Friday, February 18, 2011

ஹோஸ்னி முபாரக் யார்?எகிப்தின் நைல் நதிக்கரையில் உள்ள Menoufia மாநிலத்தில் 1928 ஆம் ஆண்டு பிறந்தார் முபாரக். ஆயுதப் படையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

1975ல், அப்போதைய அதிபர் அன்வர் ஸாதாத்தின் நம்பிக்கைக்கு உரிய துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

1981ல், இராணுவ அணிவகுப்பில் நடந்த திட்டமிட்ட தாக்குதலில் அன்வர் ஸாதாத் படுகொலை செய்யப்பட்டார். அருகிலிருந்த முபாரக், காயமின்றித் தப்பினார். இதன் பின்னணியில் சதித்திட்டம் ஏதேனும் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம்கூட அப்போது எழுந்தது. அந்தச் சம்பவம் நிகழ்ந்த ஏழு நாட்களில் முபாரக் அதிபராக அறிவிக்கப்பட்டார்.

இஸ்ரேலுடன் அமைதி, வாஷிங்டனுடன் ஒத்துழைப்பு, பணக்கார வர்க்கத்தின் உருவாக்கம், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை நசுக்குதல் போன்ற அன்வர் ஸாதாத்தின் கொள்கைகளையே முபாரக்கும் அடியொற்றித் தொடர்ந்தார். காலப்போக்கில் அவருடைய ஆட்சிமுறையில் மாற்றம் தென்படத் தொடங்கியது.

உலகின் வெளிப்படையான பொருளியல், அரசியல் கொள்கைகளுடன் முபாரக்கின் ஆட்சிமுறை பொருந்தவில்லை. வட்டாரத்தின் செல்வாக்கைப் பெற்றவர்... அனைத்துலக அரங்கில் அனைவருக்கும் பழக்கப்பட்ட தோற்றத்தைக் கொண்டவர். மத்தியக் கிழக்கு அமைதி முயற்சியில் அதிகம் பங்காற்றியவர். எனினும் இஸ்லாமிய எதிர்த்தரப்பினரை அவர் கையாண்ட விதம் அதிருப்தியை அளித்தது.

பழைய அதிபர் அன்வர் ஸாதாத்துக்கு நேர்ந்த கதி இவருக்கும் நேரவிருந்தது. 1995ம் ஆண்டில் எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவில் முபாரக் மீது படுகொலை முயற்சி நடந்தது. அவருடைய கார் தீவிரவாதிகளின் குண்டுகளால் துளைக்கப்பட்டது. நூலிழையின் உயிர் பிழைத்தார் முபாரக்.

இஸ்லாமிய எதிர்த்தரப்பினர் மட்டுமல்ல, உள்நாட்டு மக்களின் வெறுப்பையும் முபாரக் சம்பாதித்தார். ஜோர்தான், சிரியா போன்ற நாடுகளில், தலைவர்களின் இடத்தை அவர்களுடைய புதல்வர்கள் நிரப்பியதுபோல் எகிப்திலும் நேர்ந்துவிடும் என்று மக்கள் அஞ்சினர். அந்த அச்சத்திற்குக் காரணம் இருந்தது. எகிப்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, துணையதிபர் நியமிக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் முபாரக் நியமிக்கவில்லை.

நாட்டின் முன்னேற்றத்தில் அவர் கவனம் செலுத்தவில்லை என்பது மக்களின் இன்னொரு குறை. இந்தக் குமுறல்களை முபாரக் கண்டு கொள்ளவேயில்லை.

காலம் செல்லச் செல்ல நிலைமை மாறத் தொடங்கியது. 2004, 05 ஆம் ஆண்டுகளில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தலைதூக்கத் தொடங்கின.

2005ல் நாட்டில் முதன்முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. பெயருக்குத்தான் அது தேர்தல். முடிவு அனைவருக்கும் தெரிந்ததாக இருந்தது. தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த இரண்டு பிரபலமான வேட்பாளர்களைச் சிறையில் அடைத்தார் முபாரக். தேர்தலில் வெற்றி பெற்று ஐந்தாம் தவணையாக அதிபர் பொறுப்பை ஏற்றார்.

