Thursday, April 15, 2010

பங்கு வாங்கலியோ பங்கு - 2



சென்ற இடுகையில் பங்குச் சந்தை என்றால் என்ன? அது எப்போது தொடங்கப்பட்டது? பங்குச் சந்தைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் யாவை? என்பது பற்றிய அறிமுகத்தைப் பார்த்தோம். சரி. அரசாங்க அமைப்புகள் பங்குப் பரிவர்த்தனையை ஏன் கண்காணிக்க வேண்டும்? அதனால் பொதுமக்களுக்கு என்ன நன்மை? இத்தகைய கேள்விகளுக்கான விடைகளை இப்போது பார்க்கலாம்.

பங்குச் சந்தை - அன்றாடம் மில்லியன் கணக்கில் பணம் புழங்கும் இடம். ஆரம்ப காலத்தில் அங்கு நிறையத் தவறுகள் நடந்தன. அதையடுத்து விழித்துக் கொண்ட உலக நாடுகள் பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளைத் தோற்றுவித்தன. பொதுமக்கள் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்காக முகவர்களின் உதவியை நாடினர். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வர்த்தகம் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டவை தான் இன்று உலகிலுள்ள பங்குச் சந்தைகள்.

சிட்னியில் இருக்கிறது ஆஸ்திரேலியன் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் (Australian Stock Exchange). அவங்க நாமளும் பொதுமக்களிடமே போயிடலாம்னு பங்குகளை விற்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் சிங்கப்பூர். முதல்ல சிங்கப்பூர் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்னு (Singapore Stock Exchange) இருந்துச்சு. இப்ப சிங்கப்பூர் எக்ஸ்சேன்ஜ்னு (Singapore Exchange) பண்ணி அதுவும் இப்ப பொதுமக்களிடம் பங்கு வித்துருக்கிறாங்க. மும்பை ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் (Mumbai Stock Exchange) அவங்களும் வித்துருக்கிறாங்க.

அதாவது “Conflict Of Interest” முரண்பாடுகளில் விளையும் பலன் ஏற்படக் கூடாது. பங்குச் சந்தைகள் முகவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடாது என்பதற்காகத் தான் முக்கியமாக எல்லாப் பங்குச் சந்தைகளும் பொதுமக்களிடம் போயிருக்கிறாங்க. பொதுமக்களிடம் போகும் போது நிறுவனத்தைப் பற்றிய எல்லா விபரங்களும் அவர்களுக்குச் சொல்லியாகணும். அவங்க எப்பவெல்லாம் ஆண்டறிக்கை கேட்கிறாங்களோ அப்பவெல்லாம் கொடுக்கணும் என்பது அவசியமாகியது.

பங்கு வர்த்தகத்தின் செயல்பாடுகளை அரசாங்கம் சார்ந்த அமைப்புகள் கண்காணிக்கும் போது அங்கு தவறுகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்ள முடியும். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிய அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற நடைமுறை இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் வந்த பிறகு தான் செயல்வடிவம் பெற்றது.

ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் அவங்க நிறுவனத்துக்குச் சொல்றது எல்லாம் எக்ஸ்சேன்ஜ்ல இருக்கும். அதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லைன்னா அவங்களோடு இணையப் பக்கத்துக்குப் போனீங்கன்னா அங்க ஆண்டறிக்கையை (Annual Report) அவங்க அதில் போட்டாகணும். அதை நாம இலவசமாகவே எடுத்துப் பார்க்க முடியும். அதனால பொதுமக்கள் கையிலும் ஒரு பிடி இருப்பது போலத் தான். விதிமீறல்கள் எழும் வாய்ப்புக் குறைவு.



பங்கு வர்த்தகம் பற்றிய கண்காணிப்பு அமைப்புகள் தொடங்கப்பட்ட பிறகு அங்கு தவறுகள் நடக்கவே இல்லை என்று சொல்ல முடியாது. அவ்வபோது சிற்சில இடங்களில் நடக்கத்தான் செய்கின்றன. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டனைகளும் கடுமையாக இருக்கின்றன.

பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வழக்கம் நம்மில் இப்போது அதிகரித்து வருகிறது. எனவே, அதற்கு முன் அது பற்றிய சாதக, பாதகங்ளைப் பற்றிப் புரிந்து வைத்திருப்பது நன்மை பயக்கும்.

நாம முதலீடு செய்வதன் அர்த்தமென்ன? நிறைய இருக்கிறது. நாம முதலீடு செய்யுறதுக்கு, ஒண்ணுமே கஷ்டமே இல்லாம இருக்கணும்னா ஒரு நல்ல வங்கியில் பணத்தைப் போட்டால் போதும் நல்ல பாதுகாப்பு. இல்லை வங்கியும் திவாலாகும் அப்படின்னு தோணுச்சுன்னா இருக்கிற பணத்தையெல்லாம் ஒரு குடத்தில் போட்டு எங்காவது புதைச்சு வைச்சுட்டு வேணும்கிற போது எடுத்துக் கொள்ளலாம். மூன்றாம் பேருக்கு விஷயம் தெரியும் வரை அபாயம் இல்லை. அது யாருக்காவது தெரிஞ்சு தூக்கிட்டுப் போனாத் தான் சோதனையும், ரோதனையும். ஆனா இப்ப இருக்கிறதுலயே அதிக அபாயம் நிறைந்தது என்னன்னா இந்தப் பங்கு வாங்குறது தான்.

நாம் வங்கிகளில் முதலீடு செய்யும் பணத்துக்கு ஆண்டு தோறும் குறிப்பிட்ட தொகை வட்டியாக வழங்கப்படும். எனவே, முதலீடு செய்யும் தொகையையும், அதற்கான வட்டியையும் சேர்த்து நம்முடைய லாபம் எவ்வளவு என்பதை முன்கூட்டியே கணித்து விட முடியும். ஆனால், பங்கு வர்த்தகத்தில் எப்போதும் லாபத்தை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. சில வேளைகளில் நஷ்டத்தையும் சந்திக்க நேரலாம்.

ஏன்னா பங்கின் விலை. பங்கு வாங்கும் போது நமக்கு எந்த மாதிரியான பணம் திருப்பிக் கிடைக்கிறது. முதல்ல ஒவ்வொரு வருஷமும் நிறுவனங்கள் (Dividend) “இலாப ஈவுத் தொகை” அதாவது லாபத்தில் பங்கு கொடுப்பாங்க. அதைத் தவிர நாம இப்ப வாங்கிட்டுப் பின்னால விற்கும் போது விலை ஏறி இருந்துச்சுன்னா அந்த விலையேற்றத்தின் பலன் நமக்குக் கிடைக்கும்.

உதாரணமாக இப்ப நாம பத்து டாலருக்கு வாங்குறோம். ஒரு வருஷம் கழிச்சு நாம விக்குறோம். அப்ப 11 டாலர் விலையாக இருந்துச்சுன்னா நமக்கு அங்கே ஒரு டாலர் கிடைக்கிறது. Dividend ன்னு ஒரு வெள்ளிக் கொடுத்தான்னா. நமக்கு ரெண்டு வெள்ளி. நாம பத்து வெள்ளி போட்டு 12 வெள்ளி ஒரு வருஷம் கழிச்சுக் கிடைக்கிறது. அதாவது இருபது விழுக்காடு நமக்கு அதிகமாக கிடைக்கிறது. இது ரொம்ப நல்லது. இந்த Dividend எப்பவும் பாசிடிவ்வாக இருக்கும். அப்படி சில சமயங்களில் லாபம் இல்லைன்னா நிறுவனம் இந்தத் தடவை Dividend இல்லைன்னு சொல்லலாம். ஆனால் முக்காவாசி அது நடக்காது. ஆனால் கவனிக்க வேண்டியது என்னன்னா பங்கு விலை ஏறுமா? இறங்குமா? என்பதைத் தான். அது தான் உண்மையான சோதனை.

ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி மதிப்பைப் பொறுத்தே பங்குகளின் விலை உயர்வதும், வீழ்ச்சியடைவதும் அமையும். எனவே சரியான பங்குகளைக் கவனித்து வாங்குவது முக்கியம். அதுவும் பொருளியல் நெருக்கடி அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் பங்குப் பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் அவசியம்.

பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் போது எல்லாருக்கும் பயம். அய்யோ என்னாகுமோ என்னாகுமோன்னு. சில நிறுவனங்கள் நாங்க நல்லா செய்யப் போறதில்லைன்னு சொல்லிச்சுன்னா அய்யோ இது எல்லாத்தையும் பாதிக்குமன்னு சொல்லி நல்ல நிறுவனத்தோட விலையும் கூட குறையும். இதைத்தான் Market Sentimentனு சொல்வாங்க. அது சில சமயம் நல்லாருக்கும். அப்ப பங்கு விலை கூடிக்கொண்டே போகும். சில சமயம் Market Sentiment குறைவாக இருக்கும். அப்ப பங்கு விலை குறைந்து கொண்டே போகும். பொருளியல் மந்தத்தின் போது உலகத்துல எல்லாப் பங்குச் சந்தைகளும் கிட்டத்தட்ட ஐம்பது, அறுபது விழுக்காடு குறைந்தது. இந்த மாதிரி Market Sentiment மோசமாக இருக்குற சமயத்துல நாம கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன? எப்படிப்பட்ட முதலீடுகள் அதிக இலாபத்தைப் பெற்றுத் தரும்?

(கூறு போடுவோம்)

Wednesday, April 14, 2010

பங்கு வாங்கலியோ பங்கு....1



ஒவ்வொரு நாளும் நம் செவிகளில் விழும் செய்திகள் ஏராளம். அவற்றைப் பற்றி நம் மனத்தில் எழும் சந்தேகங்களும் தாரளம். BSE. NSE, Nikei, Dow Jones இவ்வாறு பல குறியீட்டுச் சொற்களை நாம் செய்திகளில் கேட்டிருக்கலாம். அவை என்ன? எவற்றைக் குறிக்கிறது? என்பன போன்ற வினாக்கள் தொட்டுத் தொடரும் நம் மனத்துள்.

பொருளாதாரம் பற்றிப் பேசப் போனால் பங்கு வர்த்தகம் பற்றிப் பேசாமல் அது முழுமையடையாது. நம்மில் எத்தனை பேர் பங்கு வர்த்தகம் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருக்கிறோம்? எப்படியாவது இந்தப் பங்குகள் பற்றித் தெரிந்து கொகாள்ள வேண்டும் என்ற ஆர்வமும் பலருக்கு உண்டு. ஆனால் எங்கு? எப்படித் தெரிந்து கொள்வது என்பது அடுத்து எழும் வினா. இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் ஓரளவு விடையளிக்கிறது இந்தத் தொடர் கட்டுரை.

பங்கு வர்த்தகம் - ஒரு நாட்டின் பொருளியலுக்கு மிகப் பெரிய உறுதுணையாக இருக்கும் முக்கியக் கருவி. அதன் நுட்பங்களைத் தெரிந்து கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கின்றனர். அது பற்றி முறையாகத் தெரியாமல் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் கடுமையான பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர். அண்மைய காலத்தில் பங்குச் சந்தை பற்றிய ஆர்வம் பலரிடம் எழுந்திருக்கிறது. ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கோ அல்லது அந்த நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கோ அதிக முதலீடு தேவைப்படலாம். அதற்கான நிதியைத் திரட்டட பொதுமக்களுக்குப் பங்குகள் விற்கப்படுகின்றன. நிறுவனம் ஈட்டும் இலாபம் முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்படும். பங்கு வர்த்தகத்தின் இந்த நடைமுறை பரவலான ஈர்ப்பைப் பெற்றிருக்கிறது.


ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அகலக்கால் விரிக்காமல் சிறிதாகத் தான் தொடங்குவோம். நம்முடைய தயாரிப்புகளுக்கு அல்லது பொருட்களுக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு வரும் போது உற்பத்தையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்படும். நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்கு மூலதனம் அவசியம். அதற்காக நாம் முதலில் நாடுவது வங்கிகளை. அவர்கள் நம்முடைய வரவு, செலவுகளைப் பார்த்து ஓரளவு கடன் தருவார்கள். அதைத் தாண்டியும் பணத்தேவை விரியும் போது நண்பர்கள், சுற்று வட்டம் இப்படிக் கடன் வட்டமும் விரியும்.

அப்ப நாம பணத்தை மத்தவங்க கிட்ட இருந்து வாங்கணும். அதைக் கடன்னு கொடுக்க மாட்டாங்க. அதனால நாங்க லாபத்தில் பங்கு கொடுக்கிறோம் என்ற உத்தரவாதம் தர வேண்டிய நிலை வரும். அதுதான் ஷேர் - அதாவது (Sharing In Profit).

நான் லாபத்தில் உங்களுக்குப் பங்கு கொடுக்கிறேன். நீங்களெல்லாம் பங்கு கொடுங்க அப்படின்னு பொதுமக்களிடம் நேராகப் போகிறது. பொது மக்களிடம் இருந்து பணத்தை வாங்கி அந்தப் பணத்தை வைச்சு நிறுவனத்தை அல்லது வர்த்தகத்தை விரிவு பண்ணி மொத்த லாபம் என்ன வருதோ அதை முதலீட்டாளர்களுக்குப் பிரிச்சுக் கொடுக்கிறது தான் பங்கு Share எனப்படும்.



பங்கு வர்த்தகம் மிக நீண்ட நெடிய பாரம்பர்யம் உடையது. அண்மையத் தொழில் நுட்ப வளர்ச்சி பங்கு வர்த்தகத்தை இன்னும் வளப்படுத்தி இருக்கிறது. ஆரம்பத்தில் தனித்தனி நிறுவனங்களால் நடத்தப்பட்ட அந்த வர்த்தகம் தேவையின் பொருட்டு ஒரே இடத்தில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த வகையில் தொடங்கப்பட்டவை தான் பங்குச் சந்தைகள்.

முதன் முதலில் பங்கு கொடுத்தது ஹாலந்துல டச்சு ஈஸ்ட் இன்டியா கம்பெனி (Dutch East India Company). அது நடந்தது 1600 ல். அவங்க தான் முதன் முதலாக பங்கு வர்த்தகத்தை அறிமுகம் செய்தது.

இப்ப பங்கு வந்துடுச்சு. நான் அதைக் கொஞ்சம் வாங்கி வைச்சிருக்கிறேன். கொஞ்ச நாளைக்கு அப்புறம் எனக்குப் பணத் தேவை வருது. அப்ப நான் அதை விற்கணும். அதற்கு ஒரு நிறுவனம் இருக்கணும். இல்லாட்டி விற்பனை செய்வது கஷ்டம். அப்ப என்ன செய்யலாம்னு யோசிச்சாங்க. இந்தப் பங்குப் பரிவர்த்தனை செய்வதற்காகத் தான் பங்குச் சந்தையை ஆரம்பிச்சாங்க. முதல் பங்குச் சந்தை ஆரம்பிச்சதும் ஹாலந்துல தான்.

தொடக்க காலத்தில், ஒரு நிறுவனத்தின் பங்குகளை எங்கே வாங்குவது? எப்படி வாங்குவது? அதற்கென முகவர்கள் இருக்கிறார்களா? தங்கள் முதலீட்டுக்கு என்ன உத்தரவாதம்? இது போன்ற பல்வேறு கேள்விகள் மக்களிடம் எழுந்தன. அதனால் முகவர்களின் தேவை ஏற்பட்டது.

அதாவது வாங்குறவங்களுக்கும், விக்கிறவங்களுக்கும் இடையில் அவங்க தரகு வேலை பண்ணுவாங்க. அப்புறம் எல்லாத் தரகர்களும் சேர்ந்து நாம ஒரே ஒரு இடத்துல வைச்சு செய்வோம் அப்படின்னு ஒரு பொது இடத்துக்கு வந்தாங்க. அது தான் பங்குச் சந்தை. தற்போது உலகம் முழுக்க கிட்டத்தட்ட 70 பங்குச் சந்தைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

முகவர்களாலேயே பங்குச் சந்தை நடத்தப்ட்ட போது அதன் நம்பகத் தன்மை பற்றிய கேள்வி எழுந்தது. தவறுகள் நடப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. அதனடிப்படையில் ஒவ்வொரு நாடும் தனது பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளை உருவாக்கின.

பங்குச் சந்தைகளை எப்படி நடத்தலாம் என்ற விதிமுறைகளை வகுத்தது அரசாங்கம். அதுக்கப்புறம் பங்குச் சந்தைகளைக் கண்காணிப்பதற்காக ஒரு தனி நிறுவனமும் ஆரம்பிச்சாங்க. உதாரணமாக அமெரிக்காவில் (SEC – Securities & Exchange Commission) சிங்கப்பூரில் (Monitory Authority Of Singapore – MAS) இந்தியாவில் SEBI – Security and Exchange Board Of India.இப்படி ஒவ்வொரு நாட்டு அரசாங்கங்களும் தங்கள் வசதிக்கேற்ற அமைப்புகளைத் தோற்றுவித்துக் கொண்டன.

அரசாங்கம் சார்ந்த இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் எப்போது தொடங்கப்பட்டன. அவற்றால் பொதுமக்களுக்கு என்ன பயன்?

(கூறு போடுவோம்)

Monday, April 12, 2010

'கலை' வீடு



வட்டமாய்க் கொஞ்சம்.

சதுரமாய் இன்னுஞ் சில.

நீள் வட்டத்திலும் கூட.

வடிவங்கள் எத்தனையோ
அத்தனையும் உண்டு
அவனிடம்.

விளையாட அழைத்தான்
வேகமாய் வந்து.

கட்டி முடித்தேன்
எனக்கே எனக்கான
வீட்டைப் போலக்
வெகு பிரயத்தனத்துடன்.

சிரித்துக் கொண்டே
எட்டி உதைத்தான்
திரும்பி வந்து பார்த்தவன்.

கட்டிய வீட்டை விட
அழகாய் இருந்தது
அவன்
கலை(ந்)த்த வீடு.

Tuesday, February 23, 2010

ஆ!..தங்கம்? - 3




சிங்கப்பூரில் உள்ள 33 நகைக்கடைகளில் அண்மையில்(ஜனவரி 10) சோதனை நடத்தியது சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம். எதேச்சை முறையில் அந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதாவது சங்க உறுப்பினர்களே வாடிக்கையாளராகப் போய் நகைகளை வாங்கி வந்து ஆய்வுக்கு உட்படுத்தினர். சில கடைகளில் 916 என்று விற்கப்பட்ட நகைகளில் சரியான விகிதத்தில் தங்கம் கலக்கப்படவில்லை என்பது தெளிவாயிற்று. இனி தரம் குறைந்த நகைகளை விற்ற கடைகளை சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் வர்த்தக, தொழில் துறை அமைச்சுக் அடையாளம் காட்டும். முதல் தடவை அந்தத் தவறு நடந்திருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டம் விதிக்கப்படலாம். அதுவே வாடிக்கையாகி இருந்தால் அவர்களுடைய விற்பனை உரிமம் ரத்துச் செய்யப்படலாம்.

பயனீட்டாளர் சங்கத்தின் ஆய்வை சிங்கப்பூர் நகைக்கடைக்காரர்கள் சங்கம் கடுமையாகச் சாடியது. தற்போது விற்பனைக்கு வரும் பெரும்பாலான நகைகள் இயந்திரங்களால் வடிவமைக்கப்படுபவை. அவற்றில் சிற்சில இடங்களில் கூடுதல், குறைவு இருப்பது இயற்கை தான். அதற்காக ஒட்டுமொத்த நகைகளும் கலப்படம் என்று சொல்வது சரியல்ல என்பது அவர்களின் வாதம்.

முழுமையாக இயந்திரங்களால் வடிவமைக்கப்படும் நகைகளில் வள்ளிபுள்ளி மாறாமல் 91.6 தரம் இருக்கும். மற்றபடி ஒவ்வொரு பகுதி பகுதியாக இணைத்துச் செய்ய வேண்டிய நகைகளில் அந்தக் குறிப்பிட்ட பகுதிகளில் சற்று கூடுதல் குறைவு இருக்கலாம். காரணம் அந்த இணைப்புக்காக கேடியம் பயன்படுத்தப்படும். அந்த இடங்களில் 91.6 அப்படின்றது 91.5 இருக்கலாம் அல்லது 91.4 இருக்கலாம். அதே நேரத்துல அடுத்த பகுதியில் 91.8 இருக்கவும் வாய்ப்புண்டு. ஆனாலும் ஒட்டுமொத்த அளவில் அது 91.6 நகையாகவே மதிப்பிடப்படும் என்பது நகைக்கடைக்காரர்கள் சொல்லும் விளக்கம்.

சிங்கப்பூரில் விற்கப்படும் நகைகளுக்குத் தரக்கட்டுப்பாடு முக்கியம். சில கடைக்காரர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. எனவே தான் இது போன்ற சோதனைகளில் அவர்களுக்கு வேதனை வருகிறது. முறையான தரக்கட்டுப்பாடு இருந்தால் தேவையற்ற மன சஞ்சலங்களைக் குறைக்கலாம்.

ஒரு கடை நடத்தும் போது யாரிடம் வேண்டுமானாலும் தங்கத்தைக் கொள்முதல் செய்யலாம். ஆனால் அவற்றை முறையாகச் சிங்கப்பூர் தரக்கட்டுப்பாடு வாரியத்துக்கு அனுப்பி சோதனையிட்டால் அவர்கள் ஒரு முத்திரையிட்டு அனுப்புவார்கள். அதை நிறைய நகைக்கடைக்காரர்கள் செய்யத் தவறுகின்றனர் என்பது வேதனைக்குரிய உண்மை.

சாமானிய மக்கள் கூட இன்று தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களில் அதிகமானோர் ஆபரணத் தங்கத்தையே பெரிய முதலீடாகக் கருதுகின்றனர். அவர்களின் அந்த அணுகுமுறை சரியா?

தங்க பார்களாக வாங்கினால் அது புத்திசாலித்தனமான நடவடிக்கை என்று சொல்ல முடியும். ஆபரண நகையாக வாங்கி வைத்துக் கொண்டு மீண்டும் விற்கும் போது பல விதமான கழிவுகள் இருக்கு. ஒரு வங்கியில் கணக்கைத் தொடங்கித் தங்க பார்களாகக் கொள்முதல் செய்வதில் அதிக இலாபத்தை எதிர்பார்க்கலாம் என்பது விபரம் அறிந்தவர்கள் சொல்லும் ஆலோசனை.



ஒரு வங்கிக்குச் சென்று நகை வாங்கி, விற்பது எல்லோருக்கும் எளிதான காரியமல்ல. எனவே ஆபரணத் தங்கத்திலேயே முதலீடு செய்வது நம்மில் பலருக்கும் வசதி. இருப்பினும் நகைகளை வாங்குவதற்கு முன் கூடுதல் கவனம் அவசியம்.

ஒரு கடைக்குச் சென்று நகைகளைப் பார்த்து அவை நமக்குப் பிடித்த பிறகு எடை போட வேண்டும். அப்போது அந்த நகையில் இருக்கும் எடை அட்டையை நீக்கி விட்டுத் தான் அந்த எடை போடப்பட வேண்டும். அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள எடையும், நிறுவையில் இருப்பதும் சரியான அளவுடையவையா? என்பதைச் சோதித்துக் கொள்ள வேண்டும். அடுத்து, ஒரு நகையைத் திருப்பிப் பார்த்தால் அந்தக் கொக்கி அல்லது மோதிரத்துக்குப் பின்னேயோ பார்த்தீங்கன்னா ஒரு முத்திரை இருக்கும். அந்த முத்திரை தான் சிங்கப்பூர் தரக்கட்டுப்பாடு வாரியத்தின் (எஸ்ஸே) முத்திரை. அது இருந்தால் நீங்கள் தாராளமாக வாங்கலாம். எந்தப் பிரச்சினையும் கிடையாது. அதாவது நிச்சயமாக என்ன சொல்றாங்களோ அந்த மதிப்பு மாறாமல் அப்படியே இருக்கும்.

தங்க நகை வாங்கிய பிறகு கொடுக்கப்படும் விலைப்பட்டியலில் முறையான தகவல்கள் இருக்கின்றனவா என்பதையும் சோதித்துக் கொள்ள வேண்டும். கணிணி மயமாக்கப்படாத சில கடைகளின் விலைப்பட்டியலில் போதுமான விளக்கங்கள் இருக்காது. எனவே கவனமாக நடந்து கொண்டால் முதலுக்கு மோசமில்லை.

இப்படிப் பார்த்துப் பார்த்து வாங்கிய நகைகளில் கூட சில நேரங்களில் குறை வர வாய்ப்புண்டு. அது போன்ற தருணங்களில் நம் சந்தேகத்தைப் போக்கிக் கொள்வதற்காகச் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தையும் நாடலாம். www.case.org.sg என்ற இணையப் பக்கத்தில் அது பற்றிய தகவல்களைக் காணலாம்.

சிங்கப்பூரில் விற்கப்படும் நகைகளுக்குச் சந்தையில் நல்ல மதிப்பு உண்டு. அதைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு வர்த்தகர்களுக்கு இருக்கிறது. அதை அவர்கள் புரிந்து கொண்டால் வாடிக்கையாளர்களுக்கும் தரமான நகைகள் கிடைக்கும். வர்த்தகர்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும்.

தங்க நகைகளில் கலப்படம் என்பதை வாடிக்கையாளர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களின் நம்பிக்கை தான் வர்த்தகத்துக்கு ஆதாரம். அதற்கு எந்தச் சேதாரமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது வர்த்தகர்களின் கடமை. அதைப் புரிந்து கொள்ளும் போது வாங்கும் நகைகளில் கூடுதல் பொலிவு இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

(நிறைவு)

ஆ!..தங்கம்? - 2



ஆபரணங்களின் அழகு பெண்கள் அவற்றை அணிவதில் தான். ஆண்கள் அவர்களோடு எதிலும் போட்டி போடலாம். ஆனால் நகை அணிவதில் பெண்களுக்குத் தான் முதலிடம். ஆங்காங்கே சில ஆண்கள் நகைகள் அணிந்து கொள்ள ஆசைப்படலாம். சிங்கப்பூர் மாதிரியான வாழ்க்கைச் சூழலில் பெரும்பாலான ஆண்கள் தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை வெளிக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை என்பது தான் உண்மை. இருப்பினும் சிலரின் பார்வை பிளாட்டினத்தின் பக்கம் திரும்பி இருக்கிறது.

தங்க நகை வாங்கினால் பயன்படுத்தலாம். அவசரம் வந்தால் விற்றுக் காசாக்கலாம். தங்கம் இருக்கும் வரை கையிருப்புக்குக் காவலுண்டு என்பது மூத்த தலைமுறையின் மனக் கணக்கு. ஆனால் இளைய தலைமுறையினர் தங்கம் வாங்குவதிலும், அணிவதிலும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்பது மூத்த தலைமுறையின் அங்கலாய்ப்பு.

எளிமையான வடிவங்கள், அணியும் உடைகளுக்கேற்ற வண்ணங்கள், குறைந்த செலவில் பளிச்சென்று அடையாளம் காட்டும் தன்மை. தங்கம் விற்கும் விலையில் மாற்று ஆபரங்ணகளைத் தேடியாக வேண்டிய கட்டாயம். இப்படிப் பல காரணங்களால் இளம் பெண்களை ஈர்த்திருக்கின்றன கவரிங் நகைகள். அது மட்டுமல்ல குறைந்த விலை. மின்னும் தன்மை மங்கும் பட்சத்தில் மீண்டும் முலாம் பூசும் வசதி. இரவு, பகல் எங்கு சென்றாலும் கழுத்தில் கிடப்பதைப் பற்றிக் கவலையில்லை. வழியில் யாரும் மிரட்டினால் கூடக் கழட்டிக் கையில் கொடுத்து விடலாம் என்பது இளையர்கள் சொல்லும் சங்கதி.



தங்க நகைகளில் பல வகையுண்டு. 18,21,22 மற்றும் 24 கேரட் என்று பல அளவுகளில் தங்கம் கிடைக்கிறது. அவற்றுக்கேற்றவாறு விலையிலும் வித்தியாசம் உண்டு. ஆனால் இந்தியச் சமூகம் பெரும்பாலும் விரும்புவது 22 கேரட். அண்மைய காலங்களில் 916 தங்கத்துக்குக் கூடுதல் வரவேற்பு.

சொக்கத் தங்கம் என்பது 24 கேரட். அதில் எந்தக் கலப்படமும் இருக்காது. 916 என்பது 91.6 விழுக்காடு தங்கம். 8.4 விழுக்காடு மற்ற உலோகங்கள். உதாரணமாக செம்பு, வெள்ளி ஆகியன கலக்கப்பட்டிருக்கலாம். 21, 18 கேரட் இப்படின்னு குறையக் குறைய அந்த தங்க நகையோட மதிப்புக் குறையுது மற்ற உலோகங்கள் கூடுது.

பத்தர்களிடம் சென்று பிடித்தமான வடிவமைப்பைச் செய்து வாங்கியது ஒரு காலம். இன்று இயந்திரங்களில் வார்க்கப்பட்ட நகைகள் சந்தையில் கிடைக்கின்றன. குறிப்பிட்ட நேரத்துக்குள் பார்க்க வேண்டியதைப் பார்த்துச் சலித்து, எடுக்க வேண்டியதை எடுத்துக் கட்டிக் கொண்டு வருமளவுக்குத் தொழில் நுட்பம் வளர்ந்து விட்டது. இருப்பினும் கைவேலைப்பாட்டின் அருமை தெரிந்தவர்கள் இன்னும் பத்தர்களை மறக்கவில்லை.



ஒரு சிற்பி சிலையை வடித்தெடுப்பது போல பத்தர்கள் நகைகளை வடிவமைத்துக் கொடுப்பர். அதன் மகிமையை உணர்ந்தவர்கள் கைவேலைப்பாடுள்ள நகைகளை விட்டுத் தூரப் போவதில்லை. செய்கூலி அதிகம் கொடுத்தாலும் அவர்கள் என்றென்றும் விரும்புவது கைவேலைப்பாடுள்ள நகைகளைத் தான்.

