Tuesday, December 8, 2009

மீண்டும் பாயுமா துபாய்?

சென்ற ஆண்டின் இறுதியில் உலகைச் சுழற்றி அடித்த பொருளியல் சுனாமி தற்போது தான் ஓயத் தொடங்கியுள்ளது. இப்போது மீண்டும் ஓர் ஓலம். இம்முறை அந்தக் குரல் எழுந்திருப்பது ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் ஒன்றான துபாயில் இருந்து. நவம்பர்’09 இறுதி வாரத்தில் துபாய் அரசாங்கத்திற்குச் சொந்தமான Dubai World ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அது உலகச் சந்தைகளை ஆட்டங்காண வைத்தது. Dubai World முதலீட்டு நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட 60 பில்லியன் டாலர் கடன் உள்ளது. அதனைத் திருப்பிச் செலுத்த ஆறு மாத கால அவகாசம் கேட்டது. இந்தத் திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம்?

குறுகிய காலகட்டத்துக்குள் அதிக வளர்ச்சியைப் பெற்று விட வேண்டும் என்ற நோக்கில் தங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தினார்கள். ஆனால் உலகப் பொருளியல் நெருக்கடி அவர்கள் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டது. எதிர்பார்த்த வருமானம் வந்து சேரவில்லை. அதனால் வெளி நாட்டு வங்கிகளிடம் வாங்கிய கடனுக்குரிய வட்டியைச் செலுத்த முடியவில்லை. முதலைத் திருப்பித் தரவேண்டிய நிர்ப்பந்தம். வருமானத்துக்கும், இலாபத்துக்கும் இடையே விழுந்தது பெரிய பள்ளம். இதுவே துபாய் நிதி நெருக்கடிக்குரிய அடிப்படக் காரணம்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் துபாய் சற்று வித்தியாசமான நாடு. மேற்குலகின் சாயலை உள்வாங்கிக் கொண்டு செழித்து முன்னேறிய வளைகுடாப் பிரதேசம். விண்ணை முட்டும் கட்டடங்கள். நுகர்வோரை மயக்கும் வணிக வளாகங்கள். கேளிக்கைப் பூங்காங்கள் என்று அதன் சிறப்பை அடுக்கிக் கொண்டே போகலாம். மத்திய கிழக்கின் பிற நாடுகளோடு ஒப்பிடும் போது துபாயில் எண்ணெய் வளம் குறைவு. இருப்பினும் அந்த நாடு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்தது எப்படி?




ஐக்கிய அரபுச் சிற்றரசில் மொத்தம் 7 மாநிலங்கள். தலைநகரம் அபுதாபி. துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன்,ஃபுஜைரா, மற்றும் ராசல்கைமா என்பன மற்ற மாநிலங்கள். இவற்றில் துபாயில் எண்ணெய் வளம் மிகக் குறைவு. இன்னும் இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு எண்ணய் என்பது வரலாற்றில் குறிப்பிடப்படும் ஒரு பொருளாகிப் போய்விடும்.

1998 ல் துபாயின் பொருளாதார வளர்ச்சி இரண்டு விழுக்காடு. அதை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் திட்டம். அதன் பொருட்டு மூன்று துறைகளில் கவனம் செலுத்தத் தீர்மானித்தது துபாய் அரசாங்கம். ஒன்று வர்த்தகம். இரண்டாவது கட்டுமானத்துறை. ஹோட்டல்ஸ், உல்லாசத் தலங்கள், வணிக வளாகங்கள், கேளிக்கைப் பூங்காக்கள் ஆகியவற்றைக் கட்டி வெளிநாட்டினரை ஈர்க்கலாம் என்று கணித்தது. மூன்றாவதாக மத்திய கிழக்கின் வணிகக் கேந்திரமாக துபாயை உருவாக்க வேண்டும் என்பதும் அவர்களுடைய தொலைநோக்கு.

பொருளியலைப் பெருக்கும் அத்தனை காரியங்களிலும் கவனம் செலுத்தினார்கள். அதற்குக் கிடைத்தது கை மேல் பலன். சென்ற ஆண்டு துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எண்ணெய் வருவாய் 6 விழுக்காடு மட்டுமே. மத்திய கிழக்கில் எண்ணெய் வளம் சாராத நாடு துபாய் மட்டுமே என்ற நிலையை படிப்படியாக எட்டிப் பிடித்து விட்டார்கள்.

