்று அழைப்பதுண்டு. சிறுநீரக் குழாயிலும், இரத்த ஓட்டத்திலும் கோளாறை ஏற்படுத்தும். சாதாரண காய்ச்சல், வயிற்றுக்குள் இருந்து யாரோ பிடிச்சு இழுப்பது போன்று வலியுடன் கூடிய உணர்வு, இரத்தத்துடன் கூடிய வயிற்றுப் போக்கு இவை Haemolytic uraemic syndrome ன் அறிகுறிகள்.

E Coli பரவல் பற்றிய தகவல் வெளியானவுடனேயே விழித்துக் கொண்டது உலக சுகாதார நிறுவனம். ஜெர்மனியிலும், அதற்கு வெளியிலும் இந்த நச்சுக் கிருமி பற்றிய ஆய்வுகள் தீவிரமடைந்தன. இருப்பினும் தீர்க்கமான முடிவுகள் கிடைக்கவில்லை.

சீனாவில் E Coli ன் மரபியல் கூறுகளை அணு அணுவாக எடுத்துச் சோதிக்கப்பட்டது. அதன் முடிவு வேறு விதமான சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறது. ஏனெனில், இதுவரை E Coli உயிர்க் கொல்லியாக மாறியது இல்லை. அது தண்ணீரில் இருக்கும், வாய் வழியாகப் பரவி வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும். மருந்து சாப்பிட்டால் குணமாகி விடும் என்பது தான் நேற்று வரை இருந்த நிலைப்பாடு. ஆனால் ஜெர்மனியில் நிகழ்ந்த அண்மைய உயிரிழப்பு இது புதுவிதமாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் இரண்டு விதமான நச்சுக் கிருமிகளின் கலவையாக இது இருக்கலாம் என்று எச்சரித்துள்ளது.

E Coli பரவலால் ஐரோப்பிய விவசாயிகளின் வாழ்வில் கடும் சறுக்கல். வெளிநாடுகளுக்கான காய்கறி ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. அதன் பாதிப்பு சுமார் 175 மில்லியன் யூரோ. உள்ளூர் வர்த்தகத்திலும் சுமார் 50 மில்லியன் யூரோவுக்கு இழப்பு. விவசாயிகளின் கவலையைப் போக்கும் வகையில் 270 மில்லியன் அமெரிக்க டாலர் உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தொகை போதாது என்ற முணுமுணுப்பு ஐரோப்பாவில் கேட்கிறது.

இந்தச் சூழலில், E Coli தொற்று காய்கறிகளுக்குள்ளே செல்லாமல் வெளியே மட்டும் தான் தாக்கி இருக்கிறது என்ற தகவல் இப்போதைய ஆறுதல். பூஞ்சைகள் உணவுப் பொருட்களில் படிந்து விட்டால் பல ஆண்டுகள் அங்கேயே தங்கி வாழும் ஆற்றல் பெற்றவை. ஆனால் நச்சுக் கிருமிகள் அப்படிப்பட்டவை அல்ல. இதுவரை கிடைத்த ஆய்வு முடிவுகளின் படி E Coli காய்கறிக்கு வெளியே தான் இருக்கிறது. உள்ளே பரவவில்லை.

உலகில் பெருகி வரும் மக்கள் தொகை. அவர்களுக்கான உணவுத் தேவை. இந்தக் காரணங்களால் குறுகிய காலத்தில் விளைச்சலைக் கூட்ட வேண்டிய அவசரம். அதற்கு உதவுகின்றன நவீன உரங்கள். ஆனால் அந்த வேதிப் பொருட்கள் தான் கிருமிகளைக் கடத்தும் முகவர்கள் என்பது வேதனையில் விளைந்த ஆச்சர்யம்.

மரபியல் பண்புகள் மாறும் நிலை Mutation என்றழைக்கப்படும். பாக்டீரியாவில் அது அதிகமாக நடக்கும். காரணம் பாக்டீரியாவுக்கு ஒரேயொரு குரோமோசோம் தான் உண்டு. அதில் மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப அதிகம். ஒரே குடும்பத்தில் உள்ள பாக்டீரியா கிட்டத்தட்ட 100 விதமாக மாறுவதற்கு ஐந்தாண்டுகள் போதும். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் மரபியல் பண்புகளின் மாற்றத்தில் E Coli இன்னொரு பெரிய நோயை உருவாக்கியதில்லை. உலகமயமாக்கல், அதிக வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கும் முனைப்பை முடுக்கி விட்டிருக்கிறது. வேதியல் உரங்கள் பாக்டீரியாவில் திடீரென்று மரபியல் மாற்றங்களை ஏற்படுத்தும் முகவர்களாகச் செயல்படுகின்றன. இதன் மூலம் மிகப் பெரிய விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

E Coli நச்சுக் கிருமிப் பரவலைத் தடுக்க உலகில் இப்போது 12 வகையான கிருமி நாசினிகள் (Antibiotics) உள்ளன. அவற்றுள் எட்டு E Coli பரவலைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டன. அதாவது கிருமித் தொற்றைத் தடுக்கும் ஆற்றலை இழந்து விட்டன. இந்நிலை நீடித்தால் புதிய கிருமி நாசினிகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் எழும்.

வருமுன் காப்பதே சாலச் சிறப்பு என்பது நம் முன்னோர் வாக்கு. எனவே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளாக இருந்தாலும் சரி, உள்நாட்டில் விளைவதாக இருந்தாலும் சரி நன்றாக கழுவி வேக வைத்துச் சாப்பிடுவதன் மூலம் தேவையற்ற விளைவுகளை ஓரளவு தடுக்க முடியும் என்பது மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனை.

ஜெர்மனியில் E Coli கிருமிப் பரவல் தணிந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது. நிலைமை முற்றிலும் கட்டுக்குள் இல்லை, என்றாலும் கிருமி தொற்றும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதாக அமைச்சு அறிவித்திருப்பதே இப்போதைக்கு ஆறுதல் தரும் செய்தி.