பொதுமக்கள் தங்கம் வாங்குவது ஒரு புறமிருக்க மிகப் பெரிய நாடுகளும் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. இதுவரை இல்லாத வகையில் புதிதாகப் பல நாடுகளிலும் தங்கம் மின்னத் தொடங்கியுள்ளது. அமெரிக்கப் பொருளியலில் ஏற்பட்ட ஆட்டம் அதற்கு முக்கியக் காரணம். பல நாடுகள் - குறிப்பாக சீனா, ஜப்பான் போன்றவை இன்னும் எத்தனை நாளைக்கு அமெரிக்காவை நம்ப முடியும் என்று யோசிக்கத் தொடங்கிவிட்டன.
பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைச் சீனா ஊக்குவித்து வருகிறது. அங்குள்ள மக்கள் கடந்த ஆண்டில் மட்டும் 70 டன்னுக்கும் அதிகமாகத் தங்க நகை அணியத் தொடங்கி இருப்பதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு. அனைத்துலக பண நிதியம் தன்னிடமுள்ள 400 டன் தங்கத்தை விற்கப் போவதாக சென்ற ஆண்டு இறுதியில் அறிவித்தது. உடனே அதில் 200 டன் தங்கத்தை வாங்கிக் கொண்டது இந்தியா.

இந்தியா தன் வசமுள்ள தங்கத்தை ஏலத்தில் விற்ற காலம் ஒன்று இருந்தது. இப்போது அதன் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. எனவே தங்கத்தைக் கொள்முதல் செயவதில் இந்தியா ஆர்வம் காட்டுகிறது. அப்படி இந்தியா வாங்கும் தங்கத்தைப் பின்னாளில் வேறெங்கோ சென்று விற்க வேண்டிய அவசியமில்லை. அங்கிருக்கும் மக்களிடம் விற்றாலே கணிசமான இலாபத்தைச் சம்பாதிக்க முடியும் என்பது இந்திய அரசுக்குத் தெரிந்த சூட்சுமம். எனவே இனியும் தங்கம் விற்பனைக்கு வந்தாலும் அதை வாங்கிக் கொள்ள இந்தியா தயக்கம் காட்டாது.

ரஷ்யாவும் தனது அணுகுமுறையை மாற்றி கொண்டு வருகிறது. தன் கையிருப்புச் சொத்துகளில் 2 சதவீதத்தை மட்டுமே தங்கத்தில் முதலீடு செய்திருந்த ரஷ்யா அதை 10 சதவீதமாக மாற்றும் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. 55 விழுக்காட்டுச் சொத்துக்களை ஏற்கெனவே தங்கமாக மாற்றிக் கொண்டுள்ள ஐரோப்பிய வங்கிகளும் இன்றைய தங்கச் சந்தையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். எனவே தங்கத்தின் விலை இன்னும் அதிகமாகலாம் என்பது இப்போதைய கணிப்பு. இதற்கெதிரான கருத்துச் சொல்பவர்களும் உண்டு.

1980களில் அனைத்துலகச் சந்தையில் ஓர் அவுன்ஸ் தங்கம் 800 டாலர் வரை விற்கப்பட்டது. அப்போது சந்தையில் மற்ற பொருட்கள் விற்ற விலை போல இன்று 3 மடங்கு விற்கிறது. ஆனால் தங்கத்தின் விலை 25 முதல் 30 விழுக்காடு வரையே உயர்ந்திருக்கிறது. எனவே விரைவில் தங்கத்தின் விலை குறையும் என்று நம்பிக்கையூட்டுபவர்களும் உண்டு.
ஓர் அவுன்ஸ் தங்கம் 500 டாலர் முதல் 600 இருந்த காலகட்டத்தில் நிறையப் பேர் அதை வாங்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்து தங்களிடமுள்ள தங்கத்தை விற்க ஆரம்பித்தால் 40 முதல் 50 விழுக்காடு வரை விலை குறையும் வாய்ப்பு உண்டு என்று சிலர் கணக்குப் போடுகின்றனர். வேறு பல முதலீடுகளில் பெரிய மாற்றம் வந்து தங்கத்தை விற்று அவற்றில் முதலீடு செய்தால் அதிக இலாபம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் தோன்றாத வரை தங்கத்தின் விலை இப்படியே தான் தொடரும்.

(இன்னும் மின்னும்)

ஆ!..தங்கம்? - 1



தங்கம் என்ற சொல்லைக் கேட்டாலே தலை கிறுகிறுக்கிறது சில பேருக்கு. காரணம் - அதன் விலையேற்றம். சென்ற இருபத்தைந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது தங்கத்தின் விலை மளமளவென்று ஏறி விட்டது. ஒரு கிராம் தங்கம் முதல் நாள் ஒரு வெள்ளி குறையும். அதுவே மறுநாள் இரண்டு அல்லது மூன்று வெள்ளி கூடும். இப்படி நிலையில்லாத விலை ஏற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

முன்பு, இரான் - இராக் இடையே நடந்த போர் காரணமாக தங்கம் விலை வேகமாக உயர்ந்தது. பின்னர் அது ஓரளவு இறங்கியது. ஆனால் இப்போதுள்ள சூழலில் சொத்துச் சந்தை, பங்குச் சந்தை போன்ற வர்த்தகங்களில் நல்ல முன்னேற்றம். இதனால் தங்கம் விலை கூடிக்கொண்டே போகிறது. நான்காண்டுகளுக்கு முன்பு ஓர் அவுன்ஸ் தங்கம் 250 முதல் 300 அமெரிக்க டாலர் வரை விற்கப்பட்டது. அதுவே இன்றைக்கு சுமார் மூன்று மடங்கு உயர்ந்து 1100 முதல் 1150 அமெரிக்க டாலர் வரை ஏறியிருக்கிறது. அதனால் யாராலும் எந்த விதத்திலும் முன்னுரைப்புச் செய்ய முடியவில்லை.

இருப்பினும் மக்களிடம் தங்கம் வாங்க வேண்டும் என்ற ஆர்வத்துக்குக் குறைவில்லை. அன்றாட அலுவலுக்கு மத்தியில் தங்கத்தின் விலையையும் கொஞ்சம் உற்றுக் கவனிக்கிறார்கள். தருணம் வாய்க்கும் போது தவறாமல் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். காரணம் தங்கத்தில் போடும் பணம் எப்போதும் வீண் போகாது என்ற நம்பிக்கை. எப்படியும் அது ஒரு சேமிப்பு. கையில் இருந்தால் காசு செலவாகி விடும் எனவே தங்கத்தில் முதலீடு செய்து கொள்வோம் என்பது அவர்களின் கணிப்பு. எல்லாவற்றையும் தாண்டி நம் இந்தியக் கலாசாரத்தோடு இசைந்து வரும் ஆபரணம். அதை அணிந்து கொள்வதன் மூலம் ஒருவரின் கௌரவமும், அந்ததும் மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்ற தணியாத வேட்கை தொடர்கிறது.

மக்களிடம் தங்கத்துக்கான தேவை அதிகரித்து வரும் அதே வேளை அதன் உற்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா என உலகம் முழுக்கச் சுமார் 25 தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றன. கடந்த காலங்களில் அவற்றில் இருந்து பெருமளவு தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு விட்டது. எனவே அவற்றில் இருப்பும் குறைந்து கொண்டே வருகிறது. இப்போதுள்ள நிலையில் சுமார் 15 சுரங்கங்களில் இருந்து ஆண்டொன்றுக்கு 2500 டன் தங்கம் கிடைக்கிறது. ஆனால் தேவையின் மதிப்பு ஆண்டொன்றுக்கு 2800 டன்.

அமெரிக்காவுக்கும் தங்க விலைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகச் சிலர் கருதுகின்றனர். அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளியல் சுனாமி அந்நாட்டுப் பணத்தின் மீதான நம்பிக்கைக்கு பெரும் வேட்டு வைத்தது. அமெரிக்க டாலரின் மதிப்புப் படிப்படியாகக் குறைந்தது. எனவே உலக மக்கள் அந்தப் பணத்தைக் கையில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. தங்களிடம் உள்ள டாலைரை விற்று விட்டு அவற்றைத் தங்கமாக உருமாற்றத் தொடங்கினர். ஆனால், அமெரிக்க டாலருக்கும் தங்கத்தின் விலையேற்றத்துக்கும் ஒரு காலத்தில் தொடர்பு இருந்தது. அந்த நிலை இன்று மாறிவிட்டது. வளரும் நாடுகளின் பொருளியலை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலும் சந்தையின் போக்கு அமைகிறது என்று கூறுவோரும் உண்டு.

ஒரு காலத்தில் அமெரிக்க டாலருடன் பின்னிப் பிணைந்திருந்த தங்கம் இப்போது தனித்துப் போய் விட்டது. அது எந்த நாட்டின் நாணயத்தோடும் இணைந்து செல்லும் சூழல் இப்போதைய சந்தையில் இல்லை. தங்கத்தை அதிகம் கொள்முதல் செய்யும் நாடு இந்தியா. காரணம் அங்குள்ள மக்கள் தொகை. அப்படியானால் இந்திய ரூபாய்க்கு எதிராகத் தான் தங்கத்தை மதிப்பிட வேண்டும் என்பது அவர்களின் வாதம்.

(இன்னும் மின்னும்)

Monday, December 28, 2009

உலகம் 2009 - பகுதி 3

இந்த ஆண்டு ஜப்பானில் ஒரு வரலாற்றுத் திருப்பம். அது நடந்தது ஆகஸ்ட் மாதம். அப்போது அங்கு நாடாளுமன்றத் தேர்தல். சுமார் ஐம்பது ஆண்டு காலச் சரித்திரம் அந்தத் தேர்தலில் மாற்றம் கண்டது. இதுநாள் வரை எதிர்த் தரப்பாக இருந்த ஜனநாயகக் கட்சிக்கு மகத்தான வெற்றி.

ஜப்பான் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 480. ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது 308 இடங்கள். அக்கட்சியின் வரலாற்றில் இது ஒரு மாபெரும் திருப்பு முனை. ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஜனநாயகக் கட்சி.

முன்னைய பிரதமர் தாரோ அஸோவின் மிதவாத ஜனநாயகக் கட்சிக்கு இம்முறை பேரிழப்பு. இந்த ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி 119 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. சென்ற தேர்தலில் அக்கட்சி 300 க்கும் அதிகமான இடங்களை வெற்றி கொண்டது.



மிதவாத ஜனநாயகக் கட்சியின் வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத பேரிடி. தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று முன்னையப் பிரதமர் தாரோ அஸோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஜப்பானின் புதிய பிரதமராக யூகியோ ஹட்டோயாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 327 உறுப்பினர்கள் ஹட்டோயாமாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பிலிப்பீன்சில் இந்த ஆண்டு கடுமையான சோதனை. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீசியது "கெட்சானா" சூறாவளி. விளைவு. கடுமையான மழை. அதைத் தொடர்ந்து வெள்ளம்.

தலைநகர் மணிலாவின் எண்பது விழுக்காட்டு இடங்களில் வெள்ளக்காடு. ஒரு மாத காலத்தில் பெய்ய வேண்டிய மழை, ஆறே மணி நேரத்தில் பெய்து கெடுத்தது.

பிலிப்பீன்ஸ் தண்ணீரில் மிதந்தது. அங்குள்ள மக்கள் கண்ணீரில் மிதந்தனர்.



முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். கால் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். தலைநகர் மணிலா உள்ளிட்ட 24 மாநிலங்களில் பேரிடர் நிலையை அறிவித்தது பிலிப்பீன்ஸ் அரசாங்கம்.

பிலிப்பீன்சைத் தொடர்ந்து இந்தோனேசியாவிலும் இந்த ஆண்டு சோதனைக் காலம். அவ்வப்போது அதிர்ந்தது பூமி. ரிக்டர் அளவில் 5 புள்ளிகளைத் தாண்டின அதிர்வுகள். சிலமுறை சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. பின்னர் பேரழிவு எதுவும் இல்லாமல் அது மீட்டுக் கொள்ளப்பட்டது.




அவ்வப்போது ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். இந்தோனேசிய நில நடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூரிலும் உணரப்பட்டது.

2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை எங்கே நடத்த வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில்.

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தச் சாதகமான அம்சங்கள் கொண்ட நகரங்களாக அமெரிக்காவின் சிக்காக்கோ, ஸ்பெயினின் மாட்ரிட், ஜப்பானின் டோக்கியோ, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ஆகிய நான்கு நகரங்கள் பட்டியலில் முன் நின்றன. ஆனால், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவுக்குக் கிடைத்தது அந்த அரிய வாய்ப்பு.



தென்அமெரிக்க நாடு ஒன்றில் ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பது இதுவே முதல் முறை. ஒலிம்பிக் வாய்ப்பு பெற்றதையடுத்து பிரேசில் முழுவதும் ரசிகர்கள் ஆடிப்பாடி உற்சாகமாகக் கொண்டாடினர்.

2007 ஆம் ஆண்டின் இறுதியில் உலகப் பொருளியலை ஆட்டங்காணச் செய்தது நிதிச் சுனாமி. அதுபோன்ற ஒரு நிகழ்வு இந்த ஆண்டு நவம்பரில். ஆனால் இம்முறை பாதிப்பட்டது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் ஒன்றான துபை.



நவம்பர் இறுதி வாரத்தில் Dubai World நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அது உலகச் சந்தைகளை ஆட்டங்காண வைத்தது. Dubai World முதலீட்டு நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட 60 பில்லியன் டாலர் கடன் உள்ளது. அதனைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத கால அவகாசம் கேட்டது. அதன் எதிராலியாக உலகப் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்.

சில நாட்களுக்குப் பிறகு 26 பில்லியன் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டங்களை அறிவித்தது Dubai World. அதைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் ஒரு மீட்சி.

Dubai World ன் கடனுக்குத் தான் பொறுப்பேற்க முடியாது என்று அறிவித்தது துபை அரசாங்கம். அதைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் மீண்டும் ஒரு சறுக்கல். இறுதியில் அருகிலுள்ள அபூதாபி கைகொடுத்தது. துபை வேர்ல்டின் கடனைத் திருப்பிச் செலுத்த பத்து பில்லியன் டாலர் தருவதாக அறிவித்தது அபூதாபி.

இந்த ஆண்டின் அமைதிக்கான நொபேல் பரிசைப் பெற்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதும் பல்வேறு விமர்சனங்கள்.
ஒபாமா உலக மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்த முயன்று வருகிறார். அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க பாடுபடுகிறார். எனவே, அவருக்கு நொபேல் பரிசு என்று அறிவித்தது விருதுக் குழு.


இந்தப் பரிசைப் பெறத் தன்னை விட அதிகம் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று ஒபாமா குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தான், ஈராக் போர் பற்றியும் அவர் பேசினார். ஆயுத மோதல்களுக்கு எப்படிப்பட்ட விலை கொடுக்க வேண்டி வரும் என்பதை தாம் அதிகம் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் போருக்குக் கூடுதலாக முப்பதாயிரம் அமெரிக்கப் படையினரை அனுப்பப் போவதாக ஒபாமா அறிவித்தார். அமைதிக்கான நொபேல் விருது பெற்றவர் ஏன் போரை ஆதரிக்கிறார் என்ற கேள்வியை எழுப்பியது விமர்சன வட்டாரம்.

அதற்கு விருது மேடையிலேயே பதிலளித்தார் ஒபாமா. பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றச் சில நேரங்களில் போரிட வேண்டியது அவசியம் என்றார் அவர். அணு ஆயுதங்களை ஒழிப்பதிலும், பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்துக்களிலும் தமது லட்சியங்கள் நிறைவேறும்போது, இந்த விமர்சனம் முற்றிலுமாக மறைந்து விடும்' என்றார் ஒபாமா.



வேதியலுக்கான நொபேல் பரிசைப் பெற்றவர் விஞ்ஞானி வெங்கட் ராமகிருஷ்ணன். அவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர். அமெரிக்காவின் தாமஸ் ஸ்டீட்ஸ், இஸ்ரேலின் யெடா யோனத் ஆகியோரும் ராமகிருஷ்ணனோடு அந்த விருதைப் பகிர்ந்து கொண்டனர். புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்குவதில் அவர்களுடைய ஆய்வு முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த ஆண்டின் இறுதியில் உலகின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தது பருவநிலை மாநாடு. டென்மார்க்கின் கோபன் ஹேகன் நகரில் அது நடந்தது. உலக நிறுவனத்தில் அங்கம் பற்றுள்ள அத்தனை நாடுகளும் அந்த மாநாட்டில் சங்கமம். உயர்ந்து வரும் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்துவது, காற்றுத் தூய்மையைக் குறைப்பது, இயற்கையைக் காப்பாற்றத் திட்டங்கள் வகுப்பது ஆகியன மாநாட்டின் முக்கிய நோக்கம். ஆனால் அது நிறைவேறியதா?

கேள்விக்குறி தான்.



வளர்ச்சியடைந்த நாடுகள் தாங்கள் வெளியேற்றும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்துவது குறித்து சட்டப்படி எந்த முடிவும் தீர்மானத்தில் இல்லை என்று குற்றம் சாட்டின வளரும் நாடுகள்.

கரியமில வாயு வெளியேற்றத்தை சட்ட ரீதியாக கட்டுப்படுத்த வேண்டும் என்கிறது 1997-ம் ஆண்டின் "கியோட்டோ" ஒப்பந்தம். அது 2012-ம் ஆண்டு நிறைவடைகிறது. ஆனால் அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து எந்தப் பதிலும் புதிய தீர்மானத்தில் இல்லை என்பது ஏழை நாடுகளின் குமுறல்.

பருவ நிலை மாநாட்டின் இறுதி அறிக்கை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தைக் கட்டுப்படுத்த அனைத்துலக, தேசிய அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கியது. அத்துடன் வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும் அதை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தது.

இருப்பினும் மாநாட்டில் சட்ட ரீதியில் அனைத்து நாடுகளையும் ஒப்புக் கொள்ள வைக்கும் தீர்மானம் எட்டப்படவில்லை. அதற்கு மாறாக சட்ட நிர்பந்தம் இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு ஏழை நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால் கோபன்ஹேகன் மாநாட்டின் மூலம் எந்த முழுமையான செய்தியும் உலகுக்குக் கிடைக்கவில்லை.

அதிர்ச்சி! ஆனந்தம்! ஏக்கம்! ஏமாற்றம்! இப்படிக் கலவையான உணர்வுகளைத் தந்து விட்டு விடைபெறுகிறது 2009. பிறக்கவிருக்கும் புத்தாயிரத்தின் பத்தாவது ஆண்டு மகிழ்ச்சியை நிறைவாகக் கொண்டு வந்து சேர்க்கும் என்பது நம்பிக்கை. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.