Monday, October 24, 2011

பயணம்.




 ஞானத் தேடலில்
எடுத்து வைக்கும்
முதல் அடி.

 பிரியமுள்ளவர்களைப்
பிரிந்து பின்
சேருவதை உணர்த்தும்
பால பாடம்.

 அன்பின்
அடர்த்தியை
அறிய வைக்கும்
ஆன்ம சோதனைக் களம்.

தொலைவு
முக்கியமல்ல.

நோக்கமே
பிரதானம்.

எங்கே போகிறோம்?
எப்போது திரும்புவோம்?
... ... ... ... ...
... ... ... ... ...
... ... ... ... ...
இப்படியான கேள்விகளிலும்


அவற்றின் பின்னே
ஒளிந்திருக்கும் விடைகளிலும்
துடித்து நிற்கிறது
உறவுகளின் உயிர்.

அறியாமை அகல
ஆன்மத் தேடலைத்
தொடங்கி வைக்கும்
ஆதிச் சுழி.

முன்னும் பின்னுமாய்
கடந்த தூரமும்
கடக்க வேண்டிய
தொலைவும்
மிச்சமிருக்கின்றன
இன்னும்…

காலக் கயிறு
சுழற்றி விட்ட
பம்பரம் போல்
சுற்றிக் கொண்டு
அலைகிறது மனது.

தொடரத் தொடரப்
பயணங்கள்...

தொலைவு கடக்கும்
துயரங்கள்.


எல்லை மீறும் பயணம்
தொல்லை சேரும் தருணம்.

கடந்து செல்லும்
காலத்தை
நினைவுப் பெட்டகத்தில்
உறைய வைக்கும்
உற்சாக அனுபவம்.

நினைவுச் சாளரம் திறந்து
நிகழ்காலத்தின்
வெளிச்ச ரேகை பரவ
உள்ளுக்குள் ஒளியேற்றும்
உன்னத உணர்வு – பயணம்.

கரை தொடும்
அலைகள்
கடலிடம் மீள்வது போல்
தினம் தினம்
தொடர்கிறது
தேடலுக்கான பயணம்.

மன அடுக்குகளின்
இடுக்குகளில்
வெளிச்சம் பாய்ச்ச
அவசியம் தேவை
பயணம்.

Friday, October 21, 2011

தனிமைக் கண(ன)ம்



அருகில்
இருந்த பொழுதுகளைக் காட்டிலும்
விலகி இருக்கும்
தருணங்களில்
அதிகம் நினைக்கப்படுகிறாய்
நீ.

கடந்து செல்லும்
நங்கையரின் நயனங்களில்
உன் தனித்துவம்
தேடித் தேடித்
தோற்றுப் போகிறேன்
நான்.

தனிமையின்
வெறுமையால்...
கடக்கும்
ஒவ்வொரு கணமும்
கனத்துப் போயிருக்கிறது
மனம்.

காற்று வெளியில்
மிதக்கும் குரல்களில்
உன் மகரந்தச்
சொற்களைத் தேடியலைகின்றன
என்
செவிப் பட்டாம்பூச்சிகள்.

வறண்ட தொண்டையை
நனைக்க வரும்
தண்ணீரின் தண்மைக்காகத்
தாகித்திருக்கிறது
என் நாவு.

தாமதிக்கும் கணங்கள்
அத்தனையும் நோவு.

விலகி இருப்பது
விவாதத்துக்கு நல்லது.
விவாகத்துக்கு அல்ல.

விரைந்து
வா தேவி!

தவறினால்…

தவிப்பில்
கரைந்து போகும்
என் ஆவி!!!


Monday, October 3, 2011

தனியே... தன்னந்தனியே... பாலஸ்தீன்...



உலக நாடுகளின் ஒட்டு மொத்தப் பார்வையும் இப்போது பாலஸ்தீன மக்கள் மீது. சுமார் அரை நூற்றாண்டாக அங்கே போர் முழக்கம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இப்போது சமாதானத்தின் தலைவாசல் திறக்கும் வாய்ப்பு கனிந்திருக்கிறது. உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் தன்னையும் ஒரு தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறது பாலஸ்தீனம். அந்நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தனி நாடு அங்கீகாரத்துக்கான விண்ணப்பத்தை பாதுகாப்பு மன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்.



நெடுங்காலமாகத் தனி நாடு அந்தஸ்து கேட்டுப் பல வழிகளில் முயற்சி செய்கிறது பாலஸ்தீனம். அது இப்போது சரியான பாதையில் நகரத் தொடங்கியிருக்கிறது. வன்முறைப் போக்கிலிருந்து விலகி, அமைதியான முறையில் சரியாகத் திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறது பாலஸ்தீனம். அதன் தனி நாடு கோரிக்கையை உலக நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் மூன்றில் இரண்டு பங்கு உலக நாடுகள் ஆதரிக்கின்றன. பாலஸ்தீன மக்களுக்கு இதில் பேரானந்தம். இஸ்ரேலுக்குத் திண்டாட்டம். அதை ஆதரிக்கும் அமெரிக்காவுக்கோ தர்ம சங்கடம்.

பாலஸ்தீனப் பிரச்சினையை எதிர்பாராத தருணத்தில் உலக நாடுகள் மறுக்க முடியாத ஒரு புள்ளியை நோக்கித் தள்ளி இருக்கிறார் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ். அவருடைய இந்த முயற்சி வெற்றி பெறுமா? அது கேள்விக்குறி. ஆனால், மஹ்மூத் அப்பாஸ் வெற்றிப் பாதையில் முதலடி எடுத்து வைத்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.

பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கையை வன்மையாகச் சாடுகிறது இஸ்ரேல். இம் முயற்சி அமைதிக்கான பாதையில் இடைஞ்சலை ஏற்படுத்தும் என்றும் அது வாதிடுகிறது.
உலக நிறுவனத்தின் பாதுகாப்பு மன்றத்தில் பாலஸ்தீன தனி நாட்டுக்கான கோரிக்கை விவாதிக்கப்பட வேண்டும். அப்போது தன்னுடைய வீட்டோ என்னும் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தோல்வியடைச் செய்யப்போவதாக எச்சரிக்கிறது அமெரிக்கா.

இந்தப் பின்னணியில், இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினையை சற்று பின்னோக்கிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

பதினெட்டாம் நூற்றாண்டிலேயே பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேலியக் குடியேற்றம் தொடங்கி விட்டதாகச் சொல்கின்றன வரலாற்றுக் குறிப்புகள். அப்போது பிரிட்டனின் காலனி நாடாக இருந்தது பாலஸ்தீனம். அங்கே பூர்வ குடிகளாக வாழ்ந்த அரபுக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். அல்லது பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். பதிலுக்கு, யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக அப் பகுதியில் நாளொரு சண்டை, பொழுதொரு பேச்சு வார்த்தை. இருப்பினும் அமைதி வந்தபாடில்லை.

1947 ல் உலக றநிறுவனம் பாலஸ்தீனத்தை இரு நாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. 55 விழுக்காடு நிலம் யூதர்களுக்கு, எஞ்சிய 45 விழுக்காடு பாலஸ்தீனர்களுக்கு. ஜெருசலம் நிர்வாக நகரம் என்பது ஒப்பந்தம். அதில் யூதர்களுக்குச் சம்மதம். அரபுக் குழுக்களுக்கு அதிருப்தி.

மீண்டும் இரு தரப்பிலும் மூண்டது போர். பிரிட்டனின் காலனி ஆதிக்கம் முடிவுக்கு வரும் முன்னர் 1948 மே 14 ல் இஸ்ரேல் என்பது தனி நாடு என்று அறிவிக்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லைப் பகுதியில் நித்தம் நித்தம் யுத்தச் சத்தம். அன்றாடம் குண்டு வெடிப்பு, கைகலப்பு, ஆள் கடத்தல், ஆயுதப் போராட்டம்.... இவை ஏதும் இல்லாத நாள் அப்பகுதி மக்களின் வாழ்வில் திருநாள். இது தான் இப்போதுள்ள உண்மை நிலை.



பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தர அங்கே பல இயக்கங்கள் முளைத்தன. பின்னர் அவை பல சிறு சிறு குழுக்களாகக் கிளைத்தன. முன்னாள் அதிபர் யாசர் அரஃபாத் தலைமையிலான ஃபத்தாஹ், தற்போது பாலஸ்தீன வட்டாரத்தை ஆளும் ஹமாஸ் ஆகியன அவற்றில் குறிப்பிடத்தக்க இயக்கங்கள்.



இவற்றுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுக் கொண்டது இஸ்ரேல்.

யார் அமெரிக்க அதிபராக வந்தாலும் இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று முழங்குவார்கள். அவ்வப்போது சில பேச்சு வார்த்தைகளையும் நடத்துவர். ஆனால், அவர்கள் பதவியிலிருந்து விலகும் வரை உருப்படியாக எதுவும் நடந்திருக்காது. அதற்கு வரலாறு சாட்சி.

இத்தகைய சூழலில், பல்வேறு தடைகள், மிரட்டல்களுக்கு இடையில் தனி நாடு அங்கீகாரக் கோரிக்கையை உலக நிறுவனத்திடம் முன்வைத்திருக்கிறது பாலஸ்தீனத் தரப்பு. அதில் வெற்றி பெறும் சாத்தியம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. பாலஸ்தீனத் தரப்பின் கோரிக்கை மீது உலக நிறுவனப் பாதுகாப்பு மன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் ஆகலாம். என் பல மாதங்கள் கூட ஆகலாம். அதன் பிறகே இந்த விவகாரத்தின் உண்மை நிலை தெரிய வரும்.

தனி நாடு அங்கீகாரம் கிடைக்கிறதோ இல்லையோ, குறைந்த பட்சம் உலக நிறுவனத்தின் உறுப்பினரல்லாத நாடு என்ற அந்தஸ்தைப் பாலஸ்தீனத் தரப்பு பெறலாம். அது சாத்தியமானால் உலக நிறுவனத்தின் விவாதங்களில் பங்கெடுக்கும் உரிமையும் கிடைக்கலாம். பாலஸ்தீனம் என்னும் தனி நாடு உருவாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்...

Tuesday, August 16, 2011

அமெரிக்க அட்டமச் சனி.... விடாது கறுப்பு....



உலக அரசியலை மேற்கத்திய நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அவர்களிடம் இராணுவ பலமும், பொருளியல் வலிமையும் ஒருசேர இருக்கின்றன. அவர்களை மீறி எதுவும் சாத்தியமில்லை என்று சொல்லப்படுவதுண்டு. அந்நிலை இப்போது மாறுகிறதோ என்று தோன்றுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீசில் தொடங்கிய பொருளியல் தேக்கம். அப்படியே பற்றிப் படர்ந்து ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளையும் மிரள வைத்தது.


இன்றைய நிலவரப்படி ஐரோப்பா, அமெரிக்கா ஆகியன முக்கியமான நாடுகள். அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 14 முதல் 15 டிரில்லியன் டாலர். இருப்பினும் அவ்விரு நாடுகளும் இப்போது கடனில் மூழ்கித் தத்தளிக்கின்றன. வேலையின்மை போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகள் அங்கே தலைவிரித்தாடுகின்றன.

இதைச் சுருக்கமாக பிக்ஸ் (PIIGS) பிராப்ளம் என்று சொல்வார்கள். அதாவது போர்ச்சுகல் அயர்லந்து இத்தாலி கிரீஸ் ஸ்பெயின் இந்த ஐந்து நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளை விட மோசமான நிதி நிர்வாகத்தைக் கொண்டுள்ளன. இதனால் அவற்றின் தேசியக் கடன் மோசமான நிலயில் உள்ளது. அந்நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 100 விழுக்காடுக்கு மேல் அவர்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள். தங்கள் வரவுக்கு அதிகமான செலவை அந்நாடுகள் செய்து வந்திருக்கின்றன. இது மோசமான விஷயம்.



கிரீசை எடுத்துக்கொண்டோமானால் கடந்த இரண்டு வருடத்தில் இரண்டு முறை அந்நாடுகள் “போண்டியாகி” (Default) விட்டது. இது ஐரோப்பிய யூனியனின் மொத்த நம்பிக்கையைக் குறைத்துள்ளது. அடுத்து போர்ச்சுகலும் இத்தாலியும் தொடர்ந்து இந்தப் பிரச்சினையில் சிக்குவார்கள். Default நடக்கும் என்று பொதுவான எதிர்பார்ப்பு இருக்கிறது. இது ஐரோப்பாவின் பிரச்சினை, இதைப் போலவே இப்போது அமெரிக்காவிலும் பிரச்சினை உண்டாகி இருக்கிறது.



எப்படி இருந்த நாடு, இப்படி ஆகி விட்டது. அமெரிக்காவுக்கா இந்த நிலை! என்று வியப்பின் உச்சத்தில் மக்கள். அமெரிக்கா படிப்படியாக வாங்கிய கடன் இன்று நாட்டையே மூழ்கடிக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டது. கடன் பெறுபவர்களுக்குத் திருப்பிச் செலுத்தும் தகுதி இருக்கிறதா என்பதைப் பரிசீலிக்காமல் தேவைக்கதிகமான கடனை வாரி வழங்கியிருக்கிறார்கள். இன்று கடனாளிகள் அவற்றைத் திருப்பிச் செலுத்த வழியில்லாமல் கதியற்று நிற்கிறார்கள்.

தற்போது வந்திருக்கும் நிதி நெருக்கடி முன்பே வந்திருக்க வேண்டும். காலம் கடந்து வந்திருக்கிறது. அது கடுமையான விளைவுகளைக் கண்டிப்பாகத் தந்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவைப் பிடித்துள்ள அட்டமச் சனி. முழு உலகையும் ஓர் உலுக்கு உலுக்கும் சாத்தியம் உண்டு.

என்ன செய்யலாம்? யோசித்தது அமெரிக்கா. கடன் உச்சவரம்பை உயர்த்தலாம். ஆனால் ஆளும் ஜனநாயகக் கட்சியின் அந்த முடிவை எதிர்த்தது குடியரசுக் கட்சி. விவாதங்கள் நீண்டன. உலக நாடுகளின் பங்குச் சந்தைகள் சரிந்தன. நீண்ட இழுபறிக்குப் பிறகு கடன் உச்சவரம்பை உயர்த்த அமெரிக்காவின் இரு கட்சிகளும் இணங்கின.

நடப்பிலிருக்கும் 14.3 ட்ரில்லியன் டாலர் கடன் உச்ச வரம்பு, உடனடியாக 400 பில்லியன் டாலர் உயர்வைக் காணும். அதில் மேலும் 500 பில்லியன் டாலரை உயர்த்தவும் வழி செய்கிறது புதிய மசோதா. அதன் மூலம் அடுத்த பத்தாண்டுகளில் இரண்டு ட்ரில்லியன் டாலருக்கு மேல் அமெரிக்கச் செலவினத்தைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.



இது கடைசி நேரத்தில் நாட்டைக் காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி என்ற அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது. கடந்த மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பே இது போன்ற முயற்சியை எடுத்திருக்க வேண்டும். எனவே, இது உண்மையான தீர்வு இல்லை. பிரச்சினையைச் சமாளிப்பதற்காகத் தற்காலிகமாகச் சமரசத்துக்கு வந்திருக்கிறார்கள் என்ற தப்பான எண்ணம் வந்து விட்டது. இதனால் மக்களும், நாடுகளும் நம்பிக்கை இழந்துட்டார்கள். விளைவு, மறுநாளே பங்குச் சந்தையில் கடுமையான வீழ்ச்சி.



அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு இன்னொரு சோதனை. கடன் தரவரிசைக் குறியீட்டின் உச்சத் தகுதியை முதன் முறையாக இழந்தது அமெரிக்கா. கடந்த 70 ஆண்டுகளாக அது AAA என்ற அந்தஸ்தில் இருந்தது. அண்மைய நெருக்கடியைத் தொடர்ந்து அந்த மதிப்பு AA + ஆகக் குறைக்கப்பட்டது. உலக நாடுகளின் கடன் தரத்தை மதிப்பிடும் Standard & Poor நிதி நிறுவனம் அந்த அறிவிப்பை வெளியிட்டது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தின் முதுகெலும்பில் விழுந்த பலத்த அடி. ஆனாலும் இதிலிருந்து மீண்டு விடுவோம் என்று ஒபாமா மக்களைத் தேற்றிக் கொண்டிருக்கிறார். நெருக்கடி மேலும் முற்றும் என்று எச்சரிக்கிறார்கள் பொருளியல் வல்லுநர்கள். அது தான் நிதர்சனம்.



இந்த நெருக்கடி ஒரே நாளில் அல்லது ஒரே இரவில் வந்ததல்ல. நாள்பட்ட புண், சீழ் பிடித்து இப்போது வெடித்துக் கிளம்பி இருக்கிறது. அமெரிக்கப் பொருளியலின் அடிப்படை பலவீனம் தான் இதற்குக் காரணம். அரசியல் தலைவர்கள் பொதுவாக அரசியல் பிரச்சினைகளை முன்வைத்து அவர்களின் மதிப்பு நன்றாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக அரசியலில் கவனம் செலுத்தினார்களே தவிர பொருளியல் பிரச்சினைகளை அவர்கள் முக்கியமாகக் கருதவில்லை.

நிதிச் சந்தையைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்குத் தும்மல் வந்தால் உலக நாடுகளுக்கே சளிப் பிடிக்கும் என்பது பொருளியல் பொதுமொழி. 2008 ல் வந்த பொருளியல் நலிவிலிருந்து இப்போது தான் உலகம் மெதுவாக எழுந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இன்னொரு வீழ்ச்சியா?

2008 ல் வந்த நெருக்கடியையும், இப்போதுள்ள சூழலையும் ஒப்பிட்டால் இப்போதைய நெருக்கடி கடுமையானது. ஏனென்றால் அன்றிருந்த சூழல் வேறு, இன்றுள்ள சூழல் வேறு. அதனுடைய தாக்கம் அதிகமாக இருக்கும். 2008 நெருக்கடி இந்த அளவுக்குத் தான் போகும் என்று நம்மால் கணிக்க முடிந்தது. ஆனால் இப்போது கணிக்க முடியாத சூழல். அமெரிக்க அரசாங்கம் இதைத் தான் செய்யப் போகிறது என்பது நம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை. இப்போது தான் பாதிப்புத் தொடங்கியிருக்கிறது. இன்னும் தொடரும். எந்த அளவுக்கு இந்தப் பாதிப்பு மோசமடையும் என்பதை இப்போதைக்கு அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்பது தான் இன்றைய யதார்த்தம்.

அமெரிக்க, ஐரோப்பியக் கடன் பிரச்சினைகளால் உலகப் பொருளியல் மந்தநிலை ஏற்படலாம் என்று எச்சரித்திருக்கிறார்கள் நிபுணர்கள். அமெரிக்கக் கடன் தரவரிசையில் மாற்றம் வந்ததும் ஆசியப் பங்குச் சந்தைகளிலும் கடும் சரிவு. அமெரிக்க நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து இறங்கு முகம். நிதிச் சந்தையில் அடுத்து என்ன நடக்கும் என்று முன்னுரைக்க முடியாத சூழல்.

அமெரிக்க நாணயத்தின் மதிப்பு குறையக் குறைய முதலீட்டாளர்களின் நம்பிக்கை சரியத் தொடங்கியது. இப்போது அவர்களின் கவனம் தங்கத்தின் மீது குவிந்திருக்கிறது. அதன் விலையும் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டது. தங்கத்தின் விலை விரைவில் அவுன்சுக்கு 2000 டாலரை எட்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளே நிதிப் பிரச்சினையில் தத்தளிக்கும் போது சாதாரண மனிதர்கள் பற்றிச் சொல்லத் தேவையில்லை. இனி வரும் சோதனையான காலத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு வரவு, செலவை அமைத்துக் கொண்டால் தேவையற்ற சங்கடங்களைத் தவிர்க்கலாம்.

உலகப் பொருளியலின் நிச்சயமற்ற சூழலில், நாடுகள் மட்டுமல்ல, நிறுவனங்கள், தனி மனிதர்கள் அத்தனை பேரும் முன் யோசனையோடு அடியெடுத்து வைப்பது கசப்பான அனுபவங்களைக் குறைக்க உதவலாம்.

கொசுறு : அமெரிக்காவின் கடன் அளவு ஏன் இவ்வளவு ஆனது?

அந்நாடு நடத்தி வரும் போர்கள் தான் இதற்கு முக்கியக் காரணம்.

ஜார்ஜ் புஷ் காலத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களுக்காக செலவிடப்பட்ட தொகை 6.1 டிரில்லியன் டாலர்.

பராக் ஒபாமா இதுவரை போர்ச் செலவுக்காக ஒதுக்கிய தொகை 2.4 டிரில்லியன் டாலர்!

அடேங்....கப்பா......உருப்பட்ட மாதிரித்தான்.... !


Thursday, June 16, 2011

அச்சுறுத்தும் (E Coli) ஈ கொலாய் நச்சுக் கிருமி



இப்போது ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிலும் கவலையின் ரேகை. ஈ கொலாய் (E Coli) நச்சுக் கிருமி ஒட்டுமொத்த உலகத்தையும் அச்ச ரேகையின் பிடிக்குள் அடக்கி இருக்கிறது. E Coli சாதாரணமாக வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவற்றைத்தான் ஏற்படுத்தும். ஆனால், ஐரோப்பாவில் இப்போது பரவியிருக்கும் E Coli கிருமி, உயிர்க்கொல்லியாக உருவெடுத்திருக்கிறது. விளைவு, முப்பதுக்கும் மேற்பட்ட உயிரிழப்பு; ஈராயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தீவிரக் கண்காணிப்பில்.

கொடிய நச்சுத்தன்மை கொண்டதாக நம்பப்படும் E Coli ஜெர்மனியில் தொடங்கி, ஐரோப்பாவைச் சுற்றியுள்ள சுமார் 12 நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. வடக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு பண்ணையில் விளைந்த காய்கறிகளில் இருந்து அது பரவியிருக்கக் கூடும் என்று தொடக்கத்தில் யூகிக்கப்பட்டது. ஸ்பெயினில் இருந்து தருவிக்கப்பட்ட வெள்ளரிக்காயில் இருந்து கிருமித் தொற்று தொடங்கியிருக்கலாம் என்று சொல்லப்பட்டது. பின்னர் முளைப்பயிரில் இருந்து அது பரவியதாக உறுதிப்படுத்தியது ஜெர்மன் அரசு.



E Coli நச்சுக் கிருமியின் பல்கிப் பெருகும் நேரம் வெறும் இருபது நிமிடங்கள் தான். ஒன்றிலிருந்து இரண்டாக, இரண்டு நாலாக, நாலு எட்டாக.... இப்படிப் புலிப்பாய்ச்சலில் விரைந்து பெருகும் ஆற்றல் கொண்ட ஒட்டுண்ணி E Coli.

உலகில் இதற்கு முன்பும் இது போன்ற E Coli கிருமித் தொற்றுப் பரவல் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் பெரிய அளவில் மரணம் நிகழ்ந்ததில்லை. இப்போது கண்டறியப்பட்டுள்ள E Coli முன்னர் வந்த கிருமிகளை விட அதிக விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகிறது.



எண்பதுகளின் மத்தியில் E Coli கிருமிக் குடும்பத்தில் இருக்கும் இன்னொரு பாக்டீரியா பாரவியது. அதன் பெயர் ஷிகெல்லா. உணவுக் கூடங்களில் சாப்பாட்டின் மூலமாகப் பரவக் கூடிய அந்த நச்சுக் கிருமியின் மூலமாக வெளியாகும் மரபியல் பண்புகள் E Coli க்குள் போய் ஷிகாலைட் டாக்சின் கிருமியை உருவாக்கியது. அதை ஜப்பானின் ஷிகா என்பவர் கண்டு பிடித்தார். ஷிகெல்லா E Coli க்குள் போகும் போது இன்னும் வீரியம் கூடி நச்சுத்தன்மை அதிகமாகி நிறையப் பேரைப் பாதித்த நிகழ்வு நடந்ததுண்டு.

E Coli தொற்றுக்கு ஆளானவர்களின் சிறுநீரகம் வேகமாகச் செயலிழந்து விடும். இரத்த ஓட்டமும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இவற்றின் விளைவாகவே மரணம் நிகழ்ந்திருக்கும் என்று கணித்திருக்கிறது மருத்துவ உலகம்.

E Coli என்பது ஒரேயொரு நச்சுக் கிருமி. இன்றைய சூழலில் அதற்கு 200 வடிவங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று தான் O 157 H 7. அது இரண்டு வகையான தொல்லைகளைச் சேர்த்து ஒன்றாகக் கொடுக்கும். அதை (Haemolytic uraemic syndrome) ஹீமோலைட்டிக் யுரேமிக் சின்ட்ரோம் என்று அழைப்பதுண்டு. சிறுநீரக் குழாயிலும், இரத்த ஓட்டத்திலும் கோளாறை ஏற்படுத்தும். சாதாரண காய்ச்சல், வயிற்றுக்குள் இருந்து யாரோ பிடிச்சு இழுப்பது போன்று வலியுடன் கூடிய உணர்வு, இரத்தத்துடன் கூடிய வயிற்றுப் போக்கு இவை Haemolytic uraemic syndrome ன் அறிகுறிகள்.

E Coli பரவல் பற்றிய தகவல் வெளியானவுடனேயே விழித்துக் கொண்டது உலக சுகாதார நிறுவனம். ஜெர்மனியிலும், அதற்கு வெளியிலும் இந்த நச்சுக் கிருமி பற்றிய ஆய்வுகள் தீவிரமடைந்தன. இருப்பினும் தீர்க்கமான முடிவுகள் கிடைக்கவில்லை.

சீனாவில் E Coli ன் மரபியல் கூறுகளை அணு அணுவாக எடுத்துச் சோதிக்கப்பட்டது. அதன் முடிவு வேறு விதமான சந்தேகத்தைக் கிளப்பி இருக்கிறது. ஏனெனில், இதுவரை E Coli உயிர்க் கொல்லியாக மாறியது இல்லை. அது தண்ணீரில் இருக்கும், வாய் வழியாகப் பரவி வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும். மருந்து சாப்பிட்டால் குணமாகி விடும் என்பது தான் நேற்று வரை இருந்த நிலைப்பாடு. ஆனால் ஜெர்மனியில் நிகழ்ந்த அண்மைய உயிரிழப்பு இது புதுவிதமாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் இரண்டு விதமான நச்சுக் கிருமிகளின் கலவையாக இது இருக்கலாம் என்று எச்சரித்துள்ளது.

