இந்தோனேசியாவுக்கு இது சோதனைக் காலம். ஆழிப் பேரலையின் ஊழித் தாண்டவம் ஒருபுறம். மெராப்பி எரிமலையின் நெருப்புச் சீற்றம் மறுபுறம். பூமி எப்போது அதிரும்? எரிமலை எப்போது வெடிக்கும்? கணித்துச் சொல்ல முடியாதவாறு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது காலம். மின்னல் தாக்கிய இடத்தில் இடி வீழ்ந்ததைப் போல் திணறி நிற்கின்றனர் மக்கள்.
சிங்கப்பூரைச் சுற்றியுள்ள நாடுகளில் மிகப் பெரியது இந்தோனேசியா. சுமார் 15,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டது அந்நாடு. எரிமலைகளுக்கும் அங்கே பஞ்சமில்லை. அதனால் அங்கே இயற்கைப் பேரிடர்கள் அவ்வப்போது வந்து போகும். பூமி அதிரலாம். அல்லது எரிமலை வெடிக்கலாம். அல்லது இரண்டும் சேர்ந்தே வரலாம். அந்த நாட்டு மக்களின் உயிரை உலுக்கும் கவலை இது தான்.
அக்டோபர்’ 10 இறுதியில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவை நில நடுக்கம் புரட்டிப் போட்டது. ரிக்டர் அளவுகோலில் ஏழு புள்ளி ஏழு என்று பதிவாகி இருந்தது அந்த அதிர்வு. அதைத் தொடர்ந்து எழுந்தது ஆழிப் பேரலை. அது சுருட்டிக் கொண்டு போன உயிர்களின் எண்ணிக்கை 600 க்கும் அதிகம். கடலுக்கருகே இருந்த பத்துக் கிராமங்கள் காணாமல் போயின. அலையின் ஆதிக்கம் தணிந்த பிறகு சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
பூகோள ரீதியில் இந்தோனேசியா ஆபத்தான வளைவில் அமைந்திருக்கிறது. எனவே அழையா விருந்தினர் போல அவ்வப்போது அங்கே இயற்கை பேரிடர் வருவது வாடிக்கையாயிற்று. இதற்கு என்ன காரணம்?
புவி அமைப்பியல் படி இந்தோனேசியா அமைந்திருக்கும் பூமியின் பரப்பில் அதிகமான தட்டுக்கள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று உராய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஐரோப்பா ஆசியாக் கண்டத்தின் தெற்குப் பகுதியின் விளிம்பில் அமைந்திருக்கிறது இந்தோனேசியா. தெற்குப் பகுதியில் உள்ள ஆசியக் கண்டத்தின் தகடும், மேற்குப் பக்கத்தில் இந்தியக் கண்டத்தின் தகடும் மோதுகின்றன. அதனால் விளிம்பில் இருக்கும் இந்தோனேசியாத் தீவுகள் அதிர்வுக்குள்ளாகின்றன என்கிறார் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பயன்பெறும் புவி அமைப்பியல் துறையின் பேராசிரியர் Dr.R.R. கிருஷ்ணமூர்த்தி.
Arc Of Fire என்று சொல்லப்படும் “நெருப்பு வளைய”ப் பகுதியில் இந்தோனேசியா அமைந்திருப்பதால் இயற்கைப் பேரிடர்கள் (பூகம்பம் அல்லது எரிமலை வெடிப்பு) அடிக்கடி ஏற்படுகின்றன என்கிறார் தஞ்சாவூர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகக் கட்டவியல் துறைத் தலைவர் பேராசிரியர் Dr. செந்தமிழ்க்குமார்.
2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலைக்குப் பிறகு சில முன்னெச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், அக்டோபர்’10 - ல் ஆழிப் பேரலை வந்த போது அந்த முன்னெச்சரிக்கைக் கருவிகளால் எந்தப் பயனும் இல்லை.
ஆழிப் பேரலை முன்னெச்சரிக்கைக் கருவியின் அமைப்பு சூட்சுமம் நிறைந்தது. கடல் நீர் மட்டத்தின் மேலுள்ள கருவி, கடலுக்கடியில் புவியின் மேலுள்ள கருவியோடு தொடர்பு கொள்ளுமாறு அமைக்கப்பட்டிருக்கும். கடலின் தரைமட்டத்தில் எந்த அதிர்வு வந்தாலும் அது உடனே மிதவைக் கருவிக்குச் சமிக்ஞையை அனுப்பும். பிறகு, அங்கிருந்து அதிர்வின் நிலை செயற்கைக் கோளுக்கு அனுப்பப்படும். பின்னர் அது கண்காணிப்பு மையத்துக்கு வந்து சேரும்.
கடலின் மேற்பரப்பில் உள்ள மிதவைக் கருவிகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்றாலும், மக்களுடைய கவனக்குறைவான செயல்களால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அந்நிலையில அந்தக் கருவிகள் செயலிழந்து போகும். எனவே, முன்னெச்சரிக்கைச் சமிக்ஞை வந்து சேருவதில் தடை ஏற்படலாம் என்கிறார் முனைவர்.R.R. கிருஷ்ணமூர்த்தி.
ஆசிய வட்டாரத்தின் பிற நாடுகளைப் போலல்லாமல் இந்தேனேசியா கடலுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எனவே, முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் வந்து சேருவதற்குரிய கால அவகாசம் அங்கே குறைவு.
