Tuesday, August 16, 2011

அமெரிக்க அட்டமச் சனி.... விடாது கறுப்பு....உலக அரசியலை மேற்கத்திய நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அவர்களிடம் இராணுவ பலமும், பொருளியல் வலிமையும் ஒருசேர இருக்கின்றன. அவர்களை மீறி எதுவும் சாத்தியமில்லை என்று சொல்லப்படுவதுண்டு. அந்நிலை இப்போது மாறுகிறதோ என்று தோன்றுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீசில் தொடங்கிய பொருளியல் தேக்கம். அப்படியே பற்றிப் படர்ந்து ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளையும் மிரள வைத்தது.


இன்றைய நிலவரப்படி ஐரோப்பா, அமெரிக்கா ஆகியன முக்கியமான நாடுகள். அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 14 முதல் 15 டிரில்லியன் டாலர். இருப்பினும் அவ்விரு நாடுகளும் இப்போது கடனில் மூழ்கித் தத்தளிக்கின்றன. வேலையின்மை போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகள் அங்கே தலைவிரித்தாடுகின்றன.

இதைச் சுருக்கமாக பிக்ஸ் (PIIGS) பிராப்ளம் என்று சொல்வார்கள். அதாவது போர்ச்சுகல் அயர்லந்து இத்தாலி கிரீஸ் ஸ்பெயின் இந்த ஐந்து நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளை விட மோசமான நிதி நிர்வாகத்தைக் கொண்டுள்ளன. இதனால் அவற்றின் தேசியக் கடன் மோசமான நிலயில் உள்ளது. அந்நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 100 விழுக்காடுக்கு மேல் அவர்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள். தங்கள் வரவுக்கு அதிகமான செலவை அந்நாடுகள் செய்து வந்திருக்கின்றன. இது மோசமான விஷயம்.கிரீசை எடுத்துக்கொண்டோமானால் கடந்த இரண்டு வருடத்தில் இரண்டு முறை அந்நாடுகள் “போண்டியாகி” (Default) விட்டது. இது ஐரோப்பிய யூனியனின் மொத்த நம்பிக்கையைக் குறைத்துள்ளது. அடுத்து போர்ச்சுகலும் இத்தாலியும் தொடர்ந்து இந்தப் பிரச்சினையில் சிக்குவார்கள். Default நடக்கும் என்று பொதுவான எதிர்பார்ப்பு இருக்கிறது. இது ஐரோப்பாவின் பிரச்சினை, இதைப் போலவே இப்போது அமெரிக்காவிலும் பிரச்சினை உண்டாகி இருக்கிறது.எப்படி இருந்த நாடு, இப்படி ஆகி விட்டது. அமெரிக்காவுக்கா இந்த நிலை! என்று வியப்பின் உச்சத்தில் மக்கள். அமெரிக்கா படிப்படியாக வாங்கிய கடன் இன்று நாட்டையே மூழ்கடிக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டது. கடன் பெறுபவர்களுக்குத் திருப்பிச் செலுத்தும் தகுதி இருக்கிறதா என்பதைப் பரிசீலிக்காமல் தேவைக்கதிகமான கடனை வாரி வழங்கியிருக்கிறார்கள். இன்று கடனாளிகள் அவற்றைத் திருப்பிச் செலுத்த வழியில்லாமல் கதியற்று நிற்கிறார்கள்.

தற்போது வந்திருக்கும் நிதி நெருக்கடி முன்பே வந்திருக்க வேண்டும். காலம் கடந்து வந்திருக்கிறது. அது கடுமையான விளைவுகளைக் கண்டிப்பாகத் தந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவைப் பிடித்துள்ள அட்டமச் சனி. முழு உலகையும் ஓர் உலுக்கு உலுக்கும் சாத்தியம் உண்டு.

என்ன செய்யலாம்? யோசித்தது அமெரிக்கா. கடன் உச்சவரம்பை உயர்த்தலாம். ஆனால் ஆளும் ஜனநாயகக் கட்சியின் அந்த முடிவை எதிர்த்தது குடியரசுக் கட்சி. விவாதங்கள் நீண்டன. உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் சரிந்தன. நீண்ட இழுபறிக்குப் பிறகு கடன் உச்சவரம்பை உயர்த்த அமெரிக்காவின் இரு கட்சிகளும் இணங்கின.

நடப்பிலிருக்கும் 14.3 ட்ரில்லியன் டாலர் கடன் உச்ச வரம்பு, உடனடியாக 400 பில்லியன் டாலர் உயர்வைக் காணும். அதில் மேலும் 500 பில்லியன் டாலரை உயர்த்தவும் வழி செய்கிறது புதிய மசோதா. அதன் மூலம் அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு ட்ரில்லியன் டாலருக்கு மேல் அமெரிக்கச் செலவினத்தைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இது கடைசி நேரத்தில் நாட்டைக் காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி என்ற அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது. கடந்த மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பே இது போன்ற முயற்சியை எடுத்திருக்க வேண்டும். எனவே, இது உண்மையான தீர்வு இல்லை. பிரச்சினையைச் சமாளிப்பதற்காகத் தற்காலிகமாகச் சமரசத்துக்கு வந்திருக்கிறார்கள் என்ற தப்பான எண்ணம் வந்து விட்டது. இதனால் மக்களும், நாடுகளும் நம்பிக்கை இழந்துட்டார்கள். விளைவு, மறுநாளே பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி.அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு இன்னொரு சோதனை. கடன் தரவரிசைக் குறியீட்டின் உச்சத் தகுதியை முதன் முறையாக இழந்தது அமெரிக்கா. கடந்த 70 ஆண்டுகளாக அது AAA என்ற அந்தஸ்தில் இருந்தது. அண்மைய நெருக்கடியைத் தொடர்ந்து அந்த மதிப்பு AA + ஆகக் குறைக்கப்பட்டது. உலக நாடுகளின் கடன் தரத்தை மதிப்பிடும் Standard & Poor நிதி நிறுவனம் அந்த அறிவிப்பை வெளியிட்டது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பில் விழுந்த பலத்த அடி. ஆனாலும் இதிலிருந்து மீண்டு விடுவோம் என்று ஒபாமா மக்களைத் தேற்றிக் கொண்டிருக்கிறார். நெருக்கடி மேலும் முற்றும் என்று எச்சரிக்கிறார்கள் பொருளியல் வல்லுநர்கள். அது தான் நிதர்சனம்.இந்த நெருக்கடி ஒரே நாளில் அல்லது ஒரே இரவில் வந்ததல்ல. நாள்பட்ட புண், சீழ் பிடித்து இப்போது வெடித்துக் கிளம்பி இருக்கிறது. அமெரிக்கப் பொருளியலின் அடிப்படை பலவீனம் தான் இதற்குக் காரணம். அரசியல் தலைவர்கள் பொதுவாக அரசியல் பிரச்சினைகளை முன்வைத்து அவர்களின் மதிப்பு நன்றாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக அரசியலில் கவனம் செலுத்தினார்களே தவிர பொருளியல் பிரச்சினைகளை அவர்கள் முக்கியமாகக் கருதவில்லை.

நிதிச் சந்தையைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்குத் தும்மல் வந்தால் உலக நாடுகளுக்கே சளிப் பிடிக்கும் என்பது பொருளியல் பொதுமொழி. 2008 ல் வந்த பொருளியல் நலிவிலிருந்து இப்போது தான் உலகம் மெதுவாக எழுந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இன்னொரு வீழ்ச்சியா?

2008 ல் வந்த நெருக்கடியையும், இப்போதுள்ள சூழலையும் ஒப்பிட்டால் இப்போதைய நெருக்கடி கடுமையானது. ஏனென்றால் அன்றிருந்த சூழல் வேறு, இன்றுள்ள சூழல் வேறு. அதனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும். 2008 நெருக்கடி இந்த அளவுக்குத் தான் போகும் என்று நம்மால் கணிக்க முடிந்தது. ஆனால் இப்போது கணிக்க முடியாத சூழல். அமெரிக்க அரசாங்கம் இதைத் தான் செய்யப் போகிறது என்பது நம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. இப்போது தான் பாதிப்புத் தொடங்கியிருக்கிறது. இன்னும் தொடரும். எந்த அளவுக்கு இந்தப் பாதிப்பு மோசமடையும் என்பதை இப்போதைக்கு அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்பது தான் இன்றைய யதார்த்தம்.

அமெரிக்க, ஐரோப்பியக் கடன் பிரச்சினைகளால் உலகப் பொருளியல் மந்தநிலை ஏற்படலாம் என்று எச்சரித்திருக்கிறார்கள் நிபுணர்கள். அமெரிக்கக் கடன் தரவரிசையில் மாற்றம் வந்ததும் ஆசியப் பங்குச் சந்தைகளிலும் கடும் சரிவு. அமெரிக்க நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து இறங்கு முகம். நிதிச் சந்தையில் அடுத்து என்ன நடக்கும் என்று முன்னுரைக்க முடியாத சூழல்.

அமெரிக்க நாணயத்தின் மதிப்பு குறையக் குறைய முதலீட்டாளர்களின் நம்பிக்கை சரியத் தொடங்கியது. இப்போது அவர்களின் கவனம் தங்கத்தின் மீது குவிந்திருக்கிறது. அதன் விலையும் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டது. தங்கத்தின் விலை விரைவில் அவுன்சுக்கு 2000 டாலரை எட்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளே நிதிப் பிரச்சினையில் தத்தளிக்கும் போது சாதாரண மனிதர்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இனி வரும் சோதனையான காலத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு வரவு, செலவை அமைத்துக் கொண்டால் தேவையற்ற சங்கடங்களைத் தவிர்க்கலாம்.

உலகப் பொருளியலின் நிச்சயமற்ற சூழலில், நாடுகள் மட்டுமல்ல, நிறுவனங்கள், தனி மனிதர்கள் அத்தனை பேரும் முன் யோசனையோடு அடியெடுத்து வைப்பது கசப்பான அனுபவங்களைக் குறைக்க உதவலாம்.

கொசுறு : அமெரிக்காவின் கடன் அளவு ஏன் இவ்வளவு ஆனது?

அந்நாடு நடத்தி வரும் போர்கள் தான் இதற்கு முக்கியக் காரணம்.

ஜார்ஜ் புஷ் காலத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களுக்காக செலவிடப்பட்ட தொகை 6.1 டிரில்லியன் டாலர்.

பராக் ஒபாமா இதுவரை போர்ச் செலவுக்காக ஒதுக்கிய தொகை 2.4 டிரில்லியன் டாலர்!

அடேங்....கப்பா......உருப்பட்ட மாதிரித்தான்.... !