Wednesday, December 7, 2011
இட ஒதுக்கீடு
“நீரே தாகம் தணிக்கும்” என்கிறான் ஒருவன்.
“இல்லை பானியே தணிக்கும்” என்கிறான் மற்றொருவன்.
“இல்லையில்லை; Water தான் தணிக்கும்” என்கிறான் இன்னொருவன்.
மூவரும் அடித்துக் கொண்டு சாகிறார்கள், தாகம் தணியாமலே.
இது தான் மதவாதிகளின் கதை.
பொருள் ஒன்று தான்;
பெயர் தான் வேறு வேறு
என்பதைப் புரிந்து கொள்ளாத
அறியாமையே சண்டைக்குக் காரணம்.
இறைவனை அறியாதவனே
இறைவன் பெயரால் சண்டையிடுகிறான்.
சண்டையிடுகிறவன்
உண்மையான மதவாதியல்லன்.
அவன் வெறும் ‘மதம்’ பிடித்தவன்.
வலையில் தண்ணீர் அகப்படாது.
மதம் பிடித்தவனிடம் மகேசன் அகப்படமாட்டான்.
பறக்கும் போது சப்தமிடும் வண்டு,
பூவில் அமர்ந்து தேனருந்தும் போது
மெளனமாகி விடுகிறது.
இறைவனை அடையாதவனே சர்ச்சைகள் செய்கிறான்.
அடைந்தவன் மௌனமாகி விடுகிறான்.
எல்லாப் பூவிலும் தேன் இருக்கிறது என்பதை
அறிந்த தேனீ மலர்களுக்குள் பேதம் பாராட்டுவதில்லை.
ஒருவன் மந்திரை இடித்து விட்டு மஸ்ஜித் கட்டுகிறான்.
மற்றொருவன் மஸ்ஜிதை இடித்து விட்டு மந்திர் கட்டுகிறான்.
இதயமே இறைவனின் மெய்யான ஆலயம்.
போலி மதவாதிகள் மெய்யாலயத்தை இடித்து விட்டுப்
பொய்யாலயத்தைக் கட்டுகிறார்கள்.
கடவுள் பக்தன் கடப்பாரை ஏந்த மாட்டான்.
பூக்கள் தொடுக்கும் நாரையே ஏந்துவான்.
இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்பதை அறிந்தவன்
அவனுக்கு இட ஒதுக்கீடு செய்வானா?
எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதைப்
பார்க்கத் தெரிந்தவன் பிற உயிர்களைப் பகைப்பானா?
கவிஞர் பர்ஃக் எப்பொழுதோ எழுதிய கவிதை இது :
நீ
மறைந்திருப்பதால் தான்
மஸ்ஜித் மந்திர் சண்டைகள்.
நீ மட்டும்
வெளிப்பட்டு விட்டால்
எல்லாமே
நீயென்றாகி விடும்.
நன்றி : மகரந்தச் சிறகு - கவிக்கோ அப்துல் ரகுமான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment