
கல்யாணமான 30 வருடங்களில் ராமு சொன்ன அந்த யோசனை ராஜியை உலுக்கியெடுத்தது. அவன் அப்படிச் சொல்வான் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
கடந்த மாதம் தான் பேறுகாலத்துக்கு வந்த மகள் கணவன் வீட்டுக்குத் திரும்பியிருக்கிறாள். மகனுக்குக் கல்யாணம் முடிந்து இன்னும் முழுதாக மூன்று மாதங்கள் கூட நிறையவில்லை. அதற்குள்....
ராமுவின் வார்த்தைகள் அவள் விழிகளை நனைத்து விட்டன.
நீண்ட பெருமூச்சுடன் அவளை நெருங்கிய ராமு ஒனக்குப் பிடிக்கலைன்னா வேண்டாம்பா என்றான். வெறித்தபடி பார்த்தாள் ராஜி.
நாம ஒண்ணும் அசலூருக்குப் போகலை, இதோ இங்கன இருக்குற மூணாவது வூட்டுக்குத் தான் போறோம்.
கல்யாணம் முடிஞ்ச சின்னஞ்சிறுசுக, நாம கூட இருந்தா சங்கோஜப் படுவாங்க. அதான். உனக்கு விருப்பமில்லைன்னா வேண்டாம்.
சொல்லி முடித்த கணவனின் முகத்தைக் கனிவோடு பார்த்தாள் ராஜி.
ஒங்க விருப்பம் தானே என்னோடதும் என்பதற்கான தன்னிறைவு அதில் இருந்தது.
No comments:
Post a Comment