Sunday, November 9, 2008

இரண்டாம் பிரவுசர் போர்!

புகழ்பெற்ற தேடல் நிறுவனமான கூகிள், தேடுவதுடன் திருப்தியடையாமல், வலை மேய்வதற்கு உதவும் பிரவுசர் (உலாவி) மென்பொருள் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. க்ரோம் என்ற பெயர் கொண்ட இந்த இலவச பிரவுசர் 100 நாடுகளில் 43 மொழிகளில் அதிரடியாக வந்து இறங்கிவிட்டது.

கூகிள் இந்த மென்பொருளை அறிமுகப்படுத்திய விதமே வினோதமாக இருந்தது. அம்புலி மாமா படக் கதை மாதிரி ஒரு காமிக் புத்தகம் போட்டு க்ரோமின் பெருமைகளைப் பட்டியலிட்டார்கள். சுருக்கம்: இந்தப் புதிய பிரவுசர், புல்லட் வேகத்தில் வேலை செய்யும். பாதுகாப்பானது. மிக்- 27 விமானம் மாதிரி அடிக்கடி க்ராஷ் ஆகாது. இணையத்திலிருந்து வரும் ஆணைத் தொடர்கள், பிரவுசருக்குள் சிறைப்பட்டிருப்பதே தெரியாமல் உங்கள் கம்ப்யூட்டரிலேயே நேரடியாக ஓடுவது போல் இருக்கும்.

க்ரோம் உண்மையிலேயே பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. எடையைக் குறைக்கப் பட்டினி கிடந்த சினிமா நடிகை மாதிரி கச்சிதமாக உடலை வைத்திருக்கிறது. வேகமாகவும் ஓடுகிறது. மற்ற குண நலன்கள் எல்லாம் போகப் போகத்தான் தெரியவரும். அதற்குள்ளாக இண்டர்நெட் பண்டிதர்கள் ""ஆகா! இரண்டாம் பிரவுசர் போர் ஆரம்பித்து விட்டது'' என்று உற்சாகத்துடன் பாப்கார்ன், தண்ணீர் பாக்கெட் எடுத்துக் கொண்டு வேடிக்கை பார்க்க முன் வரிசையில் வந்து உட்கார்ந்து விட்டார்கள்.

அதென்ன இரண்டாம் பானிபட் போர் மாதிரி பேசுகிறார்கள் என்றால், பல காலமாகவே உலாவி மென்பொருள்கள் மார்க்கெட்டில் ரத்தக் களறியாக சண்டை போட்டுக் கொண்டு வந்திருக்கின்றன. ஏனெனில் வலை மனை விளம்பரம் என்பது பல டாலர், பல்லாயிரம் டாலர், பல கோடி நூறாயிரம் டாலர் பிசினஸ்! இப்போதெல்லாம் பெருவாரியான கம்ப்யூட்டர் உபயோகிப்பாளர்கள் பிரவுசரில்தான் வாழ்கிறார்கள். தகவல் தேடுவது, அஞ்சல் அனுப்புவது, சினிமா பார்ப்பது, செய்தித்தாள் படிப்பது, வரன் தேடுவது எல்லாமே அதற்குள்தான் நடக்கிறது. ஏற்கனவே வலைத் தேடல் பிசினஸ் முழுவதையும் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கும் கூகிள், தன் தொகுதியின் புறம்போக்கு நிலம் பூராவையும் கண்ட்ரோலில் வைத்திருக்கும் அரசியல்வாதி போல் அலப்பறை செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உலாவியையும் கூகிள் கைப்பற்றி விட்டால் அவர்களைப் பிறகு அசைத்துக் கொள்ளவே முடியாது!

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் டிம் பெர்னர்ஸ் லீ என்ற ஆங்கிலேயர் இணையத்தின் www எனப்படும் வெவ்வெவ்வேயைக் கண்டுபிடித்தார். அந்த வலை வெளியில் சுதந்திரமாக உலவுவதற்கான முதல் பிரவுசரையும் வடிவமைத்தார். ஆனால் சுமார் 1994 வரை இண்டர்நெட் என்பது ஷேவ் செய்ய நேரமில்லாத இஞ்சினீயர்களுக்கு மட்டுமே உரிய சொத்தாக இருந்தது. பிறகு சாதாரண மக்களும் அதில் புகுந்து புறப்பட்டு நெட் என்பது ஒரு நுகர்வோர் இயக்கமாகவே மாறிய பிறகு, எங்கும் பச்சை டாலர் வாசனை வீச ஆரம்பித்துவிட்டது. அப்போதுதான் மைக்ரோசாஃப்ட் போன்ற மாபெரும் பிராணிகள் மூக்கை உறிஞ்சிக் கொண்டு தூக்கத்திலிருந்து எழுந்து வந்து பார்த்தன. அங்கே ஏற்கனவே நெட்ஸ்கேப் என்று ஒரு நாயர் கடை சுறுசுறுப்பாக வியாபாரம் செய்து கொண்டிருந்ததைக் கண்டன.

