Thursday, April 15, 2010
பங்கு வாங்கலியோ பங்கு - 2
சென்ற இடுகையில் பங்குச் சந்தை என்றால் என்ன? அது எப்போது தொடங்கப்பட்டது? பங்குச் சந்தைகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் யாவை? என்பது பற்றிய அறிமுகத்தைப் பார்த்தோம். சரி. அரசாங்க அமைப்புகள் பங்குப் பரிவர்த்தனையை ஏன் கண்காணிக்க வேண்டும்? அதனால் பொதுமக்களுக்கு என்ன நன்மை? இத்தகைய கேள்விகளுக்கான விடைகளை இப்போது பார்க்கலாம்.
பங்குச் சந்தை - அன்றாடம் மில்லியன் கணக்கில் பணம் புழங்கும் இடம். ஆரம்ப காலத்தில் அங்கு நிறையத் தவறுகள் நடந்தன. அதையடுத்து விழித்துக் கொண்ட உலக நாடுகள் பங்குச் சந்தைகளைக் கண்காணிக்கும் அமைப்புகளைத் தோற்றுவித்தன. பொதுமக்கள் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்காக முகவர்களின் உதவியை நாடினர். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் வர்த்தகம் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டவை தான் இன்று உலகிலுள்ள பங்குச் சந்தைகள்.
சிட்னியில் இருக்கிறது ஆஸ்திரேலியன் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் (Australian Stock Exchange). அவங்க நாமளும் பொதுமக்களிடமே போயிடலாம்னு பங்குகளை விற்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் சிங்கப்பூர். முதல்ல சிங்கப்பூர் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்னு (Singapore Stock Exchange) இருந்துச்சு. இப்ப சிங்கப்பூர் எக்ஸ்சேன்ஜ்னு (Singapore Exchange) பண்ணி அதுவும் இப்ப பொதுமக்களிடம் பங்கு வித்துருக்கிறாங்க. மும்பை ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் (Mumbai Stock Exchange) அவங்களும் வித்துருக்கிறாங்க.
அதாவது “Conflict Of Interest” முரண்பாடுகளில் விளையும் பலன் ஏற்படக் கூடாது. பங்குச் சந்தைகள் முகவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடாது என்பதற்காகத் தான் முக்கியமாக எல்லாப் பங்குச் சந்தைகளும் பொதுமக்களிடம் போயிருக்கிறாங்க. பொதுமக்களிடம் போகும் போது நிறுவனத்தைப் பற்றிய எல்லா விபரங்களும் அவர்களுக்குச் சொல்லியாகணும். அவங்க எப்பவெல்லாம் ஆண்டறிக்கை கேட்கிறாங்களோ அப்பவெல்லாம் கொடுக்கணும் என்பது அவசியமாகியது.
பங்கு வர்த்தகத்தின் செயல்பாடுகளை அரசாங்கம் சார்ந்த அமைப்புகள் கண்காணிக்கும் போது அங்கு தவறுகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்ள முடியும். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிய அறிக்கையை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற நடைமுறை இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் வந்த பிறகு தான் செயல்வடிவம் பெற்றது.
ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு ஆண்டும் அவங்க நிறுவனத்துக்குச் சொல்றது எல்லாம் எக்ஸ்சேன்ஜ்ல இருக்கும். அதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இல்லைன்னா அவங்களோடு இணையப் பக்கத்துக்குப் போனீங்கன்னா அங்க ஆண்டறிக்கையை (Annual Report) அவங்க அதில் போட்டாகணும். அதை நாம இலவசமாகவே எடுத்துப் பார்க்க முடியும். அதனால பொதுமக்கள் கையிலும் ஒரு பிடி இருப்பது போலத் தான். விதிமீறல்கள் எழும் வாய்ப்புக் குறைவு.
பங்கு வர்த்தகம் பற்றிய கண்காணிப்பு அமைப்புகள் தொடங்கப்பட்ட பிறகு அங்கு தவறுகள் நடக்கவே இல்லை என்று சொல்ல முடியாது. அவ்வபோது சிற்சில இடங்களில் நடக்கத்தான் செய்கின்றன. விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டனைகளும் கடுமையாக இருக்கின்றன.
பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வழக்கம் நம்மில் இப்போது அதிகரித்து வருகிறது. எனவே, அதற்கு முன் அது பற்றிய சாதக, பாதகங்ளைப் பற்றிப் புரிந்து வைத்திருப்பது நன்மை பயக்கும்.
நாம முதலீடு செய்வதன் அர்த்தமென்ன? நிறைய இருக்கிறது. நாம முதலீடு செய்யுறதுக்கு, ஒண்ணுமே கஷ்டமே இல்லாம இருக்கணும்னா ஒரு நல்ல வங்கியில் பணத்தைப் போட்டால் போதும் நல்ல பாதுகாப்பு. இல்லை வங்கியும் திவாலாகும் அப்படின்னு தோணுச்சுன்னா இருக்கிற பணத்தையெல்லாம் ஒரு குடத்தில் போட்டு எங்காவது புதைச்சு வைச்சுட்டு வேணும்கிற போது எடுத்துக் கொள்ளலாம். மூன்றாம் பேருக்கு விஷயம் தெரியும் வரை அபாயம் இல்லை. அது யாருக்காவது தெரிஞ்சு தூக்கிட்டுப் போனாத் தான் சோதனையும், ரோதனையும். ஆனா இப்ப இருக்கிறதுலயே அதிக அபாயம் நிறைந்தது என்னன்னா இந்தப் பங்கு வாங்குறது தான்.
நாம் வங்கிகளில் முதலீடு செய்யும் பணத்துக்கு ஆண்டு தோறும் குறிப்பிட்ட தொகை வட்டியாக வழங்கப்படும். எனவே, முதலீடு செய்யும் தொகையையும், அதற்கான வட்டியையும் சேர்த்து நம்முடைய லாபம் எவ்வளவு என்பதை முன்கூட்டியே கணித்து விட முடியும். ஆனால், பங்கு வர்த்தகத்தில் எப்போதும் லாபத்தை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. சில வேளைகளில் நஷ்டத்தையும் சந்திக்க நேரலாம்.
ஏன்னா பங்கின் விலை. பங்கு வாங்கும் போது நமக்கு எந்த மாதிரியான பணம் திருப்பிக் கிடைக்கிறது. முதல்ல ஒவ்வொரு வருஷமும் நிறுவனங்கள் (Dividend) “இலாப ஈவுத் தொகை” அதாவது லாபத்தில் பங்கு கொடுப்பாங்க. அதைத் தவிர நாம இப்ப வாங்கிட்டுப் பின்னால விற்கும் போது விலை ஏறி இருந்துச்சுன்னா அந்த விலையேற்றத்தின் பலன் நமக்குக் கிடைக்கும்.
உதாரணமாக இப்ப நாம பத்து டாலருக்கு வாங்குறோம். ஒரு வருஷம் கழிச்சு நாம விக்குறோம். அப்ப 11 டாலர் விலையாக இருந்துச்சுன்னா நமக்கு அங்கே ஒரு டாலர் கிடைக்கிறது. Dividend ன்னு ஒரு வெள்ளிக் கொடுத்தான்னா. நமக்கு ரெண்டு வெள்ளி. நாம பத்து வெள்ளி போட்டு 12 வெள்ளி ஒரு வருஷம் கழிச்சுக் கிடைக்கிறது. அதாவது இருபது விழுக்காடு நமக்கு அதிகமாக கிடைக்கிறது. இது ரொம்ப நல்லது. இந்த Dividend எப்பவும் பாசிடிவ்வாக இருக்கும். அப்படி சில சமயங்களில் லாபம் இல்லைன்னா நிறுவனம் இந்தத் தடவை Dividend இல்லைன்னு சொல்லலாம். ஆனால் முக்காவாசி அது நடக்காது. ஆனால் கவனிக்க வேண்டியது என்னன்னா பங்கு விலை ஏறுமா? இறங்குமா? என்பதைத் தான். அது தான் உண்மையான சோதனை.
ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி மதிப்பைப் பொறுத்தே பங்குகளின் விலை உயர்வதும், வீழ்ச்சியடைவதும் அமையும். எனவே சரியான பங்குகளைக் கவனித்து வாங்குவது முக்கியம். அதுவும் பொருளியல் நெருக்கடி அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் பங்குப் பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் அவசியம்.
பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் போது எல்லாருக்கும் பயம். அய்யோ என்னாகுமோ என்னாகுமோன்னு. சில நிறுவனங்கள் நாங்க நல்லா செய்யப் போறதில்லைன்னு சொல்லிச்சுன்னா அய்யோ இது எல்லாத்தையும் பாதிக்குமன்னு சொல்லி நல்ல நிறுவனத்தோட விலையும் கூட குறையும். இதைத்தான் Market Sentimentனு சொல்வாங்க. அது சில சமயம் நல்லாருக்கும். அப்ப பங்கு விலை கூடிக்கொண்டே போகும். சில சமயம் Market Sentiment குறைவாக இருக்கும். அப்ப பங்கு விலை குறைந்து கொண்டே போகும். பொருளியல் மந்தத்தின் போது உலகத்துல எல்லாப் பங்குச் சந்தைகளும் கிட்டத்தட்ட ஐம்பது, அறுபது விழுக்காடு குறைந்தது. இந்த மாதிரி Market Sentiment மோசமாக இருக்குற சமயத்துல நாம கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன? எப்படிப்பட்ட முதலீடுகள் அதிக இலாபத்தைப் பெற்றுத் தரும்?
(கூறு போடுவோம்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment