Saturday, March 3, 2007

நட்புக்காலம் 3

13) பார்வையாளர் நாள்.
குளித்துக் கொண்டிருந்த நீ
வருகிற வரை
எனக்குத்
துணையாய் இருந்த
உன் விடுதி
அணிலுக்கு
இப்போதும்
நினைவிருக்குமா
நம்மை.

**********

14) எனது காதலியை
உனக்கு நான்
அறிமுகம் செய்து
வைத்த போது

நீ
விழுங்கிய
எச்சிலில்
இருந்தது
நமக்கான நட்பு.

**********

15) எனக்குத் தெரியும்
நீ சாப்பிடும்
நேரத்தின்
கடைசிக் குவளை
தண்ணீரில்
இருக்கிறேன்
நான்.

**********

16) நம்மைப் பற்றிய
ஆசிரியர்களின்
அய்யங்களுக்குத்
துணையாய்
நூல்களைப்
படபடக்கச் சொல்லிவிட்டு
இயல்பாய்
பேசிக்கொண்டிருந்தோம்
நாம்.

**********

17) அந்த மொட்டைமாடியின்
வெளிச்சம் குறைந்த
இரவின்
தனிமையில்
நம்மை அருகருகே
படுக்க வைத்துவிட்டு

நாம் பேசிக்கொண்டே
போய் வந்த
நட்பின்
பாதைகளைத்தாம்
பகலில்
வண்ணத்துப் பூச்சிகள்
வரைந்து பார்க்கின்றன.

**********

18) நீ மெயப்பித்த
பெண்மையிலிருந்து
வாய்த்தது
நான் மதிக்கும்
ஆண்மை.

**********

19) அந்த நீண்ட பயணத்தில்
என் தோளில் நீயும்
உன் மடியில் நானும்
மாறிமாறி
தூங்கிக்கொண்டு வந்தோம்.

தூங்கு என்று
மனசு சொன்னதும்
உடம்பும் தூங்கிவிடுகிற
சுகம்
நட்புக்குத்தானே
வாய்த்திருக்கிறது.

**********

20) இதயம் சேகரித்துக்
கொண்டிருந்த
வானத்தில்
நீ
பறக்கத் துடிக்கையில்
அசைந்த புற்களின்
நடுவேதான்
அமர்ந்திருந்தது
நம் நட்பின்
முதல் நாள்.

**********

No comments:

Post a Comment