நெட்ஸ்கேப்தான் வெற்றிகரமான முதல் உலாவி, அதற்கு முன்னும் வயோலா, மிடாஸ், சாம்பா என்று மனம் போனபடி எழுதப்பட்ட உலாவிகள் பல இருந்தாலும் அவை அற்ப ஆயுளே வாழ்ந்தன. நெட்ஸ்கேப்பின் முக்கிய கவர்ச்சி, ஒரு வலைப் பக்கத்தை டவுன் லோடு செய்ய ஆரம்பித்த உடனேயே அது பகுதி பகுதியாகத் திரையில் தெரிய ஆரம்பிக்கும். பழைய பிரவுசர்களில் முழுப் பக்கமும் நம் கம்ப்யூட்டருக்கு வந்து சேரும் வரை சிவ சிவா என்று ருத்திராட்சத்தை உருட்டிக் கொண்டு காத்திருக்க வேண்டும்.

இன்றைக்கு இணையத்தின் இணை பிரியாத நண்பர்களான குக்கி பிஸ்கோத்துகள், ஃப்ரேம்கள், ஜாவா ஸ்க்ரிப்ட் போன்ற தொழில்நுட்பங்கள் அனைத்தும் நெட்ஸ்கேப் கண்டுபிடித்தவையே. நெட்ஸ்கேப் பிரபலமடைந்து மாலை நேரத்துக் கையேந்தி பவன் இட்லி போல் சூடாக விற்பனையாகியது. இதைப் பார்த்துவிட்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்று ஒரு உலாவியைத் தயாரித்து விற்க ஆரம்பித்தது.

அடுத்த நாலைந்து வருடம், இண்டர்நெட்டே இரண்டு கட்சியாகப் பிரிந்து அடித்துக் கொண்டது. இரண்டு பிரவுசர்களுக்கும் சின்னச் சின்னதாக நிறைய வித்தியாசங்கள். ஒன்றில் ஒழுங்காகத் தெரியும் வலைப் பக்கம் மற்றதில் கொத்து பரோட்டாவாக வரும். வலை மனை வடிவமைக்கும் கலைஞர்கள் இரண்டுக்கும் தனித் தனியாக டிசைன் செய்து நொந்து போனார்கள். இப்படி ஆரம்பித்ததுதான் முதலாவது பிரவுசர் போர்!

விரைவிலேயே நெட்ஸ்கேப், மைக்ரோசாஃப்டின் அடி மடியில் கை வைத்தது: ""இனி இண்டர்நெட்தான் எல்லாமே. ஜனங்கள் நெட்டிலேயே சாப்பிட்டு நெட்டிலேயே தூங்கி, குழந்தை கூடப் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள். எனவே உங்கள் கம்ப்யூட்டருக்கு பிரவுசர் மட்டும் இருந்தால் போதும்; விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டமே தேவையில்லை, தண்டச் செலவு'' என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த அடாவடியைக் கேட்டு பில்கேட்ஸ் சினந்தார்; கண் சிவந்தார். தற்காப்புக்கு சிறந்த வழி, எதிராளியின் வீடு புகுந்து அடிப்பதுதான் என்று முடிவு செய்தார். இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை முற்றிலும் இலவச இணைப்பாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டார்! விண்டோஸ் வாங்கினால் பிரவுசர் சும்மா கிடைக்கிறது என்றதும் ஜனங்கள் சாரி சாரியாக இந்தப் பக்கம் திரும்பி வர ஆரம்பித்தார்கள். மைக்ரோசாஃப்ட், மெத்தையில் இலவம் பஞ்சுக்குப் பதிலாக டாலர் நோட்டுகளைத் திணித்துக் கொண்டு தூங்கும் பிராணி. ஆனால் நெட்ஸ்கேப்பிற்கோ, பிரவுசர் விற்கிற காசுதான் ஒரே வருமானம். அங்கே அணை போட்டதும் திணறிவிட்டது.

நெட்ஸ்கேப்பின் மார்க்கெட் பங்கு வேகமாகச் சுருங்க ஆரம்பித்து, கடைசியில் உலர்ந்து வற்றியே பொய்விட்டது. போட்டியாளர்களை ஒழிப்பதற்காக மைக்ரோசாஃப்ட், தன்னுடைய விண்டோஸ் மார்க்கெட்டை வைத்துக் கொண்டு விளையாடுகிறது என்று கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதிகள் "மைக்ரோசாஃப்ட் ஒரு சர்வாதிகாரி, அதை ஒழித்து விட்டுத்தான் மறு வேலை' என்றெல்லாம் வீர உரைகள் ஆற்றினாலும், இறுதித் தீர்ப்பில் பில் பில் கேட்ûஸ நாளு தோப்புக்கரணம் போடச் சொல்லிவிட்டு விடுதலை செய்துவிட்டார்கள் இப்படி முடிவுக்கு வந்தது முதலாம் பிரவுசர் போர்.

