பொருளாதார ரீதியாக கிரீஸ் ஏற்படுத்திய தாக்கம் இந்த வருடம் மிகப் பெரிய அளவில் பிரதிபலித்தது. அமெரிக்கப் பொருளியல் நலிவு எப்படி உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியதோ, அதுபோல கிரீஸின் நலிவு ஐரோப்பா மட்டுமின்றி, ஆசிய நாடுகளையும் பாதித்தது. கிரீஸின் இந்நிலையால் யூரோ நாணயத்தின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ந்தது. ஐரோப்பிய ஒன்றியம் அதை விரும்பவில்லை. அத்தகைய சூழலில் கிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டிய நிலை வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மோசமான பணவீக்கம், பயமுறுத்தும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு, மலைக்க வைக்கும் வெளிநாட்டுக் கடன், வேலையின்மை என முன்னெப்போதுமில்லாத பொருளாதார நெருக்கடியில் கிரீஸ் தவித்தது. இனி மீள முடியுமா? என்ற பயத்திலும், சோகத்திலும் மக்கள் கவலைப்பட்டனர்.
கிரீஸ் மீதிருந்த நம்பிக்கையில் கடன் கொடுத்து வந்த பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் கடனைத் திருப்பிக் கேட்கத் தொடங்கின. கிரீஸுக்கு கடன் வழங்கிய ஐரோப்பிய வங்கிகளின் எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளது, அந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பயத்தில் தங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெற ஆரம்பித்தனர்.
கிரீஸில் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடிச் சுழல் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் பாதித்தது, இந்தப் பிரச்சனையை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. எனினும் இந்த நெருக்கடி நிலை தொடரும் என்பதே இப்போதைய கணிப்பு.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் இல் இவ்வாண்டு இறுதியில் மரணமடைந்தார். வடகொரியாவின் அணுஆயுத கொள்கையால் அனைத்துலக அளவில் கடும் எதிர்ப்பை சந்தித்தவர் கிம். எனினும் எதிர்ப்புகளை மீறி அணுசக்தி திட்டங்களை வடகொரியாவில் நிறைவேற்றினார்.
நீரிழிவு மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் கிம் ஜோங் இல். ரயிலில் பயணம் செய்த வேளை நெஞ்சு வலியால் அவர் மரணமடைந்ததாக அறிவித்தது வடகொரிய அரசு.
அதையடுத்து அவரது மகன் கிம் ஜோங் உன் தலைவர் பதவிக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. தற்போது பதவிக்கு வந்துள்ள கிம் ஜோங் உன் 3-வது தலைமுறையைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு முதலே கிம் ஜோங் உன் தலைமைப் பதவிக்குத் தயார்ப்படுத்தப்பட்டு வந்தார். மிக முக்கிய ராணுவ, உள்துறை பதவிகள் அவருக்குத் தரப்பட்டிருந்தன.
அமெரிக்காவின் நிம்மதிக்கு அச்சுறுத்தலாக இருந்தவர் ஒசாமா பின் லாடன். பாகிஸ்தானில் இருந்த அவரை அமரிக்க ராணுவம் கொன்றது. அல் காயிதா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்ட செய்தியை அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கடந்த 2001 - செப்டம்பர் 11 ஆம் தேதி நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு ஒசாமா பின் லாதன் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். அமெரிக்காவின் நீண்ட கால தேடுதல் வேட்டை இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. எனினும், பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த வருடம் விடுதலைக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினர் தென் சூடானிய மக்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு தனி நாடு அந்தஸ்த்தைப் பெற்றது தென் சூடான்.
சூடானிலிருந்து பிரிந்து தென் சுடான் தனி நாடாவதா? வேண்டாமா? என்பது தொடர்பில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஜனவரியில் நடந்தது. அதனடிப்படையில், இவ்வாண்டு ஜுலை 9 தனி நாடாக அறிவிக்கப்பட்டது தென் சூடான். பெரும்பாலும் கிறிஸ்தவர்களும் ஆப்பிரிக்காவின் பூர்வ குடியினராகவும் அமைந்திருக்கின்ற தென் சூடானிய மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.
