Sunday, November 16, 2008

பணமே பலம் !



எப்போதும் நம்முடைய சேமிப்புகளை ஒரே இடத்தில் குவித்து வைக்காமல் பல்வேறு இடங்களில் பிரித்து வைப்பது விவேகமான முடிவு। அண்மையப் பொருளியல் நெருக்கடி பற்றித் தெரிந்ததும் பலர் அத்தகைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்। அதனால் என்ன பயன்? பல இடங்களில் முதலீடுகளைப் பிரித்து வைப்பதன் மூலம் நமக்கு ஏற்படக் கூடிய அதிக இழப்புகளைக் குறைக்கலாம்।

இவ்வாறு முதலீடுகளைப் பிரித்து வைப்பது முதலீட்டுக் கொள்கையின் பொன்னான விதியாகும்। அதாவது ஒரே இடத்தில் ஒரு பொருளையோ, வீட்டையோ, நகையையோ வாங்காமல் பல்வேறு இடங்களில், பல்வேறு தளங்களில் முதலீடுகளைப் பரப்பி வைப்பது. ஏதும் சிக்கலான சூழலில் ஒன்று விலை குறைந்தாலும் இன்னொன்று அந்த இழப்பைச் சரி செய்யும் வாய்ப்பை நமக்கு ஏற்படுத்தித் தரும்.

அண்மைய காலங்களில் நடுத்தர மக்களிடம் பங்குச் சந்தை அதிக கவனயீர்ப்பைப் பெற்றிருக்கிறது. அதில் முதலீடு செய்வதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெற முடியும் என்பது அவர்களுடைய ஆர்வத்தின் அடிப்படை ஊற்று. அத்தகைய லாபத்தைப் பெறுவதற்குப் பங்குச் சந்தை பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

பங்குச் சந்தை பற்றிப் பலவிதமான புத்தகங்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும். அதை ஒரு பொழுது போக்காக எடுத்துக் கொண்டு பங்குச் சந்தையின் ஆழ, அகலங்களைத் தெரிந்து கொண்டு, பிறகு அங்கு அடியெடுத்து வைத்தால் நம்முடைய பணத்துக்குப் பலம். அதை விடுத்து எடுத்த எடுப்பிலேயே நம்மிடம் 50000 ரூபாய் இருக்கிறது. அதை இரண்டு வருடத்தில் பன்மடங்காக்கி விடலாம் என்ற தப்பெண்ணத்தில் குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது போல பங்குச் சந்தையில் கால் பதித்தால் நஷ்டம் நமக்குத் தான். இத்தகைய முடிவுக்கும் சூதாட்டத்தில் கலந்து கொள்வதற்கும் வேறுபாடு ஏதும் இல்லை.

பாதுகாப்பான வழிகளில் முதலீடு செய்வதற்குப் பல வழிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நன்மையைத் தரும். மாறாக, நண்பர்கள், உறவினர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக பங்குச் சந்தையில் முதலீடு செய்வது சில நேரங்களில் அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.

இன்றைய சூழலில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாமவர்கள் பங்குச் சந்தையின் நெளிவு, சுளிவுகளைச் சரியாகத் தெரிந்து கொண்டு அங்கு முதலீடு செய்பவர்கள். இந்தக் குழுவினர் நூற்றில் பத்துப் பேராகத் தான் இருப்பர். மீதமுள்ள 90 பேர் நண்பர்கள் சொன்னார்கள், உறவினர்கள் சொன்னார்கள் என்று கேட்பார் பேச்சைக் கேட்டு முதலீடு செய்பவர்கள். சந்தையில் இழப்பு வரும் போது அதிகம் பாதிக்கப்படுபவர்கள் இவர்கள் தான். காரணம், சந்தைச் சூழல் அறிந்தவர்கள் எப்போது வெளியேற வேண்டுமோ அப்போது கச்சிதமாக வெளியேறி விடுவார்கள். ஆனால், இரண்டாம் வகையினர் சந்தையின் போக்கு பற்றி உண்மை நிலையைத் தெரியாததால், அது பற்றி அறியாததால் அதிக பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது பற்றிய ஆலோசனைகளை வழங்கும் முகவர்களும் இருக்கிறார்கள். அவர்களில், நம்பகமானவர்களின் ஆலோசனையோடு முதலீடு செய்வது சிறந்தது. அவர்களுடைய அனுபவமும், உள்ளுணர்வும் இலாபத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதில் துணை நிற்கலாம். ஆனால் யார் எப்படி என்ன செய்தாலும் நாம் அதை ஓரிரு முறை ஆராய்ந்து அது சரியானதா? அந்த முடிவை எடுக்கலாமா? நம்முடைய மனசாட்சி என்ன சொல்கிறது என்பதை வைத்துத்தான் இறுதி முடிவெடுப்பது உசிதம். காரணம், பிறருக்கென்று யோசிக்காமல், தனக்கென யோசிக்கும் போது நம்முடைய உள்ளுணர்வு சரியானதை நமக்குச் சொல்லாம். அதிக இழப்பு ஆரோக்கியத்துக்கு ஆகாது. எனவே, முதலீடு செய்வதற்கு முன் ஒன்றுக்குப் பலமுறை யோசித்துச் செய்வது உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது.

2 comments: