Saturday, March 3, 2007

நட்புக்காலம் 4

21) போக்குவரத்து
நெரிசல்மிக்க
அந்தச் சாலையோரத்தில்
நாம்
பேசிக்கொண்டிருந்தபொழுது
எத்தனை முறை
காதுகளுக்குத்
திரும்பினோம் என்று
சொல்லிவிட முடியுமா
உன்னால்.

**********

22) உனக்கான பதில்களை
என்னிடமிருந்து நீ
எதிர்பார்க்காமல்
பேசுகிறபோதெல்லலாம்
தலைமுறைகளைத்
தாண்டிய
நம் பாட்டிகளின்
உறைந்து கிடக்கும்
மௌனங்கள் அனைத்தையும்
நீ உருக்கிக் கொள்கிறாய் என்றே
நான் கருதுகிறேன்.

**********

23) எதைப் பற்றித்தான்
நாம்
பேசிக்கொள்ளவில்லை.

காதல் காமம்
குல்சாரி
ஆழிப்பேரலை
பெரியார்
அகிரா குரசோவா
புல்லாங்குழுல்

காற்றுள் மிதக்கும்
நம் உரையாடல்களை
மீட்க
நாளையேனும்
ஒரு கருவி
கிடைக்குமா?.

**********

24)சேர்ந்து நிழற்படம்
எடுத்துக்கொண்டு
அடிக்கடி மடல்
எழுதுவதாகச்
சொல்லிக்கொண்டு
பிரிகிற நட்பின் வலியை
மறைத்துக்
கொள்வதற்காகத்தான்
துணைவியிடமும்
பேத்திகளிடமும் கூட
சிரிக்கச் சிரிக்கப்
பேசுகிறார்கள்
இவர்கள்.

**********

25) பேருந்து
நிறுத்தத்திற்குச்
சற்றுத் தள்ளி நின்று
பேசுகிறவர்கள்
காதலர்கள்.

நிறுத்தத்திலேயே
நின்று
பேசுகிறவர்கள்
நண்பர்கள்.

No comments:

Post a Comment