சூடான் இரண்டாகப் பிரிந்த பின்னரும், வடக்கு – தெற்கு சூடான் இடையே நாட்டின் எண்ணெய் வளங்களை பகிர்ந்து கொள்வது, எல்லைகளை வகுத்துக் கொள்வது, கடன் சுமையைப் பகிர்ந்து கொள்வது போன்ற பலவித சவால்கள் ஏற்படும் என்று தெரிகிறது.
முக்கால்வாசி எண்ணெய் வளம் தென் சூடானில் உள்ளது. இதனால் பல குழுக்களுக்கிடையே அவ்வப்போது பிரச்னைகளும் மூண்டு வருகின்றன. எனினும் இருக்கும் வளங்களை பயன்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர் தென் சூடானியர்கள்.
******* ******* ******* ******* ******* ******* ******* *******
இந்த வருடம் இரண்டு அரச திருமணங்கள் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தன.
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் திருமணம் லண்டனில் இவ்வாண்டு நடைபெற்றது. வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற திருமண நிகழ்ச்சிகளை பிரிட்டனின் எலிசபெத் அரசியார் தொடங்கி வைத்தார்.
அரச குடும்பத்தின் திருமணத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது லண்டன் மாநகர். திருமண நிகழ்வு முடிந்ததும் புதுமணத் தம்பதிகள் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சாரட் வண்டியில் வலம் வந்தனர். வழிநெடுகிலும் குழுமியிருந்த மக்களிடம் கையசைத்தபடி வாழ்த்துக்களைப் பெற்றனர். இந்தத் திருமணத்தையொட்டி, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் குவிந்த லட்சக்கணக்கான மக்கள் லண்டன் வீதிகளில் திரண்டிருந்தனர்.
அரச குடும்பத்தின் திருமண நிகழ்வை தொலைக்காட்சிகள், இணையத்தளம் மூலம் ஏறத்தாழ இரண்டு பில்லியன் மக்கள் கண்டு களித்தனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 அரச குடும்பத்தினரும், அனைத்துலகப் பிரபலங்களும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
தமது தந்தை இளவரசர் சார்ல்ஸுக்குப் பிறகு பிரிட்டிஷ் மன்னர் பட்டத்துக்கான வரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் இளவரசர் வில்லியம்.
ஆசியாவிலும் ஓர் அரசத் திருமணம். ஆடம்பரமின்றி எளிமையாக நடந்து முடிந்தது பூட்டான் மன்னரின் திருமணம். இமய மலைப்பகுதி நாடுகளில் ஒன்று பூட்டான். அதன் மன்னர் ஜிக்மி கெய்சர் நம்கியால்க்கும், 21 வயது கல்லூரி மாணவி ஜெட்சென்பெமாவுக்கும் மன்னர் அரண்மணையில் திருமணம் நடந்தது. தலைநகர் திம்புவில் உள்ள புனாஹா கோட்டையில், பௌத்த பாராம்பரியப்படி இந்தக் கல்யாணம் நடைபெற்றது. பூட்டான் பிரதமர் ஜிக்மிதைன்லி உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மீண்டும் சாதித்தது. 2001 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையுடன் மோதியது இந்தியா. முடிவில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது இந்தியா. 28 ஆண்டுகளுக்கு முன்பு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திக் கோப்பையைக் கைப்பற்றியது.
முதன் முறையாக உலகக் கோப்பையை நடத்தும் பிரதான நாட்டின் அணி கோப்பையை வென்றுள்ளது. இலங்கை 1996ஆம் ஆண்டு வெல்லும்போது அது போட்டியை நடத்தும் துணை நாடாக இருந்தது.
ஸ்ரீநாத் சாதனை சமன்இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான், உலக கோப்பை அரங்கில் 23 போட்டிகளில் பங்கேற்று 44 விக்கெட்களை வீழ்த்தினார். அதன்மூலம் உலக கோப்பை வரலாற்றில், அதிக வீரர்களை வீழ்த்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள் வரிசையில் முன்னிலை பெற்றார். முன்னர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்துடன் 34 போட்டிகளில் பங்கேற்று அந்த இலக்கை எட்டினார்.
ஆறாவது வீரர்இலங்கையின் தில்ஷான், இம்முறை 9 போட்டிகளில் மொத்தம் 500 ரன்கள் எடுத்தார். அதன் மூலம், பத்தாவது உலக கோப்பை தொடரில் 500 அல்லது அதற்கு மேல் ஓட்டங்களைக் குவித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.
உலக கோப்பை அரங்கில், இம்மைல்கல்லை எட்டிய ஆறாவது வீரர் அவர். முன்னதாக இந்தியாவின் சச்சின் (673 ரன்கள், 2003), ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹைடன் (659 ரன்கள், 2007), இலங்கையின் மகிள ஜெயவர்தனா (548 ரன்கள், 2007), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (539 ரன்கள், 2007), இந்தியாவின் சச்சின் (523 ரன்கள், 1996) உள்ளிட்டோர் அந்த இலக்கை எட்டினர்.
தோனி "6000'இந்திய அணித் தலைவர் தோனி, சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் 6000 ஓட்டங்களைக் குவித்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 42வது ஓட்டத்தைக் கடந்த போது அவர் இந்தச் சாதனையை நிகழ்த்தினார். 186 போட்டிகளில் பங்கேற்று இவர் 6049 ஓட்டங்களை எடுத்தார். முன்னர் சச்சின், கங்குலி, டிராவிட், அசாருத்தீன், யுவராஜ், சேவக் உள்ளிட்டோர் இச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர்.
காம்பிர் "4000'உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 97 ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் காம்பிர், சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், 4000 ஓட்டங்களைத் தொட்டார். அவர் தமது 24வது ஓட்டத்தைக் கடந்த போது, இச்சாதனையை மலர்த்தினார். 114 போட்டிகளில் 9 சதம், 25 அரைசதம் உட்பட 4073 ஓட்டங்களை அவர் எடுத்துள்ளார். இதன்மூலம் இம்மைல்கல்லை எட்டிய 11வது இந்திய வீரர் ஆனார்.
உலக கோப்பை வெற்றியாளரான இந்திய அணிக்கு, கோப்பையுடன், மொத்தம் ரூ. 44.1 கோடி பரிசுத்தொகை கிடைத்தது. தோல்வியடைந்த இலங்கை அணிக்கு ரூ. 6.75 கோடி கிடைத்தது.
கடந்த ஐந்து உலக கோப்பை தொடர்களில் பங்கேற்றவர் சச்சின். அவர் இடம் பெற்றிருந்த இந்திய அணி இதுவரை கோப்பை வென்றதில்லை. ஆறாவது முறையாக இத்தொடரில் பங்கேற்ற சச்சின், முதன் முறையாக உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற பெருமை பெற்றார். உலகக் கோப்பை வெற்றியை இந்திய நட்சத்திர வீரர் சச்சினுக்குச் சமர்ப்பித்தது வெற்றிக் குழு.
சொந்த மண்ணில் சாதனைசொந்த மண்ணில் உலக கோப்பை வென்று அசத்தியது இந்திய அணி. இதன் மூலம் உலக கோப்பை தொடரை நடத்திய நாடுகள் கோப்பை வென்றதில்லை என்ற கருத்தை முதல் முறையாக தகர்த்தது. இதற்கு முன் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகள் உலக கோப்பை தொடரை நடத்தின. ஆனால், அந்த அணிகளால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.
உலகக் கோப்பையை வென்றாலும் இங்கிலாந்து சென்ற இந்திய அணிக்குக் கடுமையான சறுக்கல். இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய அணி. சாதிக்குமா? காத்திருப்போம்.
நன்றி : மெய்யப்பன்.