Friday, September 12, 2008

வழிகாட்டும் அறிவுச்சுடர் !

எப்படியாவது அந்த மாமனிதரை வாழ்வில் ஒருமுறையாவது சந்தித்து விட வேண்டும் என்று சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் மனதில் பதியமிட்டேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவரைப் பற்றிய தகவல்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக பத்திரிகைகளில் வெளியாகத் தொடங்கியிருந்த காலம் அது. பேராசிரியாக, விஞ்ஞானியாக, குடியரசுத்தலைவராக, நல்ல மனிதராக இவை எல்லாவற்றையும் தாண்டி இளையர்களின் முன்மாதிரி நாயகனாக அவர் இருப்பது தான், அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்துக்கான அடிப்படை வித்து.

சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அந்தப் பேராசியர் ஒருமுறை புத்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைக்க வந்தார். அப்போது நான் பணியாற்றிக் கொண்டிருந்த www.worldtamilnews.com இணைய வானொலிக்காக அவரை ஒரு நேர்காணல் செய்து விட வேண்டும் என்பது மன சங்கல்பம். ஆனால் வாய்ப்பு நழுவியது. அவருடைய உரையைக் கேட்கக் கூடிய கூட்டத்தையும், அதன் பிறகு அவரிடம் கையொப்பம் பெற்றுக் கொள்ள முடிண்டியடித்த கூட்டத்தையும் தாண்டி அவரை நெருங்கி கை கொடுப்பதற்கு மட்டுமே சந்தர்ப்பம் வாய்த்தது அப்போது. நமக்கு விதிச்சது அவ்வளவு தான் போலன்னு மனசைத் தேத்திக்கிட்டேன்.

2006 ல் சிங்கப்பூர் வந்த பிறகு என்னுடைய முதல் பணியே அந்த மாமனிதர் கலந்து கொண்ட நிகழ்ச்சி பற்றிய செய்தியைச் சேகரிப்பது தான். பழம் நழுவிப் பாலில் விழுந்த மாதிரியல்ல, வாயிலேயே நேரடியாக விழுந்தது போல மனதுக்குள் உற்சாகம். இந்த முறை அவரைச் சந்தித்து நாலு கேள்வியாவது கேட்டுடணும்னு மனசு கங்கணம் கட்டியது. சிங்கப்பூரின் பவன் அனைத்துலகப் பள்ளியில் நடந்த அந்த விழாவுக்கு அவர் வந்தது பேராசிரியராக அல்ல. இந்தியாவின் முதல் தலைமகனாக, குடியரசுத் தலைவராக!

அந்தப் பதவியில் உள்ள ஒருவர், சாதாரணமாக இந்தியாவில் ஏதேனும் ஒரு விழாவுக்கு வந்தாலே பொதுமக்கள் பாடு திண்டாட்டம் தான். பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற பெயரில் படுத்தி எடுத்து விடுவார்கள். ஆனால் அவர் இங்கு வந்த போது, இவரா இந்தியாவின் தலைமகன்? என்று வெளிநாட்டவர் வியக்குமளவு வெகு எளிமையாக அமைந்தது அந்த விழா. பாதுகாப்புக் கெடுபிடிகள் இல்லை. யாரோ பக்கத்து வீட்டு நபர் நம்மை வந்துச் சந்தித்துப் போவது போல அமைந்தது அந்த நிகழ்வு. அப்போதும் கை குலுக்கிக் கொண்டதைத் தவிர அதிக நேரம் பேச முடியவில்லை.

வாய்ப்புகள் மறுக்கப்படும் போது, அல்லது தள்ளிப் போகும் போது அடுத்த முறை இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற வைராக்கியம் மனதில் எழுவது இயல்பு. அப்படியே சமாதானப்படுத்திக் கொண்டேன். அவருடைய குடியரசுத் தலைவர் பதவிக் காலம் முடித்து தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

சென்ற மாதம் (ஆகஸ்ட் 26,27 ’08) நாட்களில் மீண்டும் அந்த மாமனிதர் சிங்கப்பூர் வருகிறார் என்ற செய்தி சிந்தையில் தேன் பாய்ச்சியது. தகவல் கிடைத்ததும் சந்திக்கத் தேவையான அத்தனை பகீரதப் பிரயத்தனங்களையும் செய்து, இறையருளால் இம்முறை கிட்டியது அந்த மாமனிதரைச் சந்திக்கும் வாய்ப்பு. யாரவர்? இந்தியாவின் முன்னைய குடியரசுத் தலைவர் டாகடர். A.P.J.அப்துல் கலாம்.

சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. அதை பெ(ஏ)ற்றுக் கொள்வதற்காகவும், இங்குள்ள இந்திய வர்த்தக அமைப்புகள் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் அமைந்தது அவருடைய இந்தப் பயணம். சிங்கப்பூரில் அவர் தங்கியிருந்தது சுமார் ஒன்றரை நாள் மட்டுமே.

ஆகஸ்ட் 26 இரவு ஒன்பதே முக்காலுக்கு அவரைச் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. குறித்த நேரத்துக்குச் சரியாக வந்தார். வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த அறை, அவருடைய அறிவொளியின் காரணமாகக் கூடுதல் அழகில் ஜொலித்தது. எளிமையின் மொத்த உருவம் உயிர் கொண்டது போல அமைந்தது அவருடைய வரவு. முகமன் சொல்லிக் கொண்டோம். தொடங்கலாமா சார்? நீங்க தயார்னா ஆரம்பிச்சிடலாம்? என்றார். அடடா? எவ்வளவு உன்னதமான மாமனிதர், முப்பது வயதைத் தொட்டு உரசிய என்னை சார் என விளித்தது சற்று சங்கோஜத்தைத் தந்தாலும், அவரைப் பற்றிய மதிப்பீடு இன்னும் உயர்ந்தது மனதுக்குள்.

அரசியலுக்கு அப்பாற்பட்டுச் சில கேள்விகளைக் கேட்டேன். ஒவ்வொரு கேள்வியையும் ஆழ உள்வாங்கிக் கொண்டு, ஒரு பாமரனுக்குப் பாடம் நடத்தும் தொனியில் அவற்றுக்கான பதில்களைத் தந்த போது, நான் மீண்டும் என்னுடைய பள்ளிக் காலத்துக்குப் போயிருந்தேன். கண்ணியமிக்க ஆசிரியரிடம் மண்டியிட்டுப் பாடம் கேட்கும் மாணவனைப் போல் அவர் வார்த்தைகளுக்கு முன்னால் மண்டியிட்டது மனசு. சில முரண்பாடான கேள்விகளை முடிக்கும் முன்னரே நிர்தாட்சண்யமாக மறுத்து, அதற்கான காரணங்களை விளக்கிய போது அவருடைய அறிவின் ஆழமும், அகலமும் பிரமிப்பை ஏற்படுத்தியது.

இறுதிக் கேள்வி அனைவருக்கும் பொதுவானது. இந்திய இளையர்களுக்கு மட்டுமல்ல உலகத்தின் பெரும்பான்மையான இளையர்களுக்கு நீங்க ஒரு முன்மாதிரி. அவர்களுக்குத் தாங்கள் வழங்கும் அறிவுரை என்ன?

சிங்கப்பூராகட்டும், இந்தியாவாகட்டும், உலகின் எந்தப் பகுதியில் வாழும் இளையர்களாகட்டும் அவர்களுடைய மனதில் ஒரு இலட்சியம் இருக்க வேண்டும். அடுத்த பத்தாண்டுகளுக்குள் நான் யாராக இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கு அது. ஒரு விஞ்ஞானியா? சிறந்த மருத்துவரா? தலைசிறந்த நல்ல அரசியல் தலைவரா? வானவியல் வல்லுநரா? தொழில்நுட்ப மேதையா? நான் யாராகப் போகிறேன் என்பதற்கான இலட்சியம் வேண்டும்.

அந்த இலட்சியத்தை அடைவதற்காக அறிவை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவு அறம் காக்கும் என்று சொல்கிறார் வள்ளுவர். எனவே இலட்சியத்தை அடைவதற்கான அறிவைப் பெற்றுக் கொள்ளக் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும். அதற்காக நல்ல ஆசிரியர்கள், நண்பர்கள், புத்தகங்கள் என்று தேடித் தேடித் தேடி அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு, விடா முயற்சி - கொண்ட குறிக்கோளை அடைவதற்கான பாதைகளை வகுத்து அவற்றில் பயணிக்க வேண்டும். அந்தப் பயணத்தில் சில தோல்விகள் வந்தால் அச்சப்படாமல், தோல்விக்கு ஒரு நாள் நம்மால் தோல்வியைத் தர முடியும் என்ற நம்பிக்கையோடு முன்னேற வேண்டும். தோல்வி கண்டு சேர்ந்து விடக் கூடாது. இவை அத்தனைக்கும் ஆதார சுருதி நல்லொழுக்கம். இளைய சமுதாயத்திடம் நல்லொழுக்கத்தைக் கொண்டு வர முக்கியக் காரணி நல்ல குடும்பங்கள். நான் அதற்கு ஒரு கருத்துச் சொல்வேன்.

மனதிலே நல்லொழுக்கம் இருந்தால்
நடத்தையில் அழகு மிளிரும்.

நடத்தையில் அழகு மிளிர்ந்தால்
குடும்பத்தில் சாந்தி நிலவும்.

குடும்பத்தில் சாந்தி நிலவினால்
நாட்டில் சீர்முறை உயரும்.

நாட்டில் சீர்முறை உயர்ந்தால்
நம்மிடத்தில் அமைதி நிலவும்.

எனவே, மனதிலே நல்லொழுக்கம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். புன்னகையோடு சொல்லி முடித்தார் டாக்டர் அப்துல் கலாம். என் வாழ்க்கைப் பாதைதயில் சுடர்விட்டது அறிவொளிக்கதிர்.

உங்களுக்கு...? :)




No comments:

Post a Comment