Friday, February 18, 2011

எகிப்து - மக்களாட்சியின் மலர்ச்சி.



பெப்ரவரி 11. எகிப்திய மக்களின் வாழ்வில் மறக்க முடியாத நாள். அவர்களின் தொடர் போராட்டம் மக்களாட்சிக் கனவை நனவாக்கும் சூழல் அன்று தான் கனிந்தது. எகிப்தின் அரசியல் புயல் இப்போது அமைதியை நோக்கிக் நகரத் தொடங்கி இருக்கிறது.

முப்பதாண்டுகளாக பதவியில் இருந்தார் அதிபர் ஹோஸ்னி முபாரக். அவருடைய ஆட்சிக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்பது எகிப்தியர்களின் வேட்கை. அதற்காக இரவு, பகல் பாராது தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டு நின்றனர். இறுதியில் அவர்களின் கனவு நிறைவேறியது. அரபுலக அரசியலின் புதிய சகாப்தத்திற்கு இதுவோர் அடிக்கல்.



தேசியத் தொலைக்காட்சியில் தோன்றிய துணையதிபர் ஒமர் சுலைமான், அதிபர் முபாரக்கின் பதவி விலகுவதை அறிவித்தார். நாடு எதிர்நோக்கியுள்ள சிக்கலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அதிபர் முபாரக் பதவி விலகுவதாகவும், ஆயுதப் படைகளின் உச்ச மன்றத்திடம் ஆட்சிப் பொறுப்பை அவர் ஒப்படைத்திருப்பதாகவும் ஒமர் சுலைமான் சொன்னார்.

இது ஜனநாயத்திற்குக் கிடைத்த வெற்றி எனக் கருதி திரண்டு நின்ற மக்கள் களித்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காகத் தஹ்ரீர் சதுக்கத்தில் நின்ற இராணுவ வீரர்களும் கொண்டாட்டத்தில் இணைந்து கொண்டனர். மூன்று வாரங்களாக நீண்ட மக்கள் நடத்திய போராட்டம், கத்தியின்றி, அதிக இரத்தமின்றி, அமைதியான ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டது.

எகிப்திய அரசியல் நெருக்கடி எப்படித் தொடங்கியது?

ஜனவரி 25 - எகிப்தில் காவலர்கள் தினம் (Police Day). அதற்கு முதல் நாள் ஒரு காவலர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர்.



இந்த அடக்குமுறையை எதிர்த்து உணர்வூட்டும் கருத்துக்களைத் தம்முடைய Facebook பதிவில் எழுதினார் வாயில் கானிம் (Wael Ghanim) என்பவர். அது அப்படியே இணையத்திலிருந்து மக்களின் இதயத்துக்கு இடம் மாறியது. அடுத்து வந்த நாள்கள் அனைத்தும் பரபரப்பூட்டும் சரித்திரத்தின் முக்கியப் பக்கங்கள். ஜனவரி 25 ஆம் நாள் தஹ்ரீர் சதுக்கத்தில் மக்களை ஒன்று திரட்ட அந்தக் கருத்துக்கள் பெரும் பங்காற்றின.

வழக்கம் போல மக்கள் ஒன்று கூடுவார்கள். பிறகு கலைந்து விடுவார்கள். எனவே கத்தும் வரை கத்தட்டும், இரவில் அவர்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று கடிந்தார் அதிபர் ஹோஸ்னி முபாரக். ஆனால் அதைக் காது கொடுத்துக் கேட்பதற்குத் தயாராக இல்லை எகிப்திய மக்கள்.

சமூகத்தின் குமுறல் கொந்தளிப்பாக உருமாறியது. வேலையின்மை, கல்வியின்மை, ஊழல், நிர்வாகச் சீர்கேடு, திறமையற்ற அரசாங்கம் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். வேறெங்கும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் அவர்கள் வீதியில் இறங்கி விட்டார்கள்.

தஹ்ரீர் சதுக்கத்தில் திரண்டு நின்ற மக்கள் பெரும்பாலும் இளையர்கள். அவர்களில் அனேகம் பேருக்குத் திருமணமாகவில்லை. எனவே குழந்தை, குட்டிகள், வீடு, மனைவி, மக்கள் என்ற கவலை அவர்களுக்கில்லை. பிற அரபுலக நாடுகள் போல தங்கள் நாட்டின் சீரழிவுக்கு அமெரிக்காவோ, இஸ்ரேலோ காரணம் என்று அவர்கள் பழி போடவில்லை. எகிப்திய ஆளும் வர்க்கம் தான் அத்தனை சீரழிவுக்கும் காரணம். அவர்களை ஒழித்து விட்டுத் தான் மறுவேலை என்பதில் எகிப்தியர்கள் ஒன்றுபட்டுத் திரண்டு நின்றார்கள்.

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்தார் அதிபர் ஹோஸ்னி முபாரக். அரசியல்,சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு வழி செய்கிறேன் என்று தொலைக்காட்சியில் தோன்றிச் சொன்னார். அதை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக இல்லை.

சமூக வலைத் தளங்களான Face Book, Twitter போன்றவை எகிப்தின் அரசியல் சுழலுக்கு முக்கியக் காரணம். பகிரங்கமாக வெளியே தெரியாமல் இணைய வெளியில் நடந்த கருத்துப் பரிமாற்றம் மக்களை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றியது. அல் ஜஸீரா தொலைக்காட்சி வழங்கிய நேரலை ஒளிபரப்பு எகிப்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசியல் அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி எகிப்தியர்களை ஒன்றிணைக்கும் கயிறாகத் திகழ்ந்தது “ஆட்சி மாற்றம்” என்ற ஒற்றைக் கோரிக்கை.

போராட்டம் வலுத்ததன் பிறகே புதிய ஊடகங்களின் (New Media) தாக்கத்தை உணர்ந்தது எகிப்து அரசாங்கம். விளைவு, கருத்துப் பரிமாற்றத்திற்கு கடுமையான தடங்கல். முதலில் இணையம் தடை செய்யப்பட்டது (ஜனவரி 27) பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கைத்தொலைபேசிச் சேவையும் (ஜனவரி 28) நிறுத்தப்பட்டது. மக்களைச் சினமூட்டிய இந்த நடவடிக்கைகள் எரியும் கொள்ளியிலிட்ட எண்ணெயாய் வேகமாகப் பரவியது.

எகிப்து அமெரிக்காவின் அணுக்கமான நேசநாடு. அங்கே அரசியல் பதற்றம் நீடிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. எகிப்தில் அரசியல் சீர்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது அமெரிக்கா. ஆனால் அதைச் செவியேற்கும் நிலையில் எகிப்தும், அதன் மக்களும் இல்லை. எனவே அமெரிக்காவின் அதிகாரச் சுருதியில் ஆட்டம். கொந்தளிக்கும் மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம் என்று பொத்தாம் பொதுவான வார்த்தைகளுக்கு இறங்கி வர வேண்டிய கட்டாயம் அமெரிக்காவுக்கு.

ஆர்ப்பாட்டக்காரர்களின் பிடி இறுகுவதைக் கவனித்த ஹோஸ்னி முபாரக் தமது அமைச்சரவையைக் கலைத்தார். எங்களுக்கு அது போதாது, அதிபரே பதவி விலக வேண்டும் என்று ஆர்ப்பரித்தனர் மக்கள். அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன். செப்டம்பர் வரை தாம் அதிபர் பதவியில் இருப்பேன் என்று இறங்கி வந்தார் முபாரக். ஆயினும் அடங்கவில்லை மக்களின் சீற்றம்.

‘நானும் இருக்கிறேன்’ என்ற சாக்கில் அவ்வப்போது குரல் கொடுத்துக் கொண்டே இருந்தது அமெரிக்கா. ஜனநாயகம், மானிட உரிமை, பொருளியல் சீர்திருத்தம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியது. அந்த அறிவிப்பு அமெரிக்காவின் தயக்க நிலையைத் துல்லியமாகக் காட்டியதாகச் சுட்டுகின்றனர் விமர்சகர்கள்.

காரணம், மத்திய கிழக்கு, எகிப்துக்கான அமெரிக்காவின் கொள்கைகள் முரண்பாட்டு மூட்டை. மக்களாட்சி தேவை, மனித உரிமைகள் மிதிக்கப்படக் கூடாது, குடிமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று உரத்துக் குரல் கொடுக்கும் அமெரிக்கா.

மறுபக்கத்தில், கடந்த முப்பது ஆண்டுகளாக எகிப்தை வழி நடத்திய ஹோஸ்னி முபாரக்குக்கு இணக்கமான தோழன். எகிப்தில் இராணுவப் பராமரிப்பு, வளர்ச்சிக்கு கடந்த முப்பது ஆண்டுகளில் அமெரிக்கா ஈந்த தொகை 50 பில்லியனுக்கும் அதிகம். எனவே, எகிப்தில் முபாரக் ஆட்சி முடிவுக்கு வருவதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பியதில்லை. இனியும் விரும்பப் போவதில்லை. வேறு வார்த்தையில் சொன்னால் தன் விரலசைவுக்குக் கட்டுப்படும் மிகச் சரியான பொம்மையைத் தேடுகிறது அமெரிக்கா.

கிஃபாயா மக்கள் இயக்கம், ஏப்ரல் 6 இளையர் இயக்கம் (April 6 Youth Movement), இஸ்லாமியச் சகோதரத்துவ இயக்கம் (Ikhvanul Muslimeen),Al Ghad, Tagammu மற்றும் National Association For Change ஆகிய இயக்கங்கள் எகிப்தின் அரசியல் களத்தில் உள்ளன. இவற்றில் National Association For Change ன் தலைவர் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் முன்னைய தலைவர் முஹம்மத் அல் பராதே. வியன்னாவில் இருந்த அவர், எகிப்தில் அரசியல் சுழல் தொடங்கிய வேளையில் திடீரென்று களத்துக்கு வந்தார். அவர் நீண்ட காலம் வெளிநாட்டிலேயே தங்கியிருந்ததால் எகிப்திய மக்களின் உள்ளத்து உணர்வுகளை அவர் எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருப்பார் என்ற சந்தேகம் மக்கள் மனதில் நீடிக்கிறது.



எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்கா அவரை விரும்புவதில்லை. காரணம் அல் பராதே ஈரானுக்கு நெருக்கமானவர். அதனால் அமெரிக்காவை வெறுக்கும் எகிப்திய மக்கள் அவரை ஆதரிக்கலாம். எகிப்தின் அடுத்த தலைவர் யார்? என்பதல்ல விவகாரம். ஆட்சி மாற்றம் அவசியம் என்பதே அவசரம்.

துனீசியாவில் தொடங்கிய அரசியல் எழுச்சி. எகிப்தில் சூடு பிடித்தது. பின்னர் அது ஏமனுக்கும் பரவியது. அடுத்து அந்தப் பகுதியில் உள்ள ஜோர்தான், லெபனான், அல்ஜீரியா போன்ற நாடுகளுக்கும் பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. எகிப்து அரசியல் குழப்பத்தால் அதிகம் கவலை கொண்டுள்ள இரு நாடுகள் அமெரிக்காவும், இஸ்ரேலும்.

அமெரிக்காவின் கொள்கை வகுப்பதில் இஸ்ரேலியத் தரப்பின் கருத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. எகிப்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டு இஸ்ரேலுக்கு எதிரான கொள்கையுடைய அரசாங்கம் வருமோ என்று கவலையில் தவிக்கிறது இஸ்ரேல். எகிப்தின் புதிய அரசாங்கம் முன்னர் செய்து கொள்ளப்பட்ட எகிப்து – இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தை மதித்து நடக்குமா? என்பது இஸ்ரேலின் தலையாய கவலை. ஏனென்றால் எகிப்தியர்கள் பொதுவாக அந்த ஒப்பத்தத்தை எதிர்க்கின்றனர். எனவே புதிய அரசாங்கம் இஸ்ரேலிய பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்படுத்தாதவாறு அமைய வேண்டும் என்று அமெரிக்காவும் நினைக்கிறது.

உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் எகிப்து அரசியல் மாற்றத்தை வரவேற்றனர். எகிப்தின் அதிகார மாற்றத்துக்கான நடவடிக்கைகள், விரைவில் வெளியிடப்படும் என்று உச்ச இராணுவ மன்றம் அறிவித்துள்ளது.

சுமார் 18 நாள்கள் நீண்ட எகிப்திய மக்கள் எழுச்சியில் இராணுவம் நடந்து கொண்ட முறை மெச்சத்தக்கது. மக்கள் எழுச்சி வன்முறையாக உருமாறி விடக்கூடாது என்பதில் இராணுவம் வெகுசிரத்தை எடுத்துக் கொண்டது. ஆட்சி மாற்றம் தேவை என்ற எதிர்வாதம் சொல்லும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து அவர்களின் கோரிக்கைகளை மதித்தது.

வருங்கால எகிப்தின் ஆட்சி மாற்றத்தில் இராணுவத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. உள்நாட்டு, எல்லை தாண்டிய பாதுகாப்பில் இராணுவத்தின் பொறுப்பை எகிப்திய மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

கடந்த ஒரு மாதத்துக்குள் அரபுலகின் மூன்று நாடுகளில் கடுமையான அரசியல் நடுக்கம். துனீசியாவின் அதிபர் ஜைனுல் ஆபிதின் பென் அலி ஆட்சி கவிழ்ந்தது ஜனவரி 14ல். 1987 முதல் பதவியில் இருந்த அவர் 2014 தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று முழங்கியும் மக்கள் அவரைத் தூக்கி எறியும் வரை ஓயவில்லை.

ஏமன் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் 2013 ல் தாம் பதவியிறங்கப் போவதாக அறிவித்தார். 1978 ல் அந்தப் பொறுப்புக்கு வந்த அவர் 33 ஆண்டுகளாக நாற்காலியை விட்டு நகரவில்லை. அவரை நகர்த்தும் வரை ஓயப்போவதில்லை என்று திரண்டு வருகிறார்கள் மக்கள்.

ஈராக் பிரதமர் நூரி அல் மலிக்கி 2014 தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

எகிப்தின் எதிர்காலம் இன்னும் தெளிவாகவில்லை. மக்கள் எழுப்பிய கேள்விகள் அப்படியே உள்ளன. ஆனால் அவர்களுக்குரிய விடை தெரியும் வரை அவர்கள் ஓயப்போவதில்லை.



உலகின் எந்த நாடாக இருந்தாலும் சரி. மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தான் அரசாங்கம். அதைப் புரிந்து கொண்டால் அமைதியான ஆட்சிக்கும், வாழ்வுக்கும் வழி பிறக்கும்.

No comments:

Post a Comment