ஆனால் போரில் தோற்றோடி வேற்று நாட்டில் தஞ்சமடைந்த சில வீர இளைஞர்கள், ஊருக்கு வெளியே ஒரு பாழடைந்த மண்டபத்தில் அமர்ந்து ஓசைப்படாமல் மற்றொரு பிரவுசர் எழுத ஆரம்பித்தார்கள். அகில உலகையும் ஜெயித்த மமதையில் மைக்ரோசாஃப்ட்டும் கொஞ்சம் அசால்ட்டாக இருந்துவிட்டது; பல காலத்துக்கு எக்ஸ்ப்ளோரரில் புதிய முன்னேற்றங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தேக்கம் கொடுத்துவிட்டது. 2004 வரை இந்த நிலை நீடித்தது. அந்த வேளையில்தான் "தீ நரி' ( Fire Fox) என்ற புதிய பிரவுசர் திடீரென்று மார்க்கெட்டில் நுழைந்து படபடவென்று சுட ஆரம்பித்தது!

ஃபயர் ஃபாக்ஸில் பல புதிய சாகசங்கள் இருந்தன. ஒரே ஜன்னலுக்குள்ளேயே சைடு ஜன்னல்கள் திறந்து ஏக காலத்தில் பல வலைப் பக்கங்களை மேய்வது, எங்கே சுற்றி அலைந்தாலும் விட்ட இடத்துக்கு டகாலென்று திரும்பி வரும் புக் மார்க் வசதி, நாராசமான ரீமிக்ஸ் பாட்டுகளை சுலபமாக டவுன்லோடு செய்யும் வசதி, நாம் டைப் செய்யும் போதே ஸ்பெல்லிங்கை சரி பார்த்து க், த், ப் எல்லாம் சரியாகப் போடச் செய்வது என்று பல புத்திசாலித்தனமான ஐடியாக்கள்.

இவ்வளவு இருந்தும் மைக்ரோசாஃப்டை முழுவதும் மார்க்கெட்டிலிருந்து பெயர்க்க முடியவில்லை. அவர்களும் எக்ஸ்ப்ளோரரில் மேற்படி வசதிகள் பலவற்றைக் கொண்டு வந்து ஏழாவது பதிப்பாக ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அடுத்ததாக எட்டாவது பதிப்பும் அநேகமாகத் தயாராகி விட்டது. கூகிள் வேறு இப்போது க்ரோம் என்ற புதிய உலாவியைக் கொண்டு வந்திருப்பதால் மும்முனைப் போட்டி இருக்கும். ஜாலிதான்! ஒருவரை ஒருவர் மிஞ்சுவதாகப் புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவார்கள். அடுத்த இரண்டு வருடத்தில் வலை உலாவிகள் அடையாளமே தெரியாமல் மாறப்போகின்றன.

மென்பொருள் ஏகலைவர்களின் மானசீக குருவான மார்க் ஆண்ட்ரீஸன் போன்றவர்கள், நம்மாழ்வார் அரங்கனைப் பாடியது போல் பரவசப்பட்டுப் போய் க்ரோம் உலாவியின் புகழ் பாடுகிறார்கள். கூடிய சீக்கிரம் இது விண்டோûஸயே புறமுதுகிடச் செய்யப்போகிறது என்றெல்லாம் கூடப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இந்த மாதிரி பில்லியன் டாலர் போர்களின் முடிவில் யார் மிஞ்சுவார்கள் என்பதை இப்போதே சொல்வது கடினம். எக்கச்சக்கமான பண பலம், விளம்பரம், சதி வேலைகள், குருட்டு நம்பிக்கை, ராப்பகலான உழைப்பு எல்லாம் கலந்த வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஹை டெக் லாட்டரி இது.

நன்றி : ராமன் ராஜா & தினமணிக்கதிர்.

6 comments:

  1. Nice post. Please write more.

    Thanks,
    Ram

    ReplyDelete
  2. நல்லா எழுதி இருக்கீங்கன்னு வரிவிடாமப் படிச்சேன். ஆனால் எழுதியது வேறு யாரோவா?

    இருப்பினும் அருமையான கட்டுரை. பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. //Nice post. Please write more.//

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. //நல்லா எழுதி இருக்கீங்கன்னு வரிவிடாமப் படிச்சேன். ஆனால் எழுதியது வேறு யாரோவா?//

    அதான் யாருன்னு குறிப்பிட்டிருக்கிறேன்ல.

    பரவாயில்ல.
    தங்கள் வருகை
    தந்தது உவகை.

    ReplyDelete
  5. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  6. // பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!//

    வருகைக்கு நன்றி சிபி.

    ReplyDelete