இவ்வாண்டு(2009) மே மாதம் நடந்த முக்கியச் சம்பவங்கள் இரண்டு. அவை நடந்தது வெவ்வேறு திசைகளில். ஆனால் உலகின் எல்லாத் திக்குகளிலும் கலவையான எதிரொலிகள்.
இலங்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த உள் நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது இவ்வாண்டின் மே மாதம் மூன்றாம் வாரத்தில். அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக ஒடுக்கப்பட்டனர். அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போரில் கொல்லப்பட்டதாக அறிவித்தது இலங்கை ராணுவம். போர் உக்கிரமான வேளையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களும் கொல்லப்பட்டனர். இறுதிக் கட்டத் தாக்குதலில் பலியான உயிர்களின் எண்ணிக்கை முப்பதாயிரம் என்பது புள்ளி விவரம். அந்தப் பட்டியலில் அடங்காதது எத்தனை ஆயிரமோ? என்று வினா எழுப்புகிறது விமர்சன வட்டாரம்.
முந்நூறாயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாயினர். இலங்கையின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த அவர்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். காரணம் போர். ஆபத்துக்குப் பாவமில்லை என்று அவர்கள் தஞ்சமடைந்தது இடைக்கால நிவாரண முகாம்களில். இப்போது படிப்படியாக அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள் என்று சொல்கிறது இலங்கை அரசாங்கம்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஏராளம். அவை பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எழுந்தன அவ்வப்போது சில குரல்கள். இதுவரை எந்தப் பதிலும் கிட்டவில்லை. விடிவு காலம் எப்போது? என்று காத்துக்கிடக்கிறது இலங்கையின் சிறுபான்மைச் சமூகம்.
இதற்கிடையே இலங்கை அரசியலில் ஓர் எதிர்பாராத திருப்பம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தலைமையேற்று நடத்தியவர் இராணுவத் தலைவர் ஜெனரல் சரத் ஃபொன்சோகா. அவர் இப்போது அதிபர் ராஜபக்ஷவுக்கு எதிராக அரசியல் களத்தில். போரின் வெற்றிக்குப் பிறகு அரசாங்கம் தம்மை அலட்சியம் செய்கிறது என்று கூறி பதவியைத் துறந்தார் திரு.ஃபொன்சேகா. அடுத்து அவர் பார்வை அரசியலின் பக்கம் திரும்பியது.
அடுத்த மாதம் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார் திரு.ஃபொன்சேகா. நேற்று வரை ஓரணியில் இருந்தவர்கள். இப்போது நேரெதிராக அரசியல் களத்தில். என்ன முடிவு என்பதைக் காணக் காத்திருக்கிறது உலகம்.
மே மாதம் இந்தியாவில் பலமாக வீசியது அரசியல் அனல். அப்போது தான் அங்கு நடந்தது நாடாளுமன்றத் தேர்தல். அதன் முடிவில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்கள் ஒரு சாரார். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. மீண்டும் ஒரு நிலையற்ற ஆட்சி வரப்போகிறது. இப்படிப் பலப்பல யூகங்கள். ஆனால் நடந்தது வேறு? மக்கள் வழங்கியது தெளிவான தீர்ப்பு.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வாகை சூடியது ஆளும் காங்கிரஸ். இந்தியா முழுமைக்கும் ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடந்தது. சுமார் 71 மில்லியன் பேர் அதில் வாக்களித்தனர். 1991-க்குப் பிறகு மக்களவையில் மீண்டும் 200க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றியது காங்கிரஸ். அக்கட்சி தலைமையிலான கூட்டணி வென்ற இடங்கள் 243. முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கூட்டணி 160 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இந்தியாவின் அடுத்த பிரதமரைத் தீர்மானிக்கப் போவது நாங்கள் என்று முழக்கமிட்ட மூன்றாவது அணி காற்றில் கரைந்த கற்பூரம் ஆனது. அது வெற்றி கொண்ட தொகுதிகள் 79.
இலங்கைப் பிரச்சினை உச்சத்தில் இருந்த வேளையில் இடம் பெற்றது இந்திய நாடாளுமன்றத் தேர்தல். அதன் தாக்கம் தமிழகத்தில் கடுமையாக எதிரொலிக்கும் என்ற அனுமானம் கொடி கட்டிப் பறந்தது. ஆனால் அங்கும் தலை கீழ் மாற்றம். தமிழகத்தை ஆளும் தி.மு.க கூட்டணி 28 இடங்களை வன்றது. எதிர்த்தரப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 12 தொகுதிகளைக் கைப்பற்றியது.
