Monday, November 17, 2008

கரையே(ற்)றுவாரா ஒபாமா !?



"மாற்றம்" என்ற மந்திரச் சொல் அமெரிக்க வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் போட்டிருக்கிறது. அண்மைய அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் பராக் ஒபாமா வெற்றி பெற்றார். வரும் ஜனவரி 20 ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்பார். அமெரிக்கப் பொருளியலின் இமாலயச் சரிவு உலகளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒபாமா அதை எப்படிச் சரிக்கட்டப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. புஷ் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட 700 பில்லியன் உதவித் தொகை ஓர் ஆறுதலைத் தந்ததே தவிர பொருளியலில் தேறுதலைத் தரவில்லை.

ஒபாமா அலுவலகத்துக்குள் நுழைந்த முதல் நாளே அவருக்கு வேலை காத்துக் கொண்டிருக்கிறது. அவ்வளவு சிக்கலான பொருளியல் சவால்களைச் சமாளிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் இருக்கிறார். நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறதென்றால், தினமும் பத்தாயிரம் வீடுகள் வங்கிகளால் மீட்டுக் கொள்ளப்பட்டு பின்பு ஏலத்தில் விடப்படுகின்றன.

1930 ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா மிகப் பெரிய பொருளியல் சரிவைச் சந்தித்திருக்கிறது. அதன் விளைவு, வேலையின்மை விகிதம் 10 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. முன்பு அது ஆறு விழுக்காடாக இருந்தது. பதவி விலகும் அதிபர் புஷ், 10.3 டிரில்லியன் டாலர் கடன் சுமையை அமெரிக்க மக்களின் தலையில் சுமத்திச் செல்கிறார். தமது எட்டு ஆண்டு கால ராஜபோகத்தில், புஷ் இரட்டிப்பாக்கிய கடன் தொகையை ஒரு கணக்குப் போட்டுப் பார்ப்போமா? நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் வேலை செய்யும் ஒருவர், ஒரு நிமிடத்திற்கு நூறு டாலர் தாளாக எண்ணுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதுவும் வருடத்தில் 300 நாட்கள் அவர் வேலை செய்தால் 7,15,000 வருடங்களுக்குப் பிறகு தான் முழுத் தொகையையும் எண்ணி முடிப்பார். இப்பவே கண்ணைக் கட்டுதா?

இந் நிலையில், அமெரிக்க மக்களுக்குத் தேவை இமாலய மாற்றம். தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தப் போவதாக ஒபாமா வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார். அவை நடுத்தர மக்களுக்கும், வறுமையில் வாடுவோருக்கும் மிகுந்த பயனளிக்கும் என்பது எதிர்பார்ப்பு.

உதாரணத்திற்கு, Un Employment Insurance வேலையில்லாதோருக்குக் காப்பீடு, தனி நபர் வருமான வரிக் குறைப்பு, செலுத்த முடியாத கடன் தொகைக்குப் பகரமாக வங்கிகள் வீடுகளைப் பிடுங்கிக் கொள்வதால் நஷ்டத்தில் தவிப்போருக்கு உதவுவது போன்ற பல திட்டங்களைச் சொல்லலாம். இவை நடுத்தர மக்களுக்குப் போய்ச் சேரும் வகையில் உதவித் திட்டம் வரையப்படும் என்று கூறியிருக்கின்றார் ஒபாமா. அதே சமயம், இதற்கு ஏற்படும் செலவை ஈடுகட்டுவதற்கு இந்தச் சுமையை நிறுவனங்களின் தலையில் சுமத்த வேண்டிய நிலையில் இருக்கிறார். அவருடைய புதிய பொருளாதாரக் கொள்கையைப் பார்க்கும் போது அதிகமான வரிச் சலுகைகள் நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.

சென்ற அக்டோபர் மாதத்தில் மட்டும் அமெரிக்காவில் வேலை இழந்தோர் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சம். பொருளியல் நிலைத்தன்மை ஏற்படாதவரை அந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்கப் பணிகளை வெளிக்குத்தகைக்கு விடுவதன் மூலம் அங்குள்ள வேலைச் சந்தை அதிகம் பாதிக்கப்படுகிறது என்பது (Democratic Party) ஜனநாயகக் கட்சியின் வாதம். ஆனால், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்ட பிறகு அதற்கு அவர்கள் எடுக்கப் போகும் நடவடிக்கை பலனளிக்குமா என்பது கேள்விக்குறி.

Out sourcing எனப்படும் வெளிக்குத்தகைக்குப் பணிகளை ஒப்படைத்திருக்கும் நிறுவனங்களுக்குரிய வரிச்சலுகையை அகற்றப் போவதாகச் சொல்கிறார் ஒபாமா. அப்படி அகற்றப்படும் போது அதிகமான அமெரிக்கர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில்லாத் திண்டாட்டம் குறையும் என்று எதிர்பார்க்கிறார். ஒரு கோணத்தில் அது சரி. ஆனால் மறுகோணத்தில், இதனால் ஏற்படும் விளைவுகளென்ன தெரியுமா? வரிச்சலுகை குறையும் போது அமெரிக்க நிறுவனங்களுக்கான லாபம் பாதிக்கப்படுகிறது. அல்லது (Production Cost) உற்பத்திச் செலவு உயர்த்தப்படுகின்றது. அதன் எதிர்வினையாக அமெரிக்கப் பொருட்களின் போட்டித் தன்மை பாதிக்கப்படும்.

அண்மைய நாட்களில் பரவலாகப் பேசப்படும் தாராளமயம், தடையற்ற வர்த்தகம் ஆகியன ஒபாமா சார்ந்துள்ள ஜனநாயகக் கட்சிக்குக் கசப்பான கொள்கைகள். பொருளியல் நெருக்கடியைச் சமாளிக்கும் திறன் பெற்ற நிபுணர்களைத் தன்னோடு இணைத்திருப்பதன் மூலம் நிலைமையை ஓரளவு சரி செய்யலாம் என்று அவர் நினைக்கிறார். அவருடைய குழுவில் பொருளியல் தாராள மயத்தை ஆதரிக்காத நிபுணர்களும், வயதில் குறைந்த ஆலோசகர்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்களின் மனப்போக்குப் பொதுவாக, Micro Economics எனப்படும் நுண் பொருளியலை அடிப்படையாகக் கொண்டது. அதனால் நிறுவனங்களுக்கான சுமைகள் மேலும் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளை, அந்தச் சுமையால் கிடைக்கக் கூடிய லாபம் சாதாரண மக்களுக்குப் போய்ச் சேரக்கூடிய ஒரு வாய்ப்பும் இருக்கின்றது.

ஒபாமா ஆசிய வட்டார அரசியலில் அதிக நாட்டமுடையவர். எனவே, இங்குள்ள நாடுகளுடன் அமெரிக்காவின் உறவை அவர் வலுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் மற்ற அமெரிக்க அதிபர்களைப் போலல்லாமல் இவருக்கு ஆசியாவின் அனுபவம் அதிகமாக இருக்கிறது. எனவே, ஆசியாவுக்குச் சாதகமான பல விஷயங்களைச் செய்வார். குறிப்பாக வர்த்தகத்திலும் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment