Saturday, March 3, 2007

நட்புக்காலம் 2

7) போகிற இடத்தில்
என்னை விட
அழகாய் அறிவாய்
ஒருவன்
இருந்து விடுவானோ
என்கிற பயம்
நல்ல வேளை
நட்பிற்கு இல்லை.

8) உனது அந்தரங்கத்தின்
அனுமதியற்ற எல்லையை
ஒரு நாள் தற்செயலாய்
நான் மீறிவிட்ட கோபத்தில்
ஏறக்குறைய நாற்பது நாட்கள்
என்னோடு நீ
பேசாமல் இருந்தாய்.

ஓர் அதிகாலையில்
முதலாவதாக எழுப்பி
எனக்கு நீ
பிறந்தநாள் வாழ்த்துச்
சொல்லிய போதுதான்
பிறந்தேன்
மறுபடியும் புதிதாய் நான்.

9) கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக்கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும்
பாக்கியம்
எத்தனை கண்களுக்கு
வாய்த்திருக்கும்.

10) தாய்ப்பாலுக்கான
விதை
காதலில் இருக்கிறது.

தாய்மைக்கான
விதை
நட்பில் இருக்கிறது.

11) என் துணைவியும்
உன் துணைவனும்
கேட்கும்படி
நம் பழைய
மடல்களையெல்லாம்
படித்துப் பார்க்க
ஒரு மழை தொடங்கும்
நாள் வேண்டும்.

12) அந்த விளையாட்டுப்
போட்டியைப் பார்க்க
நாம்ஒன்றாகச் சென்றோம்.

இரசிக்கையில்
இரண்டானோம்.

திரும்பினோம்
மறுபடியும்
ஒன்றாகவே.

No comments:

Post a Comment