Wednesday, February 14, 2007

இரு (ம)ரணங்கள் :( :( :(

இரு மரணங்கள்அண்மையில் என்னை உலுக்கியெடுத்த மரணங்களாக இரண்டைக் குறிப்பிடலாம். அதில் தொடர்புடைய இருவருடனும் எனக்கு நேரிலோ, தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ எந்தத் தொடர்பும் இல்லை. நண்பர்கள் வழியாகவும், இணையத்தில் மூலமாகவும் என் இதயத்துக்குள் வந்தவர்கள் அவர்கள்.

முதலில் தேனீ ஒருங்குறி வடிவமைத்த உமர் தம்பி காக்கா....

1953 ஜுன் 15 ல் இம் மண்ணில் பிறந்து, 2006 ஜுலை 12 வரை வாழ்ந்து மறைந்தவர். சொந்த ஊர் அதிராம்பட்டினம், தஞ்சை மாவட்டம். அங்குள்ள காதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றவர். பல்வேறு பணிகளைத் திறம்படச் செய்து இறுதியில், இணையத்தில் தமிழை இடம் பெறச் செய்வதற்கு மனப்பூர்வமாகத் தொண்டாற்றியுள்ளார். அவர் பற்றிய முழுமையான தகவல்களுக்கு....

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%...AE%AA%E0%AE%BF

அடுத்து சாகரன் என்ற கல்யாண்....

1975, ஜுலை 22 ஆம் நாள் தஞ்சை மாவட்டம் கொரடாச்சேரியில் பிறந்தவர். கல்லூரிப் படிப்புக்குப் பிறகு சவூதி அரபியாவில் பணியாற்றினார். இணையத்தில் தமிழைப் பரப்புவதில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்ட பெருமகனார். சென்ற 2007 பிப்ரவரி 11 அன்று காலமானார். அவர் பற்றிய தகவல்களுக்கு....

http://www.muthamilmantram.com/showthread.php?t=18585http://www.muthamilmantram.com/showthread.php?t=18596http://icarusprakash.wordpress.com/2007/02/11/shockinghttp://pithatralgal.blogspot.com/2007/02/192.htmlhttp://valai.blogspirit.com/archive/...11/kalyan.htmlhttp://blog.thamizmanam.com/archives/84http://thulasidhalam.blogspot.com/20...g-post_12.htmlhttp://muthamilmantram.blogspot.com/...blog-post.htmlhttp://theyn.blogspot.com/2007/02/blog-post_8610.htmlhttp://balabharathi.blogspot.com/200...g-post_12.htmlhttp://masivakumar.blogspot.com/2007...g-post_12.htmlhttp://wethepeopleindia.blogspot.com...post_8206.htmlhttp://poonspakkangkal.blogspot.com/...g-post_12.htmlhttp://techtamil.blogspot.com/2007/02/blog-post.htmlhttp://vicky.in/dhandora/?p=305http://surveysan.blogspot.com/2007/0...post_4044.htmlhttp://muthukumaran1980.blogspot.com...g-post_12.htmlhttp://kuzhali.blogspot.com/2007/02/blog-post_12.htmlhttp://paransothi.blogspot.com/2007/...g-post_12.html

பிப்ரவரி 11 திங்கள் காலை அலுவலகம் புறப்பட்டு பேருந்துக்காகக் காத்திருந்த வேளை முத்தமிழ் மன்றத்தின் சுதாகர் அண்ணா அலைபேசியில் அழைத்து விவரம் சொன்னார். செய்தி கேட்டதுமே மாளாத் துயரம் இதயத்தில் மண்டியது. யாரோ முகம் தெரியாத சாகரனுக்காக ஏன் என் மனம் இப்படி அடித்துக் கொள்கிறது? விளங்கவில்லை. அன்பர் உமர் தம்பியின் மரணச் செய்தி கேட்ட கணமும் என் மனநிலை அப்படித்தான் இருந்தது.

அவர்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது. இணையத்தமிழ் எங்களை இணைத்து வைத்திருக்கிறது. அது தான் இணையத்தின் சக்தி. நெருக்கமானவர்களோடு நம் தாய்மொழியில் கருத்துப் பரிமாற அவர்களும் துணை நின்றிருக்கிறார்கள் என்ற ஆதாயம் ஒன்றைத் தவிர அவர்களுக்கும் எனக்கும் உறவொன்றுமில்லை.உமர் தம்பியின் மறைவு ஏற்படுத்திய காயமே இன்னும் மறையாத நிலையில், சாகரனின் இழப்பு தமிழ் இணைய ஆர்வலர்கள் மத்தியில் மாறாத வடுவை ஏற்படுத்தி இருக்கிறது.

மிக இளம் வயதில் ஏற்பட்டுள்ள அந்த இருவரின் மரணங்களும் பல கேள்விகளை முன் வைக்கிறது. இணையத்தில் தமிழ் பரப்ப ஆர்வம் கொண்ட அனைவரும் தங்கள் அலுவலக நேரம் போக மீதமுள்ள ஓய்வு நேரத்தில் தான் கணிணியில் காலம் கழிக்கின்றனர். அது அவர்களுடைய மனதில் கூடுதல் அழுத்தத்தைத் தருகிறதோ என்ற எண்ணத்தைப் புறந்தள்ள முடியவில்லை.

இணைய வெளியில் உலவும் போது, முகம் தெரியாத நிலையில், சம சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு படிப்படியாய் தங்கள் எண்ணப் பரிமாற்றங்களால் ஒரே அலைவரிசையில் பயணிக்கும் வகையில் கைகோர்க்கிறார்கள். பணிச்சூழல் காரணமாக உறவுகள், நண்பர்கள் யாவரையும் விட்டு வெகுதூரம் அயல் தேசத்தில் விலகி நின்றாலும், இணையம் தான் முகமறியாத புது உறவுகளைத் தருகின்றது. அதன் விளைவு தங்கள் உடல்நலனில் அதிக அக்கறை எடுக்காமல் வழக்கம்போலவே உரையாடுவதில் முனைப்புக் காட்டுகின்றனர்.

ரியாதில் சாகரன் உறுப்பினராக உள்ள மன்றம்(தஃபர்ரக்) தான் நமது அன்பு அறிவிப்பாளர். திரு.பி.ஹெச். அப்துல் ஹமீது. திரு.அப்துல் ஜப்பார் ஆகியோரை சவூதி அரபியாவுக்கு அழைத்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் நடித்த ஆக்ராவின் கண்ணீர் என்ற ஒலிநாடகம் ரியாதில் அரங்கேறியது. அதில் பங்கேற்ற கிரிக்கெட் வர்ணனையாளர் திரு.அப்துல் ஜப்பார் சாகரன் பற்றிய தன் நினைவுகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்.

நாடகத்தில் என்னுடைய உணர்ச்சிகரமான நடிப்பை அனைவரும் ரசித்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் என்னிடம் வந்து பேசிய சாகரன், அய்யா, உங்கள் வயதுக்கு நீங்கள் இவ்வளவு உணர்ச்சிப் பெருக்கு காட்டக்கூடாது. அது நடிப்பாக இருந்தாலும் சரி. உங்கள் உடல்நலனிலும் அக்கறை செலுத்துங்கள் என்றார். பாவம், சாகரன் தன் உடல்நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள மறந்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று சொன்னார் திரு.அப்துல் ஜப்பார்.

யாரைச் சந்தித்தாலும் தங்களைப் பற்றிய அழுத்தமான தடங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள் சாகரனும், உமர்தம்பியும். அதற்கு அவர்களைப் பற்றிய இணையப் பதிவுகளே சாட்சி. அவர்கள் மறைந்தாலும் இணையக் கடலில் அவர்கள் விட்டுச் சென்ற அலை நம் இதயக் கரைகளை என்றென்றும் தொட்டுச் செல்லும்.......

2 comments:

  1. //அது அவர்களுடைய மனதில் கூடுதல் அழுத்தத்தைத் தருகிறதோ என்ற எண்ணத்தைப் புறந்தள்ள முடியவில்லை
    //
    உண்மைதான், சாகரன் மரணச்செய்தி கேள்விப்பட்டதினத்திலிருந்து இது என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றது, ஆமென்று ஆமோதிக்கவும் இயலவில்லை, இல்லை என்று புறந்தள்ளவும் இயலவில்லை...

    நன்றி

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும்
    பின்னூட்டுத்துக்கும்
    நன்றி குழலி.

    ReplyDelete