கட்டடக் கட்டுமானம் மூலம் துபாய்க்குக் கிடைக்கும் வருமானம் 22 விழுக்காட்டுக்கும் அதிகம். வர்த்தகம் மூலம் வருவது கிட்டத்தட்ட 16 விழுக்காடு. பல்வேறு நிதிச்சேவைகளின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் 11 விழுக்காடு. உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் துபாயின் தலையில் விழுந்தது பேரிடி.


Dubai World என்ற அரசாங்க முதலீட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதி அல் நகீல். கட்டுமானத்துறையில் இந்நிறுவனம் தான் ஜாம்பவான். உலகின் மற்ற நாடுகளில் கிளை பரப்ப ஆசைப்பட்டது Dubai World. விளைவு, வெளிநாடுகளில் தங்கள் முதலீடுகளைப் பெருக்கினார்கள். லண்டனில் ஒரு துறைமுகம். நியூயார்க்கில் ஒரு வணிக வளாகம். இப்படிப் படிப்படியான விரிவாக்கம். கொட்டத் தொடங்கியது பணமழை.

சுபயோக சுபதினத்தின் இராகு காலத்தில் அமெரிக்காவில் ஏற்பட்டது நிதிச்சுனாமி. அதில் சிக்குண்டது துபாய். இந்த ஆண்டின் ஃபிப்ரவரியில் சுற்றுலா வருமானம் சுருங்கியது. பணப் புழக்கம் குறைந்தது. மக்கள் வாங்கும் திறனை இழந்தனர். முன் கை நீட்டியவர்கள் முட்டுக்கையை நீட்ட வேண்டிய கட்டாய நிலை. கட்டுமானத்துறையும் ஆட்டம் கண்டது. சொத்துச் சந்தை படுத்து விட்டது. கிட்டத்தட்ட 60, 70 விழுக்காடு அளவுக்கு பெரும் வீழ்ச்சி. இதனால் நிறையக் கட்டுமானத் திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன. பல நிறுவனங்களில் ஆட்குறைப்பு. வேலையிழப்பு. இப்படி அடிக்கு மேல் அடி.




துபாயின் பொருளியல் வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்த Dubai World இப்போது கடன் சுமையால் தத்தளிக்கிறது. வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த அவகாசம் கேட்டிருக்கிறது. தனக்குள்ள 26 பில்லியன் டாலர் கடனை மாற்றியமைக்கும் யோசனைகளை வெளியிட்டது. அதன் மூலம் பங்குச் சந்தைகள் ஓரளவுக்கு நிமிர்ந்துள்ளன. Dubai World ன் கடனுக்குப் பொறுப்பேற்க முடியாது என்று துபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடியைப் போன்ற நிலையை மீண்டும் உருவாக்குமா?

அப்படி ஒப்பிட முடியாது. அமெரிக்க நிதிச் சுழலில் ஏற்பட்ட இழப்பு டிரில்லியன் டாலருக்கும் அதிகம். துபாயில் அப்படியல்ல. 60 பில்லியன் டாலர் தான். சரி. இனி என்னாகும்? அமெரிக்க அரசாங்கம் நிதியைக் கொடுத்து நிறுவனங்களைக் காப்பாற்றியது போல் துபாயில் நடக்குமா? அப்படிச் செய்ய முடியாது என்று துபை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்து விட்டது. காரணம் அவர்களிடம் இருக்கும் கையிருப்பும் குறைவு. ஆனால் அபுதாபி அரசாங்கம் நிச்சயம் ஏதாவது செய்யும் என்பது பொருளியல் நிபுணர்களின் நம்பிக்கை. காரணம், Dubai World கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் முதலில் பாதிக்கப்படுவது அபுதாபி வங்கிகள் தான். எனவே இக்கட்டான சூழலில் அவர்கள் கை கொடுப்பார்கள் என்பது நிபுணர்களின் கணிப்பு.

வர்த்தகம் என்பது இருவழிப் பாதை. அதில் லாபம் வரும் போது அதன் பலனை அனுபவிக்கும் நிறுவனங்கள், நஷ்டம் வரும் போது மட்டும் அரசாங்க உதவியைக் கோருவது பிரச்சினைக்குரிய தீர்வல்ல என்பது சில பொருளியல் நிபுணர்களின் கருத்து.

Dubai World ன் கடனுக்கு அரசாங்கம் பொறுப்பேற்காது என்று அறிவித்தது தீர்க்கமான முடிவு என்பது சில நிபுணர்களின் கூற்று. முதலீடு செய்யும் போதே, அதனால் வரக்கூடிய வருமானமோ, நஷ்டமோ இரண்டையும் தாங்கிக் கொள்ளும் மனப்போக்குடன் தான் முதலீடு செய்ய வேண்டும். அதில் லாபம் வந்தால் எங்களுக்கு. நஷ்டம் வந்தால் நாட்டில் உள்ள அரசாங்கம் ஈடுகட்டி விடும் என்று எதிர்பார்த்து முதலீடு செய்யும் மனப்போக்கை மாற்ற வேண்டும்.

