Monday, December 28, 2009

உலகம் 2009 - பகுதி 3

இந்த ஆண்டு ஜப்பானில் ஒரு வரலாற்றுத் திருப்பம். அது நடந்தது ஆகஸ்ட் மாதம். அப்போது அங்கு நாடாளுமன்றத் தேர்தல். சுமார் ஐம்பது ஆண்டு காலச் சரித்திரம் அந்தத் தேர்தலில் மாற்றம் கண்டது. இதுநாள் வரை எதிர்த் தரப்பாக இருந்த ஜனநாயகக் கட்சிக்கு மகத்தான வெற்றி.

ஜப்பான் நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 480. ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது 308 இடங்கள். அக்கட்சியின் வரலாற்றில் இது ஒரு மாபெரும் திருப்பு முனை. ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்தது ஜனநாயகக் கட்சி.

முன்னைய பிரதமர் தாரோ அஸோவின் மிதவாத ஜனநாயகக் கட்சிக்கு இம்முறை பேரிழப்பு. இந்த ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி 119 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. சென்ற தேர்தலில் அக்கட்சி 300 க்கும் அதிகமான இடங்களை வெற்றி கொண்டது.



மிதவாத ஜனநாயகக் கட்சியின் வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத பேரிடி. தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று முன்னையப் பிரதமர் தாரோ அஸோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஜப்பானின் புதிய பிரதமராக யூகியோ ஹட்டோயாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 327 உறுப்பினர்கள் ஹட்டோயாமாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பிலிப்பீன்சில் இந்த ஆண்டு கடுமையான சோதனை. கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீசியது "கெட்சானா" சூறாவளி. விளைவு. கடுமையான மழை. அதைத் தொடர்ந்து வெள்ளம்.

தலைநகர் மணிலாவின் எண்பது விழுக்காட்டு இடங்களில் வெள்ளக்காடு. ஒரு மாத காலத்தில் பெய்ய வேண்டிய மழை, ஆறே மணி நேரத்தில் பெய்து கெடுத்தது.

பிலிப்பீன்ஸ் தண்ணீரில் மிதந்தது. அங்குள்ள மக்கள் கண்ணீரில் மிதந்தனர்.



முந்நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். கால் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். தலைநகர் மணிலா உள்ளிட்ட 24 மாநிலங்களில் பேரிடர் நிலையை அறிவித்தது பிலிப்பீன்ஸ் அரசாங்கம்.

பிலிப்பீன்சைத் தொடர்ந்து இந்தோனேசியாவிலும் இந்த ஆண்டு சோதனைக் காலம். அவ்வப்போது அதிர்ந்தது பூமி. ரிக்டர் அளவில் 5 புள்ளிகளைத் தாண்டின அதிர்வுகள். சிலமுறை சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. பின்னர் பேரழிவு எதுவும் இல்லாமல் அது மீட்டுக் கொள்ளப்பட்டது.




அவ்வப்போது ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகினர். இந்தோனேசிய நில நடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூரிலும் உணரப்பட்டது.

2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை எங்கே நடத்த வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில்.

ஒலிம்பிக் போட்டிகளை நடத்தச் சாதகமான அம்சங்கள் கொண்ட நகரங்களாக அமெரிக்காவின் சிக்காக்கோ, ஸ்பெயினின் மாட்ரிட், ஜப்பானின் டோக்கியோ, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ ஆகிய நான்கு நகரங்கள் பட்டியலில் முன் நின்றன. ஆனால், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவுக்குக் கிடைத்தது அந்த அரிய வாய்ப்பு.



தென்அமெரிக்க நாடு ஒன்றில் ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பது இதுவே முதல் முறை. ஒலிம்பிக் வாய்ப்பு பெற்றதையடுத்து பிரேசில் முழுவதும் ரசிகர்கள் ஆடிப்பாடி உற்சாகமாகக் கொண்டாடினர்.

2007 ஆம் ஆண்டின் இறுதியில் உலகப் பொருளியலை ஆட்டங்காணச் செய்தது நிதிச் சுனாமி. அதுபோன்ற ஒரு நிகழ்வு இந்த ஆண்டு நவம்பரில். ஆனால் இம்முறை பாதிப்பட்டது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் ஒன்றான துபை.



நவம்பர் இறுதி வாரத்தில் Dubai World நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அது உலகச் சந்தைகளை ஆட்டங்காண வைத்தது. Dubai World முதலீட்டு நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட 60 பில்லியன் டாலர் கடன் உள்ளது. அதனைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத கால அவகாசம் கேட்டது. அதன் எதிராலியாக உலகப் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்.

சில நாட்களுக்குப் பிறகு 26 பில்லியன் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டங்களை அறிவித்தது Dubai World. அதைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் ஒரு மீட்சி.

Dubai World ன் கடனுக்குத் தான் பொறுப்பேற்க முடியாது என்று அறிவித்தது துபை அரசாங்கம். அதைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் மீண்டும் ஒரு சறுக்கல். இறுதியில் அருகிலுள்ள அபூதாபி கைகொடுத்தது. துபை வேர்ல்டின் கடனைத் திருப்பிச் செலுத்த பத்து பில்லியன் டாலர் தருவதாக அறிவித்தது அபூதாபி.