பூகம்பத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை முன் பூகம்பம், முதன்மைப் பூகம்பம், பின் பூகம்பம் எனப்படும். முன் பூகம்பத்தை உணரும் போது தான் கடலுக்கடியில் உள்ள கருவி செயல்படத் தொடங்கும். சீஸ்மீக்ராப் எனப்படும் பூகம்பத்தை அளக்கும் கருவியாக இருந்தாலும், ஆழிப் பேரலை முன்னெச்சரிக்கைக் கருவியாக இருந்தாலும் இதுவே நடைமுறை. சில தருணங்களில் முன் பூகம்பம் முன்னெச்சரிக்கையைத் தாமதமாகத் தான் வந்தடையும். அதற்குள், முதன்மைப் பூகம்பம் வந்து விடும். நில அதிர்வின் வேகம் அதிகமாக இருப்பதால் முதன்மைப் பூகம்பம் சீக்கிரமாக வந்து விடும். அதை முன்னெச்சரிக்கைக் கருவிகள் உணரும் முன்னரே ஆழிப் பேரலைகள் கரையைக் கடந்து விடும் என்கிறார் பேராசிரியர். Dr. செந்தமிழ்க்குமார்.
அக்டோபர்’10 இரண்டாம் வாரத்தில் வந்த ஆழிப் பேரலையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியது இந்தோனேசிய அரசாங்கம். வெந்த புண்ணில் வெடியை வைத்தது போல வந்தது இன்னொரு சோதனை.
சென்ற மாத இறுதியில் ஜோக் ஜாக்கர்தாவின் மெராப்பி எரிமலை தீக் கங்குகளைக் கக்கத் தொடங்கியது. அதன் தாக்கத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 70,000 க்கும் அதிகமான மக்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பூமித்தட்டுடைய நகர்வை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்றையொன்று அழுத்தும் விதமான நகர்வு(Convergence). இன்னொன்று ஒன்றையொன்றை விட்டுப் பிரியும் நகர்வு (Divergence). இவற்றுள் கன்வெர்ஜன் என்பது ஒன்றையொன்று அழுத்தும் போது அதிக அழுத்தம் ஏற்படும். அப்போது பூமி தன்னைத் தானே சரி செய்து கொள்ளும். அந்நிகழ்வு பூகம்பமாகவோ அல்லது எரிமலையாகவோ வெளியே வரும்
டைவர்ஜன் - ஒன்றை ஒன்றை விட்டு விலகுவது எப்போதாவது நடக்கும். அதன் விளைவாகப் பெரிய பெரிய பள்ளத்தாக்குகள் எல்லாம் உருவாகும்.
நவம்பர்’10 5 ஆம் தேதி மீண்டும் சீற்றத்துடன் வெடித்தது மெராப்பி. அதிலிருந்து கிளம்பிய வெப்பப் புகை, சாம்பல், தீக்கனல் ஆகியன சுற்று வட்டாரத்தில் பெரும் சேதத்தை உண்டாக்கின. இன்னும் கூட புகைந்து கொண்டே இருக்கிறது மெராப்பி. நூற்றுக்கு மேற்பட்ட எரிமலைகளின் எச்சரிக்கை நிலையைக் கண்காணிப்பு அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர்.
எரிமலையின் சீற்றம் உச்சமடைந்த வேளையில் இந்தோனேசியாவுக்கான விமானப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. ஜக்கர்தா, ஜோக் ஜக்கர்தா விமான நிலையச் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. எரிமலையின் சீற்றம் தணிந்த பிறகு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
எரிமலை சீற்றத்துடன் இருக்கும் போது சல்பர் பார்டிகிள்ஸ் எனப்படும் கந்தகத் துகள்கள் வெளியாகும். அவை காற்றில் பரவி விமானத்தின் இயந்திரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். சில வேளைகளில் வானில் விமானத்தின் ஓடுபாதையைத் தாண்டியும் புகை மண்டலம் ஆக்கிரமிக்கும் போது பேரிழப்புகள் ஏற்படலாம்.
வானில் ஒன்பதிலிருந்து பத்து கிலோ மீட்டர் உயரத்தில் தான் விமானத்தின் ஓடுபாதை அமைந்திருக்கிறது. ஆனால் எரிமலையால் உண்டாகும் புகை மண்டலம் 20, 30 கிலோ மீட்டர் உயரம் வரை பரவக்கூடும். அதனால் வெப்ப மாற்றம் ஏற்படும் சாத்தியமும் உண்டு.
புவி அமைப்பியல் படி எந்நேரமும் இயற்கைப் பேரிடரைச் சந்திக்கும் நாடாக இருக்கிறது இந்தோனேசியா. அதை உணர்ந்துள்ள அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்து வருகிறது. எனினும் இயற்கைப் பேரிடர்கள் எப்போதும் சொல்லி விட்டு வருவதில்லை என்பது தான் மிகப் பெரிய சோகம்.
என்னதான் அறிவியல் வளர்ச்சியடைந்தாலும் இயற்கைதான் ஜெயிக்கிறது.
ReplyDeleteஏகப்பட்ட எரிமலைகளோடு வசிக்கும் இந்தோனேஷிய மக்களை, இறைவன்தான் காப்பாற்றவேண்டும்.
இந்தோனேசியாவைப் பற்றிய இக்கட்டுரைக்கு நன்றி. ஆனாலும் இந்தியப் பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சிகளும் பெரிதுபடுத்திப் பேசுவதைப் போல நிலைமை ஒன்றும் அபாயகரமானதாக இல்லை.
ReplyDeleteஇடர்களுடன் வாழத்தயாராகிவிட்ட பிறகு , அதுவும் வாழ்க்கையின் ஒரு அங்கமாகி விடுகிறது.
நன்றி.
வருகைக்கும் பின்"னூட்டத்துக்கும்" நன்றி சுந்தரா & மதிபாலா
ReplyDelete