Saturday, March 3, 2007

நட்புக்காலம் 5

26) அம்மா அப்பாவிடம்
அறிமுகப்படுத்த
முதன்முதலாக என்னை நீ
உனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றிருந்த போது
வழக்கமான அம்மாக்களின்
சந்தேகத்தையொத்த
பரிமாறலுக்கு நடுவே...

எப்போதும் இவன் உன்
மருமகனாக முடியாது
ஏனெனில் இவன்
என் நிச்சயிக்கப்பட்ட
நண்பன்.

இப்போதும் கேட்கிறது
உன் குரல்
எனக்குள்.

************

27) சன்னலில்லாத
விடுதி அறையும்
அட்டவணைச்
சமையலும்
நம்மை
வாடகை வீடெடுக்க
வைத்தன
கல்லூரிக்கு வெளியே.

அறைக்குள் வந்து
இல்லறத்திற்குக்
கூடு தேடும்
இந்தச்
சிட்டுகளுக்குத் தெரியுமா
நம் நட்பு?

************

28)எனக்கு
மட்டும் என்று
குவிகிற
மையத்தையே
காம்பாக்கிக்
கொண்டு
வெளிவாங்கிப்
பூக்கிறது நட்பு.

************

29) நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில் தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை.

************

30) நண்பர்கள்
என்றவர்கள்
காதலர்களாகியிருக்கிறார்கள்.

எனக்குத் தெரிய
அண்ணன்
தங்கை என்று
ஆரம்பித்தவர்கள்
கணவன்
மனைவியாகவும்
ஆகியிருக்கிறார்கள்.

ஆனாலும் சொல்கிறேன்
உண்மையான நட்பு
என்பது
நம்மைப்போல் என்றும்
நட்பாகவே
இருப்பது தான்.

************

No comments:

Post a Comment