Sunday, November 14, 2010

நாணயப் போர்....



உலகப் பொருளியல் சந்தையில் கடும் பரபரப்பு. காரணம் - Currency War என்னும் "நாணயப் போர்". உலகின் அனைத்து நாடுகளும் தங்களுக்கென தனி நாணயத்தை நிர்ணயித்துள்ளன. ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் போது அந்தந்த நாடுகளின் அல்லது பொதுவான ஒரு நாணயத்தில் அந்தப் பரிவர்த்தனை அமையும்.

கடந்த பத்தாண்டுகளில் உலக நாடுகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றன. ஏற்றுமதி, இறக்குமதியின் அடிப்படையில் வரும் இலாபத்தைக் கொண்டு அந்தப் பிரிவு அமைந்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் ஆகியன உலகின் மற்ற நாடுகளிடமிருந்து அதிகமான பொருட்களை தருவிக்கின்றன. அது அவர்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவை விட அதிகம். எனவே அவை வர்த்தகப் பற்றாக்குறையுடைய நாடுகள் (Deficit Countries) என்றழைக்கப்படுகின்றன.

மறுமுனையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றன. ஆனால், பிற நாடுகளிடமிருந்து குறைந்த அளவிலேயே பொருட்களைத் தருவிக்கின்றன. எனவே அவற்றை வர்த்தக உபரியுடைய நாடுகள் (Surplus Countries) என்று சொல்லலாம்.



உதாரணமாகச் சீனா, வெளிநாட்டில் இருந்து நிறையப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்கிறது. அதன் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதியை விட அதிகமாக இருந்ததென்றால் அது வர்த்தக உபரி. அதாவது வெளியிலிருந்து அதிகப் பணம் நாட்டுக்குள் வருகிறது. அதே சமயம், ஒரு நாடு, வெளிநாட்டில் இருந்து நிறையப் பொருட்களை வாங்குகிறது. ஆனால் அதன் சொந்தப் பொருட்கள் அதிகமாக ஏற்றுமதியாகவில்லை என்றால் அது வர்த்தகப் பற்றாக்குறை.



அண்மையில், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகத்தில் சிறு தேக்கம். சீனா தனது நாணய மதிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது தான் பிரச்சினைக்குக் காரணம் என்று சீறுகிறது அமெரிக்கா. சீனாவின் இந்தப் போக்குக்கு ஈடுகொடுக்க முடியாமல் அமெரிக்க நிறுவனங்கள் திண்டாடுகின்றன. அதனால் பொருளாதாரத்துக்கும் பேரிழப்பு என்று புலம்புகிறது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ள மறுக்கிறது சீனா. தன் நாணயத்தின் மதிப்பை ஏற்றினால் உள்நாட்டில் வேலையின்மை பெருகும். மக்களின் வாழ்க்கைத் தரம் வாட்டம் காணும். அதனால் நாணய மதிப்பை உயர்த்தும் போக்கை வேகமாகச் செய்ய மாட்டோம் என்று உடும்புப் பிடியாகச் சொல்கிறது சீனா.

உலகின் மற்ற பல நாடுகளின் நாணயத்துக்கும், சீன நாணயத்துக்கும் இடையே ஒரு வேறுபாடு உண்டு. சீன நாணயத்தின் மதிப்பை நிர்ணயிப்பது அந்நாட்டின் அரசாங்கம். பெரும்பாலான மற்ற நாடுகளில் அப்படியல்ல.

உதாரணமாக, அமெரிக்கன் டாலர், யூரோ, ஜாப்பனீஸ் யென் இவற்றை அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட விழுக்காடு தொகை கொண்டு சிங்கப்பூர் டாலருக்கான மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் சீன நாணயத்துக்கான மதிப்பை அங்குள்ள அரசாங்கம் தான் நிர்ணயம் செய்கிறது. மாறாக, சந்தையின் போக்கு அதை நிர்ணயிப்பதில்லை.

வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு நாணய மதிப்பைக் குறைப்பது அல்லது போட்டி போட்டுக் கொண்டு நாணயத்தின் மதிப்பைக் கூட்டாமல் இருப்பது நாணயப் போர் (Currency War) என்று சொல்லப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு பொருளியல் மந்தநிலையில் அதிகம் அடிவாங்கியது அமெரிக்கா. அந்தச் சரிவிலிருந்து அது இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் அமெரிக்க டாலரின் மதிப்புத் தொடர்ந்து குறைந்து கொண்டே போவது அந்நாட்டைக் கடுமையான கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

நாணயப் போரால் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் சில நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டன. நாட்டின் ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படக்கூடாது. வேலை வாய்ப்புகள் குறைந்து விடக்கூடாது என்ற அச்சம் அதற்குக் காரணம்.

தாய்லந்து, பிரேசில் ஆகிய நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பு வடாமல் இருப்பதற்காகச் சில நடவடிக்கைகளை மேற்கொண்டன. வர்த்தகத்தில் என்ன லாபம் வந்தாலும் அதில் 2 விழுக்காடு வரி கட்ட வேண்டும் என்ற விதியைக் கொண்டு வந்தது பிரேசில். 15 பெர்சன்ட் வித் ஹோல்டிங் அறிமுகம் செய்தது தாய்லந்து. அதாவது அங்கே முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்கும் போது அதில் 15 விழுக்காட்டைத் தாய்லந்து அரசாங்கம் எடுத்து வைத்துக் கொள்ளும்.

உலகின் பெரும்பாலான நாடுகளின் வர்த்தகப் பரிவர்த்தனை அமெரிக்க டாலரின் அடிப்படையிலேயே நடக்கிறது. அதன் மதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் நிதிச் சந்தையில் மிகப் பெரும் சந்தேகச் சுழல். தொடர்ந்து அமெரிக்க நாணயத்தைக் கையிருப்பாக (Reserve Currency) வைத்துக் கொள்ளலாமா? அல்லது வேறு வகையில் முதலீடு செய்யலாமா? என்ற யோசனையில் இருக்கிறார்கள் சில முதலீட்டாளார்கள். தனிநபர்கள் மட்டுமல்ல, சில நாடுகளுக்கும் அமெரிக்க டாலர் மீது இருந்த நம்பிக்கை சரியத் தொடங்கியிருக்கிறது. உலக அளவில் பெருமளவு வர்த்தகப் பரிவர்த்தனை அமெரிக்க டாலரின் அடிப்படையில் நடந்தாலும் ஒரு நம்பிக்கையின்மை தொக்கி நிற்கிறது.

எப்போதும் அமெரிக்கா டாலரிலேயே முதலீடு செய்யும் இந்தியா, ஈராண்டுகளுக்கு முன்பு தடாலடியாக ஈரோவில் முதலீடு செய்யத் தொடங்கியது. காரணம் அமெரிக்க டாலரின் தொடர்ச்சியான வீழ்ச்சி. யூரோ அமெரிக்க டாலரை வீழ்த்தி விட்டு மேலே வந்து விடும் என்ற நம்பிக்கையும் அதற்குக் காரணம். ஆனால் இவ்வாண்டுத் தொடக்கத்தில் கீரிஸில் தகராறு வந்த போது யூரோவின் மீதான நம்பிக்கையும் பொய்த்துப் போயிற்று.

உலக நாடுகள் அமெரிக்க டாலரைத் தங்கள் நம்பிக்கைக்குரிய நாணயமாக (Reserve Currency) வைத்துள்ளன. கணிசமான அமெரிக்க டாலரைச் சீனாவும் தன் நம்பிக்கைக்குரிய நாணயமாக வைத்திருக்கிறது. எனவே நாணயப் போர் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவை அச்சுறுத்திச் சாதிக்க முடியாது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அமெரிக்க டாலருக்கு எதிராக சைனீஸ் யுவான் 21 விழுக்காடு மேலே போயிருக்கிறது. அதே நேரம், அமெரிக்காவுடைய வர்த்தகப் பற்றாக்குறை இன்னும் அதிகமாகிப் போனதே தவிர குறையவில்லை. இன்னொன்று, அமெரிக்கா 90 நாடுகளுடன் வர்த்தகப் பற்றாக்குறையில் தத்தளிக்கிறது. அதனால் சீனாவைக் குற்றம் சொல்லிச் சாதிக்க முடியாது. அமெரிக்காவில் நடந்த அண்மையத் தேர்தலின் போது மக்களிடம் குறை சொல்ல ஓர் ஆள் தேவை. அதற்குச் சீனாவைப் பலியாடாக்கி விட்டது.

ஆசிய வட்டாரத்தில் வேகமான பொருளியல் வளர்ச்சியைக் கொண்டுள்ள நாடு சீனா. அதன் நாணயமான யுவானை உலக நாடுகள் (Reserve Currency) நம்பிக்கைக்குரிய நாணயமாக்கும் காலம் கனியுமா?

சீன நாணய மதிப்பு அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படாமல், சந்தை சக்திகளால் தீர்மானிக்கும் ஒரு நிலை வந்தால் அது சாத்தியமாகலாம். அமெரிக்கன் டாலர், யூரோ, யுவான் ஆகியன Reserve Currency ஆகலாம். காரணம் சீனாவில் பண வீக்கம் அதிகமானால் அதை அவர்களால் தாங்க முடியாது. அதனால் இன்னும் இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குள் சீன யுவான் Reserve Currency ஆகலாம் என்பது பொருளியல் நிபுணர்களின் முன்னுரைப்பு.

உலக நாடுகள் நாணயப் போர் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் G - 20 நாடுகளின் அமைச்சர் நிலைக் கூட்டம் அண்மையில் நடந்தது. நாணயப் போர் பற்றிய கிலியைப் போக்க சில முடிவுகள் அங்கே முன்மொழியப்பட்டன. நாணயத்தின் மதிப்பை நாங்களாகக் குறைக்க மாட்டோம். அதைச் சந்தைச் சக்திகளே தீர்மானிக்கலாம். நடப்பு வர்த்தகக் கணக்குப் பற்றாக்குறையை தேசிய உற்பத்தியுடைய பங்காக வைத்துக் கொள்வோம் என்பன அந்த மாற்றங்கள். ஆனால் இவை நடைமுறைக்கு வர இன்னும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தேவை.

உலக நாடுகள் தங்கள் நாணய மதிப்பின் பரிவர்த்தனை விகிதத்தைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அனைத்துலகப் பண நிதியம் (IMF) 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாணய மாற்று மதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது அதன் முக்கியக் குறிக்கோள். ஆனால் இப்போதுள்ள சூழலில் அனைத்துலகப் பண நிதியம் மட்டும் தனித்து எதையும் செய்து விட முடியாது. ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பு மிக முக்கியம்.

அனைத்துலகப் பண நிதியத்தைப் பொறுத்தவரையில் வளரும் நாடுகளுக்கு தற்போது பெரிய முக்கியத்துவம் இல்லை. அது பெரிய முட்டுக்கட்டை. அண்மையில் நடந்த G 20 மாநாட்டில் கூட இது பற்றி விவாதிக்கப்பட்டது. ஆசிய நாடுகளுக்குக் கூடுலாக ஆறு விழுக்காடு ஓட்டிங் பவர் கொடுக்கிறதுக்காக முடிவெடுத்திருக்கிறார்கள். அப்படியொரு சூழல் வந்தால் நல்ல முன்னேற்றம் வர வாய்ப்புண்டு.

ஜி 20 அமைச்சர் நிலைக் கூட்டத்துக்குப் பிறகு நாணயப் போர் பற்றிய பதற்றம் ஓரளவு தணிந்து வருகிறது. ஆனால் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அனைத்துலகப் பண நிதியம், உலக வங்கி ஆகியன இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கு மேலும் வலுச் சேர்க்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment