Friday, March 20, 2009

கவிதையே தெரியுமா?

படிமம், குறியீடு என இரண்டு வார்த்தைகள் உண்டு. நான் புதுக்கவிதையில் குறியீடு பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன். படிமம் என்பது அரூபத்தை நுண்பொருளை அதாவது கண்ணுக்கு தெரியாததை காட்டுவது. குறியீடு என்பது கேமரா போல கண்ணுக்கு தெரிவதை மனதிற்கு புரிவதைப் போலச் சொல்வது.

இந்த குறியீடு என்பது 20-ம் நூற்றாண்டின் பிரெஞ்சு இலக்கிய புரட்சியில் தான் கண்டுபிடித்தார்கள். இலக்கியத்தில் இது முக்கியமான கண்டுபிடிப்பு. விஞ்ஞானத்தில் வானொலி, தொலைக்காட்சி போல.
என்னை புதுக்கவிதை எழுதுபவன் என்கிறார்கள். நான் இளங்கலை வகுப்பு படிக்கும் போது மரபு வெறியன். என்னுடைய பேராசிரியர் ஒருமுறை சர்ரியலிசம் என்ற வார்த்தையைச் சொன்னார். ரியலிசம் தெரியும், கம்யூனிசம் தெரியும், அதென்ன சர்ரியலிசம்? என்று கேட்டேன். அது 1954ம் ஆண்டு. புதுக்கவிதை வராத காலம். புதுக்கவிதை தகாத காலம்.

“ரியலிசம் என்பது நாம் பழகுவது. இந்தச் சமூகம் நமக்குச் சொல்லிக் கொடுத்திருப்பது. ஒருவரைப் பார்த்தால் வணக்கம் சொல்வது போல. சர்ரியலிசம் என்பது மனது என்ன நினைக்கிறதோ அது. உதடு வணக்கம் சொன்னாலும், மனதிற்குள் இவன் ஏன் வந்தான்?னு நினைப்பது.”

ரியலிசம்மாக எழுதுவது எழுத்தல்ல. உள்மனதில் இருப்பதை எழுதுவதுதான் எழுத்து. உண்மையைச் சொன்னா அடிப்பானேன்னு பயந்தா நீ படைப்பாளியா இருக்கவே முடியாது.

முள்ன்னா குத்தும். அதுதான் அதனுடைய இயல்பு. அதற்காக முள்ளைத் திட்டக் கூடாது. ரோஜாவுக்கு என்ன மதிப்போ,அதே மதிப்புதான் முள்ளுக்கும். அது செடிக்குப் பூவுக்குப் பாதுகாப்பு. தேனீக்கு ஏன் கொடுக்கு? நீ போய் எடுப்பேன்ங்கறதாலதான். அது ஒரு பாதுகாப்பு.

புதுக்கவிதை புரியாதது என்ற குற்றச்சாட்டே புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. யாருக்குப் புரியலை என்பதே முக்கியம். திருமூலர் எல்லாருக்கு புரியுதா? தேசிக விநாயகம் பிள்ளை புரியலைன்னு அவருடன் சண்டைக்குப் போக முடியுமா?புரிந்த இடத்தில் படித்து விட்டு புரியாத இடத்தில் ஒரு வணக்கம் போட்டுவிட்டுப் போய்விட வேண்டும். நமக்குப் புரிஞ்சாதான் படிப்போம்னா நாம எப்ப வளர்றது? நம்ம கூடவே 60 வருசம் இருக்கற மனைவியைப் புரிஞ்சுக்கிட்டோமா?
வாழ்க்கைன்னா என்னவென்று புரிந்துகொண்டிருக்கிறோமா? அது என்னன்னெ தெரியாமதானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நிறைய பேரிடம் கேட்டுப்பாருங்க. வாழ்ரக்கைன்னா என்ன? பதில் சொல்லத் தெரியாது. அது தெரியாமலே வாழ்க்கை முடிந்து விடுகிறது. ‘வாழ்க்கை என்பது என்னைப் பொறுத்தவரை. . . வாழ்க்கை என்பது என்னவென்று புரிந்து கொள்ளத் தரப்படுகிற ஒரு வாய்ப்பு.’
இலக்கணமில்லாதது புதுக்கவிதை என்பது தவறான பார்வை. மரபுக்கவிதை, புதுக்கவிதை என்கிற சொற்களே எனக்குப் பிடிக்காதது. கவிதை. . . அவ்வளவுதான்!

