FaceBook, Twitter, My Space இவை இணையத்தில் உள்ள சில சமூக வலைத்தளங்கள். தொடக்கத்தில் இவற்றுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இல்லை. ஆனால் காலம் போகப் போக சமூக வலைத்தளங்களை நாடாமல் மக்களின் பொழுது போகவில்லை. அவற்றில் செலவிட நேரம் போதவில்லை. அந்த அளவுக்கு மக்களோடு, குறிப்பாக இளையர்களோடு ஒன்றி விட்டன சமூக வலைத்தளங்கள். பழைய நண்பர்களோடு உரையாடுவது, தகவல்களைப் பரிமாறிக் கொள்வது என்று பல பரிமாணங்களைக் கொண்டவை சமூக வலைத் தளங்கள்.
இணையப் பயனாளர்கள் வாரமொன்றுக்கு 4 மணி 36 நிமிடங்கள் சமூக வலைத்தளங்களில் செலவிடுகின்றனர். நாளொன்றுக்குக் குறைந்தது 12 நிமிடங்கள் மின்னஞ்சல் பயன்பாட்டுக்கு ஒதுக்குகின்றனர் என்கிறது ஓர் ஆய்வு. FaceBook ல் வந்துள்ள செய்திப் பரிமாற்றத்தைப் பார்க்கப் பலரின் மனது அலைபாய்கிறது. கணினி வழியே பார்ப்பதை விட கைத்தொலைபேசி மூலமாகவாவது பார்த்தால் தான் அவர்களுக்கு நிம்மதி.

சமூக வலைத்தளங்களில் அதிகப் பயன்பாட்டுக்குரியது Facebook. அதன் நிறுவனர் Mark Zuckerberg, தொடக்கத்தில் தம்முடைய கல்லூரித் தோழர்களை ஒருங்கிணைக்கும் விதத்தில் அவர் அதை உருவாக்கினார். பின்னர் காலத்துக்கேற்ப மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில் மேலும் பல கூறுகளை அதில் இணைத்தார்.

உலகம் முழுக்கச் சுமார் 500 மில்லியன் பேர் அந்தத் தளத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு மின்னஞ்சல் முகவரி இருந்தால் போதும். தேவையான தகவல்களைக் கொடுத்து Facebook ல் கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். பல்வேறு சமூகத் தளங்கள் தனித்தனியாகக் கொண்டிருந்த சேவைகளை ஒருமுகப்படுத்திக் கொடுத்தது Facebookன் வெற்றிக்குக் காரணம்.
சில தளங்களில் புகைப்படங்களை மட்டும் தரவேற்றலாம். இன்னும் சிலவற்றில் தகவல்களை மட்டும் பரிமாறலாம். வேறு சிலவற்றில் பேசிக் கொள்ளலாம். மற்றும் சிலவற்றில் ஒளிப்படங்களின் வழியே உரையாடலாம். இப்படித் தனித்தனியாக இருந்த சேவைகளை கிட்டத்தட்ட ஒரே இடத்தில் ஒருங்கிணைத்துக் கொடுத்ததும், அதைப் பல்வேறு நபர்களோடு ஒரே நேரத்தில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததும் FaceBook ன் வெற்றிக்கு அடித்தளம்.
Facebook பற்றிய புகழாரங்களுக்குச் சற்றும் சளைக்காத விதத்தில் அது பற்றிய குறைகூறல்களும் அதிகம். தனிநபர்களின் தகவல்களைத் தெரிந்து கொள்வது, அவற்றைத் திருடிக் கொள்வது, பிறருக்கு விற்று விடுவது, தனிநபர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது இப்படிச் சொல்லப்படும் குற்றப்பட்டியல் வெகு நீளம். இருப்பினும் அந்தத் தளத்துக்கு இருக்கும் வரவேற்புக்குக் குறைவில்லை.
சமூக வலைத்தளங்களில் நம்முடைய சொந்தத் தகவல்களைப் பதிவது பாதுகாப்பானதா? அங்கே நம்முடைய தகவல்களுக்கு முழுமையான பாதுகாப்பு இருக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இணையம் என்பது பெருங்கடல். யார் எப்போது? எங்கிருந்து எப்படியான தகவல்களை உருவிக் கொள்கிறார்கள் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே தொடருகிறது. இப்படியான சூழலில் மிக மிக அவசியமான தன் விவரக் குறிப்புகளை மட்டும் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்வது சுழலில் சிக்குவதில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.
பணப் பரிவர்த்தனைத் தகவல்கள், வங்கிக் கணக்கு எண், வீட்டு முகவரி இவற்றைச் சொல்ல வேண்டிய அவசியம் வந்தால், ஒன்றுக்கு இரண்டு முறை முன் யோசனையுடன் செயல்பட்டால் வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்பதைக் குறைக்கலாம்.

இணையத்தில் தகவல்களைப் பதியும் போது கூடுதல் அக்கறை அவசர அவசியம். சமூக வலைத் தளங்கள் செயல்படும் முறைகள் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வது இன்பத்தைப் பெருக்கும் இனிய வழிகளில் ஒன்று. FaceBook ல் நம்முடைய தகவல்களை யார் பார்க்கலாம், மறுமொழியிடலாம் என்பதற்கான வரம்புகளை நிர்ணயித்துக் கொள்வது சாத்தியம். அந்த நுட்பத்தை அறிந்து வைத்துக் கொள்வது அனாவசியமான பாதிப்புகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்.
சமூக வலைத்தளங்களில் நிறையப் பேர் போலியான தகவல்களைக் கொடுத்துக் கொண்டு உலா வருகிறார்கள். குறிப்பாகப் பிரபலங்களின் பெயரில் பலர் இருப்பார்கள். ஆனால் அவர்களில் யார்? உண்மையானவர் என்று கண்டறிவது சவாலான காரியம்.
ஒரு பிரபலமானவரின் பெயரில் தேடிப் பார்த்தால் அதே போன்று பல்வேறு பயனாளர்கள் இருப்பார்கள். அவர்களின் யார் உண்மையானவர் என்பதைத் தெரிந்து தேடித் தெளிவது இருட்டில் ஊசியைத் தேடும் காரியம்.
ஒருவரைத் தோழமையாக்குவதற்கு முன் அவரைச் சந்தித்திருக்க வேண்டும். அல்லது பயனர் கணக்கு உண்மையிலேயே அவருடையது தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. பிரபலமானவருடன் நானும் நண்பர் என்று சொல்லிக் கொள்வது சாமானியர்களுக்கு சந்தோஷத்தைத் தரலாம். அது பிரபலமானவர்களுக்குப் பிடிக்குமா? என்பதை நாம் அனுமானிக்க முடியாது.

சமூக வலைத்தளங்களால் குடும்பங்களுக்குள் பிரச்சினை அதிகரித்திருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. விவாகரத்துப் பெறுவதற்கு சமூக வலைத்தளங்களும் காரணமாகின்றன என்பது அதிர்ச்சிக்குரிய தகவல். தகவல் தொழில்நுட்பம் சக மனிதர்களுடன் உரையாடும் இடைவெளியைக் குறைத்திருக்கிறது. ஆனால் உறவாடுவதில் இடைவெளியை அதிகரித்திருக்கிறது. அருகில் இருக்கும் சக மனிதனோடு பேசுவதை விட இணையத்தில் பொழுதைக் கழிப்பது இளையர்களின் மனதுக்கு நெருக்கமாமன அம்சமாகி விட்டது. சமூக வலைத் தளங்களில் நடைபெறும் கருத்துப் பரிமாற்றம் சில வேளைகளில் உறவுச் சிக்கலின் தொடக்கப் புள்ளியாக உருவெடுக்கிறது. அதுவே பின்னாளில் குடும்பத்தில், தம்பதியரிடையே சிண்டு முடிந்து குண்டு வைக்கிறது.
கணவன், மனைவி அல்லது பெற்றோர், மகன், மகள் இப்படியான உறவுகளில் சிக்கல்கள் பெருகிக் கொண்டே போவதாகத் திகிலூட்டுகிறது ஆய்வு. உதாரணமாக கணவன் அல்லது மனைவியின் இளமைக்கால நினைவுகள் இருவருக்கும் மறந்து போயிருக்கலாம். Facebook ல் யாரோ ஒருவர் எப்போது நடந்த நிகழ்வைப் பற்றி அல்லது அவர்களின் பட்டப் பெயர்கள் குறித்து இப்படிப் பல விதங்களில் தெரிவிக்கும் கருத்துக்கள் குடும்பக் குத்துவிளக்கைப் புரட்டிப் போட்டுக் குத்தாட்டக் களமாக்கி விடும்.
நினைவுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், கடந்த காலங்களை வண்ணமயமாக்கவும் முன்பு புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அந்தக் காலம் இப்போது ஃபிலிம் சுருள் போலச் சுருண்டு விட்டது. Facebook ல் பகிர்ந்து கொள்வதற்கென்றே புகைப்படங்களை எடுத்துக் கொள்வது இன்றைய இளையர்களின் வாடிக்கை. அதில் தவறில்லை புகைப்படங்களைப் பொதுஇடத்தில் பகிர்ந்து கொள்ளும் போது அதில் இருக்கும் சங்கடங்களை நினைத்துப் பார்க்கத் தவறக் கூடாது. ஒரு புகைப்படப் பகிர்வு உங்கள் வாழ்க்கையை வேடிக்கையாக்கி, ஊழ் வினையாகி அலைக்கழிக்கக் கூடாது.

அருகருகே அமர்ந்திருக்கும் இருவர் நேரில் பேசுவதைத் தவிர்த்து Facebook ல் உரையாடுவதைப் பெருமையாகக் கருதிக் கொள்ளும் காலம் இது. கணினி தட்டச்சுப் பொறியிலோ அல்லது கைபேசிப் பொத்தான்களிலோ எந்நேரமும் உங்கள் விரல்கள் நர்த்தனம் ஆடும் என்ற பெருமைப்பட்டுக் கொள்வது காலம் செய்த கோலமல்ல. உங்கள் கைகளும், மனமும் செய்யும் மாயம். சாதனங்களோடு உங்கள் உறவாடல் தொடங்கி, தொடர்ந்து நீளும் போது சாதனங்களைப் பயன்படுத்துவோரிடம் உங்கள் அன்பின் வெளிப்பாடு குறைந்து, தேய்ந்து, மறைந்து... காலாவதியாகி விடும் ஆபத்து (நி)மறைந்திருக்கிறது. எச்சரிக்கை....
இணையம் மிகப் பெரிய கடல். அதில் எந்தத் தளங்களைப் பார்க்கிறோம், எப்படியான தகவல்களைத் தேடுகிறோம் என்பதைப் பொறுத்து அவற்றுக்கேற்ற விளம்பரங்களும் அடிக்கடி நம்மைத் துரத்தும். இணைய விளம்பரங்களின் ஒளிந்திருக்கும் ஆபத்துகளை மறந்து விடக் கூடாது. விளம்பரங்கள் இளை(ணை)யர்களை வசியப்படுத்தும் தூண்டில். அவற்றின் இருக்கும் அரிதாரத்தைக் கண்டு, உண்மையை உணர மறுத்தால் இலாபம் உங்களுக்கல்ல... வர்த்தக நிறுவனங்களுக்குத் தான்... இம்மாதிரியான பரிவர்த்தனைகளில் நிரந்தர நஷ்டவாளி... சாட்சாத்.. நீங்களாகத் தான் இருப்பீர்கள்.

உலகம் முழுக்க சுமார் 200 மில்லியன் பேர் கைத்தொலைபேசிகளின் வழியே FaceBook இணையத் தளத்தை நாடுகிறார்கள். முந்தைய ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 65 மில்லியனாக இருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறது.
இளைய தலைமுறையினர் இணையத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இனி வருங்காலம் இணையம் மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கும். அவற்றின் நன்மை தீமைகளைப் பெற்றோரும் அறிந்து வைத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும். புதிய தொழில்நுட்பத்தைப் புறக்கணிப்பதை விட அது பற்றித் தெரிந்து கொள்வது நன்மையை அதிகமாக்கும்.
பொதுவாக இணையத்தில் உலா வரும் போது நம்மைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. நாம் பயன்படுத்தும் இணையத் தளங்களும், மூன்றாம் தரப்பும் அதைச் செய்கின்றன. நமக்குத் தெரியாமல் அவ்வாறு சேகரிக்கப்படும் தகவல் திருட்டைத் தடுக்கப் பல்வேறு மென்பொருட்கள் இருக்கின்றன. அண்மையில் Stanford பல்கலைக் கழக பட்டதாரிகள் “Do Not Track” என்ற மென்பொருளை வடிவமைத்துள்ளனர்.
குறிப்பிட்ட தளங்களில் உலாவரும்போது தன்னைக் கண்காணிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளும் விசையைச் சேர்த்துக்கொள்ள புதிய மென்பொருள் வகை செய்கிறது. பயனீட்டாளர்கள் அந்த விசையை அழுத்தினால் போதும். எனினும் அந்த முறை செயல்பட இணையச் சேவை நிறுவனமும் ஒத்துழைக்க வேண்டும். விளம்பரதாரர்களும் ஒப்புக்கொண்டால் தான் இதனை முழுமையாகச் செயல்படுத்த முடியும் என்கின்றர் இணைய நிபுணர்கள். மென்பொருட்களின் உதவியை நாடுவதை விட நாம் கொஞ்சம் கவனமாக இருந்தால் பல விதமான நெருக்கடிகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
இணையம் இதயங்களை இணைக்கும் மந்திரச் சொல். இணையத்தின் வழியே உறவுகளை இணைக்கும் பாலமாகத் திகழ்கின்றன சமூக வலைத் தளங்கள். நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியில் இவற்றுக்குத் தனியிடம் உண்டு. ஒரு நாட்டின் அரசியல் மாற்றத்துக்கும் சமூக வலைத் தளங்கள் அடித்தளமிடுகின்றன. காதலுக்கு மட்டுமல்ல, புரட்சிக்கும் வித்திடுகின்றன சமூக வலைத்தளங்கள். இதற்கு, அண்மைய சாட்சி எகிப்து அரசியல் நெருக்கடி.
உறவுகளுடனான நெருக்கம், உணர்வுகளை மதிக்கும் பண்பு, உரிமையோடும், அக்கறையோடும் நம் சங்கடங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் கிடைக்கும் ஆறுதல்... இவற்றில் எது வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி நாமே. அதை மறந்து விட வேண்டாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteநல்ல சமூக அக்கறையுள்ள பதிவு
உங்களின் பதிவுகளை தொடருங்கள் சகோ
வ அலைக்கும் ஸலாம் சகோதரர் ஹைதர் அலி.
ReplyDeleteஇறையருளால் அவ்வப்போது தருவேன். இன்னும்.. இன்னும்...