E Coli பரவலால் ஐரோப்பிய விவசாயிகளின் வாழ்வில் கடும் சறுக்கல். வெளிநாடுகளுக்கான காய்கறி ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. அதன் பாதிப்பு சுமார் 175 மில்லியன் யூரோ. உள்ளூர் வர்த்தகத்திலும் சுமார் 50 மில்லியன் யூரோவுக்கு இழப்பு. விவசாயிகளின் கவலையைப் போக்கும் வகையில் 270 மில்லியன் அமெரிக்க டாலர் உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தொகை போதாது என்ற முணுமுணுப்பு ஐரோப்பாவில் கேட்கிறது.

இந்தச் சூழலில், E Coli தொற்று காய்கறிகளுக்குள்ளே செல்லாமல் வெளியே மட்டும் தான் தாக்கி இருக்கிறது என்ற தகவல் இப்போதைய ஆறுதல். பூஞ்சைகள் உணவுப் பொருட்களில் படிந்து விட்டால் பல ஆண்டுகள் அங்கேயே தங்கி வாழும் ஆற்றல் பெற்றவை. ஆனால் நச்சுக் கிருமிகள் அப்படிப்பட்டவை அல்ல. இதுவரை கிடைத்த ஆய்வு முடிவுகளின் படி E Coli காய்கறிக்கு வெளியே தான் இருக்கிறது. உள்ளே பரவவில்லை.

உலகில் பெருகி வரும் மக்கள் தொகை. அவர்களுக்கான உணவுத் தேவை. இந்தக் காரணங்களால் குறுகிய காலத்தில் விளைச்சலைக் கூட்ட வேண்டிய அவசரம். அதற்கு உதவுகின்றன நவீன உரங்கள். ஆனால் அந்த வேதிப் பொருட்கள் தான் கிருமிகளைக் கடத்தும் முகவர்கள் என்பது வேதனையில் விளைந்த ஆச்சர்யம்.

மரபியல் பண்புகள் மாறும் நிலை Mutation என்றழைக்கப்படும். பாக்டீரியாவில் அது அதிகமாக நடக்கும். காரணம் பாக்டீரியாவுக்கு ஒரேயொரு குரோமோசோம் தான் உண்டு. அதில் மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப அதிகம். ஒரே குடும்பத்தில் உள்ள பாக்டீரியா கிட்டத்தட்ட 100 விதமாக மாறுவதற்கு ஐந்தாண்டுகள் போதும். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் மரபியல் பண்புகளின் மாற்றத்தில் E Coli இன்னொரு பெரிய நோயை உருவாக்கியதில்லை. உலகமயமாக்கல், அதிக வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கும் முனைப்பை முடுக்கி விட்டிருக்கிறது. வேதியல் உரங்கள் பாக்டீரியாவில் திடீரென்று மரபியல் மாற்றங்களை ஏற்படுத்தும் முகவர்களாகச் செயல்படுகின்றன. இதன் மூலம் மிகப் பெரிய விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

E Coli நச்சுக் கிருமிப் பரவலைத் தடுக்க உலகில் இப்போது 12 வகையான கிருமி நாசினிகள் (Antibiotics) உள்ளன. அவற்றுள் எட்டு E Coli பரவலைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டன. அதாவது கிருமித் தொற்றைத் தடுக்கும் ஆற்றலை இழந்து விட்டன. இந்நிலை நீடித்தால் புதிய கிருமி நாசினிகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் எழும்.

வருமுன் காப்பதே சாலச் சிறப்பு என்பது நம் முன்னோர் வாக்கு. எனவே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காய்கறிகளாக இருந்தாலும் சரி, உள்நாட்டில் விளைவதாக இருந்தாலும் சரி நன்றாக கழுவி வேக வைத்துச் சாப்பிடுவதன் மூலம் தேவையற்ற விளைவுகளை ஓரளவு தடுக்க முடியும் என்பது மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனை.

ஜெர்மனியில் E Coli கிருமிப் பரவல் தணிந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்தது. நிலைமை முற்றிலும் கட்டுக்குள் இல்லை, என்றாலும் கிருமி தொற்றும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதாக அமைச்சு அறிவித்திருப்பதே இப்போதைக்கு ஆறுதல் தரும் செய்தி.

Monday, April 18, 2011

பொதுப்பெயர்




என்
பிள்ளைக்கு
உன் பெயரும்...

உன்
பிள்ளைக்கு
என் பெயரும்...

வேண்டாம்
இப்படி...!

வா...!

இணைந்தே
சூட்டுவோம்
நம் பிள்ளைக்கு
நல்லதொரு
"பொதுப்பெயர்".

Friday, February 18, 2011

ஹோஸ்னி முபாரக் யார்?



எகிப்தின் நைல் நதிக்கரையில் உள்ள Menoufia மாநிலத்தில் 1928 ஆம் ஆண்டு பிறந்தார் முபாரக். ஆயுதப் படையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

1975ல், அப்போதைய அதிபர் அன்வர் ஸாதாத்தின் நம்பிக்கைக்கு உரிய துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

1981ல், இராணுவ அணிவகுப்பில் நடந்த திட்டமிட்ட தாக்குதலில் அன்வர் ஸாதாத் படுகொலை செய்யப்பட்டார். அருகிலிருந்த முபாரக், காயமின்றித் தப்பினார். இதன் பின்னணியில் சதித்திட்டம் ஏதேனும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம்கூட அப்போது எழுந்தது. அந்தச் சம்பவம் நிகழ்ந்த ஏழு நாட்களில் முபாரக் அதிபராக அறிவிக்கப்பட்டார்.

இஸ்ரேலுடன் அமைதி, வாஷிங்டனுடன் ஒத்துழைப்பு, பணக்கார வர்க்கத்தின் உருவாக்கம், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை நசுக்குதல் போன்ற அன்வர் ஸாதாத்தின் கொள்கைகளையே முபாரக்கும் அடியொற்றித் தொடர்ந்தார். காலப்போக்கில் அவருடைய ஆட்சிமுறையில் மாற்றம் தென்படத் தொடங்கியது.

உலகின் வெளிப்படையான பொருளியல், அரசியல் கொள்கைகளுடன் முபாரக்கின் ஆட்சிமுறை பொருந்தவில்லை. வட்டாரத்தின் செல்வாக்கைப் பெற்றவர்... அனைத்துலக அரங்கில் அனைவருக்கும் பழக்கப்பட்ட தோற்றத்தைக் கொண்டவர். மத்தியக் கிழக்கு அமைதி முயற்சியில் அதிகம் பங்காற்றியவர். எனினும் இஸ்லாமிய எதிர்த்தரப்பினரை அவர் கையாண்ட விதம் அதிருப்தியை அளித்தது.

பழைய அதிபர் அன்வர் ஸாதாத்துக்கு நேர்ந்த கதி இவருக்கும் நேரவிருந்தது. 1995ம் ஆண்டில் எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் முபாரக் மீது படுகொலை முயற்சி நடந்தது. அவருடைய கார் தீவிரவாதிகளின் குண்டுகளால் துளைக்கப்பட்டது. நூலிழையின் உயிர் பிழைத்தார் முபாரக்.

இஸ்லாமிய எதிர்த்தரப்பினர் மட்டுமல்ல, உள்நாட்டு மக்களின் வெறுப்பையும் முபாரக் சம்பாதித்தார். ஜோர்தான், சிரியா போன்ற நாடுகளில், தலைவர்களின் இடத்தை அவர்களுடைய புதல்வர்கள் நிரப்பியதுபோல் எகிப்திலும் நேர்ந்துவிடும் என்று மக்கள் அஞ்சினர். அந்த அச்சத்திற்குக் காரணம் இருந்தது. எகிப்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, துணையதிபர் நியமிக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் முபாரக் நியமிக்கவில்லை.

நாட்டின் முன்னேற்றத்தில் அவர் கவனம் செலுத்தவில்லை என்பது மக்களின் இன்னொரு குறை. இந்தக் குமுறல்களை முபாரக் கண்டு கொள்ளவேயில்லை.

காலம் செல்லச் செல்ல நிலைமை மாறத் தொடங்கியது. 2004, 05 ஆம் ஆண்டுகளில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தலைதூக்கத் தொடங்கின.

2005ல் நாட்டில் முதன்முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. பெயருக்குத்தான் அது தேர்தல். முடிவு அனைவருக்கும் தெரிந்ததாக இருந்தது. தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த இரண்டு பிரபலமான வேட்பாளர்களைச் சிறையில் அடைத்தார் முபாரக். தேர்தலில் வெற்றி பெற்று ஐந்தாம் தவணையாக அதிபர் பொறுப்பை ஏற்றார்.

அரபு உலகில், அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடாக எகிப்து விளங்குவதைத் உறுதிப்படுத்திக்கொண்டார் முபாரக். எனினும் அவருடைய ஜனநாயக அடக்குமுறைகள் அமெரிக்காவுக்கு அதிருப்தியளிக்கத் தொடங்கின. ஊழல், அதிகாரம், வறுமை, வேலையின்மை போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகளால், செல்வாக்கை இழந்தார் முபாரக். ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு அவர் கொடுத்த வாக்குறுதிகள் நீர் மேல் எழுத்துக்களாயின. விளைவு, இப்போது மக்களாட்சிக்கான விடியல்.