2000 வருசத்துக்கு முன்னால எழுதின கவிதை மாதிரித்தான் எழுதுவேன்னு பிடிவாதம் பிடிச்சா எக்ஸிபிஷன்ல போய்தான் உக்காந்துக்கணும். காலத்துக்குத் தகுந்த மாதிரி எழுதினாதான் படிப்பான். அப்பதான் நிக்கும். காலம் மாறிருச்சு. அதையே நாமளும் எழுத முடியாது. ஆங்கிலத்தில் ஒரு ஷேக்ஸ்பியர்தான். தமிழில் ஒரு கம்பன்தான். பாரதியைப் பிடிக்கும் என்பதால் பாரதிதாசன் பாரதி போலவேயா எழுதினார்? மாற்றம் ஏற்படணும். மாறாதது கல்லு. மாறுறவன்தான் மனுசன்.
நான் வெண்பா எழுதுறன்னே ஒருத்தன் உக்காந்தான்னா.அவன்தான் வெண்பாவுக்கு முதல் எதிரி. சிலேடையெல்லாம் வித்தை. கலையல்ல. கம்பியிலே ஏன் சைக்கிள் ஓட்டறே? ரோட்ல ஓட்டிட்டுப் போ! வார்த்தை விளையாட்டும் கம்பியில் சைக்கிள் ஓட்டுவதைப் போலதான். கவிதையல்ல.
ஒரு நேர்காணலில் என்னிடம் கேட்டார்கள். மரபுக்கவிதை, புதுக்கவிதை என்ன வித்தியாசம்? நான் சொன்னேன். மரபுக் கவிதை பெரிய வீடு. புதுக்கவிதை சின்ன வீடு. சின்ன வீட்டின்மேல் கொஞ்சம் ஈர்ப்பு அதிகமாகத்தான் இருக்கும்.

மரபுக் கவிதையில் யாப்பை வைத்து ஏமாற்ற முடியும். புதுக்கவிதையில் ஏமாற்ற முடியாது. கருத்தை நேரடியாக சொல்லியாக வேண்டும். நாம ஒண்ணு நெனைப்போம். ஆனா எழுதும்போது யாப்பு வராது. யாப்பு சரியா இருந்தா நம்ம மனசுல இருந்தது வந்திருக்காது. மனசுல இருக்கறத எழுதணும். அழகியலுக்காக யாப்பைச் சேர்த்துக் கொள்ளலாம்.

கவிதை என்றால் கண்ணுக்குக் காட்டுவதுதான். அப்ஸ்ட்ராக்டிவ்வாகச் சொல்லக் கூடாது. உடல்நலம் என்பதை சொன்னால் புரியாது. ஒரு பயில்வான் படத்தைக் காட்டுவது எளிதாகப் புரிய வைக்கும். ஒரு பெண் பார்க்கிறாள். உடனே இதயம் வலிக்கிறது. இதை எப்படிச் சொல்வது? ‘தேன் தடவிய கத்தி இதயத்தில் பாய்ந்தது போல. . . . கம்பன் மகா கவிஞன், ஆனால் அவனுக்கே இந்த கான்செப்ட் தெரியாது.

எல்லாக் கவிஞர்களும் புதுக்கவிதை எழுதுகிறார்கள். ஆனால் மரபைத் தெரிந்து கொண்டு புதுக்கவிதை எழுதலாம். சோகமாக ஒரு விஷயத்தைச் சொல்ல தூங்கலோசை. பளார்னு ஒரு விஷயத்தைச் சொல்லணும்னா செப்பலோசை. அதுக்காக எண்சீர் விருத்தத்தையே எல்லாத்துக்கும் எழுதாதீங்க. கம்பராமாயணத்தில் சூர்ப்பணகை வரும்போது கம்பன் கையாள்கிற விருத்தம் வேறு. . . தாடகையை அறிமுகம் செய்யும் போது கையாள்கிற விருத்தம் வேறு. இந்த inner form பலருக்குத் தெரியாது.

பழையதை மதியுங்கள். அங்கிருந்து சக்தியை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அங்கேயே நின்று விடாதீர்கள். நல்ல படைப்புக்களை எடுத்து ஆராய்ச்சி செய்யுங்கள். ஏன் அது நல்லா இருக்குன்னு. வாழ்க! வளர்க!

(‘கவிதைச் சிறகுகள்’ நடத்திய ‘கவிக்கோ அப்துல் ரகுமான் விருது’ வழங்கும் விழாவில் கவிக்கோ அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து. . .)

7 comments:

 1. //கவிதையே தெரியுமா?//

  கவிதை தெரியும்...ஆனா, நாங்கள் எழுதுவதெல்லாம் கவிதையா...?... என்று தான் தெரியாது...

  நல்ல பகிர்வு ஸதக்கத்துல்லாஹ்...
  தொடர்ந்து எழுதுங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்...

  ReplyDelete
 2. வருகை தந்தது உவகை.
  தொடர்ந்து இணைந்திருங்கள் புதியவன்.

  ReplyDelete
 3. சிறப்பான விளக்கம்.கவிக்கோ அவர்களின் கவிதை மட்டுமல்ல அவர் பேச்சும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.பித்தனை படித்துவிட்டு பித்தனானவன் நான்..!


  இங்கு இதை பதிந்ததற்கு நன்றி.!

  ReplyDelete
 4. :)

  பகிர்விற்கு நன்றி சதக்கத்துல்லாஹ்!

  ReplyDelete
 5. பகிர்வுக்கு நன்றி. நண்பன் சென்ஷி சொல்லி இந்தப் பதிவு பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

  அனுஜன்யா

  ReplyDelete
 6. சென்ஷி, அனுஜன்யா தங்கள் வருகை
  தந்தது உவகை.

  ReplyDelete