அரபு உலகில், அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடாக எகிப்து விளங்குவதைத் உறுதிப்படுத்திக்கொண்டார் முபாரக். எனினும் அவருடைய ஜனநாயக அடக்குமுறைகள் அமெரிக்காவுக்கு அதிருப்தியளிக்கத் தொடங்கின. ஊழல், அதிகாரம், வறுமை, வேலையின்மை போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகளால், செல்வாக்கை இழந்தார் முபாரக். ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு அவர் கொடுத்த வாக்குறுதிகள் நீர் மேல் எழுத்துக்களாயின. விளைவு, இப்போது மக்களாட்சிக்கான விடியல்.

எகிப்து - மக்களாட்சியின் மலர்ச்சி.பெப்ரவரி 11. எகிப்திய மக்களின் வாழ்வில் மறக்க முடியாத நாள். அவர்களின் தொடர் போராட்டம் மக்களாட்சிக் கனவை நனவாக்கும் சூழல் அன்று தான் கனிந்தது. எகிப்தின் அரசியல் புயல் இப்போது அமைதியை நோக்கிக் நகரத் தொடங்கி இருக்கிறது.

முப்பதாண்டுகளாக பதவியில் இருந்தார் அதிபர் ஹோஸ்னி முபாரக். அவருடைய ஆட்சிக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்பது எகிப்தியர்களின் வேட்கை. அதற்காக இரவு, பகல் பாராது தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டு நின்றனர். இறுதியில் அவர்களின் கனவு நிறைவேறியது. அரபுலக அரசியலின் புதிய சகாப்தத்திற்கு இதுவோர் அடிக்கல்.தேசியத் தொலைக்காட்சியில் தோன்றிய துணையதிபர் ஒமர் சுலைமான், அதிபர் முபாரக்கின் பதவி விலகுவதை அறிவித்தார். நாடு எதிர்நோக்கியுள்ள சிக்கலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அதிபர் முபாரக் பதவி விலகுவதாகவும், ஆயுதப் படைகளின் உச்ச மன்றத்திடம் ஆட்சிப் பொறுப்பை அவர் ஒப்படைத்திருப்பதாகவும் ஒமர் சுலைமான் சொன்னார்.

இது ஜனநாயத்திற்குக் கிடைத்த வெற்றி எனக் கருதி திரண்டு நின்ற மக்கள் களித்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தஹ்ரீர் சதுக்கத்தில் நின்ற இராணுவ வீரர்களும் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டனர். மூன்று வாரங்களாக நீண்ட மக்கள் நடத்திய போராட்டம், கத்தியின்றி, அதிக இரத்தமின்றி, அமைதியான ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது.

எகிப்திய அரசியல் நெருக்கடி எப்படித் தொடங்கியது?

ஜனவரி 25 - எகிப்தில் காவலர்கள் தினம் (Police Day). அதற்கு முதல் நாள் ஒரு காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர்.இந்த அடக்குமுறையை எதிர்த்து உணர்வூட்டும் கருத்துக்களைத் தம்முடைய Facebook பதிவில் எழுதினார் வாயில் கானிம் (Wael Ghanim) என்பவர். அது அப்படியே இணையத்திலிருந்து மக்களின் இதயத்துக்கு இடம் மாறியது. அடுத்து வந்த நாள்கள் அனைத்தும் பரபரப்பூட்டும் சரித்திரத்தின் முக்கியப் பக்கங்கள். ஜனவரி 25 ஆம் நாள் தஹ்ரீர் சதுக்கத்தில் மக்களை ஒன்று திரட்ட அந்தக் கருத்துக்கள் பெரும் பங்காற்றின.

வழக்கம் போல மக்கள் ஒன்று கூடுவார்கள். பிறகு கலைந்து விடுவார்கள். எனவே கத்தும் வரை கத்தட்டும், இரவில் அவர்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று கடிந்தார் அதிபர் ஹோஸ்னி முபாரக். ஆனால் அதைக் காது கொடுத்துக் கேட்பதற்குத் தயாராக இல்லை எகிப்திய மக்கள்.

சமூகத்தின் குமுறல் கொந்தளிப்பாக உருமாறியது. வேலையின்மை, கல்வியின்மை, ஊழல், நிர்வாகச் சீர்கேடு, திறமையற்ற அரசாங்கம் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். வேறெங்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் அவர்கள் வீதியில் இறங்கி விட்டார்கள்.

தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டு நின்ற மக்கள் பெரும்பாலும் இளையர்கள். அவர்களில் அனேகம் பேருக்குத் திருமணமாகவில்லை. எனவே குழந்தை, குட்டிகள், வீடு, மனைவி, மக்கள் என்ற கவலை அவர்களுக்கில்லை. பிற அரபுலக நாடுகள் போல தங்கள் நாட்டின் சீரழிவுக்கு அமெரிக்காவோ, இஸ்ரேலோ காரணம் என்று அவர்கள் பழி போடவில்லை. எகிப்திய ஆளும் வர்க்கம் தான் அத்தனை சீரழிவுக்கும் காரணம். அவர்களை ஒழித்து விட்டுத் தான் மறுவேலை என்பதில் எகிப்தியர்கள் ஒன்றுபட்டுத் திரண்டு நின்றார்கள்.

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்தார் அதிபர் ஹோஸ்னி முபாரக். அரசியல்,சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு வழி செய்கிறேன் என்று தொலைக்காட்சியில் தோன்றிச் சொன்னார். அதை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக இல்லை.

சமூக வலைத் தளங்களான Face Book, Twitter போன்றவை எகிப்தின் அரசியல் சுழலுக்கு முக்கியக் காரணம். பகிரங்கமாக வெளியே தெரியாமல் இணைய வெளியில் நடந்த கருத்துப் பரிமாற்றம் மக்களை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியது. அல் ஜஸீரா தொலைக்காட்சி வழங்கிய நேரலை ஒளிபரப்பு எகிப்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி எகிப்தியர்களை ஒன்றிணைக்கும் கயிறாகத் திகழ்ந்தது “ஆட்சி மாற்றம்” என்ற ஒற்றைக் கோரிக்கை.

போராட்டம் வலுத்ததன் பிறகே புதிய ஊடகங்களின் (New Media) தாக்கத்தை உணர்ந்தது எகிப்து அரசாங்கம். விளைவு, கருத்துப் பரிமாற்றத்திற்கு கடுமையான தடங்கல். முதலில் இணையம் தடை செய்யப்பட்டது (ஜனவரி 27) பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கைத்தொலைபேசிச் சேவையும் (ஜனவரி 28) நிறுத்தப்பட்டது. மக்களைச் சினமூட்டிய இந்த நடவடிக்கைகள் எரியும் கொள்ளியிலிட்ட எண்ணெயாய் வேகமாகப் பரவியது.

எகிப்து அமெரிக்காவின் அணுக்கமான நேசநாடு. அங்கே அரசியல் பதற்றம் நீடிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. எகிப்தில் அரசியல் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது அமெரிக்கா. ஆனால் அதைச் செவியேற்கும் நிலையில் எகிப்தும், அதன் மக்களும் இல்லை. எனவே அமெரிக்காவின் அதிகாரச் சுருதியில் ஆட்டம். கொந்தளிக்கும் மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம் என்று பொத்தாம் பொதுவான வார்த்தைகளுக்கு இறங்கி வர வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு.

ஆர்ப்பாட்டக்காரர்களின் பிடி இறுகுவதைக் கவனித்த ஹோஸ்னி முபாரக் தமது அமைச்சரவையைக் கலைத்தார். எங்களுக்கு அது போதாது, அதிபரே பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பரித்தனர் மக்கள். அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன். செப்டம்பர் வரை தாம் அதிபர் பதவியில் இருப்பேன் என்று இறங்கி வந்தார் முபாரக். ஆயினும் அடங்கவில்லை மக்களின் சீற்றம்.

‘நானும் இருக்கிறேன்’ என்ற சாக்கில் அவ்வப்போது குரல் கொடுத்துக் கொண்டே இருந்தது அமெரிக்கா. ஜனநாயகம், மானிட உரிமை, பொருளியல் சீர்திருத்தம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது. அந்த அறிவிப்பு அமெரிக்காவின் தயக்க நிலையைத் துல்லியமாகக் காட்டியதாகச் சுட்டுகின்றனர் விமர்சகர்கள்.

காரணம், மத்திய கிழக்கு, எகிப்துக்கான அமெரிக்காவின் கொள்கைகள் முரண்பாட்டு மூட்டை. மக்களாட்சி தேவை, மனித உரிமைகள் மிதிக்கப்படக் கூடாது, குடிமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுக்கும் அமெரிக்கா.

மறுபக்கத்தில், கடந்த முப்பது ஆண்டுகளாக எகிப்தை வழி நடத்திய ஹோஸ்னி முபாரக்குக்கு இணக்கமான தோழன். எகிப்தில் இராணுவப் பராமரிப்பு, வளர்ச்சிக்கு கடந்த முப்பது ஆண்டுகளில் அமெரிக்கா ஈந்த தொகை 50 பில்லியனுக்கும் அதிகம். எனவே, எகிப்தில் முபாரக் ஆட்சி முடிவுக்கு வருவதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பியதில்லை. இனியும் விரும்பப் போவதில்லை. வேறு வார்த்தையில் சொன்னால் தன் விரலசைவுக்குக் கட்டுப்படும் மிகச் சரியான பொம்மையைத் தேடுகிறது அமெரிக்கா.

கிஃபாயா மக்கள் இயக்கம், ஏப்ரல் 6 இளையர் இயக்கம் (April 6 Youth Movement), இஸ்லாமியச் சகோதரத்துவ இயக்கம் (Ikhvanul Muslimeen),Al Ghad, Tagammu மற்றும் National Association For Change ஆகிய இயக்கங்கள் எகிப்தின் அரசியல் களத்தில் உள்ளன. இவற்றில் National Association For Change ன் தலைவர் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் முன்னைய தலைவர் முஹம்மத் அல் பராதே. வியன்னாவில் இருந்த அவர், எகிப்தில் அரசியல் சுழல் தொடங்கிய வேளையில் திடீரென்று களத்துக்கு வந்தார். அவர் நீண்ட காலம் வெளிநாட்டிலேயே தங்கியிருந்ததால் எகிப்திய மக்களின் உள்ளத்து உணர்வுகளை அவர் எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருப்பார் என்ற சந்தேகம் மக்கள் மனதில் நீடிக்கிறது.எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்கா அவரை விரும்புவதில்லை. காரணம் அல் பராதே ஈரானுக்கு நெருக்கமானவர். அதனால் அமெரிக்காவை வெறுக்கும் எகிப்திய மக்கள் அவரை ஆதரிக்கலாம். எகிப்தின் அடுத்த தலைவர் யார்? என்பதல்ல விவகாரம். ஆட்சி மாற்றம் அவசியம் என்பதே அவசரம்.

துனீசியாவில் தொடங்கிய அரசியல் எழுச்சி. எகிப்தில் சூடு பிடித்தது. பின்னர் அது ஏமனுக்கும் பரவியது. அடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஜோர்தான், லெபனான், அல்ஜீரியா போன்ற நாடுகளுக்கும் பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எகிப்து அரசியல் குழப்பத்தால் அதிகம் கவலை கொண்டுள்ள இரு நாடுகள் அமெரிக்காவும், இஸ்ரேலும்.

அமெரிக்காவின் கொள்கை வகுப்பதில் இஸ்ரேலியத் தரப்பின் கருத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. எகிப்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு இஸ்ரேலுக்கு எதிரான கொள்கையுடைய அரசாங்கம் வருமோ என்று கவலையில் தவிக்கிறது இஸ்ரேல். எகிப்தின் புதிய அரசாங்கம் முன்னர் செய்து கொள்ளப்பட்ட எகிப்து – இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தை மதித்து நடக்குமா? என்பது இஸ்ரேலின் தலையாய கவலை. ஏனென்றால் எகிப்தியர்கள் பொதுவாக அந்த ஒப்பத்தத்தை எதிர்க்கின்றனர். எனவே புதிய அரசாங்கம் இஸ்ரேலிய பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்படுத்தாதவாறு அமைய வேண்டும் என்று அமெரிக்காவும் நினைக்கிறது.

உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் எகிப்து அரசியல் மாற்றத்தை வரவேற்றனர். எகிப்தின் அதிகார மாற்றத்துக்கான நடவடிக்கைகள், விரைவில் வெளியிடப்படும் என்று உச்ச இராணுவ மன்றம் அறிவித்துள்ளது.

சுமார் 18 நாள்கள் நீண்ட எகிப்திய மக்கள் எழுச்சியில் இராணுவம் நடந்து கொண்ட முறை மெச்சத்தக்கது. மக்கள் எழுச்சி வன்முறையாக உருமாறி விடக்கூடாது என்பதில் இராணுவம் வெகுசிரத்தை எடுத்துக் கொண்டது. ஆட்சி மாற்றம் தேவை என்ற எதிர்வாதம் சொல்லும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து அவர்களின் கோரிக்கைகளை மதித்தது.

வருங்கால எகிப்தின் ஆட்சி மாற்றத்தில் இராணுவத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. உள்நாட்டு, எல்லை தாண்டிய பாதுகாப்பில் இராணுவத்தின் பொறுப்பை எகிப்திய மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

கடந்த ஒரு மாதத்துக்குள் அரபுலகின் மூன்று நாடுகளில் கடுமையான அரசியல் நடுக்கம். துனீசியாவின் அதிபர் ஜைனுல் ஆபிதின் பென் அலி ஆட்சி கவிழ்ந்தது ஜனவரி 14ல். 1987 முதல் பதவியில் இருந்த அவர் 2014 தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று முழங்கியும் மக்கள் அவரைத் தூக்கி எறியும் வரை ஓயவில்லை.

ஏமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் 2013 ல் தாம் பதவியிறங்கப் போவதாக அறிவித்தார். 1978 ல் அந்தப் பொறுப்புக்கு வந்த அவர் 33 ஆண்டுகளாக நாற்காலியை விட்டு நகரவில்லை. அவரை நகர்த்தும் வரை ஓயப்போவதில்லை என்று திரண்டு வருகிறார்கள் மக்கள்.

ஈராக் பிரதமர் நூரி அல் மலிக்கி 2014 தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

எகிப்தின் எதிர்காலம் இன்னும் தெளிவாகவில்லை. மக்கள் எழுப்பிய கேள்விகள் அப்படியே உள்ளன. ஆனால் அவர்களுக்குரிய விடை தெரியும் வரை அவர்கள் ஓயப்போவதில்லை.உலகின் எந்த நாடாக இருந்தாலும் சரி. மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தான் அரசாங்கம். அதைப் புரிந்து கொண்டால் அமைதியான ஆட்சிக்கும், வாழ்வுக்கும் வழி பிறக்கும்.

Monday, February 14, 2011

சமூக “வலை”த்தளங்கள்

இணையம் - உலகின் நீள, அகலத்தைச் சுருக்கி வைத்திருக்கும் தொழில்நுட்பம். வயது வித்தியாசம் இன்றி எல்லாத் தரப்பு மக்களையும் கவர்ந்து இழுக்கும் காந்த சக்தி இணையம். குறிப்பாக, சமூக வலைத்தளங்கள் இன்றைய இளைஞர்களின் பொழுது போக்கு மையம். உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகை வலம் வரும் உல்லாச வாகனம். நேரம் காலம் பார்க்காமல் சமூக வலைத் தளங்களில் உறவாடும் இளையர்களின் எண்ணிக்கை அதிகம். உங்களிடம் Bank Passbook இருக்கிறதோ இல்லையோ, ஒரு Facebook கணக்கு இருந்தால் தான் மனித வர்க்கத்தில் நீங்கள் அடையாளப்படுத்தப்படுவீர்கள். இப்படிப் பலப் புதுமையான கோலங்களை வரைந்து கொண்டிருக்கிறது காலம்.

FaceBook, Twitter, My Space இவை இணையத்தில் உள்ள சில சமூக வலைத்தளங்கள். தொடக்கத்தில் இவற்றுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இல்லை. ஆனால் காலம் போகப் போக சமூக வலைத்தளங்களை நாடாமல் மக்களின் பொழுது போகவில்லை. அவற்றில் செலவிட நேரம் போதவில்லை. அந்த அளவுக்கு மக்களோடு, குறிப்பாக இளையர்களோடு ஒன்றி விட்டன சமூக வலைத்தளங்கள். பழைய நண்பர்களோடு உரையாடுவது, தகவல்களைப் பரிமாறிக் கொள்வது என்று பல பரிமாணங்களைக் கொண்டவை சமூக வலைத் தளங்கள்.

இணையப் பயனாளர்கள் வாரமொன்றுக்கு 4 மணி 36 நிமிடங்கள் சமூக வலைத்தளங்களில் செலவிடுகின்றனர். நாளொன்றுக்குக் குறைந்தது 12 நிமிடங்கள் மின்னஞ்சல் பயன்பாட்டுக்கு ஒதுக்குகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. FaceBook ல் வந்துள்ள செய்திப் பரிமாற்றத்தைப் பார்க்கப் பலரின் மனது அலைபாய்கிறது. கணினி வழியே பார்ப்பதை விட கைத்தொலைபேசி மூலமாகவாவது பார்த்தால் தான் அவர்களுக்கு நிம்மதி.சமூக வலைத்தளங்களில் அதிகப் பயன்பாட்டுக்குரியது Facebook. அதன் நிறுவனர் Mark Zuckerberg, தொடக்கத்தில் தம்முடைய கல்லூரித் தோழர்களை ஒருங்கிணைக்கும் விதத்தில் அவர் அதை உருவாக்கினார். பின்னர் காலத்துக்கேற்ப மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் மேலும் பல கூறுகளை அதில் இணைத்தார்.உலகம் முழுக்கச் சுமார் 500 மில்லியன் பேர் அந்தத் தளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு மின்னஞ்சல் முகவரி இருந்தால் போதும். தேவையான தகவல்களைக் கொடுத்து Facebook ல் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். பல்வேறு சமூகத் தளங்கள் தனித்தனியாகக் கொண்டிருந்த சேவைகளை ஒருமுகப்படுத்திக் கொடுத்தது Facebookன் வெற்றிக்குக் காரணம்.

சில தளங்களில் புகைப்படங்களை மட்டும் தரவேற்றலாம். இன்னும் சிலவற்றில் தகவல்களை மட்டும் பரிமாறலாம். வேறு சிலவற்றில் பேசிக் கொள்ளலாம். மற்றும் சிலவற்றில் ஒளிப்படங்களின் வழியே உரையாடலாம். இப்படித் தனித்தனியாக இருந்த சேவைகளை கிட்டத்தட்ட ஒரே இடத்தில் ஒருங்கிணைத்துக் கொடுத்ததும், அதைப் பல்வேறு நபர்களோடு ஒரே நேரத்தில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததும் FaceBook ன் வெற்றிக்கு அடித்தளம்.

Facebook பற்றிய புகழாரங்களுக்குச் சற்றும் சளைக்காத விதத்தில் அது பற்றிய குறைகூறல்களும் அதிகம். தனிநபர்களின் தகவல்களைத் தெரிந்து கொள்வது, அவற்றைத் திருடிக் கொள்வது, பிறருக்கு விற்று விடுவது, தனிநபர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது இப்படிச் சொல்லப்படும் குற்றப்பட்டியல் வெகு நீளம். இருப்பினும் அந்தத் தளத்துக்கு இருக்கும் வரவேற்புக்குக் குறைவில்லை.

சமூக வலைத்தளங்களில் நம்முடைய சொந்தத் தகவல்களைப் பதிவது பாதுகாப்பானதா? அங்கே நம்முடைய தகவல்களுக்கு முழுமையான பாதுகாப்பு இருக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இணையம் என்பது பெருங்கடல். யார் எப்போது? எங்கிருந்து எப்படியான தகவல்களை உருவிக் கொள்கிறார்கள் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே தொடருகிறது. இப்படியான சூழலில் மிக மிக அவசியமான தன் விவரக் குறிப்புகளை மட்டும் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்வது சுழலில் சிக்குவதில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

பணப் பரிவர்த்தனைத் தகவல்கள், வங்கிக் கணக்கு எண், வீட்டு முகவரி இவற்றைச் சொல்ல வேண்டிய அவசியம் வந்தால், ஒன்றுக்கு இரண்டு முறை முன் யோசனையுடன் செயல்பட்டால் வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்பதைக் குறைக்கலாம்.இணையத்தில் தகவல்களைப் பதியும் போது கூடுதல் அக்கறை அவசர அவசியம். சமூக வலைத் தளங்கள் செயல்படும் முறைகள் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வது இன்பத்தைப் பெருக்கும் இனிய வழிகளில் ஒன்று. FaceBook ல் நம்முடைய தகவல்களை யார் பார்க்கலாம், மறுமொழியிடலாம் என்பதற்கான வரம்புகளை நிர்ணயித்துக் கொள்வது சாத்தியம். அந்த நுட்பத்தை அறிந்து வைத்துக் கொள்வது அனாவசியமான பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.

சமூக வலைத்தளங்களில் நிறையப் பேர் போலியான தகவல்களைக் கொடுத்துக் கொண்டு உலா வருகிறார்கள். குறிப்பாகப் பிரபலங்களின் பெயரில் பலர் இருப்பார்கள். ஆனால் அவர்களில் யார்? உண்மையானவர் என்று கண்டறிவது சவாலான காரியம்.

ஒரு பிரபலமானவரின் பெயரில் தேடிப் பார்த்தால் அதே போன்று பல்வேறு பயனாளர்கள் இருப்பார்கள். அவர்களின் யார் உண்மையானவர் என்பதைத் தெரிந்து தேடித் தெளிவது இருட்டில் ஊசியைத் தேடும் காரியம்.

ஒருவரைத் தோழமையாக்குவதற்கு முன் அவரைச் சந்தித்திருக்க வேண்டும். அல்லது பயனர் கணக்கு உண்மையிலேயே அவருடையது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. பிரபலமானவருடன் நானும் நண்பர் என்று சொல்லிக் கொள்வது சாமானியர்களுக்கு சந்தோஷத்தைத் தரலாம். அது பிரபலமானவர்களுக்குப் பிடிக்குமா? என்பதை நாம் அனுமானிக்க முடியாது.சமூக வலைத்தளங்களால் குடும்பங்களுக்குள் பிரச்சினை அதிகரித்திருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. விவாகரத்துப் பெறுவதற்கு சமூக வலைத்தளங்களும் காரணமாகின்றன என்பது அதிர்ச்சிக்குரிய தகவல். தகவல் தொழில்நுட்பம் சக மனிதர்களுடன் உரையாடும் இடைவெளியைக் குறைத்திருக்கிறது. ஆனால் உறவாடுவதில் இடைவெளியை அதிகரித்திருக்கிறது. அருகில் இருக்கும் சக மனிதனோடு பேசுவதை விட இணையத்தில் பொழுதைக் கழிப்பது இளையர்களின் மனதுக்கு நெருக்கமாமன அம்சமாகி விட்டது. சமூக வலைத் தளங்களில் நடைபெறும் கருத்துப் பரிமாற்றம் சில வேளைகளில் உறவுச் சிக்கலின் தொடக்கப் புள்ளியாக உருவெடுக்கிறது. அதுவே பின்னாளில் குடும்பத்தில், தம்பதியரிடையே சிண்டு முடிந்து குண்டு வைக்கிறது.

கணவன், மனைவி அல்லது பெற்றோர், மகன், மகள் இப்படியான உறவுகளில் சிக்கல்கள் பெருகிக் கொண்டே போவதாகத் திகிலூட்டுகிறது ஆய்வு. உதாரணமாக கணவன் அல்லது மனைவியின் இளமைக்கால நினைவுகள் இருவருக்கும் மறந்து போயிருக்கலாம். Facebook ல் யாரோ ஒருவர் எப்போது நடந்த நிகழ்வைப் பற்றி அல்லது அவர்களின் பட்டப் பெயர்கள் குறித்து இப்படிப் பல விதங்களில் தெரிவிக்கும் கருத்துக்கள் குடும்பக் குத்துவிளக்கைப் புரட்டிப் போட்டுக் குத்தாட்டக் களமாக்கி விடும்.

நினைவுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், கடந்த காலங்களை வண்ணமயமாக்கவும் முன்பு புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அந்தக் காலம் இப்போது ஃபிலிம் சுருள் போலச் சுருண்டு விட்டது. Facebook ல் பகிர்ந்து கொள்வதற்கென்றே புகைப்படங்களை எடுத்துக் கொள்வது இன்றைய இளையர்களின் வாடிக்கை. அதில் தவறில்லை புகைப்படங்களைப் பொதுஇடத்தில் பகிர்ந்து கொள்ளும் போது அதில் இருக்கும் சங்கடங்களை நினைத்துப் பார்க்கத் தவறக் கூடாது. ஒரு புகைப்படப் பகிர்வு உங்கள் வாழ்க்கையை வேடிக்கையாக்கி, ஊழ் வினையாகி அலைக்கழிக்கக் கூடாது.
அருகருகே அமர்ந்திருக்கும் இருவர் நேரில் பேசுவதைத் தவிர்த்து Facebook ல் உரையாடுவதைப் பெருமையாகக் கருதிக் கொள்ளும் காலம் இது. கணினி தட்டச்சுப் பொறியிலோ அல்லது கைபேசிப் பொத்தான்களிலோ எந்நேரமும் உங்கள் விரல்கள் நர்த்தனம் ஆடும் என்ற பெருமைப்பட்டுக் கொள்வது காலம் செய்த கோலமல்ல. உங்கள் கைகளும், மனமும் செய்யும் மாயம். சாதனங்களோடு உங்கள் உறவாடல் தொடங்கி, தொடர்ந்து நீளும் போது சாதனங்களைப் பயன்படுத்துவோரிடம் உங்கள் அன்பின் வெளிப்பாடு குறைந்து, தேய்ந்து, மறைந்து... காலாவதியாகி விடும் ஆபத்து (நி)மறைந்திருக்கிறது. எச்சரிக்கை....

இணையம் மிகப் பெரிய கடல். அதில் எந்தத் தளங்களைப் பார்க்கிறோம், எப்படியான தகவல்களைத் தேடுகிறோம் என்பதைப் பொறுத்து அவற்றுக்கேற்ற விளம்பரங்களும் அடிக்கடி நம்மைத் துரத்தும். இணைய விளம்பரங்களின் ஒளிந்திருக்கும் ஆபத்துகளை மறந்து விடக் கூடாது. விளம்பரங்கள் இளை(ணை)யர்களை வசியப்படுத்தும் தூண்டில். அவற்றின் இருக்கும் அரிதாரத்தைக் கண்டு, உண்மையை உணர மறுத்தால் இலாபம் உங்களுக்கல்ல... வர்த்தக நிறுவனங்களுக்குத் தான்... இம்மாதிரியான பரிவர்த்தனைகளில் நிரந்தர நஷ்டவாளி... சாட்சாத்.. நீங்களாகத் தான் இருப்பீர்கள்.உலகம் முழுக்க சுமார் 200 மில்லியன் பேர் கைத்தொலைபேசிகளின் வழியே FaceBook இணையத் தளத்தை நாடுகிறார்கள். முந்தைய ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 65 மில்லியனாக இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது.

இளைய தலைமுறையினர் இணையத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இனி வருங்காலம் இணையம் மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும். அவற்றின் நன்மை தீமைகளைப் பெற்றோரும் அறிந்து வைத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும். புதிய தொழில்நுட்பத்தைப் புறக்கணிப்பதை விட அது பற்றித் தெரிந்து கொள்வது நன்மையை அதிகமாக்கும்.

பொதுவாக இணையத்தில் உலா வரும் போது நம்மைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. நாம் பயன்படுத்தும் இணையத் தளங்களும், மூன்றாம் தரப்பும் அதைச் செய்கின்றன. நமக்குத் தெரியாமல் அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல் திருட்டைத் தடுக்கப் பல்வேறு மென்பொருட்கள் இருக்கின்றன. அண்மையில் Stanford பல்கலைக் கழக பட்டதாரிகள் “Do Not Track” என்ற மென்பொருளை வடிவமைத்துள்ளனர்.

குறிப்பிட்ட தளங்களில் உலாவரும்போது தன்னைக் கண்காணிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் விசையைச் சேர்த்துக்கொள்ள புதிய மென்பொருள் வகை செய்கிறது. பயனீட்டாளர்கள் அந்த விசையை அழுத்தினால் போதும். எனினும் அந்த முறை செயல்பட இணையச் சேவை நிறுவனமும் ஒத்துழைக்க வேண்டும். விளம்பரதாரர்களும் ஒப்புக்கொண்டால் தான் இதனை முழுமையாகச் செயல்படுத்த முடியும் என்கின்றர் இணைய நிபுணர்கள். மென்பொருட்களின் உதவியை நாடுவதை விட நாம் கொஞ்சம் கவனமாக இருந்தால் பல விதமான நெருக்கடிகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இணையம் இதயங்களை இணைக்கும் மந்திரச் சொல். இணையத்தின் வழியே உறவுகளை இணைக்கும் பாலமாகத் திகழ்கின்றன சமூக வலைத் தளங்கள். நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியில் இவற்றுக்குத் தனியிடம் உண்டு. ஒரு நாட்டின் அரசியல் மாற்றத்துக்கும் சமூக வலைத் தளங்கள் அடித்தளமிடுகின்றன. காதலுக்கு மட்டுமல்ல, புரட்சிக்கும் வித்திடுகின்றன சமூக வலைத்தளங்கள். இதற்கு, அண்மைய சாட்சி எகிப்து அரசியல் நெருக்கடி.

உறவுகளுடனான நெருக்கம், உணர்வுகளை மதிக்கும் பண்பு, உரிமையோடும், அக்கறையோடும் நம் சங்கடங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கிடைக்கும் ஆறுதல்... இவற்றில் எது வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி நாமே. அதை மறந்து விட வேண்டாம்.