இந்திய அளவில் அதிக இடங்களைக் கைப்பற்றிய காங்கிரசின் திரு.மன்மோகன் சிங் மீண்டும் இந்தியாவின் பிரதமரானார்.
ஜுன் மாதம் நடந்த ஏர் ஃபிரான்ஸ் விமான விபத்து உலக மக்களை கதி கலங்க வைத்தது. பிரேசில் தலைநகர் ரி யோடி ஜெனிரோவில் இருந்து பாரிசுக்குப் புறப்பட்டது அந்த விமானம். அட்லாண்டிக் கடலின் மீது பறந்த வேளையில் மின்னல் தாக்கத்துக்கு இலக்கானதால் கட்டுப்பாட்டை இழந்தது. அதில் இருந்த ஊழியர்கள், பயணிகள் மொத்தம் 228 பேருடன் கடலில் விழுந்தது ஏர் ஃபிரான்ஸ் விமானம்.
தகவல் அறிந்ததும் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆனால் எவரையும் காப்பாற்ற முடியவில்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு சிலருடைய சடலங்களை மட்டுமே மீட்க முடிந்தது. அவர்களையும் அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல். காரணம் அவை அழுகிப் போயிருந்தன. தேடும் பணியில் கிடைக்கப் பெற்ற சடலங்கள் சொற்பம். கிடைக்காமலேயே போய் விட்ட உடல்கள் அதிகம். 75 ஆண்டுகளாக பயண சேவையாற்றி வரும் ஏர் ஃபிரான்ஸ் வரலாற்றில் அது மிகப் பெரும் விபத்து.
ஜுன் மாதம் ஈரானில் தேர்தல் காலம். மீண்டும் அதிபராகத் தேர்வு பெற்றார் மஹ்மூத் அஹ்மத் நிஜாதி. ஆனால் தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
ஈரான் தேர்தல் விதிப்படி பதிவான வாக்குகளில் பாதிக்கும் மேல் பெற்றவர்கள் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவர். அந்த அடிப்படையில் திரு. அஹ்மத் நிஜாதி 64.8 விழுக்காடு வாக்குகள் பெற்றதாக அறிவித்தது தேர்தல் ஆணையம். அதை எதிர்த்தரப்புப் போட்டியாளர் திரு. மீர் ஹுஸைன் மூஸவி மறுத்தார். வாக்களிப்பிலும், வாக்கு எண்ணிக்கையிலும் மோசடிகள் நடந்தன என்பது அவருடைய குற்றச்சாட்டு.
பாப் இசை உலகின் மன்னன் மைக்கேல் ஜாக்ஸன் மரணமடைந்தது இந்த ஆண்டின் ஜுன் மாதத்தில். அவருடைய மரணத்தில் சந்தேகங்கள் நிறைந்திருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. ஜாக்ஸனின் குடும்ப மருத்துவரே தவறான ஊசி மூலம் அவருடைய உயிரைப் பறித்து விட்டார் என்பது குற்றச்சாட்டுகளில் முக்கியமானது.
ஜாக்சன் வழக்கமாக உட்கொள்ளும் மாத்திரைகள் ஏற்படுத்திய பக்க விளைவு தான் மரணத்துக்குக் காரணம் என்றும் சொல்லப்பட்டது. எது எப்படி ஆயினும், வறுமையின் வெறுமையான பக்கக்களில் இருந்து தன் திறமையால் உலகின் உச்சத்துக்குச் சென்ற பெருமை மைக்கேல் ஜாக்ஸனுக்கு உண்டு. அவருடைய மரணம் இசை ரசிகர்களுக்குப் பேரிழப்பு. மரணம் நடந்த இரு வாரங்களுக்குப் பிறகு நடந்த ஜாக்ஸனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு கண்ணீர் சிந்தியவர்கள் அதற்குச் சாட்சி.
இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சூரிய கிரகணம் வந்தது இந்த ஆண்டின் ஜுலை மாதத்தில்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியனின் ஒளிக்கதிர்கள் மறைக்கப்படும். இவ்வாறு பூமியின் சில பாகங்களைச் சந்திரன் மறைப்பதால் நிழல் தோன்றும். அதன் காரணமாக பகலிலேயே இருள் ஏற்படும். அதற்குப் பெயர் சூரிய கிரகணம். இந்த ஆண்டின் சூரிய கிரகணம் சுமார் 6 நிமிடங்கள் வரை நீடித்தது.
No comments:
Post a Comment