Friday, October 31, 2008

ஒளியேற்றுவாரா ஒபாமா


ஒளியேற்றுவாரா ஒபாமா...!?
அமெரிக்கத் தேர்தல் முடிவை விட அங்குள்ள மக்கள் அதிகம் எதிர்பார்ப்பது பொருளியல் பிரச்சினைக்கான தீர்வைத்தான். ஓராண்டுக்கு முன் அதிபர் தேர்தல் பிரசாரம் தொடங்கியபோது, அமெரிக்கப் பொருளியல் நிலைத் தன்மையோடு இருந்தது. ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன் அங்குள்ள பங்குச்சந்தையில் வீசியது நிதிச் சூறாவளி. அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் பல நொடித்துப் போயின. இன்னும் சில நிறுவனங்கள் அந்தப் பட்டியலில் இணையக் காத்திருக்கின்றன. அதன் விளைவு இன்று உலக நாடுகளில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம்? அமெரிக்க அரசாங்கத்தின் பண நிதிக் கொள்கை. அதை எவ்வளவு தாராளமயப்படுத்த முடியுமோ அந்தளவுக்குத் தாரளமயமாக்கியது அமெரிக்க அரசு. அது மட்டுமல்ல நிதிச் சந்தையில் ஆரம்பத்தில் இருந்த கடுமையான கட்டுப்பாடுகளை அதிரடியாக நீக்கியது. அதனால் வங்கிப் பரிமாற்றத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கையும் அடியோடு மாறிப்போனது. நிதி நிறுவனங்கள் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று தலைமை வங்கி வழிகாட்டுவது வழக்கம். ஆனால், தாராளமயம் - அந்த வழிகாட்டலில் நெளிவு,சுளிவுகளை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால், அவரவர் தங்களுடைய சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வங்கிப் பரிவர்த்தனை செய்கிற சூழல் உருவானது.

ஒரு நாட்டின் நிதிநிலை வலுவடைய, பொருளியல் சமநிலை அவசியம். அதற்கு, மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும். அந்தச் சூழலை உருவாக்குவதற்காகவே தாராளமயக் கொள்கையைக் கடைபிடித்தது அமெரிக்கா. அங்குள்ள ரிசர்வ் வங்கி ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான வட்டியில், வணிக வங்கிகளுக்குப்(Commercial Banks) பணத்தை வாரி வழங்கியது. அதனால், கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை எல்லை மீறியது. அது மட்டுமா? தலைமை வங்கியிடமிருந்து அதிகமான கடனைக் குறைந்த வட்டிக்கு வாங்கி வாடிக்கையாளர்களுக்குச் சுலபமாகக் கொடுத்தார்கள். அவர்களால் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியுமா? அதற்கான தகுதி இருக்கிறதா? இல்லையா? என்ற அடிப்படைக் விசாரணையில்லாமல் நொடித்துப் போனவர்களுக்குக் கூட கடனைத் தாராளமாகக் கொடுத்தார்கள். அது பொருளாதாரச் சந்தையில் ஒரு செயற்கையான வெற்றிடத்தை ஏற்படுத்தியது.

அண்மைய எண்ணெய் விலையேற்றம் அமெரிக்க மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதித்திருக்கிறது. எல்லாப் பொருட்களின் விலைகளும் உச்சத்தைத் தொட்டன. வாங்கிய கடன்களைத் திரும்பக் கொடுப்பதா? அன்றாட வாழ்க்கைச் செலவைக் கவனிப்பதா? என்ற போராட்டம் அவர்களுடைய மனதில் எழுந்தது.

இந்தச் சூழலில், தாங்கள் வாங்கிய கடனுக்குரிய தவணைத் தொகை செலுத்துவதை அவர்கள் தள்ளிப் போடத் தொடங்கினர். அதன் எதிர்விளைவாக, இதுவொரு தனிமனிதப் பிரச்சினை என்றில்லாமல் தேசியப் பிரச்சினையாக உருவெடுத்து அமெரிக்கப் பொருளாதாரத்தையே நெருக்கடிக்குள்ளாக்கியது.

அமெரிக்க முதலீட்டுச் சந்தை, உலகச்சந்தையோடு இரண்டறப் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆகவே, அமெரிக்கப் பொருளாதாரம் கீழே விழும்போது, மற்ற உலக நாடுகளின் நிதிச்சந்தைகளும் பாதிக்கப்படுவது இயல்பானது.

பொருளியலில் ஏற்பட்ட தடுமாற்றம் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கே மிகப் பெரிய தலைவலியாக மாறியது. அவசரமாக விழித்துக் கொண்ட அமெரிக்க அரசாங்கம் நிதிச் சூறாவளியை எதிர்கொள்ள 700 பில்லியன் டாலரைக் கொடுத்தது. ஆனால் அது யானைப் பசிக்குச் சோளப் பொறியாக மட்டுமே அமைந்தது.

இந்த நெருக்கடியைச் சமாளிக்கக் குறைந்தபட்சம், இரண்டரை அல்லது மூன்று டிரில்லியன் டாலர் வரை உதவி தேவை என்பது பொருளியல் நிபுணர்களின் கருத்து. வரும் நவம்பர் 15ல், பொருளாதார ஆலோசனை பற்றிய கூட்டம் நடக்கவிருக்கிறது. அதன் மூலம் ஏதாவது விடிவு பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எனவே, தொய்வடைந்திருக்கும் அமெரிக்க நம்பிக்கையைப் பழைய நிலைக்குக் கொண்டு வர உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இந்நிலையில், அமெரிக்கத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வெல்லப் போவது யார்? என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது. அடுத்து ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது குடியரசுக் கட்சியா? ஜனநாயகக் கட்சியா?. இவர்களில் யார் வென்றாலும் அது பொருளியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

யார் வெல்லப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து பங்குச் சந்தை மாற்றங்கள், பொருளாதாரக் குறியீடுகள், உலகப் பொருளாதாரம், நிதிச்சந்தைகள் ஆகிய அனைத்தும் மாற்றத்தை எதிர்நோக்குவது நிச்சயம். ஏனென்றால், தற்போதைய அமெரிக்கத் தலைமைத்துவத்தின் நம்பிக்கை மிக மோசமாகச் சரிந்துள்ளது. ஜான் மெக்கைன் வந்தால், தற்போதுள்ள அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பல கொள்கைகளை அப்படியே தொடர்ந்து மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே சமயம், ஒபாமா அதிபரானால், ஒரு முழுமையான மாற்றம் ஏற்படும். அது அமெரிக்க வெளியுறவு, பொருளாதாரம், இராணுவம் என அத்தனை துறைகளிலும் முழுமையான மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. அதனால் சந்தையின் நம்பிக்கை மேலும் பலப்படும். ஆகவே, ஜான் மெக்கைனை விட பராக் ஒபாமா வந்தால் அமெரிக்கா நம்பிக்கை பலப்படும். தற்போதுள்ள பொருளியல் சமனற்ற நிலை மீட்சியடையும் வாய்ப்புகள் அதிகம் என்பது பொருளியல் நிபுணர்களின் ஆரூடம். பலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment