Friday, April 16, 2010

பங்கு வாங்கலியோ பங்கு - 3

சென்ற இரண்டு இடுகைகளில் பங்கு வர்த்தகத்தின் தோற்றம், வளர்ச்சி, செயல்படும் விதம் பற்றித் தெரிந்து கொண்டோம். அத்துடன் பங்குச் சந்தைகளைக் கண்காணிப்பதில் அரசாங்கத்தின் பொறுப்பு என்ன? முகவர்களின் பணிகள் பற்றியும் விரிவாகப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, முதலீட்டுக்கு முன்பு கவனிக்க வேண்டிய அம்சங்கள் பற்றிய விவரங்களை இப்போது பார்க்கலாமா?




நம்மில் பலருக்கு முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஆனால் எதில்? எப்படி? முதலீடு செய்வது என்ற தெளிவு இருக்காது. நம் நண்பர்கள் சிலர் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டியிருக்கலாம். அவர்களின் அனுபவத்தைக் கொண்டு நாமும் அதில் முதலீடு செய்தால் என்ன? என்ற கேள்வி நம்முள் எழும். ஆனால், அது போன்ற முதலீடுகள் சில நேரங்களில் தான் பயன் தரும். எனவே, பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன் தீவிரமான கவனிப்பும், கணிப்பும் அவசியம்.

இன்னைக்கு நிறைய நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்க ஆரம்பிச்சிருக்கிறாங்க. மக்களும் அதை வாங்கி வித்துக்கிட்டு இருக்கிறாங்க. இதன் மூலமாகப் பெறக்கூடிய லாபங்களால் சிலர் மகிழ்ச்சியடைகிறாங்க. சிலர் வேதனைப்படுகிறார்கள் அல்லது கஷ்டப்படுகிறார்கள். ஆனால் இந்தப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முந்தி மக்களுக்கு இருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வுகள் எடுத்துக் கொள்ள வேண்டிய கவனங்கள் என்னன்ன?

சிங்கப்பூரின் SIM பல்கலைக் கழகத்தின் பொருளியல் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் ஜானகிரமணன் விளக்குகிறார்.

முதலில் எந்த மாதிரி நிறுவனம் அது. இது வெகு நாள் நீடிக்குமா?. அது ரொம்ப முக்கியமானது. அதனுடைய நிர்வாகம் எப்படி இருக்கிறது?. அப்புறம் நிறையப் பேரு என்ன செய்றாங்கன்னா பெரிய நிறுவனங்களாக இருந்துச்சுன்னா இணையத் தளத்துல போனா எல்லா Annual Reportsம் கிடைக்கும். ஒரு நாலஞ்சு வருஷத்து Annual Reportsல்லாம் பார்த்து எந்த மாதிரி அவங்க பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க. முன்னேற்றம் இருக்கிறதா, இல்லைக் கீழே போய்க்கிட்டு இருக்கிறதா அதெல்லாம் படிக்கணும். ரொம்ப நல்ல நிறுவனங்களை நாம தேர்வு செய்யலைன்னா ரொம்பக் கஷ்டம்.

ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் போது எவ்வளவு தெளிவாக இருக்கின்றோமோ, அதை விடக் கூடுதல் கவனத்துடன் நம்முடைய முதலீட்டுக் காலத்தைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். பங்குச் சந்தையில் இரண்டு விதமான முதலீடுகள் செய்யப்படுகின்றன. அவை நீண்ட கால முதலீடு, குறுகிய கால முதலீடு என்று வகைப்படுத்தப்படுகின்றன. நீண்ட கால முதலீட்டில் ஏற்ற, இறக்கங்கள் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சந்தை நிலவரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாலே போதும். ஆனால் குறுகிய கால முதலீட்டில் அதை விட அதிக விழிப்பு நிலை அவசியம்.

இப்ப ஒரு சின்ன கணக்கு. 1900 ஜனவரி 1 ஆம் தேதி நீங்க ஒரு அமெரிக்கன் டாலர் அமெரிக்கப் பங்குச் சந்தையில் போட்டீங்கன்னா ஜனவரி 1 2000 ல அது எவ்வளவாக இருக்கும்னா கிட்டத்தட்ட 3 மில்லியன் டாலராக இருக்கும். அதாவது பங்குச் சந்தை ரொம்ப நாளைக்கு வைச்சிருந்தா மேலே தான் போகும். முக்கால்வாசி மக்கள் என்ன பண்றாங்கன்னா இன்னைக்குப் பத்து டாலர் கொடுத்து வாங்குறாங்க. ரெண்டு மாசம் கழிச்சு அது ஒன்பது வெள்ளி ஐம்பது பைசாவுக்கு வந்துடுது. உடனே அய்யய்யோ குறைஞ்சு போச்சே அப்படின்னு சொல்லிட்டு வித்துடுவாங்க. அவங்களுக்குப் பணத் தேவை இருக்காது. இருந்தாலும் அய்யய்யோ நமக்கு நஷ்டம் வேண்டாம்னு சொல்லி வித்துடுவாங்க. அப்புறம் பார்த்தீங்கன்னா இன்னொரு 3 மாசம் கழிச்சு அது 12 வெள்ளிக்கு இருக்கும். அப்ப அய்யய்யோ நாம வித்துட்டோமே அப்படின்னு சொல்வாங்க.

நாம் வாங்கி வைத்திருக்கும் பங்குகளின் விலை சரிவைச் சந்தித்தால் உடனே விற்று விட வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் எண்ணம். ஆனால், உண்மையான தேவை இல்லாமல் அவ்வாறு செய்வது பெரிய இழப்பைத் தரலாம். நம்மிடமுள்ள பங்குகள் வீழ்ச்சியடைய என்ன காரணம்? வர்த்தக ஏற்றத் தாழ்வா? அல்லது நிறுவனத்தின் குறைபாடா? என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.

கீழே இறங்குச்சுன்னா உடனே விக்கிறதுன்றது தேவையில்லை. பணம் தேவையில்லையா நீங்க வித்துடாதீங்க. அதுவும் இன்னொன்னும் பார்த்துக்கணும் அதே சமயத்துல எதனால பங்கு விலை கீழே இறங்குது. இது கம்பெனி ரொம்ப மோசமாகப் போனதுனால இப்ப சில வங்கிகள் மோசமாகப் போச்சு. லீமென் பிரதர்செல்லாம். அந்த மாதிரித் திவாலாப் போயி அவங்க மோசமாகப் போறாங்களா அப்ப வித்துட்டு நாம இழப்பை எடுத்துக்கொள்ள வேண்டியது தான். ஆனா சில சமயத்துல Market Sentimentனு ஒண்ணுமே செய்யாம காரணமேயில்லாம அது கீழே போகும்.

சில நிறுவனங்கள் தங்களின் ஆண்டு வருமானம் குறையக்கூடும் என்று முன்னுரைக்கும் வழக்கமும் உண்டு. பொருளியல் மந்த நிலை, உற்பத்திக் குறைவு ஆகியவற்றின் காரணமாக அது போன்ற அறிவிப்புகள் வருவது வாடிக்கை. ஆனால், பொருளியல் மீட்சியடையும் போது அந்தப் பங்குகளின் விலை உச்சத்தைத் தொடும் வாய்ப்பு இருப்பதையும் மறுப்பதற்கில்லை.




பொருளாதார முன்னேற்றமும் வீழ்ச்சியும் Economic Cycle அதாவது “பொருளாதாரச் சுழற்சி”ன்னு சொல்வாங்க. அந்தச் சுழற்சியில் பங்குகளின் விலை வீழ்ச்சி அடையும் மறுபடி மேலே போகும். அய்யய்யோ இப்ப விலை குறைஞ்சிடுச்சுன்னு நீங்க வித்தீங்கன்னா ஒரு ஆறு மாதம் கழிச்சு. பொருளாதார முன்னேற்றம் வரும் போது மறுபடியும் மேலே போகும் போது நீங்க உங்களுக்கு நிறைய வந்திருக்கும். நீங்க வித்தீங்கன்னா நீங்க நஷ்டத்தை உடனே எடுத்துக்கிறீங்க. விக்காம இருந்தீங்கன்னா நஷ்டம் இருக்குது. ஆனா நீங்க எடுக்கலை. அது மேலே போகும் போது உங்களுக்கு லாபத்தில் வரும். அதனால எதனால இந்த வீழ்ச்சியடைந்தது?. இது நீண்ட நாட்களுக்கு இந்த மாதிரி மோசமாக இருக்கப் போகுதா? இல்ல குறைந்த காலம் தான் இப்படி மோசமாக இருக்கப் போகுதா?ன்னு பார்க்கணும். குறுகிய காலம் மோசமாக இருந்துச்சுன்னா நாம பேசாம இருக்க வேண்டியது தான். ஏன்னா அது மறுபடியும் மேலே வந்துடும். நீண்ட காலமாக அது திவாலாகப் போகுது, நிறுவனத்தையே மூடப் போறாங்க. அப்படின்னு சொன்னா அப்ப நம்ம சீக்கிரமே வித்துட்டுக் கொஞ்ச நஷ்டத்தை எடுத்துக்கலாம்.

பொருளியல் நெருக்கடியில் சிக்கிப் பல நிறுவனங்கள் நொடித்துப் போயின. அவற்றின் பங்குகளை வாங்கி வைத்திருந்தவர்கள் கடுமையான இழப்புகளைச் சந்தித்தனர். இது பான்ற சூழலில் முதலீட்டாளர்களின் நிலை என்ன?

சில பேரு சொல்வாங்க நேத்து விலை பத்து டாலராக இருந்துச்சு. இன்னைக்கு விலை ஒன்பது டாலராயிடுச்சு. அதனால ஒரு டாலர் நஷ்டம்னு. அது தப்பு. நீங்க இருபது வருஷத்துக்கு முன்னாடி ரெண்டு டாலருக்கு வாங்கியிருப்பீங்க. நேத்து வித்திருந்தீங்கன்னா உங்களுக்கு எட்டு டாலர் இலாபம் கிடைச்சிருக்கும். இன்னைக்கு வித்தீங்கன்னா ஏழு டாலர் லாபம். எனவே நிச்சயம் லாபம் தான். அதனால இப்ப திவாலாச்சுன்னா அவங்க என்ன பண்ணுவாங்கன்னா அவங்க கிட்ட இருக்கிற எல்லாச் சொத்துக்களையும் விப்பாங்க. வித்துட்டு அவங்க கடனாளிகளுக்கெல்லாம் முதலில் கொடுப்பாங்க. அப்புறம் பாக்கி இருக்கிறதைப் பங்குதாரர்களுக்குக் கொடுப்பாங்க. அதனால உங்களுக்கு ஒண்ணுமே கிடைக்காதுன்னு சொல்ல முடியாது.சி ல சமயம் கிடைச்சாலும் கிடைக்கும். ஆனா நீங்க எப்ப வாங்கினீங்க அப்படிங்கிறதைப் பொறுத்தும் இருக்கு. திவாலாகப் போற நிறுவனங்களைப் பொறுத்த அளவில் அதுவொரு பெரிய Risk. ஆனா ஒரு நிறுவனம் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்து விடாது. நாளடைவில் தான் அது நடக்கும். ஒரு மூணு நாலு மாசம் ஆகும். அதுக்குள்ள சுதாரிச்சுக்கிட்டு வெளியே வந்துடணும்.

பங்கு வர்த்தகத்தில் அதிகம் பரிமாறப்படும் ஒரு வார்த்தை "ஸ்டாக் ஆப்ஷன்" (Stock Option) அதாவது குறிப்பிட்ட விலையில் வாங்கி, விற்கும் உரிமையுள்ள பங்குகள். அதன் வகைகள் யாவை? அவற்றின் செயல்பாடுகள் எப்படி? இவை பற்றியும் தெரிந்து கொள்வோம். அடுத்த வாரம்

(கூறு போடுவோம்)

No comments:

Post a Comment