துரதிருஷ்டவசமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட அந்த மனப்போக்கை அவங்க கண்டிக்கலை, தடுக்கவும் இல்லை. இதனால என்னாச்சு? லாபம் வந்தால் எனக்கு. நஷ்டம் வந்தால் வரி செலுத்தும் மக்களுக்கு என்ற மனப்பான்மை வளர்ந்துடுச்சு. துபாய் அரசாங்கம் அந்தப் போக்கை இப்போ துண்டித்தாங்கன்னா அது நல்ல முடிவு என்பது சில பொருளியல் நிபுணர்களின் வாதம்.

துபாயில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி உலகின் மற்ற நாடுகளைப் பாதிக்கும் வாய்ப்புகள் உண்டா?

பெரிய பாதிப்புகள் இருக்கும்ன்னு சொல்ல முடியாது. எந்த ஒரு முதலீடு செய்தாலும் அதில் நஷ்டம் வருவதற்குரிய வாய்ப்புகள் இருக்கத் தான் செய்யும். சகித்துக் கொள்ளக் கூடிய அளவு நஷ்டம் வரும் அபாயங்கள் இருக்கிறதே ஒழிய, 2008 நிதி நெருக்கடி மாதிரி வருவதற்கான சாத்தியங்கள் இல்லை.


ஐரோப்பா கண்டத்தின் சில வங்கிகள் துபையின் சில நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்திருக்கின்றன. Dubai World உள்ளிட்ட மேலும் சில நிறுவனங்களும் கடன் சுமையைச் சரிவரப் பூர்த்தி செய்ய முடியாத நிலை இப்போது. இதனால் ஐரோப்பிய நாட்டின் சில வங்கிகளுக்குப் பிரச்சினை ஏற்படும் அபாயம் உண்டு.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் இந்தியா, சைனா போன்ற வளரும் நாடுகளுக்குச் சில பாதிப்புகள் வரலாம். எப்படி? Dubai World அரசாங்கத்தின் ஓர் அங்கம். அதனால தாங்கள் கொடுத்த கடனுக்கு அரசாங்கம் உத்தரவாதம் வழங்கும் என்று நம்பினார்கள். இப்போது அந்த நம்பிக்கை பொய்யாகிப் போயிற்று. இதனால் Dubai World நிலைகுத்திப் போகும் அபாயம் இருப்பதைப் புறக்கணிக்க முடியாது. அப்படி ஒரு நிலை வரும் போது அதை ‘சாவரின்ட் டிஃபால்ட்’ என்று வர்ணிப்பார்கள். அதாவது நாடே போன்டியாகிடுச்சு. நாங்க பணம் கொடுக்க முடியாதுன்னு சொல்ற மாதிரி. இதனால் வளரும் நாடுகள் அரசாங்க அங்கத்தின் மூலமாக கடன் பெற முயற்சித்தால், வெளிநாட்டு வங்கிகள் கடன் கொடுக்க ரொம்பப் பயப்படுவாங்க. துபாய்ல நடந்த மாதிரி இங்கேயும் ஆயிடுமோன்னு. இது வளரும் நாடுகளைப் பொறுத்தவரையில் முக்கியமான தாக்கமாக இருக்கக் கூடும்.

ஆசிய வட்டார நாடுகளுக்கு சிங்கப்பூர் ஒரு வர்த்தகக் கேந்திரமாகத் திகழ்கிறது. அதைப் போல மத்திய கிழக்கு வட்டாரத்தில் தான் முன்னிற்க வேண்டும் என்பது துபாயின் இலக்கு. அதை நோக்கிய பயணத்தில் இப்பாது பெரிய தடங்கல். இதிலிருந்து துபாய் மீளும் சாத்தியம் இருக்கிறதா?

சிங்கப்பூர் வந்த அளவுக்கு குறுகிய காலகட்டத்தில் துபை மத்திய கிழக்கு வட்டாரத்தில் வணிகக் கேந்திரமாக மாறி விட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் அந்தப் பாதையில் முன்னேறி வந்து வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதையும் புறந்தள்ளி விடமுடியாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் நெருக்கடி அந்த வளர்ச்சியைக் கொஞ்சம் பாதிக்கத் தான் செய்யும்.
ஓராண்டு, ஈராண்டு சொல்லப் போனால் ஐந்து ஆண்டுகள் இந்த வளர்ச்சி தேக்கமடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த நெருக்கடியை துபாய் அரசாங்கம் நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் நாட்டில் உள்ள சட்ட திட்டங்கள், முதலீடு செய்பவர்களுக்குரிய பாதுகாப்புகள் ஆகியவற்றைக் குறுகிய காலத்தில் அவர்கள் உருவாக்கினால் அந்தத் தேக்கத்தையே ஒரு வாய்ப்பாக மாற்றிக் கொள்ள முடியும். அதற்குரிய அணுகுமுறையும் அரசாங்கத்தின் கொள்கைப் போக்கும் மாறுகிறதா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அப்படி மாறினால் இந்தத் தேக்கத்தையே அவர்கள் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்ல முடியும்.

நிலையற்ற பொருளியல் சந்தையில் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது. ஏற்றத் தாழ்வுகளைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை முதலீட்டாளர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் அனந்தநாகேஸ்வரன். சிங்கப்பூரில் செயல்படும் ஜுலியர் பேயர் வங்கியின் மத்திய கிழக்கு முதலீட்டு ஆலோசகராக இவர் பணியாற்றி வருகிறார்.

குறுகிய காலத்திற்குள் அதிக லாபம் எடுக்க வேண்டும் என்ற இருக்கும் வரைக்கும் எந்த முதலீட்டிலும் நஷ்டம் உண்டாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆதலால் இனிமேல் துபாய் மட்டுமல்ல எந்த ஒரு நாட்டிலும், உள்நாட்டிலும் சரி. வெளிநாட்டிலும் சரி. முதலீடு செய்யும் போது அந்த முதலீட்டில் நஷ்டம் அடையவதற்கான சாத்தியக் கூறுகள் எவ்வவளவு? அப்படி நஷ்டம் வந்தால் தாங்கிக் கொள்ள முடியுமா? எவ்வளவு காலத்துக்குள் நாம் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். என்பது பற்றி நிதானமாக திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும். அப்படிச் செய்வதால் நஷ்டம் வந்தாலும் அவங்களால ஏற்றுக் கொள்ள முடியும். தொடர்ந்து நல்ல முறையில் பல நாட்கள் லாபம் வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கும். கடந்த பத்தாண்டுகளில் குறுகிய கால கட்டத்தில் அதிக லாபம் என்ற மனப்பான்மையை அதிகம் பார்க்கிறோம். அது தான் மிகப் பெரிய அபாயம். முதலீட்டுக்கான ஆபத்து துபாயிலோ, சிங்கப்பூரிலோ, சீனாவிலோ இல்லை. அது குடிகொண்டிருப்பது நம்முடைய மனதில் தான் என்பது டாக்டர். அனந்த நாகேஸ்வரன் சொல்லும் செய்தி.

சங்கடமான காலகட்டத்தில் ஒருவருக்கொருவர் கைகொடுத்து வாழ்வது தான் மனித வாழ்க்கக்கு ஆதாரம். இந்த நியதி உலக நாடுகளுக்கும் பொருந்தும். துபாயைச் சுற்றிலும் எண்ணெய் வளமிக்க நேசநாடுகள் இருக்கின்றன. அவர்கள் இந்த நெருக்கடியை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். எனவே சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் பறவை போல துபாய் மீண்டும் எழுந்துவரும் என்பது இப்போதைய நம்பிக்கை. அது நனவாகுமா? என்பதைக் காலம் கணித்துச் சொல்லும்.

2 comments:

  1. படிப்பவர்களுக்கோ, அல்லது உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்லிக் கொள்வது போல எழுதியிருக்கிறீர்கள். ஒரு பகுதி உண்மை! துபாய் பிரச்சினை பெரிதாகாமல், எமிரேட் கூட்டாளிகள், குறிப்பாக, அபுதாபி பார்த்துக் கொள்வார்கள்.

    ஆனால், பிரச்சினையின் இன்னொரு பக்கம், சரியான அடித்தளமோ, உற்பத்தியோ, உள்நாட்டு மக்கள் உழைப்போ இல்லை. ஊதாரித்தனம் அளவுக்கு மீறிப்போனதும், இன்னமும் உண்மையான நிலவரம், கணக்கீடுகள் வெளிவரவில்லை என்பதிலும்இருக்கிறது.

    ReplyDelete
  2. கிருஷ்ணமூர்த்திக்கு நல்வரவு.
    பதிவைப் பற்றிப் பகிர்ந்தமைக்குப் பாராட்டு.

    ReplyDelete