Saturday, March 3, 2007

நட்புக்காலம் - முத்தாய்ப்பு



அணுகுண்டுக்கும்
புத்தகத்துக்கும்
வேறுபாடு ஒன்று தான்.

முன்னது ஒருமுறை தான்
வெடிக்கும்.
புத்தகம்
திறக்கும் போதெல்லாம்
வெடிக்கும்.

எப்போதே படித்த இந்த வரிகளின்
ஜீவிதம் இன்றும் தொடருகிறது.
இனியும் தொடரும்.....

இலட்சியக்கவி அறிவுமதியின்
நட்புக்காலம் படித்த போது
அதை முழுமையாக
உணர முடிந்தது.

பொதுவாகப் புத்தகங்களில்
சில பித்தம் கொள்ள வைக்கும்.
இன்னும் சில பித்தம் தெளிய வைக்கும்.
நட்புக்காலம் அதில் இரண்டாம் வகை.

நகரமயமாதல் சூழலில்
எங்கு நகர்ந்தாலும்
நசுங்கிப் போவோம்
என்ற நிலையில்
என் விழிகளில் பட்ட
அந்த நட்புக்காலம்
படிக்கப் படிக்கப்
புதிய பாதையைக் காட்டியது.

அது போக்குவரத்து
நெரிசலற்ற அழகான பாதை.

ஒரு படைப்பாளி தான் எண்ணியதை
வார்த்தைகளில் கொண்டு வருகிறான்.

அதைப் படிப்பவன் அது பற்றி
ஆயிரம் காரணங்களைக்
கற்பித்துக் கொள்கிறான்.

அவற்றுள் சில ஆரோக்கியமானவை.
இன்னும் பல வெறும் கற்பிதங்கள் மட்டும் தான்.

நட்புக்காலத்தின்
ஒவ்வொரு கவிதையையும்
உளப்பூர்வமாய் உணர்ந்தேன்.

அன்னை எங்களுக்கு வகிடெடுத்து விடும் வரை
அண்டை வீட்டு
அகிலா,ஆயிஷா,ஏஞ்சல்
யாவரும் என்
தோழிகளாய்த் தான் இருந்தார்கள்.

அப்போதெல்லாம்
அம்மா, அப்பா விளையாட்டு,
கள்ளன், போலீஸ், கண்ணாமூச்சி,
பாண்டியாட்டம்,சொட்டாய்ங்கல்,
ஐஸ்குச்சி, பல்லாங்குழி
என்று சகல விளையாட்டுக்களிலும்
எங்களின் இணைகள் அவர்கள் தான்.

எப்போது எங்கள் உதட்டுக்கு மேலே
கொஞ்சம் அரும்பத் தொடங்குகிறதோ,
அப்போது தான் எங்களுக்குள்
கொஞ்சம் பிரித்துணரும் தன்மையும்
எட்டிப் பார்க்கிறது.

பெண்களில்(ள்) தாவணியும் போது
அந்தத் தன்மை வலுப்பெறுகிறது.

இன்றும் என் பள்ளித் தோழியரைப் பார்க்கும் போது
மீண்டும் அந்தப் பழைய காலத்துக்குச்
செல்லும் இயந்திரம் ஒன்று கிட்டாதா?
என்ற ஏக்கம் வரும்.

நட்புக்காலத்தில்
அனைத்துக் கவிதைகளையும்
நான் வாசித்தேன்,
யோசித்தேன்,
நேசித்தேன்.

அதிலும் குறிப்பாக,
சில கவிதைகள்
என் தலையில் குட்டின.

இன்னுஞ்சில
என் கேசம் வருடின.

இன்னுஞ்சில
தூக்கம் கெடுத்தன.

மேலும் சில
தூக்கம் கொடுத்தன.

வேறுசில துக்கம் / ஏக்கம் தந்தன.

அறுசுவை அல்ல.
அதற்கு மேலும் ஒரு சுவையை
அவை எனக்குத் தந்தன.

நான் வியந்து
ரசித்த கவிதைகளாக
இவற்றைச் சொல்வேன்.....

* கனவில் கூட
என்னைக்
கிள்ளிப் பார்க்கும்
இந்தச் சுரப்பிகள்
உன்னைக் கண்டதும்
எப்படி
இவ்வளவு இயல்பாய்
தூங்கிவிடுகின்றன.

* பள்ளி மைதானம்
காலை வணக்கம்
காற்று கலைத்ததைக்
கண்களால்
மூடினேன்.

இது முடியக் கூடிய பட்டியல் அல்ல.
என்றும் தொடரக் கூடிய பட்டியல்....

அறிவுமதியின் நட்புக்காலத்தைப்
பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த
அத்தனை தோழமைக்கும்
இதயப் பூர்வமான நன்றி.

மீண்டும் சந்திப்போம்.
அதுவரை
கொஞ்சம் சிந்திப்போம்.....

No comments:

Post a Comment