Saturday, April 17, 2010

பங்கு வாங்கலியோ பங்கு - 4

சென்ற மூன்று இடுகைகளில் பங்குச் சந்தையின் நடைமுறைகள் பற்றிப் பார்த்தோம். அந்த வரிசையில், Stock Option அதாவது குறிப்பிட்ட விலையில் வாங்கி, விற்கும் உரிமையுள்ள பங்குகள் பற்றிய சில தகவல்களை இப்போது பார்க்கலாம்.




நல்ல நிலையில் நிர்வகிக்கப்படும் பல நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கே பங்குகளைக் கொடுக்கும் திட்டங்களை அறிமுகம் செய்திருக்கின்றன. அந்த நடைமுறைக்கு Stock Option என்று பெயர். அதாவது ஒரு நபரைப் பணிக்கு அமர்த்தும் போது சம்பளத்துடன், நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளும் அவருக்குக் கிடைக்குமாறு ஒப்பந்தங்கள் வரையப்படும்.

இப்ப தொழிலாளர்களை உற்சாகமூட்ட, அவங்க நல்லாச் செஞ்சாங்கன்னா லாபம் அதிகம் வந்துச்சுன்னா பங்குச் சந்தையில் விலையும் கூடும். அதனால அவங்களை ஊக்குவிக்க என்ன பண்ணுவாங்கன்னா இப்ப விலை பத்து டாலராக இருக்குது பங்குச் சந்தையில். அவங்களுக்கு நான் கொடுக்கிறேன். அடுத்த ஆறு மாதத்துக்குள்ள, இல்லை அடுத்த ரெண்டு வருஷத்துக்குள்ள இந்த “Option” ஐ வைச்சுக்கிட்டு எங்க பங்கை வாங்கலாம். பன்னிரண்டு டாலர் கொடுத்தாப் போதும். என்ன விலை மார்க்கெட்ல இருந்தாலும். இப்ப பத்து டாலருக்கு விற்பனையாகுது, அது பன்னிரண்டு டாலருக்கு மேலே போனால் தான் அந்த “Option”க்குக் கொஞ்சம் மதிப்பு இருக்கு. அப்ப தொழிலாளர்கள் என்ன பண்ணுவாங்க? நாம லாபத்தை ஜாஸ்தி பண்ணணும். அப்ப தான் விலை மேலே போகும். அப்படின்னுட்டு அவங்க இன்னும் நல்லா வேலை செய்து லாபத்தை அதிகமாக்குவாங்க. விலை பதினைந்து டாலராக இருக்கும் போது அவங்க பன்னிரண்டு டாலருக்கு வாங்கி உடனே வித்தாங்கன்னா அவங்களுக்கு மூணு டாலர் கைக்கு வந்துடும்.

2000 ன் தொடக்கத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கோலோச்சிக் கொண்டிருந்தன. அப்போது, அந்நிறுவனங்களின் பங்குகளின் விலை உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. ஆகவே, நிறைய ஊழியர்கள் இந்த Stock Option வரப்பிரசாதமாகப் பார்த்தார்கள். நாள் செல்லச் செல்ல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தேக்கம் ஏற்பட்ட போது ஊழியர்களிடம் அந்த நடைமுறைக்கு அதிக வரவேற்பு இல்லை. இது தவிரப் பங்குச் சந்தையிலும் Stock Option நடைமுறை உண்டு.

இப்ப நாம பங்குச் சந்தையில் போய் வாங்கணும்னா இன்னைக்கு என்ன விலை இருக்கிறதோ அதைக் கொடுத்து வாங்குறோம். இப்ப பத்து டாலர்னு வைச்சுக்குங்க. நாம பத்து டாலர் கொடுத்துத் தான் வாங்கலாம். இப்ப Stock Option என்னன்னா அடுத்த 3 மாசத்துக்குள்ள நீங்க பத்து டாலருக்கு வாங்கலாம் முன்னுரிமை எடுத்துக்கலாம். சந்தையில் என்ன விலை இருந்தாலும் நீங்க கொடுக்க வேண்டியது பத்து டாலர் மட்டும் தான். அதாவது உங்களுக்கு Option கொடுத்திருக்கிறாங்க. உங்களுக்கு வேணும்னா நீங்க பத்து டாலர் கொடுத்து வாங்கலாம். இல்லாட்டி வேண்டாம். இப்பப் பங்குச் சந்தையில் பன்னிரண்டு டாலர்னு இருக்குது. நாம கிட்ட Option இருக்கு. அப்ப என்ன பண்ணுவோம். போய் வாங்குவோம். ஏன்னா நமக்கு பத்து டாலர் தான். நாம பத்து டாலர் கொடுத்து வாங்கிட்டு உடனே வித்தாலும் நமக்கு ரெண்டு டாலர் இலாபம் இருக்கும். அது தான் Stock Optionகிறது.

சந்தையில் இரண்டு விதமான பங்குகள் விற்கப்படுகின்றன. அவை பொதுப்பங்குகள், முன்னுரிமைப் பங்குகள். பொதுப்பங்குளை வாங்கும் போது நாமும் அந்த நிறுவனத்தின் பங்குதாரரைப் போல் ஆகி விடுகிறோம். அதாவது சந்தையில் பங்குகளின் விலை உயரும் போது அந்த லாபமும், மொத்த வருவாயின் லாப ஈவுத் தொகையும் கிடைக்கும். ஆனால், Preferential Shares எனும் முன்னுரிமைப் பங்குகள் அவற்றிலிருந்து சற்று மாறுபட்டவை.

Preferential Shares எப்படின்னா அவங்க சொல்லும் போதே 8 விழுக்காடு Preferential Shares அப்படிம்பாங்க. அதாவது Preferential Shares கொடுக்கும் போது என்ன மதிப்போ அதுல எட்டு விழுக்காடு வருஷா வருஷம் உங்களுக்கு Dividend கொடுப்பாங்க. அதுக்கு மேலே கொடுக்க மாட்டாங்க. நிறுவனம் நல்லா செஞ்சாலும் அதுக்கு மேலே கொடுக்க மாட்டாங்க.



ஒருவருக்குப் பங்குகளை வாங்கி விற்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அவர், முகவர்களின் துணையோடு பங்குகளை வாங்கி விற்பது விவேகமான முடிவாக இருக்கும். ஆனால், நம்பகமான நல்ல முகவரைத் தேர்வு செய்வதும் முக்கியம். அவர்களைத் தர்வு செய்வதற்கு முன் சில அம்சங்களைக் கவனத்தில் கொள்வது நல்லது. பங்குப் பரிவர்த்தனையில் அவர்களுக்குரிய சேவைத் தொகை எவ்வளவு என்பதைத் தெரிந்து கொண்டு செயலாற்றுவதன் மூலம் அதிக லாபம் பெற முடியும்.

சில முகவர்கள் நிறைய சேவைத் தொகை (commission) கேட்பாங்க. இன்னும் சிலர் கொஞ்சமாக் கேட்பாங்க. அதனால கவனமாகத் தேர்ந்தெடுக்கணும். சிலர் “Discount Brokers” ன்னு இருக்கிறாங்க. அதாவது சேவைத் தொகை ரொம்பக் குறைவு. அவங்க வாங்குறது, விக்கிறது தவிர வேற ஒண்ணும் செய்ய மாட்டாங்க. ஆனா “Full time Brokers” முழு நேர முகவர்கள்ன்னு இருக்கிறாங்க. அவங்க நமக்கு ஆலோசனையும் சொல்வாங்க. நீங்க இதை வாங்கலாம். அப்படிச் செய்தால் குறுகிய காலத்தில் அல்லது நீண்ட கால முதலீட்டில் இவ்வளவு இலாபம் எதிர்பார்க்கலாம். அதில் இன்னின்ன அபாயங்கள் இருக்கின்றன என்பது பற்றியெல்லாம் அவர்கள் தெளிவாக விளக்கமளிப்பார்கள். எனவே முகவர்களைத் தேர்ந்தெடுப்பது பங்கு வர்த்தகத்தில் முக்கியமான அம்சம்.


பங்குச் சந்தை என்பது பணம் கொழிக்கும் வர்த்தகம். கவனமுடன் அதில் செயல்படும் போது அதிக லாபம் ஈட்ட முடியும். எடுத்த எடுப்பிலேயே நிறையச் சம்பாதித்து விட வேண்டும் என்று எண்ணாமல், அது பற்றிய முறையான விவரங்களைத் தெரிந்து கொண்டு செயலாற்றுவது நம்மிடமுள்ள பணத்துக்குப் பலம் சேர்க்கும்.

(நிறைவு)

2 comments: