Saturday, October 11, 2008

‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க!


இராக் தலைநகர் பக்தாத். சூரியன் சற்று கீழிறங்கி வந்தது போல் வெயிலின் உக்கிரம். மலைப்பிரதேசத்தின் பள்ளத்தாக்கில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான் அந்தச் சிறுவன்.ஒருநாள் அவனுக்கு அசரீரி கேட்கிறது. ‘நீ ஆடுகளை மேய்ப்பதற்காக படைக்கப்பட்டவனல்ல’.

செய்தி சிந்தையில் விழுந்ததும் அவனுடைய உள்ளம் தீவிரத்தேடலில் ஈடுபடத் துடித்தது. வேகமாக வீடு திரும்புகிறான். மகனின் அவசரக் கோலத்தைக் கண்ட தாய் கேட்கிறார். என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு சீக்கிரம் வீடு திரும்பி விட்டாய்? ஆடுகளை மேய்க்கும் போது தான் கேட்ட செய்தியை தாயிடம் கூறுகிறான் அந்தத் தனயன். மகிழ்ந்தன இரு உள்ளங்கள்.

சிறுகச் சிறுகத் தான் சேமித்து வைத்திருந்த பொற்காசுகளை மகனிடம் கொடுக்கிறார். அவை தவறிவிடக் கூடாது என்பதற்காக அவருடைய சட்டையின் அடிப்பகுதியோடு சேர்த்து அந்தக் காசுகள் அடங்கிய பையைத் தைத்து விடுகிறார். அசரீரியாய் ஒலித்த குரலைக் கேட்டு உண்மையான அறிதலைத் தேடிப் புறப்பட்டுகிறான் அந்தச் சிறுவன்.

மிக நீண்ட கடல் பயணம். அவன் பயணிக்கும் கப்பலைக் கொள்ளையர்கள் சுற்றி வளைக்கிறார்கள். பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல். சித்தம் கலங்கிய அவர்கள், சொத்துக்கள் அனைத்தையும் கள்வர்களிடம் கொடுத்து விடுகிறார்கள்.

இறுதியாக, அந்தக் கும்பலில் ஒருவன் கேட்கிறான். இன்னும் யாரிடமாவது பெறுமதி மிக்க பொருட்கள் இருக்கின்றனவா? துணிச்சலுடன் ஒலிக்கிறது ஒரு பிஞ்சுக்குரல். பயணிகள் எல்லோரிடமும் கேட்டுக் கேட்டுப் பொருட்களை எடுத்துக் கொண்டீர்கள். என்னை மட்டும் ஏன் விட்டு விட்டீர்கள்? ஆனால், என்னிடம் 40 பொற்காசுகள் உள்ளன என்றான். திருடர்களுக்கு தேள் கொட்டிய உணர்வு.

அந்தச் சிறுவன் நம்மை ஏமாற்றவே இவ்வாறு பொய்யுரைக்கிறான் என்றான் கும்பலில் இருந்த ஒருவன். இல்லை. நிச்சமாக இல்லை! என் சட்டையின் பின் பகுதியில் 40 பொற்காசுகள் தைத்து வைக்கப்பட்டுள்ளன என்றான் உறுதியாக. திருட வந்தவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. தீவிர ஆலோசனைக்குப் பிறகு அந்தச் சிறுவனை தங்கள் தலைவரிடம் அழைத்துச் சென்றனர். ஏனப்பா இந்தச் சிறுவனை அழைத்து வந்திருக்கிறீர்கள்? தலைவன் கோபமாகக் கேட்டான். தன்னிடம் 40 பொற்காசுகள் இருப்பதாக இவன் கூறுகிறான். எங்களுக்கு நம்பிக்கையில்லை. நீங்களே சோதித்துப் பாருங்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

வியப்பு மேலிட, அவர்கள் சொல்வது உண்மைதானா? என்று தலைவன், சிறுவனிடம் கேட்கிறான். அவனும் அதை ஆமோதிக்கிறான். அப்படியானால் அந்தப் பொற்காசுகளை எடுத்துத் தா என்று அவன் கேட்க, அந்தச் சிறுவன் சற்றும் தாமதிக்காமல் அவற்றை கொள்ளைக் கும்பல் தலைவனின் கையில் கொடுக்கிறான். சிறுவனின் நேர்மை, உண்மையின் மீது அவன் கொண்ட நம்பிக்கை, தனக்குப் பாதகம் நேர்ந்தாலும் பரவாயில்லை, எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும் என்ற அவனது உணர்வு. இவை அந்தக் கொள்ளைக் கும்பல் தலைவனை ஒரு கணம் சிந்திக்க வைக்கிறது.

கேட்டவுடனேயே உண்மையைச் சொல்லும் துணிச்சல் எங்கிருந்து வந்தது உனக்கு? தலைவன் கேட்கிறான். என் அன்னையிடமிருந்து என்று பதில் சொன்ன அந்தச் சிறுவன், ‘உண்மை’யின் பின்புலத்தை விவரிக்கிறான். அசரீரியின் குரல் கேட்டுத் தான் மேற்கொள்ளூம் இந்தப் பயணம் உண்மையான அறிவைத்தேடும் முயற்சி. எந்தச் சூழலிலும் உண்மையைப் பேசத் தயங்காதே என்று என் தாய் எனக்குப் போதித்து அனுப்பினார். அந்த மந்திரச் சொல் தான் உண்மையைப் பேசும் தைரியத்தை எனக்குத் தந்தது என்றான். சிறுவனுக்கு இருக்கும் ஞானம் தங்களுக்கு இல்லாமல் போய் விட்டதே என்று திருடர்கள் தலைகுனிந்தனர். இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய பெருமைக்குரிய அந்தச் சிறுவன் யார் தெரியமா? ஜீலான் நகரில் பிறந்து ஆன்ம ஞானத்தேடலில் ஆழமான சுவடு பதித்த ‘‘கெளதுல் அ:லம்” அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அலைஹி தான்.

மறைந்தும் இறவாப் புகழுடன் வாழும் அந்த இறைநேசருடைய வரலாற்றைப் பிஞ்சு உள்ளங்களில் பசுமரத்தாணி போல பதியச் செய்தவர் இந்தியாவின் தலைமகன் நம் பெருமைக்குரிய APJ அப்துல் கலாம்.



அண்மையில் மூன்று நாள் அதிகாரத்துவ பயணமாக அவர் சிங்கப்பூர் வந்திருந்தார். அப்போது, வெளிநாடு வாழ் இந்தியர்களின் கல்விக்காக இந்தியர்களால் நடத்தப்படும் ‘பவன் அனைத்துலகப் பள்ளி’க்கு அவர் விஜயம் செய்தார். இந்தியாவில் இப்படி ஒரு சுற்றுப்பயணத்தில் குடியரசுத்தலைவரை அருகே இருந்து பார்ப்பதென்பது முயலிடம் கொம்பைத்தேடும் கதைதான். ஆனால் சிங்கப்பூரில் அப்படியல்ல.

காலை 10.30 மணிக்கு விழா தொடக்கம். குறித்த நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பாதுகாப்பு வீரர்கள் ‘பின்தொடர’ பீடுநடை போட்டு வந்தார் கலாம். பிஞ்சு மலர்கள் கைகளில் பற்றியிருந்த மலர்க் கொத்துகளை அன்புடன் வாங்கிக் கொண்டு அவர்களோடு சினேகத்துடன் உரையாடினார். அதன் பிறகு அவர் ஆற்றிய சிறப்புரையில் தான் அப்துல் காதிர் ஜீலானியின் வாழ்க்கையை எளிமையாக எடுத்துரைத்தார்.

புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி சர் C.V.ராமன், காந்திஜி ஆகியோரின் பெற்றோர் அவர்களுக்கு வழங்கிய போதனைகளையும் மேற்கோள் காட்டி வளரும் தலைமுறைக்குத் தேவையான வாழ்க்கைப் பாடத்தை அவர் நடத்தினார். உரை நிகழ்த்திய தருணத்தில் எங்கும் அவர் தன்னுடைய மேதமையை பறைசாற்றவில்லை. அரங்கில் நிரம்பியிருந்த குழந்தைகள் அத்தனைபேரிடமும் தனித்தனியே உரையாடுவது போன்று தனது பேச்சின் பாணியை அவர் வகுத்துக் கொண்டார்.

தொடக்கத்தில் குழந்தைகளைப் பார்த்து அவர் கேட்டார். நான் பாடம் நடத்துவதில் உங்களுக்கு விருப்பமா? அல்லது கதை சொல்வதில் ஆர்வமா?. அரங்கு முழுவதும் அமைதி. ஆசிரியை ஒருவர் பாடம் நடத்துங்கள் என்றார். நீங்கள் ஆசிரியர், மாணவர்களுக்கு வழி விடுங்கள் என்று விரைந்து மறுமொழி கூறினார். பின்னர் அவர் உரையாற்றிய விஷயங்கள் தான் இந்தக் கட்டுரையின் ஆரம்பச் செய்திகள். சுமார் 45 நிமிடம் அவருடைய சொற்பெருக்கு குழந்தைகளைக் குதூகலிக்க வைத்தது. இறுதியில் 25 குழந்தைகள் அவரிடம் கேள்வி கேட்டு பதில் பெறக்காத்திருந்தனர்.

துடுக்கு நிறந்த ஒரு மாணவன் கேட்டான். நீங்கள் ஏன் வாழ்க்கைத் துணையைத் தேர்தெடுக்கவில்லை? சிரித்துக்கொண்டே கலாம் சொன்னார் உங்களுக்காவது நல்ல துணை அமைய நான் பிரார்த்திக்கிறேன்.

உங்களில் எத்தனை பேர் மருத்துவராக விருப்பம்? எத்தனை பேர் விஞ்ஞானியாகப் போகிறீர்கள்? அரசியல்வாதியாகப் போவது எத்தனை பேர்? என்று தொடர்ச்சியாகக் கேட்டுக் குழந்தைகளின் பதிலைப் பெற்றுக் கொண்டார்.அரசியல்வாதியாக விரும்பிய குழந்தைகளிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். நாட்டு முன்னேற்றத்தில் எங்கள் பங்கைப் பதிவு செய்ய விரும்புகிறோம் என்று அவர்கள் கூற, வெரிகுட் என்றார்.

இறுதியாக மூன்று விஷயங்களை வலியுறுத்தினார். உண்மையையே பேசுங்கள், அதிலேயே நிலைத்து நில்லுங்கள், இதயத்திலுள்ள தயக்கங்களை வெளியே தள்ளுங்கள். அவ்வாறு செய்தால் வெற்றி உங்களைத் தேடி வரும் என்றார்.

குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைக்க கலாம் வந்திருந்தார். ஆனால் அங்கு குழுமியிருந்தவர்களில் பெரும்பாலோர் நடுத்தர வயதினர். அவர்கள் மத்தியில் உரையாற்றிய போதும் ‘உண்மையை’ அவர் முன்னிலைப் படுத்தினார். இப்போது இந்தப் பிஞ்சு உள்ளங்களிலும் அதையே விதைத்துச் சென்றிருக்கிறார்.

எல்லாக் குழந்தைகளின் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஆனால் அதற்குரிய நேரம் இப்போது இல்லை. எனவே www.presidentofindia.nic.in என்ற இணையப் பக்கத்தில் உங்கள் கேள்விகளைப் பதிவு செய்யுங்கள். அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்களுக்கான பதில் வந்து சேரும் என்றார்.

விடைபெற்றுச் சென்றவுடன் மாணவர்களிடம் கேட்டேன், இந்த விழா எப்படி இருந்தது? ‘இந்திய மக்கள் கொடுத்து வைத்தவர்கள். இப்படி ஒரு எளிமையான தலைவர் அவர்களுக்கு வாய்த்திருக்கிறார். நாங்கள் எதிர்பார்த்தை விட மிக நெருக்கமாக எங்களை வசீகரிக்கும் விதத்தில் அவர் பேச்சு இருந்தது. இனிமேல் எங்களுக்கான ‘ரோல்மாடல்’ உதாரண புருஷர் அப்துல் கலாம் தான்’ என்றனர்.

சிங்கப்பூர் பயணத்தில், தன்னைப்போலவே இன்னும் பலர் நாட்டுக்குத் தேவை என்ற எண்ணத்தை இளையோர் உள்ளங்களில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் அப்துல் கலாம்.


(இது 01.02.2006 ல் எழுதப்பட்ட ஆக்கம்)

No comments:

Post a Comment