Wednesday, December 29, 2010

உலகம் 2010 – 3

உலகின் கவனத்தை எப்போதும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் நாடு ஈரான். இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல. அணு சோதனை நடத்துவது எங்கள் உரிமை. அதை ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்றது ஈரான். அணு ஆயுதச்சோதனை பற்றிய குற்றச்சாட்டைத் தொடர்ந்து உலக அமைப்பின் பாதுகாப்பு மன்றம் ஈரான் மீது தடை விதித்தது. ஜுன் 9 ஆம் தேதி அந்தத் தடை நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் ஈரான் அசைந்து கொடுக்கவில்லை.அக்டோபரில் ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் மையத்தை அனைத்துலக அணுசக்தி நிறுவனம் சோதனையிட்டது. இதற்கிடையே ஈரானின் அணுத் திட்டம் முரண்டு பற்றி வல்லரசு நாடுகள் ஜெனீவாவில் ஆலோசனை நடத்தின. எந்த முடிவும் எட்டப்படவில்லை. மீண்டும் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் துருக்கியில் ஆலோசனை நடக்கும்.

******

மத்திய கிழக்கில் அமைதி வேண்டும் என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பு. ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்றதும் அந்த எதிர்பார்ப்பு இன்னும் கூடியது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்துப் பேசினார் ஒபாமா. அதைத் தொடர்ந்து பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசுடனும் தொலைபேசினார். செப்டம்பரில் இஸ்ரேல் அரசும், பாலஸ்தீன தலைவர்களும் நேரடிப் பேச்சுவார்த்தையை தொடங்கினர்.ஜெருஸலேமில் உள்ள ஒரு பகுதியை பாலஸ்தீனர்களுக்கு விட்டுத் தரச் சம்மதித்தது இஸ்ரேல். ஜெருஸலேமில் யூதர்கள் வாழும் பகுதியை இஸ்ரேல் எடுத்துக் கொண்டு, அகதிகள் அதிகம் வசிக்கும் பகுதியை பாலஸ்தீனர்களுக்கு விட்டுத் தரத் தயாராக இருப்பதாகச் சொன்னார் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எஹுத் பராக். அவருடைய இந்தக் கருத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு உடன்பாடில்லை என்று தகவல் வெளியானது. ஜெருஸலேம் இஸ்ரேலியர்களின் பிரிக்கப்படாத தலைநகர். அதை விட்டுக் கொடுக்க முடியாது என்பது நெதன்யாகு ஆதரவாளர்களின் வாதம். எப்போது விடிவு வரும்? என்ற கேள்வியுடன் கடந்து கொண்டிருக்கிறது காலம்.

******

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆசியப் பயணம் இவ்வாண்டு முக்கியத்துவம் பெற்றது. பத்து நாள் நீண்டது அந்தப் பயணம். தொடக்கத்தில் அவர் காலடி வைத்தது இந்தியாவில். செனட் சபைத் தேர்தலில் ஓபாமா கட்சி பின்னடைவைச் சந்தித்தது. அதன் பிறகு, அவருடைய ஆசியப் பயணம் கூர்ந்து கவனிக்கப்பட்டது.ஒபாமா மும்பை வந்த வேளை இந்தியாவில் தீபாவளிக் கொண்டாட்டம். அதில் அவர் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார். கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய போது சாமர்த்தியமாகப் பதிலளித்தார்.

இந்திய நாடாளுமன்றத்தில் அதிபர் ஒபாமா உரையாற்றியது தனிச்சிறப்பு. இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகம், வளரும் நம்பகத்தன்மை பற்றிப் பெருமிதம் கொண்டார். அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகப் பரிமாற்றங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றார் ஒபாமா.

அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவின் உட்கட்டமைப்பில் முதலீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார் இந்தியப் பிரதமர் திரு மன்மோகன் சிங். வர்த்தக ரீதியாக ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பில் பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

இந்திய பயணத்தை முடித்து இந்தோனேசியாவுக்குச சென்றார் அதிபர் ஒபாமா. அங்கும் அவர் பல பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டார். பின்னர் கொரியா சென்று அங்கு நடந்த G20 மாநாட்டில் கலந்து கொண்டார்.

******
விளையாட்டு ரசிகர்களைக் கட்டிப் போட்டது முதன்முறையாக ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடந்த 19 ஆவது உலகக் கிண்ணக் காற்பந்து. தென்னாப்பிரிக்கா அந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதை ஆச்சர்யக் குறியாக்கிச் சாதித்தது தென்னாப்பிரிக்கா.காற்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஒருசேர அள்ளித் தந்தது உலகக் கிண்ணப் போட்டி. அந்த அணி வெல்லும். இல்லையில்லை இந்த அணிதான் வெல்லும் என்ற கணிப்புகள் கொடி கட்டிப் பறந்தன. ஆருடம் சொன்ன ஐந்தறிவுப் பிராணிகளுக்கு அடித்தது யோகம். Octopus (ஆக்டோபஸ்) ‘Paul’ க்கும், சிங்கப்பூர் கிளி மணிக்கும் ராஜ மரியாதை. ஆக்டோபசின் கணிப்பு நிலைத்தது. மணியின் முன்னுரைப்பு பொய்த்துப் போனது.

பலரும் எதிர்பார்த்த பலம் பொருந்திய அணிகளான பிரேசில், அர்ஜெண்டினா, பிரான்ஸ், வெற்றியாளரான இத்தாலி, ஜெர்மனி ஆகிய குழுக்கள் மண்ணைக் கவ்வின.

இறுதிப் போட்டியில் நெதர்லாந்தும், ஸ்பெயினும் பொருதின. வழக்கமான ஆட்ட நேரம் முடியும்வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் தரப்பட்டது. அதன் முதல் பாதியிலும் கோல் இல்லை. இரண்டாவது பாதி ஆட்டம் முடிவதற்கு 4 நிமிடங்கள் இருந்தபோது, ஸ்பெயினின் இனியெஸ்டா அற்புதமாகக் கோல் அடித்தார். வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது ஸ்பெயின். ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார் ஸ்பெயினின் இனியெஸ்டா.

******
பத்தொன்பதாவது காமன்வெல்த் போட்டி இந்திய வராலாற்றில் ஒரு மைல் கல். போட்டி தொடங்குவதற்கு முன்பு பல சர்ச்சைகள். விளையாட்டு அரங்குகள், வீரர்களின் குடியிருப்புக்களைத் தயார் செய்வதில் தாமதம், சுகாதாரக் குறைபாடு, விளையாட்டுக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் இப்படிப் பல விவாதங்கள்.காமன்வெல்த் போட்டிக்கான மைய நோக்குப் பாடலுக்கு இசை திரு. ஏ.ஆர்.ரஹ்மான். அந்தப் பாடலும் சர்ச்சையில் சிக்கியது. இசையில் விறுவிறுப்பு இல்லாததால் மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை என்று குற்றஞ்சாட்டின அரசியல் கட்சிகள். போட்டி தொடங்குவதற்கு முன் சில மாற்றங்களைச் செய்து கொடுத்தார் ஏ.ஆர். ரஹ்மான்.

பிரிட்டீஷ் அரசியாரின் சார்பில் இளவரசர் சார்ல்ஸ், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இருவரும் சேர்ந்து போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் கலைஞர்கள் தொடக்க விழாவில் தங்கள் திறனை வெளிப்படுத்தினர். நீண்ட நெடிய இந்தியப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் அமைந்தது தொடக்க நிகழ்ச்சி.

போட்டிகள் நடந்த வேளையிலும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. முனைந்து செயல்பட்ட இந்திய அதிகாரிகள் தவறுகளைக் களைந்தனர்.

தெற்காசிய வட்டாரத்தின் மிகப் பெரிய நாடான இந்தியா உலகத் தரம் வாய்ந்த பெரிய போட்டிகளை நடத்தியதில் சந்தித்த சவால்கள் ஏராளம். அத்தனையும் கடந்து காமன்வெல்த் போட்டிகளைச் சிறப்பாக நடத்தித் தன் பெருமையை உலகுக்கு நிரூபித்தது.

******

இந்தியக் கிரிக்கெட் நாயகன் சச்சின் டென்டுல்கருக்கு இது சாதனைக் காலம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து நாள் போட்டி நடந்தது பெங்களூரில். அதில் விளையாடிய சச்சின் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். ஐந்து நாள் போட்டிகளில் பதினாலாயிரம் ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற சாதனை அது. 171 ஐந்து நாள் போட்டிகளில் விளையாடி அதைச் சாத்தியமாக்கினார் சச்சின். அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்.கிரிக்கெட் வரலாற்றில் இன்னொரு முத்திரையைப் பதித்தார் சச்சின். ஐந்து நாள் போட்டிகளில் 50 முறை 100 ஓட்டங்களைத் தாண்டிய முதல் வீரர் என்பது அந்த முத்திரை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி போது சச்சின் அந்தச் சாதனையை நிகழ்த்தினார்.

******
கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு சாதனை நாயகன் இலங்கையின் முத்தையா முரளீதரன்.


பந்து வீச்சில் அவருடைய சாதனையை முறியடிக்க இனியொருவர் வரவேண்டும். ஐந்து நாள் போட்டி, ஒரு நாள் போட்டி இவ்விரண்டிலும் உலக அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை அவருக்குச் சொந்தம். காலேவில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சாதித்தார் அவர். 133 ஐந்து நாள் போட்டிகளில் முரளீதரன் வீழ்த்தியவர்களின் எண்ணிக்கை 800. அந்தச் சாதனையோடு ஐந்து நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் முரளீதரன்.

******

கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கவனயீர்ப்பைப் பெற்ற அம்சம். ஐந்து நாள் நடந்த அந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தது தமிழக அரசு. இந்திய அதிபர் பிரதீபா பாட்டீல் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். உலக நாடுகளில் இருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.தமிழின் பாரம்பர்யத்தை விளக்கும் பல்வேறு கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆய்வரங்கம், கருத்தரங்கம், உலகத் தமிழ் இணைய மாநாடு ஆகியன முக்கிய அம்சங்கள்.

சிங்கப்பூரின் மூத்த துணையமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இணைய மாநாட்டைத் தொடங்கி வைத்தார். நவீனத் தொழில்நுட்ப யுகத்தில் தமிழை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வழிமுறைகள் பற்றி ஆராயப்பட்டன.

செம்மொழி மாநாட்டுக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த மைய நோக்குப் பாடல் மக்களை வெகுவாக ஈர்த்தது.
******
அரசியல் மாற்றம், இரகசியத் தகவல்கள் கசிந்ததால் விளைந்த சர்ச்சைகள், மக்களின் கவனத்தை ஈர்த்த விளையாட்டுப் போட்டிகள் இப்படி வண்ணமயமாக நம்மை விட்டுக் கடந்து செல்கிறது 2010. பிறக்கவிருக்கும் புத்தாண்டு நம் வாழ்வில் வசந்தத்தைக் கொண்டு வர வேண்டும். அனைவருக்கும் இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
******

Tuesday, December 28, 2010

உலகம் 2010 - 2

மனித நேயத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்தியது சிலியில் நடந்த சுரங்க விபத்து. ஆகஸ்ட் 5-ஆம் தேதி. 700 மீட்டர் ஆழமுள்ள தாமிரக் கனிமச் சுரங்கத்தில் மும்முரமான பணியில் 33 பேர். திடீரென்று முழுவதுமாக மூடிக் கொண்டது சுரங்கம். அனைவரும் இக்கட்டான சூழலில். அவர்களை மீட்கப் போராடியது சிலி அரசாங்கம். ஒன்றல்ல, இரண்டல்ல. 68 நாட்கள் நீடித்தது அந்தப் போராட்டம்.சிலி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அற்புதமானவை. சிறுதுளை வழியாக சுரங்கத்துள் இருந்தவர்களுக்கு குடிநீர், திரவ உணவு, மருந்து மாத்திரைகள், உறவுகளின் அன்புக் கடிதங்கள், மனம் தளராமல் இருக்கும் உளவியல் ஆலோசனைகள் என எல்லாவற்றையும் உள்ளே அனுப்பி வைத்தது. மறுபுறம் முடுக்கி விடப்பட்டன மீட்புப்பணிகள். ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான ஆழ்துளைகள் போடப்பட்டன. அவற்றின் வழியே இவர்களை வெளியே கொண்டுவரத் தனித்துவமான குழல்உறைகள் செய்தனர். மிகப்பெரும் சவாலை எதிர்கொண்டு சாதித்தது சிலி அரசு. தொழிலாளர்கள் மீது கரிசனம் கொண்டு சிலி அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் மெய் சிலிர்க்க வைத்தன.

*****

நியூசிலாந்தில் நடந்த சுரங்க வெடிவிபத்தில் 29 தொழிலாளர்கள் பலியாகினர். கிரேமவுத் எனுமிடத்தில் உள்ள பைக் ஆற்றின் அருகே நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. அங்கு தான் அந்த விபத்து நடந்தது. உதவிக் குழுவினர் விரைந்து சென்றும் எவரையும் உயிருடன் மீட்க முடியவில்லை.விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது அரசாங்கம். விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டது. நியூஸிலாந்தின் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.பாடசாலைகள், அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.

*****

ஐஸ்லந்தில் உள்ளது எயா-ஃபியட்லா-யோக்குட் பனிமலை. திடீரென்று வெடித்துச் சிதறியது அதன் அடியில் உள்ள எரிமலை. அனல் தெறிக்கும் தீப்பிழம்பு எரிமலையிலிருந்து வெளி வந்தது. அதிலிருந்து கிளம்பிய புகை மற்றும் சாம்பல் காற்று மண்டலத்தை அடைத்தது. வானத்தில் 6 ஆயிரம் மீட்டர் முதல் 11 ஆயிரம் மீட்டர் உயரத்திற்குப் பரவியது சாம்பல். எரிமலை வெடிப்பால் கிளம்பிய 'லாவா' எரிமலைக் குழம்பு பனிமலையின் கட்டிகளை தண்ணீராக உருகி ஓடச் செய்தது.சாம்பல் புகை காரணமாக ஐரோப்பாவிலிருந்து புறப்படும், அந்த வட்டாரத்துக்குச் செல்லும் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. ஐரோ‌ப்‌பா‌வி‌ல் ம‌ட்டு‌மல்ல அமெ‌ரி‌க்கா உ‌ள்‌ளி‌ட்ட நாடுக‌ளிலு‌ம் ‌விமானச் சேவை ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது. உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்துக்குக் கடும் பாதிப்பு. ஏராளமான பயணிகள் விமான நிலையங்களிலேயே தங்க நேரிட்டது. இயல்பு நிலை திரும்ப ஒரு வாரமாகியது. இருப்பினும் விமான நிறுவனங்களுக்கு மில்லியன் கணக்கான டாலர் இழப்பு.

*****

இந்தோனேசியாவுக்கு இவ்வாண்டு சோதனைக் காலம். ஆழிப் பேரலையின் ஊழித் தாண்டவம் ஒருபுறம். மெராப்பி எரிமலையின் நெருப்புச் சீற்றம் மறுபுறம். வேதனையின் பிடியில் தவித்துப் போயினர் இந்தோனேசிய மக்கள். அக்டோபரில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவை நில நடுக்கம் புரட்டிப் போட்டது. அதிர்வின் அளவு ரிக்டர் அளவுகோலில் ஏழு புள்ளி ஏழு. தொடர்ந்து எழுந்தது ஆழிப் பேரலை. அது சுருட்டிக் கொண்டு போன உயிர்களின் எண்ணிக்கை 600 க்கும் அதிகம். கடலுக்கருகே இருந்த பத்துக் கிராமங்கள் காணாமல் போயின. அலையின் ஆதிக்கம் தணிந்த பிறகு சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஆழிப் பேரலையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக போராடியது இந்தோனேசிய அரசாங்கம். பட்டகாலிலேயே படுவது போல வந்தது இன்னொரு சோதனை.ஜோக் ஜாக்கர்தாவின் மெராப்பி எரிமலை தீக் கங்குகளைக் கக்கத் தொடங்கியது. அதன் தாக்கத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 70,000 க்கும் அதிகமான மக்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நவம்பர் 5 ஆம் தேதி மீண்டும் சீற்றத்துடன் வெடித்தது மெராப்பி. அதிலிருந்து கிளம்பிய வெப்பப் புகை, சாம்பல், தீக்கனல் ஆகியன சுற்று வட்டாரத்தில் பெரும் சேதத்தை உண்டாக்கின.

எரிமலையின் சீற்றம் உச்சமடைந்த வேளையில் இந்தோனேசியாவுக்கான விமானப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. ஜக்கர்தா, ஜோக் ஜக்கர்தா விமான நிலையச் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. எரிமலையின் சீற்றம் தணிந்த பிறகு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

*****

ஹைத்தியில் நிகழ்ந்த பூகம்பம் உலகத்தை உலுக்கியது. ஹைத்தியில் அடுத்தது சோம்பல் முறித்து பூமி. ரிக்டர் அளவுகோலில் ஆறு முதல் எட்டு புள்ளிகள் வரை பதிவாகின அதிர்வுகள்.போர்டா பிரின்ஸ் நகரம் மயான பூமியாகக் காட்சியளித்தது. 200 ஆயிரத்துக்கும் அதிமானோரைப் பலி கொண்டது நிலநடுக்கம். காயமடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனையின் வெளியே காத்துக் கிடந்தனர். போதுமான மருத்துவர்கள் இல்லாததால் மக்கள் தவித்துப் போயினர். ஆக மோசமான பேரழிவு என்று வரையறுத்தது உலக நிறுவனம். உலகின் பல்வேறு நாடுகளும் ஹைத்திக்கு உதவிக்கரம் நீட்டின.

*****


கம்போடியாவின் பாரம்பர்ய தண்ணீர்த் திருவிழா சோகமயமானது இவ்வாண்டு. தலைநகர் புநோம்பென்னில் நடந்தது அந்தத் திருவிழா. மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர் மக்கள். திடீரென்று கிளம்பியது ஒரு பீதி. விழா நடந்த இடத்திலுள்ள ஆற்றுப் பாலத்தில் மின்கசிவு என்பது செய்தி. அலறியடித்துக் கொண்டு ஓடியது கூட்டம். ஒவ்வொருவரும் முந்திச் செல்லும் முனைப்பில் கடும் நெருக்கடி. விளைவு 45 உயிர்கள் பலி. திருவிழா நடந்த ஆற்றுப் படுகை மயானக் கரையானது. கம்போடிய வரலாற்றில் நடந்த மிகப் பெரிய சோக நிகழ்வாக இதைப் பதிந்து கொண்டது காலம்.

*****

எப்போதும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது பயணம். ஆனால் மங்களூர் விமானத்தில் வந்தவர்களுக்கு அதுவே இறுதிப் பயணம். துபாயில் இருந்து வந்தது அந்த ஏர் இந்தியா விமானம். மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்து. ஓடுபாதையை விட்டு விலகி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது விமானம். பலியானவர்களின் எண்ணிக்கை 158. எட்டுப் பேர் உயிர் தப்பினர்.விமான நிலையத்தில் இருந்தும், மங்களூரில் இருந்தும் மீட்புப் படையினர் வருவதற்குள்ளாகவே பலர் உயிரிழந்தனர். பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகிவிட்டன. விமானி தொடர்ந்து பயணத்தில் இருந்ததால் அவருக்குப் போதிய ஓய்வு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. மங்களூரில் விமானம் தரையிறங்கிய போது அவர் ஓடுபாதையைக் கவனிக்கத் தவறி விட்டார். கறுப்புப் பெட்டியில் பதிவாகியிருந்த தகவல்களைக் கொண்டு அந்த விவரம் சேகரிக்கப்பட்டது.

*****

விக்கி லீக்ஸ் - இந்த ஒற்றைச் சொல் உலக நாடுகளை பதைபதைக்க வைத்துள்ளது. விக்கி லீக்ஸ் வெளியிடும் ஒரு செய்தி சரியா? பிழையா? என்று ஆராய்வதற்குள் அடுத்த சய்தி வந்து விழுகிறது. வல்லரசுகள் மட்டுமல்ல... மிகச் சிறிய நாடுகள் கூட கலங்கிப் போயிருக்கின்றன. ஆதாரப் பூர்வமான ரகசியச் செய்திகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பது இமாலயக் கேள்வி.

முதலில் அமெரிக்க அரசின் பல ரகசிய ஆவணங்களை இணையம் வழியே கசியவிட்டது விக்கி லீக்ஸ். அதைத் தொடர்ந்து படிப்படியாக பல நாடுகளில் இரகசியத் தகவல் பரிமாற்றங்கள் வெளிவரத் தொடங்கின. இதனால் உலக நாடுகளுக்கிடையிலான உறவில் சலசலப்பு.

‘விக்கி லீக்ஸ்’ லாப நோக்கமற்ற ஒரு நிறுவனம். முக்கியமான செய்திகளையும், தகவல்களையும் சாதாரண மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் நோக்கில் அவ்விணையத்தளம் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அனைத்துலக நாடுகள் கம்பி வழிச் சேவை மூலம் ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வது வழக்கம். அப்படி ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் பல படிப்படியாக இணையத்தில் வெளியிடப்படுகின்றன. அதில் முக்கிய அம்சம், தகவல்களும், செய்திகளும் ஆதாரத்துக்குரிய மூல ஆவணத்துடன் வெளியிடப்பட்டள்ளன.ஜுலியன் அஸாஞ்ச் - விக்கி லீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவனர். அவரே அந்தத் தளத்தின் முதன்மை ஆசிரியர். சுவீடனில் தொடுக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு காரணமாக ஜுலியன் அஸான்ஞ்ச் அண்மையில் லண்டனில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு அவர் கடுமையான நிபந்தனைகளுடன் 312 ஆயிரம் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்றத்துக்கு வெளியே பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜுலியன் அஸான்ஜ் ஆவணங்களை வெளியிடும் தம் பணி தொடரும் என்றார்.விக்கி லீக்ஸ் இணையத் தளத்தை முடக்குவதில் கடும் முனைப்புக் காட்டியது அமெரிக்கா. தம் மீது குற்றம்சாட்ட அத்தனை ஆயத்தங்களையும் அமெரிக்கா செய்து வருவதாகச் சொன்னார் ஜுலியன் அஸான்ஜ். பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பாக அவரை தன்னிடம் ஒப்படைக்கக் கோருகிறது ஸ்வீடன். இருப்பினும் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு வரவில்லை. விக்கி லீக்ஸ் எந்த நிமிடத்தில் யாரைப் பற்றிய செய்தியை வெளியிடும் என்பது புரியாத புதிராகத் தொடர்கிறது.

****

அமைதிக்காகப் பாடுபடும் நபர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் நோபெல் அமைதி பரிசு வழங்கப்படுகிறது. இவ்வாண்டு சீனாவச் சேர்ந்த கலை, இலக்கிய விமர்சகர் திரு. லியூ சியாவ் போவுக்கு (Liu Xiaobo) அந்தப் பரிசு அறிவிக்கப்பட்டது.எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசுக்காக 237 நியமனங்கள் குவிந்தன. அதில் திரு. லியூ சியாவ் போவின் பெயரும் இருந்தது. அந்தத் தகவல் வெளியானவுடனேயே அவருக்கு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்படக் கூடாது என்று நார்வேயிடம் கேட்டுக் கொண்டது சீனா. இருப்பினும் திரு.லியூ சியாவ் போவுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டிருப்பதால் சீற்றமடைந்தது சீனா.
மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம், நேர்மையான தேர்தல் போன்ற கோரிக்கைகள் அடங்கிய உரிமை ஆவணத்தை, (சார்ட்டர் 08) சாசனம் என்ற பெயரில் சக ஆதரவாளர்களுடன் இணைந்து உருவாக்கினார் திரு. லியூ.

சீன அரசியல், மக்களாட்சி முறைக்கு மாறுவதை இனியும் தள்ளிப்போட முடியாது என்பது சாசனத்தின் முக்கியச் சாராம்சம். அந்த உரிமைப் பிரகடனத்தில் ஆயிரக்கணக்கான சீனர்கள் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர். இந்தச் செய்கையை நேரடி மோதலாக எடுத்துக்கொண்டது சீன அரசாங்கம்.

2008 டிசம்பரில் அந்தப் பிரகடனம் வெளியிடப்பட இருந்த நிலையில் திரு. லியூ கைது செய்யப்பட்டார். இந்த சாசனத்தையும் (சார்ட்டரையும்) வேறு புரட்சிகர அரசியல் கட்டுரைகளையும் எழுதி, ஆட்சிக் கவிழ்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது திரு.லியூ மீதான முக்கியக் குற்றச்சாட்டு. 2009 டிசம்பர் 25ல் பெய்ஜிங் நீதிமன்றம் அவருக்கு 11 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது. அமைதிக்காக வழங்கப்படும் நோபெல் பரிசு சர்ச்சை அலைகளைக் கிளப்பியது வேடிக்கையான வினோதம்.

****


Currency War என்னும் நாணயப் போர் பற்றி இவ்வாண்டு அதிக விவாதம். உலகின் மற்ற நாடுகளின் நாணயத்துக்கும், சீன நாணயத்துக்கும் இடையே ஒரு வேறுபாடு உண்டு. சீன நாணயத்தின் மதிப்பை நிர்ணயிப்பது அந்நாட்டின் அரசாங்கம். மற்ற நாடுகளில் அப்படியல்ல. நாணயத்தின் மதிப்பை நிர்ணயிக்கும் சீனாவின் போக்கு தங்களுக்குப் பாதகம் என்றது அமெரிக்கா. அதை ஒப்புக் கொள்ள மறுத்தது சீனா. உலக நாடுகள் நாணயப் போர் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்த நிலையில் G - 20 நாடுகளின் அமைச்சர் நிலைக் கூட்டம் நடந்தது. நாணயப் போர் பற்றிய பீதியைப் போக்க சில முடிவுகள் அங்கே முன்மொழியப்பட்டன. ஆனாலும் சர்ச்சைகள் ஓயவில்லை.

****

தொடரும்...

Sunday, December 26, 2010

உலகம் 2010 - 1

2010 விடை பெறும் தருணம்.
எண்ணற்ற சம்பவங்கள் இவ்வாண்டில்.
எல்லாவற்றையும் விவரித்துச் சொல்வது சாத்தியமல்ல.
முக்கியமான சில சம்பவங்களைத் தொகுத்தளிப்பது நோக்கம்.மியன்மாரில் மிகப் பெரிய அரசியல் மாற்றம். மியன்மார் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியான ஆங் சான் சூச்சிக்கு வீட்டுக் காவலில் இருந்து விடுதலை. 1990 ல் நடந்த தேர்தலில் அவர் சார்ந்த கட்சிக்கு மகத்தான வெற்றி. இருப்பினும் ஆட்சி அமைக்க முடியவில்லை. முட்டுக் கட்டை போட்டது இராணுவ அரசாங்கம். வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார் சூச்சி. அனைத்துலகச் சமூகத்தின் தொடர்ந்த வலியுறுத்தல், அவருக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தது.

கடந்த ஆண்டே அவர் வீட்டுக் காவலில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். அமெரிக்கர் ஒருவர் அனுமதியின்றி சூச்சியைச் சந்திக்க முயன்றார். அதைக் காரணமாக வைத்து இராணுவ அரசாங்கம் சூ ச்சியின் வீட்டுக் காவலை நீட்டித்தது. தண்டனைக் காலம் முடிந்ததும், நவம்பர் பதின்மூன்றாம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார்.சூச்சியின் ஆதரவாளர்களுக்கு அதில் பெரும் மகிழ்ச்சி.20 வருடங்களுக்குப் பிறகு இவ்வாண்டு மியன்மாரில் தேர்தல் நடந்தது. ஆங் சான் சூ ச்சியின் ஜனநாயக தேசிய லீக் அதில் போட்டியிடவில்லை. நியாயமான வழியில் தேர்தல் நடைபெறாது என்பது அவர்களுடைய எண்ணம். அதனால் அவர்கள் தேர்தல் களத்தைப் புறக்கணித்தனர்.

விடுதலைக்குப் பிறகு தமது கட்சித் தலைமை அலுவலகம் முன் உரையாற்றினார் சூச்சி. மியான்மாரின் ராணுவ அரசை பேச்சு வார்த்தைக்கு அழைத்த அவர், தன்னால் மட்டும் ஜனநாயகத்தை பெற்றுவிட முடியாது. மக்களின் பங்களிப்பும் முக்கியம் என்றார்.

சூ ச்சிக்கு கிடைத்த விடுதலை. மியன்மாரில் மக்களாட்சி மலர்வதற்கான வழிகளில் ஒன்று.

*****

ஆஸ்திரேலியாவில் இவ்வாண்டு ஆட்சி மாற்றம். 2007 ல் ஆட்சிக்கு வந்தார் தொழிற்கட்சியின் கெவின் ரட். அரசியல் குழப்பங்களால் அவருடைய செல்வாக்கில் பெரும் சரிவு. குழப்பத்தைத் தீர்க்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் கெவின் ரட். துணைப் பிரதமராக இருந்த ஜூலியா கிலார்டுக்கு அடித்தது யோகம். புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் அவர். ஆஸ்திரேலிய வரலாற்றில் முதல் பெண் பிரதமர் ஜுலியா என்று பொறித்துக் கொண்டது காலம்.
ஆகஸ்டில் ஆஸ்திரேலியாவில் தேர்தல். முடிவுகளில் கடும் இழுபறி. 70 ஆண்டுகளில் முதல்முறையாக எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள இடங்கள் 150. டோனி அபாட் தலைமையிலான லிபரல் கட்சிக் கூட்டணி வென்றது 73 இடங்கள். பிரதமர் ஜூலியா கில்லார்டின் தொழிற்கட்சிக்குக் கிடைத்தன 72 இடங்கள். பெரும்பான்மைக்குத் தேவை 76 இடங்கள். இறுதியில் ஜுலியாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர் சுயேச்சை உறுப்பினர்கள். மீண்டும் பிரதமரானார் ஜுலியா.

*****

பிரிட்டனிலும் இவ்வாண்டு தேர்தல் அலை. மே 6 ல் தேர்தல். பதிமூன்று ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த தொழிற்கட்சிக்குத் தேர்தலில் பலத்த அடி. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த இடங்கள் 650. கன்சர்வேடிவ் கட்சி வென்றது 306 இடங்கள். தொழிற்கட்சிக்குக் கிடைத்தது 258 இடங்கள். சுதந்திர ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது 57 இடங்கள். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை.ஆட்சி அமைப்பது குறித்து கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், லிபரல் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே ஏற்பட்டது உடன்பாடு. 1945-ம் ஆண்டுக்குப் பிறகு பிரிட்டன் வரலாற்றில் கூட்டணி ஆட்சி. புதிய பிரதரானார் டேவிட் கேமரூன். 200 ஆண்டு பிரிட்டன் அரசியல் வரலாற்றில் மிக இளம் பிரதமர் டேவிட் கேமரூன். அவருக்கு வயது 43.

*****

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இவ்வாண்டு சோதனைக் காலம்.செனட் சபைக்கான தேர்தல் நடந்தது இவ்வாண்டு. மக்கள் செல்வாக்குப் பெற்றவர் என்று புகழப்பட்ட ஒபாமாவுக்குப் பின்னடைவு. அவர் சார்ந்த ஜனநாயகக் கட்சிக்குத் தேர்தலில் பலத்த அடி. செனட் சபையில் பெரும்பான்மையை இழந்தது ஜனநாயகக் கட்சி. இனி, முக்கிய அரசியல் முடிவுகளை எடுப்பதற்கு, குடியரசுக் கட்சியின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை. இருப்பினும் செனட் சபையை மீறித் தன்னிச்சையாகத் தீர்மானம் நிறைவேற்றும் அதிகாரம் அதிபருக்கு உண்டு. சென்ற ஆண்டுத் தேர்தலின் போது ஒபாமாவுக்கு இருந்த செல்வாக்கு இவ்வாண்டில் வீழ்ந்து விட்டதாகச் சொல்கின்றன கருத்துக் கணிப்புகள். இழந்த பெருமையை மீட்டெடுப்பது அதிபர் ஒபாமாவுக்குப் புத்தாண்டுச் சவால்.

*****

இவ்வாண்டுத் தொடக்கத்தில் ஆசிய வட்டாரத்தில் அதிகக் கவனத்தை ஈர்த்தது இலங்கை. காரணம் அங்கே நடந்த அதிபர் தேர்தல். 72 விழுக்காட்டு வாக்குகள் பதிவாகின. அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கும், முன்னாள் இராணுவத் தலைவர் ஜெனரல் சரத் ஃபொன்சேகாவுக்கும் இடையே கடும் போட்டி. முக்கிய எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டணி ஃபொன்சேகாவை ஆதரித்தது. இருப்பினும் பலன் இல்லை. மீண்டும் வென்றார் ராஜபக்ஷ. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியின் பலனை அறுவடை செய்து விட வேண்டும் என்பது அவருடைய கணக்கு. 57.8 விழுக்காட்டு வாக்குகள் பெற்ற ராஜபக்ஷ மீண்டும் அதிபரானார்.அவரை எதிர்த்துக் களம் கண்ட ஜெனரல் ஃபொன்சேகா தேர்தல் முடிந்த சூட்டோடு கைது செய்யப்பட்டார். இலங்கையின் தேசியப் பாதுகாப்புச் சட்டங்களை மீறினார் என்பது அரசாங்கத்தின் குற்றச்சாட்டு. ஆனால் அவ்வாறு எந்தத் தவறும் செய்யவில்லை என்றார் ஜெனரல் ஃபொன்சேகா. விசாரணை தொடர்ந்தது. இறுதியில் ஃபொன்சேகாவுக்கு இரண்டரை ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இப்போது அவர் இருப்பது வெலிக்கடை சிறையில்.போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்னும் முறையாக வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது.

*****
தாய்லந்தின் நடந்த போராட்டம் அங்கு அரசியலில் சூட்டைக் கிளப்பியது. அரசுக்கெதிரான செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பேங்காக் நகரின் நட்சத்திர ஹோட்டல்களும் முக்கியமான பலபொருள் அங்காடிகளும் மூடிக் கிடந்தன. மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ராணுவம் மற்றும் காவல்துறையினருக்கும் செஞ்சட்டைக்காரர்களுக்கும் இடையே நடந்த போராட்டம் தாய்லந்தில் மிகப்பெரிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்றது இராணுவ அரசு. ஆனால் உடனடித் தேர்தல் ஆர்ப்பாட்டக்காரர்ககளின் கோரிக்கை. அதை எப்படி நடத்துவது? கையைப்பிசைந்தன ராணுவமும், அரசும்.ஒருவழியாக, ஆர்பாட்டக்காரர்களின் தலைவர்கள் ராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களின் பிடியிலிருந்த முக்கிய வர்த்தகப் பகுதிகளை மீட்டது ராணுவம். இருப்பினும் ஆர்பாட்டக்காரர்கள் வெளியேறியவுடன் பேங்காக்கில் உள்ள முக்கியக் கட்டடங்கள் தீப்பற்றி எரிந்ததாக தாய்லாந்துத் தகவல்கள் தெரிவித்தன. பிளவுபட்டுள்ள நாட்டை ஒன்றிணைத்து தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமது அரசாங்கம் பாடுபடும் என்றார் தாய்லந்துப் பிரதமர் அபிசிட் விஜெஜீவா. நிலைமை இப்போது பரவாயில்லை. இருப்பினும் எப்போது? என்ன நடக்கும்? என்பதை அனுமானிக்க முடியாத சூழல்.****

வடகொரிய அதிபர் கிஜ் ஜோங் இல், தமது இளைய மகன் ஜோங் அன்னை தமது அரசியல் வாரிசாக அறிவித்தார். அது அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியது. ஆனால் வடகொரியாவைப் பொறுத்தவரை அது சாதாரண நிகழ்வு. வாரிசு அரசியல் பற்றிய விமர்சனங்களை வடகொரியா கண்டு கொள்ளவில்லை.இந்தச் சூழலில் வட – தென் கொரிய எல்லைப் பகுதியில் போர் மேகம். இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள கடல் எல்லை இன்னும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை. அதன் தொடர்பில் அவ்வப்போது சர்ச்சைகள். இப்போது அங்கே முறுகல் நிலை.உண்மையான குண்டுகளைப் பயன்படுத்தி இராணுவப் பயிற்சியை மேற்கொண்டது தென்கொரியா. அவ்வாறு நடந்தால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தது வடகொரியா.

கொரியத் தீபகற்பத்தில், அதிகரித்துவரும் பதற்றம் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டம் நடத்தியது ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம். கருத்திணக்கம் ஏற்படவில்லை. இரு கொரியாக்களும், கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று சீனாவும் ரஷ்யாவும் வற்புறுத்தின.இரு கொரியாக்களும் தங்களுடைய பிரதேசத்தைத் தற்காக்க ராணுவ வழிகளை நாடினால் அங்கு போர் மூளும் அபாயம் வரலாம் என்ற கவலை நீடிக்கிறது.

*****
இந்திய அரசியல் களத்தில் கடுமையான அனல். நாளொரு முறைகேடு. பொழுதொரு பதவி விலகல். இப்படியாகத் திடீர் திருப்பங்கள். எங்கே? எப்போது? என்ன முறைகேடுகள் வெளிவரும் என்று முன்னுரைக்க முடியாத நிலை. பரபரப்பான செய்திகளைப் பார்த்துத் திகைத்து நிற்கிறார்கள் மக்கள்.

அக்டோபரில் காமன்வெல்த் போட்டிகளை நடத்தியது இந்தியா. அதன் தொடர்பில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகச் செய்திகள் வெளியாகின. விசாரணைகள் நடந்து வருகின்றன. அதன் எதிரொலியாகப் பல தலைகள் உருண்டன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆதர்ஷ் வீடுகள் ஒதுக்கீடு தொடர்பில் முறைகேடுகள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் அசோக் சவாண் பதவி விலகினார். புதிய முதல்வராக பிருத்வி ராஜ் சவாண் பதவியேற்றார். விசாரணை தொடர்கிறது.அதையடுத்துக் கிளம்பியது 2G ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல். அதனால் இந்திய அரசாங்கத்துக்கு சுமார் ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை. இந்தியத் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவே அதற்கு பொறுப்பு என்றும் குற்றஞ்சாட்டியது அந்த அறிக்கை. 2G அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை. விதிகளுக்குட்பட்டுத் தான் அனைத்தும் நடந்தன என்பது ஆ.ராசாவின் வாதம்.

ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்குக் கடும் நெருக்கடி. அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ராசா . அப்போதும் எதிர்க்கட்சிகள் சமாதானம் அடையவில்லை. 2G அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தின எதிர்க்கட்சிகள். நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கின. தொலைத்தொடர்பு ஊழல் தொடர்பாகப் பதிலளிக்க ஏன் பல மாதங்கள் ஆனது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக நம்பப்படுவோர் வீடுகள், அலுவலகங்கள் சோதனையிடப்பட்டன. ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான விசாரணையைக் கண்காணிக்கப் போவதாக அறிவித்தது இந்திய உச்சநீதிமன்றம். விசாரணை பற்றிய முழு அறிக்கையை அடுத்தாண்டு பிப்ரவரி பத்தாம் தேதிக்குக்குள் இந்திய மத்திய புலனாய்வுத் துறை தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.டெல்லி அரசியல் களம் தகித்த வேளையில் கர்நாடகாவிலும் அரசியல் புயல். பாதிக்கப்பட்டது அங்கே ஆளும் பாரதிய ஜனதா கட்சி. அரசாங்க நிலத்தை தம் புதல்வர்களின் பெயர்களுக்கு மாற்றியதாக முதல்வர் எடியூரப்பா மீது குற்றச்சாட்டு. அதன் தொடர்பில் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன கர்நாடக எதிர்க்கட்சிகள். அதை நிராகரித்தது பா.ஜ.க.

இந்திய அரசியல் களத்தின் ஊழல்கள் பற்றிய விசாரணைகள் தொடர்கின்றன.

தொடரும்....

Monday, November 22, 2010

துயரத்துக்கு வாக்கப்பட்ட இந்தோனேசியா

இந்தோனேசியாவுக்கு இது சோதனைக் காலம். ஆழிப் பேரலையின் ஊழித் தாண்டவம் ஒருபுறம். மெராப்பி எரிமலையின் நெருப்புச் சீற்றம் மறுபுறம். பூமி எப்போது அதிரும்? எரிமலை எப்போது வெடிக்கும்? கணித்துச் சொல்ல முடியாதவாறு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறது காலம். மின்னல் தாக்கிய இடத்தில் இடி வீழ்ந்ததைப் போல் திணறி நிற்கின்றனர் மக்கள்.

சிங்கப்பூரைச் சுற்றியுள்ள நாடுகளில் மிகப் பெரியது இந்தோனேசியா. சுமார் 15,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டது அந்நாடு. எரிமலைகளுக்கும் அங்கே பஞ்சமில்லை. அதனால் அங்கே இயற்கைப் பேரிடர்கள் அவ்வப்போது வந்து போகும். பூமி அதிரலாம். அல்லது எரிமலை வெடிக்கலாம். அல்லது இரண்டும் சேர்ந்தே வரலாம். அந்த நாட்டு மக்களின் உயிரை உலுக்கும் கவலை இது தான்.
அக்டோபர்’ 10 இறுதியில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவை நில நடுக்கம் புரட்டிப் போட்டது. ரிக்டர் அளவுகோலில் ஏழு புள்ளி ஏழு என்று பதிவாகி இருந்தது அந்த அதிர்வு. அதைத் தொடர்ந்து எழுந்தது ஆழிப் பேரலை. அது சுருட்டிக் கொண்டு போன உயிர்களின் எண்ணிக்கை 600 க்கும் அதிகம். கடலுக்கருகே இருந்த பத்துக் கிராமங்கள் காணாமல் போயின. அலையின் ஆதிக்கம் தணிந்த பிறகு சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
பூகோள ரீதியில் இந்தோனேசியா ஆபத்தான வளைவில் அமைந்திருக்கிறது. எனவே அழையா விருந்தினர் போல அவ்வப்போது அங்கே இயற்கை பேரிடர் வருவது வாடிக்கையாயிற்று. இதற்கு என்ன காரணம்?

புவி அமைப்பியல் படி இந்தோனேசியா அமைந்திருக்கும் பூமியின் பரப்பில் அதிகமான தட்டுக்கள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று உராய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஐரோப்பா ஆசியாக் கண்டத்தின் தெற்குப் பகுதியின் விளிம்பில் அமைந்திருக்கிறது இந்தோனேசியா. தெற்குப் பகுதியில் உள்ள ஆசியக் கண்டத்தின் தகடும், மேற்குப் பக்கத்தில் இந்தியக் கண்டத்தின் தகடும் மோதுகின்றன. அதனால் விளிம்பில் இருக்கும் இந்தோனேசியாத் தீவுகள் அதிர்வுக்குள்ளாகின்றன என்கிறார் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பயன்பெறும் புவி அமைப்பியல் துறையின் பேராசிரியர் Dr.R.R. கிருஷ்ணமூர்த்தி.

Arc Of Fire என்று சொல்லப்படும் “நெருப்பு வளைய”ப் பகுதியில் இந்தோனேசியா அமைந்திருப்பதால் இயற்கைப் பேரிடர்கள் (பூகம்பம் அல்லது எரிமலை வெடிப்பு) அடிக்கடி ஏற்படுகின்றன என்கிறார் தஞ்சாவூர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகக் கட்டவியல் துறைத் தலைவர் பேராசிரியர் Dr. செந்தமிழ்க்குமார்.

2004 ஆம் ஆண்டு ஆழிப் பேரலைக்குப் பிறகு சில முன்னெச்சரிக்கைக் கருவிகள் பொருத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், அக்டோபர்’10 - ல் ஆழிப் பேரலை வந்த போது அந்த முன்னெச்சரிக்கைக் கருவிகளால் எந்தப் பயனும் இல்லை.

ஆழிப் பேரலை முன்னெச்சரிக்கைக் கருவியின் அமைப்பு சூட்சுமம் நிறைந்தது. கடல் நீர் மட்டத்தின் மேலுள்ள கருவி, கடலுக்கடியில் புவியின் மேலுள்ள கருவியோடு தொடர்பு கொள்ளுமாறு அமைக்கப்பட்டிருக்கும். கடலின் தரைமட்டத்தில் எந்த அதிர்வு வந்தாலும் அது உடனே மிதவைக் கருவிக்குச் சமிக்ஞையை அனுப்பும். பிறகு, அங்கிருந்து அதிர்வின் நிலை செயற்கைக் கோளுக்கு அனுப்பப்படும். பின்னர் அது கண்காணிப்பு மையத்துக்கு வந்து சேரும்.

கடலின் மேற்பரப்பில் உள்ள மிதவைக் கருவிகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்றாலும், மக்களுடைய கவனக்குறைவான செயல்களால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. அந்நிலையில அந்தக் கருவிகள் செயலிழந்து போகும். எனவே, முன்னெச்சரிக்கைச் சமிக்ஞை வந்து சேருவதில் தடை ஏற்படலாம் என்கிறார் முனைவர்.R.R. கிருஷ்ணமூர்த்தி.
ஆசிய வட்டாரத்தின் பிற நாடுகளைப் போலல்லாமல் இந்தேனேசியா கடலுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எனவே, முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் வந்து சேருவதற்குரிய கால அவகாசம் அங்கே குறைவு.

பூகம்பத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை முன் பூகம்பம், முதன்மைப் பூகம்பம், பின் பூகம்பம் எனப்படும். முன் பூகம்பத்தை உணரும் போது தான் கடலுக்கடியில் உள்ள கருவி செயல்படத் தொடங்கும். சீஸ்மீக்ராப் எனப்படும் பூகம்பத்தை அளக்கும் கருவியாக இருந்தாலும், ஆழிப் பேரலை முன்னெச்சரிக்கைக் கருவியாக இருந்தாலும் இதுவே நடைமுறை. சில தருணங்களில் முன் பூகம்பம் முன்னெச்சரிக்கையைத் தாமதமாகத் தான் வந்தடையும். அதற்குள், முதன்மைப் பூகம்பம் வந்து விடும். நில அதிர்வின் வேகம் அதிகமாக இருப்பதால் முதன்மைப் பூகம்பம் சீக்கிரமாக வந்து விடும். அதை முன்னெச்சரிக்கைக் கருவிகள் உணரும் முன்னரே ஆழிப் பேரலைகள் கரையைக் கடந்து விடும் என்கிறார் பேராசிரியர். Dr. செந்தமிழ்க்குமார்.

அக்டோபர்’10 இரண்டாம் வாரத்தில் வந்த ஆழிப் பேரலையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியது இந்தோனேசிய அரசாங்கம். வெந்த புண்ணில் வெடியை வைத்தது போல வந்தது இன்னொரு சோதனை.
சென்ற மாத இறுதியில் ஜோக் ஜாக்கர்தாவின் மெராப்பி எரிமலை தீக் கங்குகளைக் கக்கத் தொடங்கியது. அதன் தாக்கத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 70,000 க்கும் அதிகமான மக்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பூமித்தட்டுடைய நகர்வை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒன்றையொன்று அழுத்தும் விதமான நகர்வு(Convergence). இன்னொன்று ஒன்றையொன்றை விட்டுப் பிரியும் நகர்வு (Divergence). இவற்றுள் கன்வெர்ஜன் என்பது ஒன்றையொன்று அழுத்தும் போது அதிக அழுத்தம் ஏற்படும். அப்போது பூமி தன்னைத் தானே சரி செய்து கொள்ளும். அந்நிகழ்வு பூகம்பமாகவோ அல்லது எரிமலையாகவோ வெளியே வரும்

டைவர்ஜன் - ஒன்றை ஒன்றை விட்டு விலகுவது எப்போதாவது நடக்கும். அதன் விளைவாகப் பெரிய பெரிய பள்ளத்தாக்குகள் எல்லாம் உருவாகும்.நவம்பர்’10 5 ஆம் தேதி மீண்டும் சீற்றத்துடன் வெடித்தது மெராப்பி. அதிலிருந்து கிளம்பிய வெப்பப் புகை, சாம்பல், தீக்கனல் ஆகியன சுற்று வட்டாரத்தில் பெரும் சேதத்தை உண்டாக்கின. இன்னும் கூட புகைந்து கொண்டே இருக்கிறது மெராப்பி. நூற்றுக்கு மேற்பட்ட எரிமலைகளின் எச்சரிக்கை நிலையைக் கண்காணிப்பு அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர்.

எரிமலையின் சீற்றம் உச்சமடைந்த வேளையில் இந்தோனேசியாவுக்கான விமானப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. ஜக்கர்தா, ஜோக் ஜக்கர்தா விமான நிலையச் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. எரிமலையின் சீற்றம் தணிந்த பிறகு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

எரிமலை சீற்றத்துடன் இருக்கும் போது சல்பர் பார்டிகிள்ஸ் எனப்படும் கந்தகத் துகள்கள் வெளியாகும். அவை காற்றில் பரவி விமானத்தின் இயந்திரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். சில வேளைகளில் வானில் விமானத்தின் ஓடுபாதையைத் தாண்டியும் புகை மண்டலம் ஆக்கிரமிக்கும் போது பேரிழப்புகள் ஏற்படலாம்.

வானில் ஒன்பதிலிருந்து பத்து கிலோ மீட்டர் உயரத்தில் தான் விமானத்தின் ஓடுபாதை அமைந்திருக்கிறது. ஆனால் எரிமலையால் உண்டாகும் புகை மண்டலம் 20, 30 கிலோ மீட்டர் உயரம் வரை பரவக்கூடும். அதனால் வெப்ப மாற்றம் ஏற்படும் சாத்தியமும் உண்டு.

புவி அமைப்பியல் படி எந்நேரமும் இயற்கைப் பேரிடரைச் சந்திக்கும் நாடாக இருக்கிறது இந்தோனேசியா. அதை உணர்ந்துள்ள அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்து வருகிறது. எனினும் இயற்கைப் பேரிடர்கள் எப்போதும் சொல்லி விட்டு வருவதில்லை என்பது தான் மிகப் பெரிய சோகம்.

Sunday, November 14, 2010

நாணயப் போர்....உலகப் பொருளியல் சந்தையில் கடும் பரபரப்பு. காரணம் - Currency War என்னும் "நாணயப் போர்". உலகின் அனைத்து நாடுகளும் தங்களுக்கென தனி நாணயத்தை நிர்ணயித்துள்ளன. ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் போது அந்தந்த நாடுகளின் அல்லது பொதுவான ஒரு நாணயத்தில் அந்தப் பரிவர்த்தனை அமையும்.

கடந்த பத்தாண்டுகளில் உலக நாடுகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கிடக்கின்றன. ஏற்றுமதி, இறக்குமதியின் அடிப்படையில் வரும் இலாபத்தைக் கொண்டு அந்தப் பிரிவு அமைந்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் ஆகியன உலகின் மற்ற நாடுகளிடமிருந்து அதிகமான பொருட்களை தருவிக்கின்றன. அது அவர்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவை விட அதிகம். எனவே அவை வர்த்தகப் பற்றாக்குறையுடைய நாடுகள் (Deficit Countries) என்றழைக்கப்படுகின்றன.

மறுமுனையில் சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றன. ஆனால், பிற நாடுகளிடமிருந்து குறைந்த அளவிலேயே பொருட்களைத் தருவிக்கின்றன. எனவே அவற்றை வர்த்தக உபரியுடைய நாடுகள் (Surplus Countries) என்று சொல்லலாம்.உதாரணமாகச் சீனா, வெளிநாட்டில் இருந்து நிறையப் பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்கிறது. அதன் மொத்த ஏற்றுமதி மதிப்பு, இறக்குமதியை விட அதிகமாக இருந்ததென்றால் அது வர்த்தக உபரி. அதாவது வெளியிலிருந்து அதிகப் பணம் நாட்டுக்குள் வருகிறது. அதே சமயம், ஒரு நாடு, வெளிநாட்டில் இருந்து நிறையப் பொருட்களை வாங்குகிறது. ஆனால் அதன் சொந்தப் பொருட்கள் அதிகமாக ஏற்றுமதியாகவில்லை என்றால் அது வர்த்தகப் பற்றாக்குறை.அண்மையில், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகத்தில் சிறு தேக்கம். சீனா தனது நாணய மதிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது தான் பிரச்சினைக்குக் காரணம் என்று சீறுகிறது அமெரிக்கா. சீனாவின் இந்தப் போக்குக்கு ஈடுகொடுக்க முடியாமல் அமெரிக்க நிறுவனங்கள் திண்டாடுகின்றன. அதனால் பொருளாதாரத்துக்கும் பேரிழப்பு என்று புலம்புகிறது அமெரிக்கா. ஆனால் அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ள மறுக்கிறது சீனா. தன் நாணயத்தின் மதிப்பை ஏற்றினால் உள்நாட்டில் வேலையின்மை பெருகும். மக்களின் வாழ்க்கைத் தரம் வாட்டம் காணும். அதனால் நாணய மதிப்பை உயர்த்தும் போக்கை வேகமாகச் செய்ய மாட்டோம் என்று உடும்புப் பிடியாகச் சொல்கிறது சீனா.

உலகின் மற்ற பல நாடுகளின் நாணயத்துக்கும், சீன நாணயத்துக்கும் இடையே ஒரு வேறுபாடு உண்டு. சீன நாணயத்தின் மதிப்பை நிர்ணயிப்பது அந்நாட்டின் அரசாங்கம். பெரும்பாலான மற்ற நாடுகளில் அப்படியல்ல.

உதாரணமாக, அமெரிக்கன் டாலர், யூரோ, ஜாப்பனீஸ் யென் இவற்றை அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட விழுக்காடு தொகை கொண்டு சிங்கப்பூர் டாலருக்கான மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் சீன நாணயத்துக்கான மதிப்பை அங்குள்ள அரசாங்கம் தான் நிர்ணயம் செய்கிறது. மாறாக, சந்தையின் போக்கு அதை நிர்ணயிப்பதில்லை.

வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு நாணய மதிப்பைக் குறைப்பது அல்லது போட்டி போட்டுக் கொண்டு நாணயத்தின் மதிப்பைக் கூட்டாமல் இருப்பது நாணயப் போர் (Currency War) என்று சொல்லப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு பொருளியல் மந்தநிலையில் அதிகம் அடிவாங்கியது அமெரிக்கா. அந்தச் சரிவிலிருந்து அது இன்னும் முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் அமெரிக்க டாலரின் மதிப்புத் தொடர்ந்து குறைந்து கொண்டே போவது அந்நாட்டைக் கடுமையான கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

நாணயப் போரால் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் சில நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டன. நாட்டின் ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படக்கூடாது. வேலை வாய்ப்புகள் குறைந்து விடக்கூடாது என்ற அச்சம் அதற்குக் காரணம்.

தாய்லந்து, பிரேசில் ஆகிய நாடுகள் தங்கள் நாணயத்தின் மதிப்பு வடாமல் இருப்பதற்காகச் சில நடவடிக்கைகளை மேற்கொண்டன. வர்த்தகத்தில் என்ன லாபம் வந்தாலும் அதில் 2 விழுக்காடு வரி கட்ட வேண்டும் என்ற விதியைக் கொண்டு வந்தது பிரேசில். 15 பெர்சன்ட் வித் ஹோல்டிங் அறிமுகம் செய்தது தாய்லந்து. அதாவது அங்கே முதலீடு செய்த பணத்தைத் திரும்ப எடுக்கும் போது அதில் 15 விழுக்காட்டைத் தாய்லந்து அரசாங்கம் எடுத்து வைத்துக் கொள்ளும்.

உலகின் பெரும்பாலான நாடுகளின் வர்த்தகப் பரிவர்த்தனை அமெரிக்க டாலரின் அடிப்படையிலேயே நடக்கிறது. அதன் மதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் நிதிச் சந்தையில் மிகப் பெரும் சந்தேகச் சுழல். தொடர்ந்து அமெரிக்க நாணயத்தைக் கையிருப்பாக (Reserve Currency) வைத்துக் கொள்ளலாமா? அல்லது வேறு வகையில் முதலீடு செய்யலாமா? என்ற யோசனையில் இருக்கிறார்கள் சில முதலீட்டாளார்கள். தனிநபர்கள் மட்டுமல்ல, சில நாடுகளுக்கும் அமெரிக்க டாலர் மீது இருந்த நம்பிக்கை சரியத் தொடங்கியிருக்கிறது. உலக அளவில் பெருமளவு வர்த்தகப் பரிவர்த்தனை அமெரிக்க டாலரின் அடிப்படையில் நடந்தாலும் ஒரு நம்பிக்கையின்மை தொக்கி நிற்கிறது.

எப்போதும் அமெரிக்கா டாலரிலேயே முதலீடு செய்யும் இந்தியா, ஈராண்டுகளுக்கு முன்பு தடாலடியாக ஈரோவில் முதலீடு செய்யத் தொடங்கியது. காரணம் அமெரிக்க டாலரின் தொடர்ச்சியான வீழ்ச்சி. யூரோ அமெரிக்க டாலரை வீழ்த்தி விட்டு மேலே வந்து விடும் என்ற நம்பிக்கையும் அதற்குக் காரணம். ஆனால் இவ்வாண்டுத் தொடக்கத்தில் கீரிஸில் தகராறு வந்த போது யூரோவின் மீதான நம்பிக்கையும் பொய்த்துப் போயிற்று.

உலக நாடுகள் அமெரிக்க டாலரைத் தங்கள் நம்பிக்கைக்குரிய நாணயமாக (Reserve Currency) வைத்துள்ளன. கணிசமான அமெரிக்க டாலரைச் சீனாவும் தன் நம்பிக்கைக்குரிய நாணயமாக வைத்திருக்கிறது. எனவே நாணயப் போர் விவகாரத்தில் அமெரிக்கா சீனாவை அச்சுறுத்திச் சாதிக்க முடியாது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அமெரிக்க டாலருக்கு எதிராக சைனீஸ் யுவான் 21 விழுக்காடு மேலே போயிருக்கிறது. அதே நேரம், அமெரிக்காவுடைய வர்த்தகப் பற்றாக்குறை இன்னும் அதிகமாகிப் போனதே தவிர குறையவில்லை. இன்னொன்று, அமெரிக்கா 90 நாடுகளுடன் வர்த்தகப் பற்றாக்குறையில் தத்தளிக்கிறது. அதனால் சீனாவைக் குற்றம் சொல்லிச் சாதிக்க முடியாது. அமெரிக்காவில் நடந்த அண்மையத் தேர்தலின் போது மக்களிடம் குறை சொல்ல ஓர் ஆள் தேவை. அதற்குச் சீனாவைப் பலியாடாக்கி விட்டது.

ஆசிய வட்டாரத்தில் வேகமான பொருளியல் வளர்ச்சியைக் கொண்டுள்ள நாடு சீனா. அதன் நாணயமான யுவானை உலக நாடுகள் (Reserve Currency) நம்பிக்கைக்குரிய நாணயமாக்கும் காலம் கனியுமா?

சீன நாணய மதிப்பு அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படாமல், சந்தை சக்திகளால் தீர்மானிக்கும் ஒரு நிலை வந்தால் அது சாத்தியமாகலாம். அமெரிக்கன் டாலர், யூரோ, யுவான் ஆகியன Reserve Currency ஆகலாம். காரணம் சீனாவில் பண வீக்கம் அதிகமானால் அதை அவர்களால் தாங்க முடியாது. அதனால் இன்னும் இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்குள் சீன யுவான் Reserve Currency ஆகலாம் என்பது பொருளியல் நிபுணர்களின் முன்னுரைப்பு.

உலக நாடுகள் நாணயப் போர் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் G - 20 நாடுகளின் அமைச்சர் நிலைக் கூட்டம் அண்மையில் நடந்தது. நாணயப் போர் பற்றிய கிலியைப் போக்க சில முடிவுகள் அங்கே முன்மொழியப்பட்டன. நாணயத்தின் மதிப்பை நாங்களாகக் குறைக்க மாட்டோம். அதைச் சந்தைச் சக்திகளே தீர்மானிக்கலாம். நடப்பு வர்த்தகக் கணக்குப் பற்றாக்குறையை தேசிய உற்பத்தியுடைய பங்காக வைத்துக் கொள்வோம் என்பன அந்த மாற்றங்கள். ஆனால் இவை நடைமுறைக்கு வர இன்னும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தேவை.

உலக நாடுகள் தங்கள் நாணய மதிப்பின் பரிவர்த்தனை விகிதத்தைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அனைத்துலகப் பண நிதியம் (IMF) 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாணய மாற்று மதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது அதன் முக்கியக் குறிக்கோள். ஆனால் இப்போதுள்ள சூழலில் அனைத்துலகப் பண நிதியம் மட்டும் தனித்து எதையும் செய்து விட முடியாது. ஏனைய நாடுகளின் ஒத்துழைப்பு மிக முக்கியம்.

அனைத்துலகப் பண நிதியத்தைப் பொறுத்தவரையில் வளரும் நாடுகளுக்கு தற்போது பெரிய முக்கியத்துவம் இல்லை. அது பெரிய முட்டுக்கட்டை. அண்மையில் நடந்த G 20 மாநாட்டில் கூட இது பற்றி விவாதிக்கப்பட்டது. ஆசிய நாடுகளுக்குக் கூடுலாக ஆறு விழுக்காடு ஓட்டிங் பவர் கொடுக்கிறதுக்காக முடிவெடுத்திருக்கிறார்கள். அப்படியொரு சூழல் வந்தால் நல்ல முன்னேற்றம் வர வாய்ப்புண்டு.

ஜி 20 அமைச்சர் நிலைக் கூட்டத்துக்குப் பிறகு நாணயப் போர் பற்றிய பதற்றம் ஓரளவு தணிந்து வருகிறது. ஆனால் சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அனைத்துலகப் பண நிதியம், உலக வங்கி ஆகியன இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கு மேலும் வலுச் சேர்க்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

(ஹஜ்) பயணிகளின் கனிவான கவனத்திற்கு....
இவ்வாண்டு 2010 ஹஜ் பயணத்தை மேற்கொண்டவர்களின் நலன் கருதி புதிய சேவையை இந்திய அரசு மக்காவில் தொடங்கியுள்ளது.

புனிதப் பயணம் சென்றவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் இந்திய அரசு, மக்காவில் முதன் முறையாக 24 மணி நேர தொலைபேசிச் சேவையைத் தொடங்கியுள்ளது.

மக்காவில் உள்ள இந்தியன் ஹஜ் மிஷனை +966 (02) 5496000 அல்லது +966 (02) 5458000 ஆகிய எண்களில் எப்போதும் தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.

மேலதிகத் தகவல்களுக்கு... http://www.cgijeddah.com/Default_CGI.aspx

Monday, June 14, 2010

அ(ம்)ன்புச் சொற்கள்.சுத்தியுள்ளவர்களை
அச்சம் கொள்ளச்
செய்யும்
கத்தி வீசும்
கண்கள் உனது.

சொல்வதைக் கேட்டே
தீர வேண்டுமென்ற
மென்வன்மம்
உன் வார்த்தைகளில்.

பேச்சுக்கிடையே
கலைந்து விழும்
கேசத்தைச்
சரி செய்கிறாயா?

கவனிக்கத் தவறும்
என்னைப் பரிகசிக்கிறாயா?

இதுவரை தெளிவில்லை
எனக்கு.

ஆனாலும்

உன்னோடு பேசுவதற்கும்
உன்னிலிருந்து
இன்னும் இன்னும்....
பெறுவதற்கும்
மிச்சமிருக்கின்றன
அன்பு தோய்ந்த சொற்கள்.

Tuesday, June 8, 2010

தொலைக்"காதல்"உன் அழைப்பைத்
துல்லியமாக
இனங்காட்டும்
'செல்' ஒலி.

அலுவலுக்கிடையே
வருகின்ற
உன் அழைப்புகளை
தவிர்த்து விடுகின்றேன்
வேண்டுமென்றே.

மீண்டும் மீண்டும்
விடாமல்
தொடர்கிறது
'செல்'லொலி.

சினமடைவாய்
எனத் தெரிந்தே
நிர்த்தாட்சண்யமாய்
நிராகரிக்கிறேன்
உன் அழைப்புகளை.

பேசும் பொழுதுகளை விட
பேசாக் கணங்களில் தான்
நம்மைப் பொதிந்து
வைத்திருக்கிறது
காதல்.

Friday, May 7, 2010

அன்னையர் தினம்தாயைப் போற்றும்
தமிழ்ச் சமூகத்திற்குச்
சொல்லித் தந்தது
எவன்?

"அம்மாவுக்கு
ஒரு தினம்" என்று.

அவளுக்காகத் தான்
"அனு(ணு) தினமும்".

Wednesday, May 5, 2010

விழி மொழி.
உன்
விழி மொழியின்
பின்னே
திரண்டு நிற்கும்
சொற்களின்

அடர்த்தியையும்,
வலிமையையும்
என்ன சொல்லிப்
புரிய வைப்பது?

தெளிவுரை
பதவுரை
பொழிப்புரை
... ... ...
... ... ...

இப்படியே
பழக்கப்பட்ட
இவர்களுக்கு

அவசியம்
அருள்வாய்
உன் இதழுரை.

Friday, April 30, 2010

தொழுகை நேரங்காட்டி.

நாம் எந்த நாட்டில் வசித்தாலும் அந்த நாட்டின் காலத்துக்கு ஏற்ப தொழுகை நேரங்களைக் காட்டும் கணினி மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இறைநினைவை விட்டு அகலாமல் நம்முடைய கடமைகளை ஆற்ற இந்த மென்பொருள் உதவுகிறது. தொழுகைக்கான அழைப்பொலி, அதனைத் தொடர்ந்து ஓதப்படும் பிரார்த்தனை, குர்ஆனின் முக்கியமான வசனங்கள் இப்படி இதன் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம். இறை நேசத்தை அடர்த்தியாக்கும் இந்த மென்பொருளை வடிவமைத்த நல்ல இதயங்களுக்கும், அதை என்னைப் போன்றவர்களுக்கு அறிமுகம் செய்த நண்பர்களுக்கும் இறைவன் ஈருலகிலும் நன்மையளிக்கப் பிரார்த்தனை.

மென்பொருளை இங்கிருந்து தரவிக்கலாம்....

http://www.4shared.com/file/247192594/7df7c06/SalaatTimeSetup.html

Thursday, April 29, 2010

மழலைச் சாரல் :)கொதிக்கும்
தார்ச் சாலை.

வியர்வையின்
புழுக்கத்தில்
தொப்பலாய் நனைந்து
விசனத்தோடு
போக்குவரத்துச்
சமிக்ஞைக்காகக்
காத்து நின்ற
கணம்.

கடந்து சென்ற
பேருந்தில்
கை நீட்டியவாறே
சிரித்துச் செல்கிறது
குழந்தை.

மனதில் பட்டுத்
தெளி(றி)த்தது
மழலைச் சாரல்.