இந்த ஆண்டின் அமைதிக்கான நொபேல் பரிசைப் பெற்றார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. அந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதும் பல்வேறு விமர்சனங்கள்.
ஒபாமா உலக மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்த முயன்று வருகிறார். அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்க பாடுபடுகிறார். எனவே, அவருக்கு நொபேல் பரிசு என்று அறிவித்தது விருதுக் குழு.


இந்தப் பரிசைப் பெறத் தன்னை விட அதிகம் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று ஒபாமா குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தான், ஈராக் போர் பற்றியும் அவர் பேசினார். ஆயுத மோதல்களுக்கு எப்படிப்பட்ட விலை கொடுக்க வேண்டி வரும் என்பதை தாம் அதிகம் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

ஆப்கானிஸ்தான் போருக்குக் கூடுதலாக முப்பதாயிரம் அமெரிக்கப் படையினரை அனுப்பப் போவதாக ஒபாமா அறிவித்தார். அமைதிக்கான நொபேல் விருது பெற்றவர் ஏன் போரை ஆதரிக்கிறார் என்ற கேள்வியை எழுப்பியது விமர்சன வட்டாரம்.

அதற்கு விருது மேடையிலேயே பதிலளித்தார் ஒபாமா. பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றச் சில நேரங்களில் போரிட வேண்டியது அவசியம் என்றார் அவர். அணு ஆயுதங்களை ஒழிப்பதிலும், பருவநிலை மாற்றம் தொடர்பான கருத்துக்களிலும் தமது லட்சியங்கள் நிறைவேறும்போது, இந்த விமர்சனம் முற்றிலுமாக மறைந்து விடும்' என்றார் ஒபாமா.



வேதியலுக்கான நொபேல் பரிசைப் பெற்றவர் விஞ்ஞானி வெங்கட் ராமகிருஷ்ணன். அவர் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்தியர். அமெரிக்காவின் தாமஸ் ஸ்டீட்ஸ், இஸ்ரேலின் யெடா யோனத் ஆகியோரும் ராமகிருஷ்ணனோடு அந்த விருதைப் பகிர்ந்து கொண்டனர். புதிய நோய் எதிர்ப்பு மருந்துகளை உருவாக்குவதில் அவர்களுடைய ஆய்வு முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த ஆண்டின் இறுதியில் உலகின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தது பருவநிலை மாநாடு. டென்மார்க்கின் கோபன் ஹேகன் நகரில் அது நடந்தது. உலக நிறுவனத்தில் அங்கம் பற்றுள்ள அத்தனை நாடுகளும் அந்த மாநாட்டில் சங்கமம். உயர்ந்து வரும் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்துவது, காற்றுத் தூய்மையைக் குறைப்பது, இயற்கையைக் காப்பாற்றத் திட்டங்கள் வகுப்பது ஆகியன மாநாட்டின் முக்கிய நோக்கம். ஆனால் அது நிறைவேறியதா?

கேள்விக்குறி தான்.



வளர்ச்சியடைந்த நாடுகள் தாங்கள் வெளியேற்றும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்துவது குறித்து சட்டப்படி எந்த முடிவும் தீர்மானத்தில் இல்லை என்று குற்றம் சாட்டின வளரும் நாடுகள்.

கரியமில வாயு வெளியேற்றத்தை சட்ட ரீதியாக கட்டுப்படுத்த வேண்டும் என்கிறது 1997-ம் ஆண்டின் "கியோட்டோ" ஒப்பந்தம். அது 2012-ம் ஆண்டு நிறைவடைகிறது. ஆனால் அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து எந்தப் பதிலும் புதிய தீர்மானத்தில் இல்லை என்பது ஏழை நாடுகளின் குமுறல்.

பருவ நிலை மாநாட்டின் இறுதி அறிக்கை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தைக் கட்டுப்படுத்த அனைத்துலக, தேசிய அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கியது. அத்துடன் வளரும் நாடுகளும், ஏழை நாடுகளும் அதை எதிர்கொள்வது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தது.

இருப்பினும் மாநாட்டில் சட்ட ரீதியில் அனைத்து நாடுகளையும் ஒப்புக் கொள்ள வைக்கும் தீர்மானம் எட்டப்படவில்லை. அதற்கு மாறாக சட்ட நிர்பந்தம் இல்லாத தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு ஏழை நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால் கோபன்ஹேகன் மாநாட்டின் மூலம் எந்த முழுமையான செய்தியும் உலகுக்குக் கிடைக்கவில்லை.

அதிர்ச்சி! ஆனந்தம்! ஏக்கம்! ஏமாற்றம்! இப்படிக் கலவையான உணர்வுகளைத் தந்து விட்டு விடைபெறுகிறது 2009. பிறக்கவிருக்கும் புத்தாயிரத்தின் பத்தாவது ஆண்டு மகிழ்ச்சியை நிறைவாகக் கொண்டு வந்து சேர்க்கும் என்பது நம்பிக்கை. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

No comments:

Post a Comment