Friday, October 31, 2008

ஒளியேற்றுவாரா ஒபாமா


ஒளியேற்றுவாரா ஒபாமா...!?
அமெரிக்கத் தேர்தல் முடிவை விட அங்குள்ள மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது பொருளியல் பிரச்சினைக்கான தீர்வைத்தான். ஓராண்டுக்கு முன் அதிபர் தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, அமெரிக்கப் பொருளியல் நிலைத் தன்மையோடு இருந்தது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன் அங்குள்ள பங்குச்சந்தையில் வீசியது நிதிச் சூறாவளி. அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் பல நொடித்துப் போயின. இன்னும் சில நிறுவனங்கள் அந்தப் பட்டியலில் இணையக் காத்திருக்கின்றன. அதன் விளைவு இன்று உலக நாடுகளில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம்? அமெரிக்க அரசாங்கத்தின் பண நிதிக் கொள்கை. அதை எவ்வளவு தாராளமயப்படுத்த முடியுமோ அந்தளவுக்குத் தாரளமயமாக்கியது அமெரிக்க அரசு. அது மட்டுமல்ல நிதிச் சந்தையில் ஆரம்பத்தில் இருந்த கடுமையான கட்டுப்பாடுகளை அதிரடியாக நீக்கியது. அதனால் வங்கிப் பரிமாற்றத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கையும் அடியோடு மாறிப்போனது. நிதி நிறுவனங்கள் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று தலைமை வங்கி வழிகாட்டுவது வழக்கம். ஆனால், தாராளமயம் - அந்த வழிகாட்டலில் நெளிவு,சுளிவுகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால், அவரவர் தங்களுடைய சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வங்கிப் பரிவர்த்தனை செய்கிற சூழல் உருவானது.

ஒரு நாட்டின் நிதிநிலை வலுவடைய, பொருளியல் சமநிலை அவசியம். அதற்கு, மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும். அந்தச் சூழலை உருவாக்குவதற்காகவே தாராளமயக் கொள்கையைக் கடைபிடித்தது அமெரிக்கா. அங்குள்ள ரிசர்வ் வங்கி ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான வட்டியில், வணிக வங்கிகளுக்குப்(Commercial Banks) பணத்தை வாரி வழங்கியது. அதனால், கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை எல்லை மீறியது. அது மட்டுமா? தலைமை வங்கியிடமிருந்து அதிகமான கடனைக் குறைந்த வட்டிக்கு வாங்கி வாடிக்கையாளர்களுக்குச் சுலபமாகக் கொடுத்தார்கள். அவர்களால் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியுமா? அதற்கான தகுதி இருக்கிறதா? இல்லையா? என்ற அடிப்படைக் விசாரணையில்லாமல் நொடித்துப் போனவர்களுக்குக் கூட கடனைத் தாராளமாகக் கொடுத்தார்கள். அது பொருளாதாரச் சந்தையில் ஒரு செயற்கையான வெற்றிடத்தை ஏற்படுத்தியது.

அண்மைய எண்ணெய் விலையேற்றம் அமெரிக்க மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்திருக்கிறது. எல்லாப் பொருட்களின் விலைகளும் உச்சத்தைத் தொட்டன. வாங்கிய கடன்களைத் திரும்பக் கொடுப்பதா? அன்றாட வாழ்க்கைச் செலவைக் கவனிப்பதா? என்ற போராட்டம் அவர்களுடைய மனதில் எழுந்தது.

இந்தச் சூழலில், தாங்கள் வாங்கிய கடனுக்குரிய தவணைத் தொகை செலுத்துவதை அவர்கள் தள்ளிப் போடத் தொடங்கினர். அதன் எதிர்விளைவாக, இதுவொரு தனிமனிதப் பிரச்சினை என்றில்லாமல் தேசியப் பிரச்சினையாக உருவெடுத்து அமெரிக்கப் பொருளாதாரத்தையே நெருக்கடிக்குள்ளாக்கியது.

அமெரிக்க முதலீட்டுச் சந்தை, உலகச்சந்தையோடு இரண்டறப் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆகவே, அமெரிக்கப் பொருளாதாரம் கீழே விழும்போது, மற்ற உலக நாடுகளின் நிதிச்சந்தைகளும் பாதிக்கப்படுவது இயல்பானது.

பொருளியலில் ஏற்பட்ட தடுமாற்றம் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே மிகப் பெரிய தலைவலியாக மாறியது. அவசரமாக விழித்துக் கொண்ட அமெரிக்க அரசாங்கம் நிதிச் சூறாவளியை எதிர்கொள்ள 700 பில்லியன் டாலரைக் கொடுத்தது. ஆனால் அது யானைப் பசிக்குச் சோளப் பொறியாக மட்டுமே அமைந்தது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்கக் குறைந்தபட்சம், இரண்டரை அல்லது மூன்று டிரில்லியன் டாலர் வரை உதவி தேவை என்பது பொருளியல் நிபுணர்களின் கருத்து. வரும் நவம்பர் 15ல், பொருளாதார ஆலோசனை பற்றிய கூட்டம் நடக்கவிருக்கிறது. அதன் மூலம் ஏதாவது விடிவு பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எனவே, தொய்வடைந்திருக்கும் அமெரிக்க நம்பிக்கையைப் பழைய நிலைக்குக் கொண்டு வர உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இந்நிலையில், அமெரிக்கத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வெல்லப் போவது யார்? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது. அடுத்து ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது குடியரசுக் கட்சியா? ஜனநாயகக் கட்சியா?. இவர்களில் யார் வென்றாலும் அது பொருளியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

யார் வெல்லப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து பங்குச் சந்தை மாற்றங்கள், பொருளாதாரக் குறியீடுகள், உலகப் பொருளாதாரம், நிதிச்சந்தைகள் ஆகிய அனைத்தும் மாற்றத்தை எதிர்நோக்குவது நிச்சயம். ஏனென்றால், தற்போதைய அமெரிக்கத் தலைமைத்துவத்தின் நம்பிக்கை மிக மோசமாகச் சரிந்துள்ளது. ஜான் மெக்கைன் வந்தால், தற்போதுள்ள அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பல கொள்கைகளை அப்படியே தொடர்ந்து மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே சமயம், ஒபாமா அதிபரானால், ஒரு முழுமையான மாற்றம் ஏற்படும். அது அமெரிக்க வெளியுறவு, பொருளாதாரம், இராணுவம் என அத்தனை துறைகளிலும் முழுமையான மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. அதனால் சந்தையின் நம்பிக்கை மேலும் பலப்படும். ஆகவே, ஜான் மெக்கைனை விட பராக் ஒபாமா வந்தால் அமெரிக்கா நம்பிக்கை பலப்படும். தற்போதுள்ள பொருளியல் சமனற்ற நிலை மீட்சியடையும் வாய்ப்புகள் அதிகம் என்பது பொருளியல் நிபுணர்களின் ஆரூடம். பலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Wednesday, October 29, 2008

நிறை மாதம்



நிறை மாதம்.

குறை மாதம்

ஆனாலும்

நிறை மாதம்

சம்பளக்காரர்களுக்கு

ஃபெப்ருவரி.

Tuesday, October 21, 2008

மழை நன்றி



மழை நன்றி.


குடை மறந்த
மழை நாள்.

நனைந்தபடியே
நுழைந்தேன்
இல்லத்துள்.

என்ன நீங்க
கொஞ்சம் நின்னு
வரக்கூடாதா?
கேட்டாள் மனைவி.

சேலைத் தலைப்பால்
துவட்டினாள்
அம்மா.

Friday, October 17, 2008

எண்ணத்துப்பூச்சி


எண்ணத்துப்பூச்சி

கதைத்துக்
கொண்டிருந்தோம்
பூங்காவில்.


பறந்து வட்டமடித்த
வண்ணத்துப்பூச்சி
நெருங்கியது
உன் குழலருகில்.

என்ன புதுமையிது?!

வியக்கையில்
அசராமல் சொன்னாய்

இனம்
இனத்தோடு தானே சேரும்.


Thursday, October 16, 2008

குழந்தைமை



குழந்தைமை


இடறி விழுந்த
எரிச்சலில்
ஓங்கி உதைத்தான்
தரையை...

பாவம்!

வலியின்
வலிமை
அறியுமோ
பூமி?!



Wednesday, October 15, 2008

பெயரென்ன?



பெயரென்ன


பார்த்தேன்

சிரித்தாய்.

சிரித்தேன்

சினந்தாய்.

திரும்பினேன்

திரும்பினாய்.

தொடரும்

இப்படியான

விழி மாற்றங்களுக்கு

பெயரென்ன

உன் அகராதியில்?.

Monday, October 13, 2008

விழியீர்ப்பு


விழியீர்ப்பு


நீ
பார்த்து விடக் கூடாதென
நானும்.


நான்
கண்டு விடக் கூடாதென
நீயும்.


பயமாறிப்
பரிமாறிக் கொண்டோம்
பார்வைகளை.

மையமாய்
நம் விழிகள்
சந்தித்தன
ஒரு புள்ளியில்.

விளைந்த
விழியீர்ப்பு விசையை
அளக்கக் கருவியுமுண்டோ? !.

Saturday, October 11, 2008

‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க!


இராக் தலைநகர் பக்தாத். சூரியன் சற்று கீழிறங்கி வந்தது போல் வெயிலின் உக்கிரம். மலைப்பிரதேசத்தின் பள்ளத்தாக்கில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன்.ஒருநாள் அவனுக்கு அசரீரி கேட்கிறது. ‘நீ ஆடுகளை மேய்ப்பதற்காக படைக்கப்பட்டவனல்ல’.

செய்தி சிந்தையில் விழுந்ததும் அவனுடைய உள்ளம் தீவிரத்தேடலில் ஈடுபடத் துடித்தது. வேகமாக வீடு திரும்புகிறான். மகனின் அவசரக் கோலத்தைக் கண்ட தாய் கேட்கிறார். என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு சீக்கிரம் வீடு திரும்பி விட்டாய்? ஆடுகளை மேய்க்கும் போது தான் கேட்ட செய்தியை தாயிடம் கூறுகிறான் அந்தத் தனயன். மகிழ்ந்தன இரு உள்ளங்கள்.

சிறுகச் சிறுகத் தான் சேமித்து வைத்திருந்த பொற்காசுகளை மகனிடம் கொடுக்கிறார். அவை தவறிவிடக் கூடாது என்பதற்காக அவருடைய சட்டையின் அடிப்பகுதியோடு சேர்த்து அந்தக் காசுகள் அடங்கிய பையைத் தைத்து விடுகிறார். அசரீரியாய் ஒலித்த குரலைக் கேட்டு உண்மையான அறிதலைத் தேடிப் புறப்பட்டுகிறான் அந்தச் சிறுவன்.

மிக நீண்ட கடல் பயணம். அவன் பயணிக்கும் கப்பலைக் கொள்ளையர்கள் சுற்றி வளைக்கிறார்கள். பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல். சித்தம் கலங்கிய அவர்கள், சொத்துக்கள் அனைத்தையும் கள்வர்களிடம் கொடுத்து விடுகிறார்கள்.

இறுதியாக, அந்தக் கும்பலில் ஒருவன் கேட்கிறான். இன்னும் யாரிடமாவது பெறுமதி மிக்க பொருட்கள் இருக்கின்றனவா? துணிச்சலுடன் ஒலிக்கிறது ஒரு பிஞ்சுக்குரல். பயணிகள் எல்லோரிடமும் கேட்டுக் கேட்டுப் பொருட்களை எடுத்துக் கொண்டீர்கள். என்னை மட்டும் ஏன் விட்டு விட்டீர்கள்? ஆனால், என்னிடம் 40 பொற்காசுகள் உள்ளன என்றான். திருடர்களுக்கு தேள் கொட்டிய உணர்வு.

அந்தச் சிறுவன் நம்மை ஏமாற்றவே இவ்வாறு பொய்யுரைக்கிறான் என்றான் கும்பலில் இருந்த ஒருவன். இல்லை. நிச்சமாக இல்லை! என் சட்டையின் பின் பகுதியில் 40 பொற்காசுகள் தைத்து வைக்கப்பட்டுள்ளன என்றான் உறுதியாக. திருட வந்தவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. தீவிர ஆலோசனைக்குப் பிறகு அந்தச் சிறுவனை தங்கள் தலைவரிடம் அழைத்துச் சென்றனர். ஏனப்பா இந்தச் சிறுவனை அழைத்து வந்திருக்கிறீர்கள்? தலைவன் கோபமாகக் கேட்டான். தன்னிடம் 40 பொற்காசுகள் இருப்பதாக இவன் கூறுகிறான். எங்களுக்கு நம்பிக்கையில்லை. நீங்களே சோதித்துப் பாருங்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

வியப்பு மேலிட, அவர்கள் சொல்வது உண்மைதானா? என்று தலைவன், சிறுவனிடம் கேட்கிறான். அவனும் அதை ஆமோதிக்கிறான். அப்படியானால் அந்தப் பொற்காசுகளை எடுத்துத் தா என்று அவன் கேட்க, அந்தச் சிறுவன் சற்றும் தாமதிக்காமல் அவற்றை கொள்ளைக் கும்பல் தலைவனின் கையில் கொடுக்கிறான். சிறுவனின் நேர்மை, உண்மையின் மீது அவன் கொண்ட நம்பிக்கை, தனக்குப் பாதகம் நேர்ந்தாலும் பரவாயில்லை, எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும் என்ற அவனது உணர்வு. இவை அந்தக் கொள்ளைக் கும்பல் தலைவனை ஒரு கணம் சிந்திக்க வைக்கிறது.

கேட்டவுடனேயே உண்மையைச் சொல்லும் துணிச்சல் எங்கிருந்து வந்தது உனக்கு? தலைவன் கேட்கிறான். என் அன்னையிடமிருந்து என்று பதில் சொன்ன அந்தச் சிறுவன், ‘உண்மை’யின் பின்புலத்தை விவரிக்கிறான். அசரீரியின் குரல் கேட்டுத் தான் மேற்கொள்ளூம் இந்தப் பயணம் உண்மையான அறிவைத்தேடும் முயற்சி. எந்தச் சூழலிலும் உண்மையைப் பேசத் தயங்காதே என்று என் தாய் எனக்குப் போதித்து அனுப்பினார். அந்த மந்திரச் சொல் தான் உண்மையைப் பேசும் தைரியத்தை எனக்குத் தந்தது என்றான். சிறுவனுக்கு இருக்கும் ஞானம் தங்களுக்கு இல்லாமல் போய் விட்டதே என்று திருடர்கள் தலைகுனிந்தனர். இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய பெருமைக்குரிய அந்தச் சிறுவன் யார் தெரியமா? ஜீலான் நகரில் பிறந்து ஆன்ம ஞானத்தேடலில் ஆழமான சுவடு பதித்த ‘‘கெளதுல் அ:லம்” அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அலைஹி தான்.

மறைந்தும் இறவாப் புகழுடன் வாழும் அந்த இறைநேசருடைய வரலாற்றைப் பிஞ்சு உள்ளங்களில் பசுமரத்தாணி போல பதியச் செய்தவர் இந்தியாவின் தலைமகன் நம் பெருமைக்குரிய APJ அப்துல் கலாம்.



அண்மையில் மூன்று நாள் அதிகாரத்துவ பயணமாக அவர் சிங்கப்பூர் வந்திருந்தார். அப்போது, வெளிநாடு வாழ் இந்தியர்களின் கல்விக்காக இந்தியர்களால் நடத்தப்படும் ‘பவன் அனைத்துலகப் பள்ளி’க்கு அவர் விஜயம் செய்தார். இந்தியாவில் இப்படி ஒரு சுற்றுப்பயணத்தில் குடியரசுத்தலைவரை அருகே இருந்து பார்ப்பதென்பது முயலிடம் கொம்பைத்தேடும் கதைதான். ஆனால் சிங்கப்பூரில் அப்படியல்ல.

காலை 10.30 மணிக்கு விழா தொடக்கம். குறித்த நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பாதுகாப்பு வீரர்கள் ‘பின்தொடர’ பீடுநடை போட்டு வந்தார் கலாம். பிஞ்சு மலர்கள் கைகளில் பற்றியிருந்த மலர்க் கொத்துகளை அன்புடன் வாங்கிக் கொண்டு அவர்களோடு சினேகத்துடன் உரையாடினார். அதன் பிறகு அவர் ஆற்றிய சிறப்புரையில் தான் அப்துல் காதிர் ஜீலானியின் வாழ்க்கையை எளிமையாக எடுத்துரைத்தார்.

புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி சர் C.V.ராமன், காந்திஜி ஆகியோரின் பெற்றோர் அவர்களுக்கு வழங்கிய போதனைகளையும் மேற்கோள் காட்டி வளரும் தலைமுறைக்குத் தேவையான வாழ்க்கைப் பாடத்தை அவர் நடத்தினார். உரை நிகழ்த்திய தருணத்தில் எங்கும் அவர் தன்னுடைய மேதமையை பறைசாற்றவில்லை. அரங்கில் நிரம்பியிருந்த குழந்தைகள் அத்தனைபேரிடமும் தனித்தனியே உரையாடுவது போன்று தனது பேச்சின் பாணியை அவர் வகுத்துக் கொண்டார்.

தொடக்கத்தில் குழந்தைகளைப் பார்த்து அவர் கேட்டார். நான் பாடம் நடத்துவதில் உங்களுக்கு விருப்பமா? அல்லது கதை சொல்வதில் ஆர்வமா?. அரங்கு முழுவதும் அமைதி. ஆசிரியை ஒருவர் பாடம் நடத்துங்கள் என்றார். நீங்கள் ஆசிரியர், மாணவர்களுக்கு வழி விடுங்கள் என்று விரைந்து மறுமொழி கூறினார். பின்னர் அவர் உரையாற்றிய விஷயங்கள் தான் இந்தக் கட்டுரையின் ஆரம்பச் செய்திகள். சுமார் 45 நிமிடம் அவருடைய சொற்பெருக்கு குழந்தைகளைக் குதூகலிக்க வைத்தது. இறுதியில் 25 குழந்தைகள் அவரிடம் கேள்வி கேட்டு பதில் பெறக்காத்திருந்தனர்.

துடுக்கு நிறந்த ஒரு மாணவன் கேட்டான். நீங்கள் ஏன் வாழ்க்கைத் துணையைத் தேர்தெடுக்கவில்லை? சிரித்துக்கொண்டே கலாம் சொன்னார் உங்களுக்காவது நல்ல துணை அமைய நான் பிரார்த்திக்கிறேன்.

உங்களில் எத்தனை பேர் மருத்துவராக விருப்பம்? எத்தனை பேர் விஞ்ஞானியாகப் போகிறீர்கள்? அரசியல்வாதியாகப் போவது எத்தனை பேர்? என்று தொடர்ச்சியாகக் கேட்டுக் குழந்தைகளின் பதிலைப் பெற்றுக் கொண்டார்.அரசியல்வாதியாக விரும்பிய குழந்தைகளிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். நாட்டு முன்னேற்றத்தில் எங்கள் பங்கைப் பதிவு செய்ய விரும்புகிறோம் என்று அவர்கள் கூற, வெரிகுட் என்றார்.

இறுதியாக மூன்று விஷயங்களை வலியுறுத்தினார். உண்மையையே பேசுங்கள், அதிலேயே நிலைத்து நில்லுங்கள், இதயத்திலுள்ள தயக்கங்களை வெளியே தள்ளுங்கள். அவ்வாறு செய்தால் வெற்றி உங்களைத் தேடி வரும் என்றார்.

குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைக்க கலாம் வந்திருந்தார். ஆனால் அங்கு குழுமியிருந்தவர்களில் பெரும்பாலோர் நடுத்தர வயதினர். அவர்கள் மத்தியில் உரையாற்றிய போதும் ‘உண்மையை’ அவர் முன்னிலைப் படுத்தினார். இப்போது இந்தப் பிஞ்சு உள்ளங்களிலும் அதையே விதைத்துச் சென்றிருக்கிறார்.

எல்லாக் குழந்தைகளின் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஆனால் அதற்குரிய நேரம் இப்போது இல்லை. எனவே www.presidentofindia.nic.in என்ற இணையப் பக்கத்தில் உங்கள் கேள்விகளைப் பதிவு செய்யுங்கள். அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்களுக்கான பதில் வந்து சேரும் என்றார்.

விடைபெற்றுச் சென்றவுடன் மாணவர்களிடம் கேட்டேன், இந்த விழா எப்படி இருந்தது? ‘இந்திய மக்கள் கொடுத்து வைத்தவர்கள். இப்படி ஒரு எளிமையான தலைவர் அவர்களுக்கு வாய்த்திருக்கிறார். நாங்கள் எதிர்பார்த்தை விட மிக நெருக்கமாக எங்களை வசீகரிக்கும் விதத்தில் அவர் பேச்சு இருந்தது. இனிமேல் எங்களுக்கான ‘ரோல்மாடல்’ உதாரண புருஷர் அப்துல் கலாம் தான்’ என்றனர்.

சிங்கப்பூர் பயணத்தில், தன்னைப்போலவே இன்னும் பலர் நாட்டுக்குத் தேவை என்ற எண்ணத்தை இளையோர் உள்ளங்களில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் அப்துல் கலாம்.


(இது 01.02.2006 ல் எழுதப்பட்ட ஆக்கம்)

விசாரிப்பு




விசாரிப்பு


எப்படி இருக்கிறீங்க?
நல்லா இருக்கிறேன்.

நீங்க எப்படி?
நானும் தான்.

உச்சரித்துக் கொண்டன
உதடுகள்.

ஓரமாய் நின்று
கெக்கெலித்தது
உள் மனம்.

Friday, October 10, 2008

நிழல் யுத்தம்.




நிழல் யுத்தம்.

குறுகலான சந்து.

எதிரெதிர் திசையில்

நம் பயணம்.

மோதிவிடக் கூடாதென்ற
அவதானத்தில்
விலகியே செல்கிறோம்.

சட்டென
முட்டிக் கொள்கின்றன
பாழாய்ப் போன
நிழல்கள்.

யார் வந்து
மருந்திடுவார்
நம் காயங்களுக்கு?

Thursday, October 9, 2008

மாயவலை



மாயவலை

நான்

வீதி வரும்

வேளை பார்த்து

வாசலில்

காத்திருப்பாய்.

ஏய்!

அங்க பாரு

உன் ஆளு.

கிசுகிசுப்பாள்

தோழி

உன் காதோரம்.

என் காலடி

ஓசைக்கு

உன் விழியீர்ப்பைக்

கொடுத்து விட்டு

ஜடையை எடுத்து

ஒயிலாய்ப் பின்னுவாய்

ஒண்ணுமறியா

அப்பாவி போல்.

அதை விட

வலிமையான

வலை

உண்டோ உலகில்?

Wednesday, October 8, 2008

வானம்



வானம்

நிலா

இளவரசி

உலா வர

விரிக்கப்பட்ட

நீலக்கம்பளம்.

Tuesday, October 7, 2008

வேர்



வேர்

சினந்த முகத்தோடு

சட்டெனக் கேட்டாய்

நீ வேறு?

நான் வேறா?

இல்லையில்லை.

நீ தான்

என் வேர்!

Monday, October 6, 2008

தனியனா



தனியனா

தனியாக
இருக்கும் போது
எனை வந்து பார்
என்றார் மேலதிகாரி.

பாவம்!

நீ (மு)ப்போதும்
என்னுடன்
இருக்கிறாய்
என்பது
எப்படித் தெரியும்
அவருக்கு? :)

Saturday, October 4, 2008

ஏக்கம்



ஏக்கம்

ஓடிக் களைத்த
வினாடியில்
சாலையில் ஒதுங்கியது.

கனிவுடன்
எலும்பெடுத்துப் போட்டான்
இறைச்சிக் கடைக்காரன்.

நன்றி சொல்ல வழியின்றி
மருகித் தவிக்கிறது
வாலறுந்த நாய். :)

Friday, October 3, 2008

பூங்கோபம்



பூங்கோபம்

அந்தப் பூவின் மீது
கடுங்கோபம்
எனக்கு.

இருக்காதா பின்னே?

உன்னை விட அழகாய்
கோபப்பட முடியுமென்று
என்னிடமே
மல்லுக்கு நிற்கிறது!


கவிதை அறிமுகம் :)

அவ்வப்போது நான்
ஏதாவது கிறுக்குவேன்.

டேய் நீ சும்மாவே அப்படித்தான்
அதுல வேற பீடிகையா...
சொல்லிக் கொண்டே
நண்பர்கள் வாங்கிப் பார்ப்பார்கள்.

இறுதியில் டேய் இது
கவிதை மாதிரி இருக்குடா என்பார்கள்.

இதோ அந்த மாதிரிகளில்
சில பார்வைக்கு.... .

சாந்தமாகப் பாருங்கள்..
அவை காந்தமாய் உங்களை இழுத்தால்
மறக்காமல் மறுமொழி தாருங்கள்.

அவை என்னை
இன்னும் கொஞ்சம் கிறுக்க வைக்கும்...